Home / கலை / கரிக்கும் பாலின் நிறம் சிவப்பு

கரிக்கும் பாலின் நிறம் சிவப்பு

“அத்தாச்சி, அண்ணன் ஐயாயிரம் தர்றாராம். இப்படியே பிள்ளையத் தூக்கிட்டு எங்கயாச்சும் போயிருவீங்களாம் ” . மாலை மாலையாகக் கண்ணீர் வடிக்கவில்லை. இதைக்கேட்டு அதிரவும் இல்லை அவள். பொருந்தாத சூழல் என்று எதனையும் அவள் நினைத்ததில்லை.

“இந்த வயசுல ஒனக்கு புர்ர்ருசன் கேக்குது?, மகளைக் கட்டிக்குடுத்து பேரன் பாத்ததுக்குப் பின்னாடி பிள்ளைப் பெத்திருக்கா, மொகறயப்பாரு. அசிங்கப்படுத்திட்டாளே, முண்ட. எல்லாம் ஒன்னயச் சொல்லணும்”, அறைக்கு வெளியே அவளது புருசனிடம்,  அவனுடன் ஒட்டிக்கொண்டவள் கத்திக்கொண்டிருந்தாள். அத்தனையையும் கேட்டுக்கொண்டிருந்த அவன், வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டிருந்தான்.

மூன்று பிள்ளையைப் பெற்ற அவள் முலைப்பாலை, நான்காவதாய்ப் பிறந்த, இந்தப் பச்சைக் குருத்தால் சவஞ்சு குடிக்கமுடியாது. அன்னப்பிளவுடன் பிறந்த அதன் பிஞ்சு முகத்தைப் பார்த்து அவள் அழவோ, பொருமவோ இல்லை. தன் பாலை தானே பீய்ச்சி, ஒரு சிறு கரண்டிக் காம்பை முக்கி, அதன் வாயில் எதார்த்தமாய் வைத்தபடி இருந்தாள்.

கழட்டிப்போட்ட பாவாடையையும், வேட்டியையும் துவைத்துக்கொண்டிருந்தவளின் பின்னால்  நிழலாடியது. துவைத்த துணிகளில் இருந்த தூமைக்கரை போகும்முன், இவளை கூப்பிட்டான். கழட்டிப்போட்டுவிட்டு,  அவள் எங்கோ போயிருக்கலாம். எந்தப் பேச்சுக்கும் காத்திராமல், அவளைக் கிடத்தினான். அவள் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. அவள் நரம்புகள் சொரணை அற்றுப் போய்விடவில்லை. உணர்ச்சிகள் மழுங்கிவிடவில்லை. கலவி எல்லாம் அவளுக்கு ஒரு விசயமே இல்லை. கணவனே என்றாலும், அவளால் மறந்தும் சுகிக்க முடியாது. வைராக்கியம். இந்தக் காமத்தை அவள் ஒடுக்கியதும் இல்லை. பரப்பியதும் இல்லை. கொளுத்துகிற கோடையில் வியர்க்க விறுவிறுக்க நெல்லுக்கட்டைத் தூக்கிப்போகும் போது மேலே படுகின்ற சுனைமுள் போல அந்த அணைப்பை எதிர்கொண்டாள்.

உழைத்த உடலின் கர்ப்பவாசல் கருக்கொண்டு மூடிக்கொண்டது. ஊராரின் ஏளன ஏச்சுகள், சக்காலத்தியின் தேவுடியா பட்டம், கட்டிக்கொடுத்த பெண்ணின் சம்மந்தவழி நமட்டுச் சிரிப்புகள், மருமகனின் முகம் என்று எதுவும் அவளை எதுவும் செய்ததா என்று அவளுக்கு மட்டுமே தெரியும்.
பத்துமாத காலமும் அவளை யாரும், கண்டுகொண்டதாகவோ அதுபற்றி அவள் கண்டுகொண்டதாகவோ எதுவும் இல்லை. பேறுகாலங்களில் செய்யவேண்டிய அனைத்தையும் அவள் அறிவாள். இடுப்பைப் பராமரிப்பதிலிருந்து, சூட்டுவலிகளை ஆற்றுவது என்று எல்லாம் அவள் அறிவாள். தன் பிள்ளையைத் தானே பிரசவிக்க அவளது அறிவும், அனுபவமும், வைராக்கியமும் தைரியம் தந்தது.

பத்து மாதமாய்ப் பெரிதாக  எதுவும் பேசாத அவன்,  இவளைப் பெரிய மருத்துவமனையில் சேர்த்ததன் காரணம் என்னவென்று தெரியாது என்றாலும், அது அக்கறை இல்லை. அதற்குள் ஏதோ இருக்கிறது என்று இவளுக்குப் புரிந்திருந்தது.

“அத்தாச்சி, அண்ணன்  ஐயாயிரம் தர்றாராம். இப்படியே பிள்ளையைத் தூக்கிட்டு எங்கயாச்சும் போயிருவீங்களாம் ” – இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் புரியவைத்தன.

பீய்ச்சிய பால் தீர்ந்தது. இரண்டு நாள் பிஞ்சு தன் நீண்ட விரல்களை நீட்டி வாயைச் சுழித்து கொட்டாவி விட்டு நிதானமாய்க் கண்ணை மூடிமூடித் திறந்தது.

பதினான்கு நாட்களாய், அவள் பெற்ற மக்களைத் தவிர வேறு யாரும் அவளையோ, பிள்ளையையோ  வந்து பார்க்கவில்லை. ஆனால் கூடிக்கூடிப் பேசினார்கள். “மருமயன் வந்தப்பறம், பிள்ளப் பெத்திருக்கிற இவள்லாம் பொம்பளை, பேசாம அதக் கொண்டுட்டு போவாளா!  ”  .

இத்தனையையும்  கேட்டுக்கொண்டேதான் இருந்தாள். தொட்டிச்சீலையைக் கழட்டி, புதுசாய்க் கட்டினாள். பிள்ளையை அதில் போட்டுவிட்டு அதையே உற்றுப்பார்த்தாள். கைகால்களை நீட்டி மடக்கிச் சிரித்தது . சுரக்கிற பாலை குடிக்கிற நிலையில் அது இல்லை. வீட்டுக்குப் பின்பக்கமாகச் சென்று தன் பாலை சுவரில் பீய்ச்சிவிட்டு வந்தாள். பாலோடு, உதிரமும், உப்புக்கரிக்கும் கண்ணீரும் சுவரில் அடர்ந்த நிறங்களில் இவளை வரைந்துகொண்டன.

பிள்ளை செத்துப்போச்சாம்.

மஞ்சள் பூத்த அவளது முகம் அடர்சிவப்பை அப்பிக்கொண்டது. பதினான்கு நாட்களாய்ப்  பிள்ளையின் பிஞ்சு முகத்தைப் பார்க்காத அவளது புருசன் வேகமாய் எழவு வீடாய் மாற்றி இருந்தான். கட்டியழுத ஒப்பாரி வீட்டை நிறைத்தது.

சலனமற்று சாய்ந்திருந்தாள் அவள். பால் நிறம் காயாத சுவர் அவளைத் தாங்கி இறுகப்பற்றியது.

எந்த இறுக்கத்தையும் விலக்கிவிடுபவள் அவள். இந்தப் பற்றுதலையும் விலக்கி நிதானமாய் விலகினாள்.

– இரபீக் இராஜா

இளந்தமிழகம்

About இரபீக் இராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*