Home / அரசியல் / அணுகுண்டு வீசினாலும் நட்பிற்குரியவன் நீதான்…

அணுகுண்டு வீசினாலும் நட்பிற்குரியவன் நீதான்…

ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்றார் காரல் மார்க்ஸ். சாதி, மதம்,தேசம், இனக்குழு, அமைப்புகள், தனி நபர்கள் என்பதன் வரலாறாக அறியப்பட்டாலும் அவையாவும் வர்க்கப் போராட்டப் பின்னணியிலேயே நடக்கின்றன.  தேசிய நலனும் வர்க்க நலனும் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டும் விட்டுக்கொடுக்கப்பட்டும் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என்பதும் அதிலும் குறிப்பாக எப்படி வர்கக நலனை ஆளும்வர்க்கங்கள் சமரசம் செய்து கொள்வதே இல்லை என்பதும் ஒடுக்கப்பட்டோர் தரப்பு கற்க வேண்டிய வரலாற்றுப் பாடமாகும். ஆளும் வர்க்கத்தின் வெற்றி வரலாறுகளில் இருந்து பாடம் கற்போம்.

ஹிரோசிமா, நாகசாக்கி ஆகிய இரு ஜப்பானிய நகரங்கள் மீதும் அணு குண்டு வீசப்பட்டதை ஒட்டிய முன்னும் பின்னுமான அரசியல் நிகழ்வுகளில் எப்படி வர்க்க நலன்கள்  செயல்பட்டன என்பதைத் திரும்பிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

hiroshima obama11 – 14 நூற்றாண்டுகளில் நடந்த சிலுவைப் போருக்காக வாடிகன் 2001 ஆம் ஆண்டு மன்னிப்புக் கேட்டது. ஆனால், ஜப்பான் நகரங்களான ஹிரோசிமா, நாகசாக்கி என்ற இரண்டு நகரங்கள் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில்  அணு குண்டுகளை வீசியதற்காக அமெரிக்கா இன்றுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இந்தப் பிரபஞ்சத்திற்கே தலைமைதாங்கும் மனப்பாங்குடன் கட்டியெழுப்பப்பட்ட அமெரிக்கப் பேரரசு,  தான் செய்த அநீதிக்காக வருந்தவில்லை. ஆனாலும், இவ்வாண்டு (2016) மே 27 ஆம் நாள், சர்வதேச அரசியல் நிலைமைகள் உந்தித் தள்ளியதால் தன்னுடைய புவிசார் நலனுக்காக அணுகுண்டு வீசிய சாம்ராஜ்யத்தின் இன்றைய அதிபர் ஒபாமா ஹிரோசிமாவில் உள்ள அமைதிக்கான நினைவரங்கத்தில் நின்றபடி அணுகுண்டு வீசப்பட்ட தருணத்தை நினைத்துப் பார்க்க நேர்ந்தது. அப்போது அவர் அங்கு வரலாற்றில் குறிப்பிடும்படியான ஓர் உரையாற்றினார். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் மானுட நிறுவனங்களும் வளர்ச்சிப் பெற வேண்டும் என்று கருத்துச் சொன்னார். அணுகுண்டு வீசப்பட்டவுடன் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேலான மக்களை நினைவு கூர்ந்தார். அதில் ஜப்பானிய ஆண்கள், பெண்கள் , குழந்தைகள் உடன் கொரியர்கள் மற்றும் சிறையிலிருந்த 12 அமெரிக்கர்களும் அடக்கம் என்று சொன்னார். ஆனால், அவரது உரை இப்படித்தான் தொடங்கியது, “71 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் வெளுத்த மேகங்களற்ற காலை வேளையில் வானத்தில் இருந்து மரணம் இறங்கி வந்தது” அவர் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளுக்காக வருத்தம் தெரிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால், உலகத்தின் தலைவனே ஆனாலும் ஹிரோசிமாவிற்குள் அடியெடுத்து வைத்து கொல்லப்பட்டவர்களுக்காக சில நிமிடங்கள் செலவழிக்க நேர்ந்ததே நமக்கு ஓர் ஆறுதல்தான். இன்னொரு நற்பொழுதில்,  வரலாறென்னும் கண்டிப்பானக் கிழவியின் முன்பு மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டே தீர வேண்டும் அமெரிக்கா.

