Home / கலை / கபாலி! அழகியலும்! அரசியலும்!

கபாலி! அழகியலும்! அரசியலும்!

விளிம்பு நிலையில் வாழும் தலித் மக்களின் வாழ்வியலை கதையின் போக்கில் மிக யதார்த்தமாய், அனுதாபத்தை விலக்கி, அழகு கொஞ்ச அதனை ரசிக்கும் வண்ணம் காண்பிப்பது தான் இயக்குநர் ரஞ்சித்தின் படைப்புகளில் இருக்கும் சிறப்பு. அட்டகத்தியில் வரும் தினேஷை ரசிக்காமல் இருப்பது முடியாத காரியம். தினேஷை காட்டிலும் ரசனைக்குரியவர் படத்தில் வரும் தினேஷின் அப்பா கதாபாத்திரம். குடிசை வீட்டில் வாழும் ‘மொடா’ குடிகார அப்பா பொதுவாக வீட்டில் இருக்கும் துணைவியாரை அடித்து துவைத்து பொறுப்பில்லாமல் இருப்பது தானே வழக்கம்? ஆனால் அந்த ‘அட்டகத்தி’ அப்பா குடித்துவிட்டு, வீட்டு வெளியில் நின்று கூப்பாடு போட்டு, துணைவியின் கண்டிப்பிற்கு அடங்கியவராய், மகன் மேல் பாசமும் பெருமையும் கொண்டவராய் அமைவார். சிறிய கதாபாத்திரம் தான் எனினும் அப்படி ஒரு கதாபாத்திரம் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததா என்று தெரியவில்லை. ‘மெட்ராஸ்’ படத்தில் பேசிய வட சென்னை தமிழ் மொழி அது வரை தமிழ் சினிமாவில் ‘ரௌடிகள்’ என்று சித்தரிக்கப்படும் பாத்திரங்களுக்கு வழக்கமாய் ஒதுக்கப்படும் மொழியாக இருந்தது. ஆனால் அந்த படத்தில் அந்த மொழியும், அரசியல் அதிகாரமாய் விளங்கிய சுவரும் முக்கிய கதாபாத்திரங்கள்.

கபாலி படத்தில், படிகள் மேலே சென்று அடிமையாய் வாழும் மக்களின் விடுதலையை இரண்டு மற்றும் அரை மணி நேரங்களில் பெற முனைந்தது தவறும் இல்லை, அதற்கு தடையும் இருக்கக் கூடாது. கற்பனையிலிருந்து பிறக்கும் படைப்பிற்கு என்ன தடை வேண்டியுள்ளது! ஆனால் இங்கே ரஜினியின் வழக்கமான பிம்பச்சிறைக்குள் கதை சிக்கிக் கொண்டது தான் கவலை. அதாவது ஒற்றை ஆளாய் நின்று துப்பாக்கி, அறுவாள், கோட்டுச் சட்டைக்குள் ஒளித்து வைத்திருக்கும் இரும்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு எட்டுத்திசைக்கும் ரத்தமும் சதையும் சிதறி அதன் ஊடாக விளையும் மக்கள் விடுதலையை பார்க்கும் போது, அதுவரை ரஞ்சித் படங்களில் தென்பட்ட ரசனையை சுவைக்கமுடியவில்லை. எனினும் வெண்ணிற தாடியுடன் துணைவியாருக்காக வாடி அவரை தேடும் ரஜினி, ‘மாய நதி’ பாடலில் அவர் பாடுவது போல வாஞ்சைக்குரியவரே. முக்கியமாய் வெகு காலத்திற்குப் பிறகு ஒரு கண்ணியமிக்க ரஜினியை பார்க்கமுடிந்ததற்கு ரஞ்சித்திற்கு நன்றிகள். தனது வயதை மறைத்து சிறிய வயது கதாநாயகியுடன் டூயட் ஆட நிர்பந்தம் இல்லாமல், பெண்கள் எத்தனை/என்னென்ன வகை படுவார்கள் என்று வகுக்காமல், பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் நடத்தாமல், மூன்று நல்ல வலிமை பொருந்திய பெண் கதாபாத்திரங்களின் நடுவில் நடித்தது ரசனைக்குரியதே. இருப்பினும் மனைவியாகவும், மகளாகவும் நடிப்பதற்கு வெள்ளை நிறத்தில் இருக்கும் பெண்கள் தான் அவசியமா என்ற நம்மூர் திரைப்படங்களை பார்த்து வழக்கமாய் கேட்கும் கேள்வி இங்கேயும் பொருந்தும்.

