Home / அரசியல் / இந்தியா / மோடி, ஜெயலலிதா சிறந்த நிர்வாகிகளா?

மோடி, ஜெயலலிதா சிறந்த நிர்வாகிகளா?

மோடியும், ஜெயலலிதாவும் சிறந்த நிர்வாகிகள் என பெரும்பான்மையான ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் கூவிவருகின்றன. ஊடகங்களின் கூற்றில் உண்மை உள்ளதா எனப் பார்ப்போம்.
யார் சிறந்த நிர்வாகி ?
அதிகாரத்தை தன்னிடம் மட்டுமே குவித்து வைக்காமல், நிர்வாகத்தின் ஒவ்வொரு அலகிற்கும் அதிகாரத்தை பகிர்ந்து வழங்கி எல்லோருடனும் இணைந்து பணியாற்றுபவரே சிறந்த நிர்வாகி அல்லது தலைவர் என சொல்கின்றது ஒரு கார்ப்பரேட் விதி.”அகல உழுவதை விட ஆழ உழுவதே அதிக விளைச்சலைத் தரும்”  என்பது விவசாயத்தில் மட்டுமல்ல, இன்று கார்ப்பரேட் நிறுவனங்களிலும் கடைபிடிக்கும் இன்னொரு விதி.மேலே உள்ள விதிகளின் படி மோடியும், ஜெயலலிதாவும் சிறந்த நிர்வாகிகளல்ல,  ஜெயலலிதா, மோடி என இருவருமே அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவில்லை.
ஜெயலலிதா :
அதிகாரம் அனைத்தையும் தன்னிடம் மட்டுமே குவித்து வைத்துள்ளார், பகிர்ந்து அளிக்கவில்லை. அதிகாரம் பகிரப்படாததால் எல்லா பணிகளும் ஒருவரது முடிவுக்காக காத்திருக்கின்றன.  இது வேலைகளில் தேக்கத்தை ஏற்படுத்துகின்றது. சென்னை பெரு மழை நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு போன்ற செயல்பாடுகள் ஜெயலலிதாவிற்காக காத்திருந்ததன் விளைவு தான் சென்னை மக்கள் எதிர்கொண்ட செயற்கை வெள்ளமும், அதனால் ஏற்பட்ட இழப்புகளும்.Jaya Chennai Floods

மக்களுக்காக சட்டங்களை இயற்ற வேண்டிய சட்டமன்றத்தை தனக்கு புகழ் பாடும் இடமாகவும், வெறும் மேசை தட்டும் இடமாக மாற்றி சனநாயகத்தை கேலி கூத்தாக்கியவர்.

2011ல் ஆட்சியைப் பிடித்த பொழுது விசன் 2023 என்ற ஒரு பெரிய திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். ஊடகங்கள் எல்லாம் ஆஹா. ஓஹோவென புகழ்ந்தனர். அந்த திட்டம் இன்னும் காகிதத்திலேயே உள்ளது. இன்றைய‌ தமிழகத்தின் நிலையோ 2011ல் இருந்த நிலையை விட பல ஆண்டுகள் பின்தங்கி மிக‌ மோசமான நிலையில் உள்ளது. புதிய மின்னுற்பத்தி திட்டங்களை தொடங்கவில்லை, தொழிற்துறை தமிழகத்தை விட்டு வெளியே செல்லும் நிலையை உருவாக்கினார். எங்கள் ஊரில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று பக்கத்து மாநில முதல்வர்கள் வந்து கோயம்புத்தூரில் மாநாடு போடும் அளவிற்கு இருந்தது அவரது ஆட்சி.அமைச்சர்களை மாற்றிக் கொண்டே இருந்தார் ஜெயலலிதா. ஏன் மாற்றினார்? தமிழக மக்களுக்கு அவர்கள் சேவை செய்யாததாலா? அதெல்லாம் இல்லை, தனக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றுவார், பிடிக்கும் போது மீண்டும் அமைச்சர் பதவி தருவார். அப்படி வரும் அமைச்சர்களுக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. எல்லாம் ஜெயாவின் ஆணைப்படி தான் நடக்கும்.  கடந்த ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி மக்களின் வாழ்நிலையை உயர்த்த எந்த ஒரு திட்டமும் ஜெயலலிதா அரசால் செயல்படுத்தப்பட்டதே இல்லை.