ஜப்பானின் வரலாற்றுக் குகைக்குள் அடியெடுத்து வைப்போம்.  ஐரோப்பிய தேசியம் கீழிருந்து மேலாக மன்னராட்சிக்கு எதிரானப் போராட்டங்களில்  கருக்கொண்டு வளர்ச்சிப் பெற்றது. ஜப்பானின் தேசியம் மேலிருந்து கீழாக வளர்ச்சிப் பெற்றதாகும். மன்னரை மையமிட்டு, மன்னரின் பெயரால் தேசியத்தை வளர்த்தெடுத்தார்கள் ஜப்பானியர்கள்.

1842 ஆம் ஆண்டு அபீன் யுத்தத்தில் பிரிட்டன் சீனாவை வெற்றிக் கொண்டது. சீனக் கதவுகளை மேற்குலத்திற்கு திறந்துவிட்டது பிரிட்டன். சீனத் துறைமுகங்களை தன் வசமாக்கிக் கொண்டது பிரிட்டன். பிரிட்டனைத் தொடர்ந்து 8 மேற்குலக அரசுகள் பலாத்காரமான முறையில் சீனாவுடன் ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டன. சீன மன்னர் மேற்குலகின் கைப்பாவையானார்.

1853-54 ஆம் ஆண்டுக் காலத்தில் அமெரிக்க கடற்படைத் தளபதி வர்த்தக ஒப்பந்தங்களுக்கு வளைந்து கொடுக்குமாறு ஜப்பானை நிர்பந்தித்தார். சீனாவின் பட்டறிவில் இருந்து பாடம் பெற்ற ஜப்பான் முரண்டுபிடிக்காமல் அமெரிக்காவிடம் சரணடைந்தது. அமெரிக்காவிடம் சரணடைவதன் மூலம் அவர்களை உள்ளே வரவிட்டு அவர்களின் மூலமாகவே நவீன வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதே ஜப்பானின் திட்டம். அரசியல்,அறிவியல், தொழில்நுட்பம், இராணுவம் என அனைத்திலும் நவீனமயமாக்கலைத் திட்டமிட்டுக் கொண்டுவந்தனர் ஜப்பானியர்கள். மன்னரை மையமிட்டுக் கட்டியெழுப்பப் பட்ட தேசியம் என்பதால் அது இராணுவ ஆட்சி என்ற திசை நோக்கி தடையின்றி வேகமாக வளர்ந்தது. இப்படி வளர்வதற்கு மன்னரின் பெயரிலான தேசிய வெறி துணை செய்தது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் என்பது நாடு பிடிச் சண்டை,   உலகை மறு பங்கீடு செய்து கொள்ளும் சண்டை ஆகும். இதில் ஈடுபட்ட அனைத்து நாடுகளினதும் உந்து சக்தி நாடுபிடிக்கும் ஏகாதிபத்திய வெறியே ஆகும். ’ஆசியா ஆசியர்களுக்கே’ என்று ஜப்பான் முழங்கியது. அதன் உள்ளீடு என்னவென்றால் ஆசியாவை ஐரோப்பியர்கள் ஆளக்கூடாது. ஆசியாவில் உள்ள ஜப்பான் தான் ஆசிய நாடுகளை ஆள வேண்டும் என்பதாகும். ஆசிய நாடுகளின் நம்பிக்கைக்குரியதாக இருந்திருக்க வேண்டிய ஜப்பான் நேர்மாறாக அச்சத்திற்குரிய ஆதிக்க அரசாக விளங்கியது.