maxresdefault
ரஞ்சித் கபாலி படம் மூலமாய் நமக்கு தெரிவித்து இங்கே உரையாடலாய் நிகழ்த்த விரும்பும் கருத்துக்களை கவனிக்க வேண்டும். ரஜினி, படத்தில் பெரும் பகுதி கோட்டுடன் வலம் வருதல் அழகியலுடன் அரசியல் அதிகாரத்திற்கான குறியீடு கொண்டது. அதை காந்தி ஏன் சட்டையை கழற்றினார், அம்பேத்கர் ஏன் கோட் அணிந்தார் என்ற கேள்வி ஊடாகவும், நாம் அணியும் உடையினை தீர்மானிக்க வேண்டியது நாம் தான் என்று ராதிகா மூலமாகவும் இயக்குனர் ரஞ்சித் நிறுவுகிறார். படத்தின் உச்சக்கட்டத்தில் (climax) கபாலியை வீழ்த்தவே முடியவில்லை என்றானபின் வீரசேகரன் (நடிகர் கிஷோர்) விரக்தியிலும் ஆத்திரத்திலும் பேசும் வசனங்கள் அந்த கதாபாத்திரம் ஜாதி திமிரில் பேசுவதாகும். தலித் மக்கள் மற்றும் தலைவர்களின் மேல் இன்றைய நிலையிலும் அதே போல் ஜாதிய வன்மங்கள் நிறைந்த தாக்குதல் பேச்சுக்கள் இருந்த வண்ணமே உள்ளன. படத்தில் கோட் அணிவதை எதிரிகள் ஏளனமாய் பேசும் போது, இங்கே மருத்துவர் ராமதாஸ் சில வருடங்களுக்கு முன், தருமபுரியில் திவ்யா-இளவரசன் காதல் பிரச்னையாக்கப்பட்ட போது, “தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் டீ-ஷர்ட் கூளிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு எங்கள் பெண்களை கவர்கிறார்கள்” என்ற ஜாதிய வன்மக் கூற்று ஞாபகத்துக்கு வந்து சென்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் மேலெழுந்து பல்வேறு துறைகளில் கால் பதித்து வருவது ‘ஆதிக்க ஜாதி’ உணர்வு மிக்கவர்களுக்கு பெரும் வயிற்றெரிச்சலை கிளப்பும் விஷயம். அதற்கு படத்தில் ‘கோட்’ எதிர்வினையாய் அமைகிறது.

தோட்டத் தொழிலார்களுக்காக முதலாளிகளுடன் சண்டையிட்டு சம்பள உயர்வு வாங்கித்தருதல் யதார்த்தத்திலும், வரலாற்றிலும் ஒரு தொழிற்சங்கவாதி செய்வதாகும். படத்தில் அதனை ஒரு ‘நல்ல’ கேங்ஸ்டரான கபாலி செய்வதாய் அமைகிறது. சென்ற வருடம் நாட்டையே உலுக்கிய மூணார் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் பெண்கள் ஆவர். ‘கபாலி’க்கு நேர்வது போலவே, பல்வேறு அச்சுறுத்தல்களின் நடுவில் போராட்டத்தை முன்னின்று வெற்றிகரமாய் நடத்தியவர்களில் ஒருவர் ‘கோமதி’. சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவி ‘நீயா நானா’வில் கூட பங்கேற்று பேசினார். ‘போனஸ்’ மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட அந்த போராட்டத்தை பற்றி இந்த மின்சுட்டியில் காணலாம்.

படத்தில் ஒவ்வொரு முறை தோன்றும் போதும், சுற்றி எத்தனை நடிகர்கள் இருந்தாலும், ஏன் ரஜினியே இருந்தாலும் அவர்களைத் தாண்டி கண்கள் செல்வது ஒரு நடிகனிடம். மொத்த படத்தில் அவன் பேசியது பத்து வார்த்தைகள் மிகுந்திருக்காது, ஆனால் அவன் வரும் காட்சிகளில் உடல் மொழி மூலம் பேசாதவை படத்தில் இல்லை. அட்டகத்தி தினேஷ் என்னும் அந்த நடிகன் இன்னும் பல படங்கள் நடித்து புகழ் பெறுதல் வேண்டும். பாடல் வெளியீட்டின் போதிலிருந்தே கேட்டுப் பிடித்துப் போன ‘மாய நதி’ பாடல், திரையரங்கில் டால்பி ஆட்மோஸ் தொழில்நுட்பத்துடன் கேட்ட பின்பு மேலும் பிடித்துப் போனது. ரஜினிக்காக கதை வளைந்தது உண்மை என்றபோதிலும் ரஜினியை வைத்து தான் சொல்ல விழைந்ததை சொல்லாமல் விடவில்லை ரஞ்சித். ‘கபாலி’ படம் என்பது ஒரு உறுதிமிக்க படைப்பாளி ரஞ்சித்தின் முன்னெடுப்பால் சக கலைஞர்களின் உழைப்பில் விளைந்த படைப்பு. இந்த படத்தை வைத்து மேற்கொண்ட அதீத விளம்பர பிரச்சாரங்கள் மற்றும் அதற்கு காரணமாய் இருந்த வியாபார வெறி மன்னிக்க முடியாதது. இன்றைய நிலையில் வியாபார வெறியில் சிக்காமல் படம் வெளிவருதல் அசாத்தியமானது தான். போராட்டக் குணம் கொண்டவராய் விளங்கும் ரஞ்சித் மேலும் செறிவான படைப்புகளை எடுக்க வாழ்த்துவோம்!

— சதீஷ் – இளந்தமிழகம்

 

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*