Home / FITE சங்கம் / தோழர் விநாயக முருகனின் கட்டுரைக்கு ஒரு ஐடி ஊழியனின் மறுப்பு

தோழர் விநாயக முருகனின் கட்டுரைக்கு ஒரு ஐடி ஊழியனின் மறுப்பு

விகடன் பத்திரிக்கைக் குழுமத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியிருக்கும் “தடம்” இதழில் “ஐ.டி உலகம்: நிஜமும் கற்பிதங்களும்” எனும் தலைப்பில் தோழர் விநாயக முருகன் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது.

1980-களின் இறுதியில் இந்தியாவிற்குள் வந்து இறங்கிய ஐ.டி துறையின் வளர்ச்சிக் கட்டங்களை சுட்டிக் காட்டியுள்ளது கட்டுரை. ஐ.டி பணியாளர்கள் தங்களது துறைசார் அறிவைக் கொண்டு  சமூகத்திற்கு ஆற்றும் பங்கினைக் குறிப்பிட்டதோடு, ஈழப் பிரச்சினை முதல் சென்னை மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் நம்மைப் போன்ற பணியாளர்கள் தெருவுக்கு வந்து வேலை செய்ததையும் குறிப்பிட தவறவில்லை. அத்தோடு, ஐ.டி துறை பற்றி எழுதப்படும் கருத்துகள், இன்னும் பொதுவெளியில் விவாதத்திற்கு உள்ளாகாத சிக்கல்கள் பற்றியும், தொழிலாளர்களின் நிலைமைகள் குறித்தும் பேச வேண்டும் என்கிற எண்ணத்தோடுமே இந்த கட்டுரையை எழுதுகிறேன்

ஐ.டி தொழில்நுட்பங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் மாற்றங்களும், வளர்ச்சிகளும் நிறைய புதிய பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதும், இந்தியாவில் மட்டும் 35 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இந்தத் துறையில் பணிபுரிவதும், ஐ.டி-யின் தனித்துவம்தான். அதே சமயம், தாங்கள் வேலை செய்யும் துறையைவிட்டு வெளியே வந்து வேறு ஏதேனும் ஒரு துறைக்கு சென்று விட வேண்டும் எனும் எண்ணம், பிற துறையில் பணிபுரியும் தொழிலாளர்களைவிட ஐ.டி பணியாளர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.

இதற்குக் காரணம், ஒன்று மன அழுத்தம், மற்றொன்று நம்முடைய கல்வி முறையும், பணியாளர்களுடைய துறைசார் அறிவை மறுவார்ப்பு செய்ய அனுமதிக்காத ஐ.டி நிறுவனங்களும்தான். ஆனால், ஐ.டி பணியாளர்களின் மன அழுத்தம் பற்றி விவாதிக்கும் கட்டுரைகள் கூட, அதற்கு காரணம் வெறும் வேலைப் பளு என்று கடந்து போவது வருத்தத்துக்குரிய விடயமே. இது வெறும் துறைசார் மன அழுத்தம் என்று மேம்போக்காகக் கடந்துவிட முடியும் என்று எண்ண முடியவில்லை. வேலைப் பளுவினால் மட்டும்தான் மனஅழுத்தம் ஏற்படுகிறதா? என்றால் இல்லை என்று ஐ.டி துறைக்குள் புதிதாக பணிக்கு வந்தவர்கள் கூட அறிவர்.

நம்முடைய சமூகத்திற்குள் நிலவும் சாதி, மதம், மொழி, பாலினம் சார்ந்த அனைத்து சிக்கல்களும் உள்ள இடமாக ஐ.டி துறை இருப்பதும், இந்த சமூகம் சார்ந்த சிக்கல்கள் பணியாளர்களின் அன்றாட பணிகளில் வெளிப்படுவதோடு, அது சிலரின் நலன்களை மட்டும் பாதுகாப்பதாக முடிவது என்று பணியாளர்கள் அடையும் மன உளைச்சலுக்கும், அழுத்தத்திற்கும் இருக்கும் உள்ளார்ந்த காரணங்கள் பெரும்பாலும் பொது வெளியில் விவாதிக்கப்படுவதேயில்லை.