மோடி:

வெளியுறவு துறை அமைச்சர் செய்ய வேண்டிய பணியான அயல்நாட்டு உறவுகள், வெளியுறவு கொள்கை மேம்பாடு போன்ற பணியை ஒரு பிரதமர் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆனால் மோடி அதைத் தான் அதிகமாக செய்கின்றார். ஒரு பிரதமர் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளுக்கு மட்டும் பயணம் செல்வதில் எந்த தவறும் இல்லை. இதை தான் எல்லா நாட்டு தலைவர்களும் செய்து வருகின்றார்கள்.ஆனால் நமது பிரதமர் போகாத வெளிநாடே இல்லை எனும் அளவிற்கு பதவியேற்றதிலிருந்து 42 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் 35 நாடுகளுக்கு ஒரு முறையும், ஆறு நாடுகளுக்கு ஒரு முறையும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு மட்டும் நான்கு முறையும் சென்று வந்துள்ளார். இந்த கட்டுரை எழுதப்படும் இன்று(சூலை 7) கூட மொசாம்பிக் என்ற நாட்டில் தான் உள்ளார்.

அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் கொண்டுள்ள ஒரு பிரதமர் உள்நாட்டில் இல்லாமல் இப்படி சுற்றுப் பயணத்திலேயே இருப்பதால் உள்ளே அவரது முடிவுக்காக காத்திருக்கும் பணிகள் அதிகரிக்கின்றன. மேலும் இவ்வளவு நாடுகள் சுற்றிய மோடியால் இந்தியாவின் வெளியுறவு கொள்கை மேம்பட்டிருக்கின்றதா என்றால் முன்னிருந்த நிலையை விட சற்று பின்னால் சென்றுள்ளோம். நேபாளம் புதிய அரசியலமைப்பை அமல்படுத்திய பொழுது அவர்களுடனான சாலை போக்குவரத்தை இந்தியா முடக்கியதால் இன்று நேபாளம் நம்மை நண்பனாக பார்க்கவில்லை.

இந்தியா இலங்கையை நட்பு நாடு என்று கூறுகின்றனது, சீனா எமது நட்பு நாடு என இலங்கை கூறுகின்றது.  பாகிசுதான் உடனான உறவு எப்படி உள்ளது என செய்திகளை பார்க்கும் அனைவருக்கூ ம் புரியும். நீயூக்ளியர் வழங்கு நாடுகள் குழுவில் இந்தியா சேர்வது இரண்டாம் முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. எதிர்த்த வாக்களித்த நாடுகளுக்கு அண்மையில் தான் பிரதமர்.மோடி சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மோடி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை அவர் சாதித்தது என்ன ? அவர் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? என்ற கேள்விகளுக்கு பலத்த மௌனமே பதிலாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டெடுப்போம் என்றார். சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களால் சேர்த்து வைக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதி எடுக்கப்பட்டு இன்று மிக குறைவான பணமே உள்ளது என சொல்கின்றது ஒரு அண்மைய செய்தி. இப்படி எல்லோருமே அவர்களது கருப்பு பணத்தை எடுத்த பிறகு எந்த பணத்தை மீட்டெடுக்கப்போகின்றது மோடி அரசு?

காங்கிரசு அரசு கருப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்கி உள்ளவர்களின் பட்டியலை முத்திரை இடப்பட்ட இரகசிய அறிக்கையாக நீதிபதியிடம் மட்டும் கொடுத்த பொழுது அதை விமர்சித்த பா.ஜ.க. இன்று அதே காங்கிரசு பாணி அணுகுமுறையைத் தான் செய்கின்றது. பனாமா நாளிதழ் கருப்பு பணம் சேர்த்துள்ளவர்கள் என்ற ஒரு பட்டியலை வெளியிட்ட பொழுது அது மற்ற நாடுகளில் பெரும் புயலை கிளப்பியது.ஆனால் ஊழலெதிர்ப்பு போராளிகளாலும் ஆட்சியை பிடித்த மோடி அரசு அந்த பட்டியல் பற்றி, அந்த பட்டியலில் இருப்பவர்கள் மேல் மேற்கொள்ள வேண்டிய விசாரணை பற்றி எந்த ஒரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. அதே நேரம் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான இலலித் மோடியை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றுகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவும், இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராவும். வங்கிகளின் பணத்தை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்கு பறக்கிறார் மல்லையா. இவர் பா.ஜ.க-வினால் மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை விண்ணை எட்டுகின்றது. கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள போதும், இங்கே வரி விதிப்பை அதிகப்படுத்தி விலை உயர்கின்றது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அது அத்தியாவசிய பொருட்களின் விலையை பெருமளவு அதிகப்படுத்தி இன்னும் அதிக பாதிப்புக்கு மக்களை தள்ளும். 2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார் மோடி, ஆனால் சென்ற ஆண்டில் அமைப்பு சார் துறையில் நிரந்தர வேலைப்பிரிவில் புதிய வேலைவாய்ப்புகளே உருவாகவில்லை என்கிறது மத்திய அரசின் தொழிலாளர் ஆணையம்.