அணி சேர்க்கை:

இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற அரசுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள். ஆனால், இட்லரின் ஜெர்மனியும், முசோலினியின் இத்தாலியும், ஜப்பானும் இராணுவ சர்வாதிகார அரசுகள், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசுகள் அல்ல.  முதலாம் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்திய நாடுகள் முன்பு எழுந்து நின்ற கம்யூனிசப் பூதத்தை அவர்கள் ’சிவப்பு ஆபத்து’ என வர்ணித்தனர். திடீரென்று பார்த்தால் நீட்சேவின் தத்துவப் பின்புலத்தில் இட்லர் தலைமையிலான மண்ணிற ஆடை அணிந்த நாஜிப் படைகள் உலகை ஆளப் புறப்பட்டமை வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகும். சிவப்புக்கு முன்பு மண்ணிற ஆடை எதிரிகளை வீழ்த்தியாக வேண்டிய வரலாற்று நிர்பந்தம் ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்டது. இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் இரண்டு எதிரிகளான ஜெர்மனியும் ரஷ்யாவும் மோதி ஒருவர் மற்றொருவரால் தீர்த்துக் கொள்ளப்படட்டும். பிறகு மற்றொருவரைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதினார். சர்ச்சில் பாணியிலேயே ஐரோப்பிய நாடுகள் முதலில் அடிபடட்டும், பிறகு மிஞ்சி இருப்பவர்களைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதியது அமெரிக்கா. மேற்கு ஐரோப்பா முதலில் அடிவாங்கட்டும் என்று ஆயுதங்களை ஜெர்மனிக்கு கொடுத்துக் கொண்டிருந்தார் ரஷ்யாவின் ஸ்டாலின். இப்படி இட்லரைப் பகடைக் காயாக்கி யார் யாரை வீழ்த்தலாம் என்ற கணக்கு நடந்து கொண்டிருந்த போது இட்லர் பிரான்ஸை வீழ்த்தி இரஷ்யா நோக்கி திரும்பிவிட்டார்.

ஒருவழியாக இரண்டு அணி சேர்க்கைகள் ஏற்பட்டன. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அச்சு நாடுகள் அணி ஒன்று. இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, இரஷ்யா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நேச நாடுகள் அணி இன்னொன்றாகும். இவ்வணி பாசிச எதிர்ப்பு முன்னணி என்று அழைக்கப்படுகிறது. பாசிசத்தை வீழ்த்துவதற்காக ஏகாதிபத்திய நாடுகளும் சோசலிச முகாமான சோவியத் இரசியாவும் கூட்டுச் சேர்ந்தன என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அணு குண்டு கதை:

அணு குண்டு தயாரிக்க முடியும் என்று கண்டறிந்த ஐன்ஸ்டீனும் சரி பிறகு அதை தயாரித்து முடித்த குழுவில் இருந்த மூன்று பெரும் விஞ்ஞானிகளும்  சரி அனைவரும்  யூதர்களே ஆவர். அமெரிக்காவில் தான் அணு குண்டு தயாரிக்கப்பட்டது. இட்லர் அணு குண்டு தயாரித்துவிடக் கூடும் என்ற அச்சம் தான் யூத விஞ்ஞானிகளை அணு குண்டு தயாரிக்குமாறு நிர்பந்தித்த புறநிலைக் காரணி எனலாம். ஒருவழியாக அமெரிக்காவின் மன்ஹாட்டன் திட்டம் மூலமாக ராபர்ட் ஓப்பன்ஹய்மர், டேவிட் பாஹ்ம், லியோ சிலார்டு ஆகிய முன்னணி விஞ்ஞானிகளால் அணுகுண்டு தயாராகிவிட்டது.

hiroshima bombing

அணு குண்டை வீசியது ஏன்?