தன்னுடைய சாதிக்காரனுக்கும், மதத்தவனுக்கும், ஒரே மொழி பேசுபவனுக்கும் ஆண்டு இறுதியில் நடக்கும் திறன் மதிப்பீட்டை சாதகமாக நடத்துவது என்பது நம்முடைய ஐ.டி துறையில் வழமையாகிவிட்ட ஒன்று. ஆண்டு முழுக்க தன் உழைப்பைக் கொட்டிய ஒரு ஊழியர், தகுதி, திறமை, பணித்திறன் என அனைத்தும் இருந்தும் திறன் மதிப்பீட்டில் அடையும் தோல்வியும், மன உளைச்சலும் பொது வெளியில் விவாதிக்கப்பட வேண்டும். கிடைக்காது என்று தெரிந்தும் ஆப்பிள்களிடம் ஆரஞ்சின் சுவையைக் கேட்பது, பின்னர் ஆப்பிளால் ஒன்றும் இயலாது என அவற்றைப் பலிகொடுப்பது மாற வேண்டும்.

எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வது மட்டும் நம்முடைய மன அழுத்தத்திற்கு காரணமல்ல; முழு அர்ப்பணிப்புடன் செய்யப்படும் வேலை மறுக்கப்படுவதுடன், அதன் பொருட்டு பயனடைபவர்கள் யார் என்பதிலும்தான் நமது மன அழுத்திற்கான காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.

அண்மையில் எனது அலுவலக நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, “ஏதாவது ஒரு வியாபாரம் செய்ய வேண்டும்..இந்த ஐ.டி-யே வேண்டாம்” என்று சலித்துக் கொண்டார். இதுபோன்ற குரல்கள் ஒலிக்காத ஐ.டி நிறுவனங்களே இல்லை என்பது நாமறிந்ததே. ஆனால், ஐ.டி-யில் பொறியியல் பணி வேண்டும் என்று கனவு கண்டு, மென்பொருளில் ஈடுபாட்டுடன் வந்த நண்பர்களிடம் இருந்தும்கூட இந்த குரல்களை நாம் அதிகமாகக் கேட்க முடிகிறது. மன அழுத்தம் ஒரு காரணம் என்றால், நாம் படித்த படிப்பிற்கும், செய்த வேலைக்கும் தொடர்பில்லாமல் போய், வேலை பறிபோனால் என்ன செய்வது என்கிற பரிதவிப்பே இதுபோன்ற புலம்பல்களுக்கு அடிப்படை.

மின்னியலையோ, மின்னணுவியலையோ, இயந்திரவியலையோ படித்து பட்டம் பெற்று நம்பிக்கையோடு உள்ளே வந்த இலட்சக்கணக்கான ஊழியர்களை நம்பிக்கை அற்றவர்களாக மாற்றி இருக்கிறது ஐ.டி என்கிற உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நாள்தோறும் மாற்றங்கண்டு வரும் தொழில்நுட்பம் ஐ.டி-யின் வரம் என்றால், அதைக் கற்று கொள்ள வாய்ப்பை உருவாக்காமல், லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஊழியர்களின் வேலையைப் பறிக்கும் முறை பெரும்சாபமே.

“ஐ.டி நிஜமும், கற்பிதங்களும்” எனும் கட்டுரையில் நாம் முக்கியமாக முரண்படும் பகுதி இதுதான்.

