Home / பொருளாதாரம் / உலகமயமாக்கல் குறித்து மாண்டேக் சிங் அலுவாலியாவின் நேர்காணலுக்கு எதிர்வினை

உலகமயமாக்கல் குறித்து மாண்டேக் சிங் அலுவாலியாவின் நேர்காணலுக்கு எதிர்வினை

தமிழ் இந்துவின் உலகமயமாக்கல் நடந்து 25 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து “உலகமயமாக்கல் வரலாற்றின் ஊடே ஒரு பயணம்” என்ற தலைப்பில் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்தத் தொடரில் நேற்று (சூலை 14) அன்றைய  பதிப்பில்  மாண்டேக் சிங் அலுவாலியாவின் நேர்காணல் வெளியாகியது. இந்த கட்டுரைக்கு எம் எதிர்வினையே இப்பதிவு.

கட்டுரையின் தலைப்பு “உலகமயமாக்கலுக்குப் பிறகே இந்தியா வேகமாக வளர்ந்துள்ளது” . ஆனால் எந்த கேள்வியும் வளர்ச்சி என்பது என்ன? இந்தியாவில் யார் வளர்ந்துள்ளார்கள்? இது எல்லோருக்குமான வளர்ச்சியா? இந்த வளர்ச்சி ஏன் வேலைவாய்ப்புகளை உருவாக்காத வளர்ச்சியாக கடந்த சில ஆண்டுகளாக உள்ளது ? என்பது போன்ற எந்த கேள்வியும் இல்லை. அதே சமயம் “இருண்டு காணப்படும் உலகப் பொருளாதாரச் சூழலில் இந்தியா அமைதியான தனித் தீவாகக் காட்சி தருகிறது. பன்னாட்டுச் சூழலின் அதிர்ச்சியால் பாதித்துவிடாமல் உள்நாட்டு தொழில்துறை அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றது என தொடங்குகின்றது ஒரு கேள்வி…

உலகமயம் என்பது ஒன்றோடு ஒன்று பின்னப்பட்ட சங்கிலித் தொடர் தான். ஒரு நாடு பாதிக்கப்படும் பொழுது, அதன் தாக்கம் எல்லா நாடுகளிலும் எதிரொலிக்கும்.  அப்படி இருக்கும் பொழுது இந்தியா அமைதியான தனித்தீவாக எப்படி இருக்க முடியும்? பன்னாட்டு சூழலின் அதிர்ச்சியால் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் உள்நாட்டு தொழில்துறை பாதுகாப்பாக வைத்திருக்கின்றது என எப்படி கூறமுடியும் ? முதலில் 90களுக்கு பிறகு தொழில்துறை வளரவே இல்லை. இங்கு வந்தது ஐ.டி உள்ளிட்ட சேவை துறைகளும், இந்தியாவின் கட்டுமானத்தை மேம்படுத்தும் பணி மட்டும் தான் அதிக அளவில் நடந்தது.  அமெரிக்காவில் ஹெச் 1 பி விசாவிற்கு கட்டுபாடுகள் விதிப்பதை தவிர்க்க இந்திய, பன்னாட்டு ஐ.டி நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி செலவு செய்து அதை தடுத்தன என்பதும், கச்சா எண்ணெய் விலை, இரும்பு விலை ஏன் சீனாவின் யுவானின் மதிப்பு குறைந்த போது கூட இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது, இது தான் கடந்த கால யதார்த்தம். நிலைமை இப்படி இருக்கையில் நாம் ஒரு ஒளிமயமான நிலையில் இருப்பது போல உலகமயமாக்கலுக்கு ஆதரவாக கேள்விகளை தயாரித்து இந்த நேர்காணலை நடத்தியுள்ளார்கள்.

montek1

வறுமைகோட்டு அளவை 32 ரூபாயாக மாண்டெக் சிங் அலுவாலியா குறைத்ததை விமர்சனம் செய்யும் சித்திரம்