போரில் வெற்றியை உறுதி செய்வதற்காகத் தான் அமெரிக்கா ஜப்பான் மீது அணு குண்டு வீசியதா? இல்லை. 1945 ஆம் ஆண்டு ஏப்ரம் மாதம் கடைசிவாரம் தோல்வி அடைந்து விட்டார் இட்லர். மே முதல் வாரத்தில் நாசிப் படைகள் அமெரிக்கா-பிரிட்டன் படையினரிடம் ஒருபுறமும் இரசியப் படையினரிடம் இன்னொருபுறமும் சரணடைந்தன. முசோலினிப் படையும் தோல்வி கண்டது. உண்மையில் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் தோல்வி ஐரோப்பாவில் முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இதற்கு மூன்று மாதம் கழித்துத் தான் ஜப்பான் மீது அணு குண்டு வீசப்பட்டது.

  1. 1942 ஆம் ஆண்டு பேள் துறைமுகத்தில் (Pearl Harbour) இருந்த அமெரிக்க கடற்படைத் தளத்தைத் தாக்கியது ஜப்பான். இது அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்காவின் வான்வழி தாக்குதல் முயற்சிகளை ஜப்பான் முறியடித்துக் கொண்டிருந்தது. எனவே, பேள் துறைமுகத் தாக்குதலுக்கு பழிவாங்கும் பொருட்டு அமெரிக்கா அணு குண்டை வீசியது என்பது மறுக்கமுடியாத காரணம்.
  2. அடுத்தடுத்து இரண்டு அணு குண்டுகளை வீசியதன் மூலம் அணு குண்டைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்ற அமெரிக்காவின் அநாகரிகமான விருப்பம் உறுதியாகிறது. ஏனெனில் ஒப்பிட்டுப் பார்த்து பரிசோதிப்பதற்கு ஒரு குண்டை வீசினால் மட்டும் போதாது, குறைந்தது இரண்டு அணு குண்டுகளையாவது போட்டாக வேண்டும். எனவேதான், ஹிரோசிமாவைத் தொடர்ந்து நாகசாக்கியிலும்.
  3. போரில் முன்னமே நேச நாடுகள் வெற்றிப் பெற்றுவிட்டன. அப்படி இருந்தும் ஜப்பான் மீது அமெரிக்கா அணு குண்டு வீசியதற்கு இன்னொரு காரணம் உண்டு. அது இரண்டாம் உலகப் போரின் ஆட்ட நாயகன் தான் தான் என்று  அறிவித்தபடி உலகின் தலைவனாக தனக்கு முடிசூட்டிக் கொள்வதே ஆகும். அணுகுண்டைப் பிரயோகித்ததன் மூலம் தனது நிரந்தர எதிரியான இரசியாவுக்கு அதிர்ச்சி தந்தது மட்டுமின்றி சோசலிச முகாமைவிட வலுவானது அமெரிக்க முகாம் என்று நிறுவிக் கொண்டது. அதுமட்டுமின்றி ஏகாதிபத்திய முகாமின் தலைவனாக வேண்டும் என்பது அமெரிக்காவுக்கு நூற்றாண்டுக் கனவாகும். அதற்காக வரலாற்றில் தருணம் பார்த்து விழித்திருந்தது அமெரிக்கா. எனவே, ஐரோப்பிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதி வலுவிழக்கட்டும் என்று விரும்பியது அமெரிக்கா. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அழிவுக்குள்ளாகி இருந்த ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளைப் பின்னுக்கு தள்ளி ஏகாதிபத்திய முகாமின் தலைவனாக தன்னை நிறுவ ஹிரோசிமா மீது சின்ன பையனையும்(Little boy) நாகசாக்கி மீது பருத்த மனிதனையும் (Fat Man) வீசியது அமெரிக்கா. மொத்தத்தில், அமெரிக்கா தனது நூற்றாண்டுக் கனவையும் வரவிருக்கும் அரை நூற்றாண்டுக்கான தலைமைப் பாத்திரத்தையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கையே அணுகுண்டு வீச்சு.