// என்னதான் படித்த, முன்னேறிய, ஆழமாக சிந்திக்கவல்ல சமூகம்தான் ஐடி துறை என்றாலும், இன்னமும் இங்கே தொழிற்சங்கம் என்பது சாத்தியமற்றதாகவே இருக்கிறது.சமீபத்தில் நீதிமன்றம்கூட ஐடி நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி வழங்கியது. ஆனால், யூனியன் அமைப்பது இந்தத் துறையின் செயல்பாடுகளைப் பாதிக்குமா என்பதுபோன்ற விவாதங்களும் எழுந்துள்ளன. ஐடி நிறுவன சி.இ.ஓ-க்கள் அவர்களுக்குள் தொழில் கூட்டமைப்பு உருவாக்கி ஒற்றுமையாக இயங்கும்போது, தொழிலாளர்களுக்கு சங்கம் அமைப்பதில் என்ன தவறு? தொழிற்சங்கம் பற்றிய மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள்கூட இந்தத் துறையில் சில விஷயங்களை முறைப்படுத்த வேண்டும் என்பதில் ஒரே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, எட்டு மணி நேர வேலை. அதற்கு மேல் போனால் ஓவர்டைம். ஒரே பணியைச் செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வைத் தரப்படுத்துதல், பதவி உயர்வு, ஊதிய உயர்வில் வெளிப்படைத் தன்மை  போன்ற விஷயங்கள் பற்றி எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

யூனியன் இல்லாமலேயே இதைச் சாதிக்க முடிந்தால் மகிழ்ச்சியே. ஏனெனில் யூனியன் இல்லாமலும் சில நல்ல விஷயங்கள் இந்தத் துறையில் நடந்துள்ளன. உதாரணம் ஐடி துறை இந்தியாவுக்கு வந்த புதிதில் ஆண்களால் சக பெண் ஊழியர்கள் அடையும் பாலியல் தாக்குதல்கள் கணிசமாக இருந்தன. தொழிலாளர் நலவாரியம் மற்றும் பெண்கள் அமைப்புகள் எடுத்த மிகக் கடுமையான நடவடிக்கைகளால், அது இன்று காணாமல்போய்விட்டது. இப்போது எல்லா ஐடி நிறுவனங்களிலும் பெண்களைச் சீண்டினால், உடனே கடும்நடவடிக்கை எடுக்கிறார்கள். அதுபோல தொழிலாளர்களின் உடல்நலம், மனநலம் குறித்த விழிப்புஉணர்வை அதிகரித்துள்ளார்கள். //

– ஐ.டி உலகம் : நிஜமும் கற்பிதங்களும் கட்டுரையில் இருந்து…

தொழிற்சங்கங்கள் தேவை என்கிற தொனியில் தொடங்கும் இந்த பத்தி, ஐ.டி துறையில் அனைவரும் விரும்பும் மாற்றங்களாக சிலவற்றை பட்டியலிட்டுவிட்டு, தொழிற்சங்கங்கள் இல்லாமல் இந்த மாற்றங்களை சாதிக்க முடிந்தால் மகிழ்ச்சிதான் என்று முடிகிறது.

தொழிற்சங்கம் எனும் தொழிலாளர்களின் அமைப்பு இல்லாமலேயே, நம்முடைய உரிமைகள் காக்கப்பட்டால் மகிழ்ச்சிதான் எனத் தெரிவிக்கும் கட்டுரையாளர், பெண்கள் அமைப்புகளின் செயல்பாடுகளால் ஐ.டி நிறுவனங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்திருக்கிறது என்று கூறுவதுதான் ஆகப்பெரும் முரண்.

பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக செயல்படும் பெண்கள் அமைப்புகள் போலவே, எந்த பாகுபாடுமின்றி தொழிலாளர்களை அமைப்பாக்கும், தொழிலாளர்களின் உரிமைகளைக் கோரி போராடும் தொழிலாளர் அமைப்புகள் இல்லாமல் மாற்றங்கள் நடந்தால் நல்லது என்று எண்ணுவது எவ்விதமான தர்க்கம் என்பது புரியவில்லை.

தொழிலாளர் நலவாரியம் என்பது அரசு உருவான போதே உடன் உருவான நிறுவனம் ஒன்றும் கிடையாது. மாறாக, எந்திரங்கள் உருவாகி தொழில்மயமாக்கல் நடைபெற தொடங்கிய காலந்தொட்டு, தொடர்ச்சியாகப் போராடி வரும் பல்வேறு துறை தொழிலாளர்களின்  போராட்டங்களும், ஈகங்களும் தான் அரசை தொழிலாளர் நலன்கள் சார்ந்து சிந்திக்க வைத்தது என்பதே வரலாறு.