ஆனால் மோடியே மேக் இன் இந்தியா, தூய்மை பாரதம், யோகா தினம், டிஜிட்டல் இந்தியா…. என நாளொரு புதிய அறிவிப்புகளை அறிவித்து மக்களின் முன்னால் தான் வேலை செய்வது போல காட்டிக்கொண்டே இருக்கின்றார். டிஜிட்டல் இந்தியா செயல்படும் விதத்தை பின்வரும் செய்தி படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம், மத்திய அரசின் 957 இணையதளங்களில் 926 இணையதளங்கள் சரியாக செயல்படவில்லை, வெறும் 31 இணையதளங்களே சரியாக செயல்படுகின்றன. இது தான் டிஜிட்டல் இந்தியாவின் உண்மை நிலை. பிரதமரின் பணி யோகா தினம் அறிவித்து யோகா செய்வதல்ல, மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளை சரி செய்து, அரசை நிர்வகிப்பதே. இதை மோடியும் செய்யவில்லை, ஜெயலலிதாவும் செய்யவில்லை.

IMG-20160608-WA0031

நான் இரவு/பகல் பாராமல் அலுவலக வேலை செய்தேன் என ஆண்டிறுதி சந்திப்பில் மேலாளரிடம் கூறினால் சரி அப்படி வேலை செய்தததால் அலுவலகத்திற்கு கிடைத்த பலன்களென்ன  என மேலாளர் கேட்பார்.  இந்த உதாரணத்தை அப்படியே மோடிக்கும், ஜெயலலிதாவிற்கும் ஒப்பிடலாம்.உண்மை நிலை இப்படியிருக்கும் பொழுது எப்படி அவர்கள் சிறந்த நிர்வாகிகளாக ஊடகங்களால் திரும்ப, திரும்ப சொல்லப்படுகின்றார்கள்.

மோடி ஆட்சிக்கு வரும் முன்னரே மோடியை விமர்சித்த ஊடகவியலாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்கள் அல்லது தாங்களாகவே விலக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்து நாளேட்டிலிருந்து தலைமை ஆசிரியராக இருந்த சித்தார்த் விலகினார். சி.என்.எனிலிருந்து சகாரிகா கோஸ் விலகினார். இப்படி விலகியவர்கள் / விலக்கப்பட்டவர்களின்  பட்டியல் பெரிது.அதே போல இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஜெயலலிதாவை தீவிரமாக விமர்சித்த தமிழக ஊடகங்கள் அனைத்தும் அவர் வெற்றி பெற்று பதவியேற்றதும் அவர் மாறிவிட்டார், திருந்தி விட்டார் என செய்தி வெளியிடுகின்றன. இன்று சென்னை தமிழ்திரைப்படங்களில் காட்டப்படுவது போல தினமும் கொலை, கொள்ளை நடக்கும் இடமாக மாறிவிட்டது, எந்த ஒரு ஊடகமாவது காவல்துறையை தன்னிடம் வைத்துள்ள ஜெயலலிதாவை நோக்கி கேள்வி எழுப்புகின்றனவா?

Jaya Law order

இதே போல வலிமையான பிரதமர் என்று ஊடகங்கள் கூறும் மோடியின் ஆட்சியில் நடந்த பதான்கோட் விமான நிலைய தாக்குதலை, பாகிசுதானின் தொடர் இராணுவ அத்துமீறலை எந்த ஒரு ஊடகமும் மத்திய அரசின் அலட்சியங்கள் என விமர்சிக்கவில்லை ஏன்?

ஊடகங்களின் செயல்பாட்டை பார்ப்பதற்கு இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பரவலான வாசகர்களால் பார்க்கப்படும் இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகளை நாம் கவினித்தால் போதும். ஒன்று டைம்ஸ் நவ் செய்தி தொலைகாட்சியின் செய்தி நேரம் (News Hour), இன்னொன்று தந்தி தொலைகாட்சியில் பாண்டே நடத்தும் நேர்காணல்கள், ஆயுத எழுத்து.  இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஆளும் அரசை பற்றி விமர்சனமே இருக்காது. ஆட்சியிலில்லாத முன்னாள் கட்சிகளை விட்டு வெளுத்து வாங்குவார்கள். ஆளும் கட்சிக்கு பட்டு சாமரம் வீசுவார்கள்.