அடுத்து, அவர் பணியாற்றியது திட்டக்குழு, மோடி அரசு அதை கலைத்துவிட்டது. இந்தியாவில் 60 ஆண்டுகளாக இருந்த ஒரு குழு, அதுவும் அவர் பணியாற்றிய ஒரு குழு ஏன் கலைக்கப்பட்டது ? புதிதாக நிதி ஆயோக் என்று குழுவின் பணி என்ன? என்பது தொடர்பான கேள்விக்கு. நிதி ஆயோக் எப்படி செயல்படுகின்றது எனத் தெரியாது என இரு வரிகளில் பதிலளிக்கின்றார் மாண்டேக்.  நாம் ஒரு குழுவின் தலைமை பணியை பத்து ஆண்டுகளாக செய்கின்றோம். அந்த குழுவே இன்று கலைக்கப்பட்டு விட்டது, அது குறித்த எந்த ஒரு அதிர்ச்சியும் மாண்டேக்கின் பதிலில் இல்லை. திட்ட குழுவின் தொடர்ச்சி தான் நிதி அயோக் அப்படியிருக்கும் பொழுது நான் வெளியே இருப்பதால் அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பது இப்பொழுது இருக்கும் அரசை காப்பது தானே அன்றி வேறெதுவும் இல்லை.  இந்த கேள்வியும் கூட ஒரே நேரத்தில் மோடி அரசையும், மாண்டேக்கையும் காப்பாற்றுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதே போல எந்த தவறுக்கும் நான் காரணமல்ல, என் மேல் யாராவது குற்றம் சாட்டினார்களா என்ற தப்பித்தல் பாணி அணுகுமுறையில் தான் மாண்டேக் பதிலளித்துள்ளார். பின்வரும் பத்தியை பார்க்க.

//2007-08 உல நிதி நெருக்கடிக்குப் பிறகு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்த நிதித்தூண்டல் நடவடிக்கைகளால் பொருளாதாரத் துயர் அதிகமானது என்ரு முன்னாள் நிதியமைச்சர் ப.சி கூறியிருக்கிறார். அந்த முடிவுகளை எடுத்தவர்களில் நீங்களும் ஒருவர் …. ?

அந்த நிதித்தூண்டல் முடிவுகளின் பின்னால் நான் இருந்தேன் என்று அவர் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகின்றேன்.  நிதி நிர்வாகம் தொடர்பான முடிவுகளை எடுப்பது நிதியமைச்சகம் தான் ///

அது மட்டுமின்றி சீனத்துடன் நமது பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடுகின்றார்கள். இது எப்படி என்றால் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சீனா பொருளாதாரம்) இலட்சம் சம்பளம் வாங்குகின்றார், அவருக்கு 4.5% சம்பள உயர்வு, மூன்றாம் நிலையில் பணி புரியும் (பல ஆயிரங்களில்) சம்பளம் வாங்கும் நமக்கு(இந்திய பொருளாதாரம்) 6.5% சம்பள உயர்வு. இதில் 4.5% விட 6.5% பெரிது என்று சொல்வது கவுண்டர்மணியிடம் செந்தில் நீங்க பத்தாவது பெயில், நான் எட்டாவது பாஸ் என சொல்வதைப் போன்றது.

இயங்கியல் படி வளர்ச்சியும், வீழ்ச்சியும் ஒன்றை அடுத்த ஒன்றாக நிகழும் தொடர்ச்சியான நிகழ்வுகள் (வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை இங்கே சொன்னால் எளிமையாக புரியும்).  சீனா முன்பு வளர்ந்தது இன்று தேய்கின்றது, இன்று வளர்ச்சி குறைந்த நிலையில் கூட‌ சீனாவில் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா வளர்ச்சியில் சென்றாலும் புதிய வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் உருவாகவே இல்லை, வேலையில் இருப்பவர்களுக்கும் அடிப்படை சம்பளம் என்பது குறைகின்றது, அதாவது நேரடி வேலைவாய்ப்பு (உதாரணம் – 15000 ரூபாய் சம்பளம்) என்பது மாறி, ஒப்பந்த வேலைவாய்ப்பாக (உதாரணமாக 7,000 – 8000 ரூபாய் சம்பளம்) மாறுகின்றது. பணி நிரந்தர‌மும் இல்லை. இருக்கும் தொழிலாளர் நல சட்டங்களும் நீக்கப்படுகின்றன.

பிரெக்சிட் தொடர்பான ஒரு கேள்விக்கு மாண்டேக் பின்வருமாறு பதில் கூறுகின்றார்.