அதன் விளைவுகள்தான், தொழிலாளர் நல வாரியங்களும், தொழிலாளர் நலச் சட்டங்களும். இவ்வளவு ஏன்? அண்மையில் ஐ.டி ஊழியர்கள் சங்கம் அமைத்துக் கொள்ளலாம் எனும் நீதிமன்ற உத்தரவு கூட, தற்போது ஐ.டி துறையில் பரவலாக நடைபெறும் பணிநீக்கங்களை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராடுவதும், சென்னை, மும்பை, பெங்களூர், ஐதராபாத் ஆகிய உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளும்தான்.

சினிமாவிலும், ஊடகத் துறையில் சித்தரிக்கப்படும் ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஒரு விதிவிலக்கு என்பது புரிய பொதுச் சமூகத்திற்கு எப்படி 26 ஆண்டுகள் தேவைப்பட்டதோ, அதே போல ஐ.டி ஊழியர்கள் சங்கம் அமைத்துக் கொள்ளலாம் என்று வெளிப்படையாக அறிவிக்க இந்த அரசிற்கு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. பணிநீக்கங்களுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படாமல் இருந்திருந்தால், அரசு இன்னும் மௌனம் காத்திருக்கும் என்பது திண்ணம் .

பணிநீக்கங்கள், ஒரே பணியைச் செய்யும் அனைவருக்கும் ஒரே அளவிலான ஊதியம், பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை, பெண்களுக்கான பாதுகாப்பு என சங்கம் அமைத்து வென்றெடுக்க/தீர்க்க ஏகப்பட்ட சிக்கல்கள் ஐ.டி துறையிலும் உள்ளது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வண்ணம், நாம் மேற்சொன்ன சிக்கல்கள் பற்றிய விவாதங்கள் தற்பொழுதுதான் அதிகம் நடைபெறுகிறது. அதற்கும் கூட, ஐ.டி துறையில் தொழிலாளர்களின் உரிமைகள் காக்க சங்கங்கள் வேண்டும் என்று போராடி வரும் ஊழியர்களும், அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளும் தான் காரணம். இப்படி இருக்கையில், தொழிலாளர் சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள், அமைப்பாக்கம் எனும் சமூகத்தின் கூட்டுச் செயல்பாட்டிற்கே எதிரான கருத்தாகும்.

ஐ.டி துறை போன்ற துறைகளில் தொழிற்சங்கம் சாத்தியமா?, எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று கேள்விகளை எழுப்பும் கட்டுரை, ஐ.டி துறை தங்குதடையின்றி இயங்க மூளையைக் கசக்கும் தொழிலாளர்களின் நியாயத்தைப் பேச, உரிமைகளைப் பெற சங்கம் இல்லாமல் எப்படி சாத்தியம் என்று வினா தொடுக்காமல், எப்படியாவது, ஏதாவது நல்லது நடந்துவிடாதா? என்று தீர்வுகளை யாரோ ஒருவரிடம் கையளிப்பதாக உள்ளது.

ஈழம், சுற்றுச் சூழல், பெருவெள்ளம் என சமூகத்தின் பல்வேறு சிக்கல்களுக்கு தன்னார்வத்தோடும், பல்வேறு அமைப்புகள் மூலமும் முகங்கொடுத்த ஐ.டி ஊழியர்கள் தங்களது உரிமைகளைக் காக்க அமைப்பாவதே தங்களுடைய பணிச்சூழலில் உள்ள சிக்கல்களைக் களைய உதவும். இது தவிர்த்து, ஐ.டி துறையில் நடைபெற வேண்டிய மாற்றங்கள் எப்படியாவது, சங்கங்கள் இல்லாமல் நடந்துவிட்டால் அருமையாக இருக்கும் என்று கனவு காண்பது, நடைமுறைச் சிக்கல்களின் புரிதலற்ற சிறுபிள்ளைத்தனமே.

”தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர் உரிமைகள் இல்லை!”

– கதிரவன்

ஐடி ஊழியன் & இளந்தமிழகம் இயக்கம்

 

தோழர் விநாயக முருகனின் கட்டுரை:

ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் – விநாயக முருகன்

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*