அண்மையில் “ஊடக சுறாவளி” அர்னப் கோசுவாமி மோடியுடன் நடத்திய நேர்காணலையும், இதற்கு முன் இராகுல் காந்தியுடன் நடந்த நேர்காணலையும் பாருங்கள். அர்னப்பின் உடல் மொழி, நேர்காணல் நடத்தும் பாங்கு எப்படி வேறுப்படுகின்றது என. முன்னதில் பூனை குட்டியாக இருந்த அர்னப், பின்னதில் பாயும் புலியாக இருந்தார். இதையே நீங்கள் “தமிழக ஊடக சுறாவளி” பாண்டேவிடமும் பார்க்கலாம்.

Modi Arnab

அவ்வளவு ஏன் ஜெயலலிதாவும் சரி, மோடியும் சரி பதவியேற்ற பின்பு ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தியது கூட இல்லை. இதை கூட எந்தவொரு ஊடகமும் கேள்வியெழுப்பதில்லை.

இது தான் ஊடகங்களின் உண்மை முகம், சனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகங்கள் ஆளும் கட்சியின் ஊதுகுழல்களாக மட்டுமே செயல்படுகின்றன. ஊடகங்களில் வரும் செய்திகள் எல்லாம் உண்மை என நம்பும் பொது உளவியல் எந்த கேள்வியும் இன்றி மோடி, ஜெயலலிதாவை சிறந்த நிர்வாகியாக ஏற்றுக்கொள்கின்றது, இதனால் தான் தாங்கள் வாக்குறுதி அளித்த எந்த ஒன்றையும் செயல்படுத்தாமல் தாந்தோன்றிதனமாக செயல்படும் இவ்விருவர் மீது எந்த ஒரு அதிருப்தியும் , கேள்வியும் இந்த பொது உளவியல் கொண்ட மக்களால் எழுப்பப்படுவதில்லை.

அப்படி எழுப்பப்படும் கேள்விகளுக்கு தரவுகள் கேட்கப்படுகின்றன, நீங்கள் சொல்வது உண்மை என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்விகள் கேட்கப்படுகின்றன. திரும்ப, திரும்ப ஊடகங்களால் சொல்லப்படும் பொய் உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படுவதால் தான்,  உண்மையான செய்திகள் பொய் என அழைக்கப்படுகின்றது. எந்த செய்தி தலைப்பு செய்தியாக வேண்டும், எந்த செய்தி பெட்டி செய்தியாக வேண்டும், எந்த செய்தி தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும், எந்த செய்தி ஒருமுறை மட்டும்  சொல்லிவிட்டு அப்படியே விட்டுவிடப்பட வேண்டும் என்பதை ஊடகங்களே தீர்மானிக்கின்றன. ஊடகங்களுக்கு அரசு வழங்கும் விளம்பரங்கள், அதன் மூலம் வரும் வருவாய் என்பது இதில் மிக முக்கியமான பங்கை ஆற்றுகின்ற‌து. இப்படித்தான் “ஆளும் வர்க்க கருத்துகள் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றன”.

ஊடகவியல் என்பது ஆளும் வர்க்கத்திற்கு ஜால்ரா அடிப்பதல்ல, தவறான கொள்கைகள் அமல்படுத்தப்படும் பொழுது அதை கேள்விக்குள்ளாக்கி, மக்கள் துன்பத்தில் உழலும் போது அவர்கள் பக்கம் நின்று ஆளும் வர்க்கத்தை எதிர்த்து போராடுவதே. இன்றைக்கு பொது வெளியில் ஊடகங்கள் என்று சொல்லப்படும் எந்தவொரு ஊடகமும் இந்த பணியை செய்வதில்லை. சமூக இணையதளங்களும், சுயேச்சையாக செயல்படும் சில இணையதளங்களுமே இந்த பணியை செய்கின்றன. நாம் நமக்கு வரும் எந்தவொரு செய்தியையும் பகுத்தறிவுக்கு உட்படுத்தியே செய்வோம். இல்லை ஊடகங்கள் சொல்வதை அப்படியே நம்புவோம் என்றால் நமக்கு பகுத்தறியும் ஆறாம் அறிவு தேவையே இல்லை, நாம் சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளைகளாக வாழ்கின்றோம் எனப் பொருள்.

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

– நற்றமிழன்.ப

இளந்தமிழகம் இயக்கம்.

https://www.cpj.org/blog/2014/03/modis-rise-does-not-bode-well-for-indian-press-fre.php

(கேலிச்சித்திரங்கள் வரைந்த பாலா, சதீஷ் ஆச்சர்யா ஆகியோர்களுக்கு நன்றி )

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

One comment

  1. Very good analysis.ok.How to make awareness

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*