//பிரெக்சிட் முடிவு வியப்பளித்தது. மேல்தட்டு வர்க்கம் (ஆளும், அதிகார வர்க்கம்) எவ்வளவோ இனிமையாகப் பேசினாலும் சாமானிய பிரிட்டிஷ் மக்களின் வாழ்க்கையில் வளம் இல்லை. அந்த விரக்தியே பிரெக்சிட் ஆதரவாக மாறியிருக்கிறது. பிரிட்டனில் மட்டுமல்ல, ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது. வேலை வாய்ப்பு , வருவாய் குறைந்து வருகிறது ///

இந்த பதிலை அப்படியே இந்தியாவிற்கும் பொருத்தி பார்க்கலாம். இங்கே மாண்டெக் உள்ளிட்ட மேல் தட்டு வர்க்கம் இந்தியா வளர்கின்றது 7-8% வளர்ச்சி என சொல்கின்றது. ஆனால் மன்மோகன் அரசின் இறுதி ஆண்டிலும், மோடி அரசின் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் இலட்சக்கணக்கில் கூட வேலைவாய்ப்பு பெருகவில்லை. வேலையில்லா திண்டாட்டம் தான் பெருகி வருகின்றது, இதை மனதில் வைத்து தான் கல்வி நிறுவனங்கள் எங்கள் நிறுவனத்தில் படித்தால் வேலை கட்டாயம் என்பது போன்ற பொய் விளம்பரங்களை உருவாக்கி ஒளிபரப்பி வருகின்றன, ஆனால் அவர்கள் கல்வி நிறுவனங்களில் படித்தாலும் இங்கு வேலை கிடைப்பதில்லை என்பதே யதார்த்தம் .  இந்த வளர்ச்சி சாமானிய இந்திய மக்களின் வாழ்க்கையில் வளத்தை ஏற்படுத்தியுள்ளதா?  இல்லை, பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கியுள்ளதா? இந்த கேள்விக்கு பேராசிரியர். வெங்கடேஷ் ஆத்ரேயாவின் கட்டுரையின் கடைசி பத்தி புள்ளிவிவரத்துடன் பதிலளிக்கின்றது. இதோ

” இந்தியப் பெருமுதலாளிகள் அவர்கள் சொத்துகளைப் பிரம்மாண்டமான அளவில் அதிகரித்துள்ளனர். நாட்டின் முன்னணித் தொழில் குழுமங்கள் அவற்றின் இணைய தளத்தில் தரும் தகவலின்படியே பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. டாட்டா குழுமத்தின் சொத்து 1990-ல் ரூ.10,922 கோடி. 2012-13-ல் இது ரூ.5,83,554 கோடியாக உயர்ந்தது. இதேபோல, அம்பானி குழுமத்தின் சொத்துகள் ரூ.3167 கோடியிலிருந்து ரூ.5,00,000 கோடியாக உயர்ந்தது. மறுபுறம் சுட்டெரிக்கும் உண்மை என்ன? கணிசமான பகுதி மக்கள் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறைகூட இன்றி நிற்கிறார்கள். ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், குழந்தைகள், ரத்த சோகையில் வாடும் வளரிளம் பெண்கள், பிறக்கும் 1000 சிசுக்களில் 40 சிசுக்கள் ஒரு ஆண்டுக்குள் இறக்கும் அவல நிலை இப்படி தொடர்கிறது கொடுமைப் பட்டியல்!

பெருகும் ஏற்றத்தாழ்வுகள்தான் கட்டற்ற தாராளமயத்தின் முக்கிய இலக்கணம். கல்வி, வேலை, மக்கள் நல்வாழ்வு, அனைவருக்கும் நாகரிக வாழ்க்கை ஆகிய இலக்குகளை அடைய, மக்கள் நலனை மையப்படுத்தும் மாற்றுப் பாதை அவசரம், அவசியம்! “

18bo1

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலில் பின்வரும் பத்தி மாண்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்ட‌ பொருளாதார வல்லுநர்களுக்கு அப்படியே பொருந்துகின்றது.

“மொத்த தேசிய உற்பத்தி(GDP) என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்”

– நற்றமிழன்.ப

இளந்தமிழகம் இயக்கம்

மாண்டேக் சிங் அலுவாலியாவின் கட்டுரை – http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article8847542.ece

தரவுகள் / மேலும் படிக்க‌

1) http://scroll.in/article/806223/with-hardly-any-new-jobs-created-for-whom-is-indias-economy-growing

2) http://thewire.in/2016/04/18/indias-high-growth-rate-isnt-translating-to-job-creation-30081/

3) http://www.livemint.com/Money/1UZDnb9QcCz5s5dKnJ8maO/The-growing-disconnect-between-economic-growth-and-jobs.html

4)http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8823025.ece

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*