எது எப்படியாயினும் ஹிரோசிமா, நாகசாக்கியில் இருந்த பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், செயல்பட முடியாத முதியவர்கள், உயிரினங்கள் என்றெந்த வேறுபாடுமின்றி பூமியைச் சுட்டெறித்த அந்த அணுகுண்டு வீச்சு இயற்கையையும் மானுட நாகரித்தையும் நிலைகுலையச் செய்தது என்பதும் அமெரிக்காவும் அதன் மக்களும் இதற்காக வெட்கித்தலை குனிய வேண்டும் என்பதும் அமைதியை விரும்பும் எல்லோருடைய கருத்தாகவும் இருக்கிறது.

japan surrender to US

ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது ஏன்?

ஆகஸ்ட் 6 ஆம் நாள் ஹிரோசிமாவில் முதல் அழிவு நடந்தது. ”நீங்கள் சரணடையாவிட்டால் அழிவு மழையாகப் பொழியும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரூமன் மிரட்டினார். (அது ட்ரூமனின் அமெரிக்காதானே என்று அமைதிக் கொள்ள வேண்டாம். எங்களுக்கு ஒத்துழைக்காவிட்டால்,  ”குண்டு வீசப்படுவதற்கு தயாராயிருங்கள், கற்காலத்திற்கு திரும்பிச் செல்வதற்கு தயாராயிருங்கள்”  என்று இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்து முடிந்தவுடன் புஷ்ஷின் அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு இப்படியொரு மிரட்டல் செய்தியை இரகசியமாக அனுப்பியது. இதைப் பின்னாளில் அப்போதைய பாகிஸ்தான் அதிபராக இருந்த முசாரப் வேதனையுடன் வெளியில் சொன்னார். எதிர்கால உலகம் பற்றிய அச்சத்தை இது தருகிறதல்லவா?)

போரில் வெற்றி பெற்ற அணியிடம் சரணடைந்தாக வேண்டும். வெற்றி பெற்ற அணி என்பது நேச நாடுகளின் அணியாகும். அந்த அணியில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் ஒருபுறமும் சோசலிச இரசியா இன்னொருபுறமும் இருக்கிறது. இரண்டிலொரு தரப்பிடம் சரணடைந்தாக வேண்டும். இதுவே ஜப்பான் மீதிருக்கும் நிர்பந்தம். ஜப்பான் அரசினுடைய முடிவெடுக்கும் குழுவில் இரண்டு அணிகள் இருந்தன ஒன்று போர் ஆதரவு அணி (war party), மற்றொன்று அமைதி ஆதரவு அணி (peace party). முன்னது இரசியாவிடம் சரணடையலாம் என்று முடிவெடுத்து ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்புகிறது.  இதற்கிடையே ஆகஸ்ட் 9 ஆம் நாள் நாகசாக்கி மீதும் குண்டு வீசியது அமெரிக்கா. அமைதி ஆதரவு அணி இரண்டுமுறை அணு குண்டை வீசிய அமெரிக்காவிடம் சரணடையலாம் என்று முடிவுசெய்து ஜப்பானை அமெரிக்காவின் காலடிக்கு கொண்டு சேர்த்தது.

போரில் தோற்றுவிட்ட காரணத்தால் சரணடைவதைத் தவிர ஜப்பானுக்கு வேறு வழியில்லை. அதில்தான் ஜப்பானின் தேசிய நலன் அடங்கி இருக்கிறது. ஆனால், யாரிடம் சரணடையலாம் என்பதில் ஜப்பானுக்கு தெரிவு செய்வதற்கு இரண்டு தேர்வுகள் இருந்தன. அமெரிக்காவா? இரசியவா? என்ற கேள்விக்கு அமெரிக்கா என்று முடிவு செய்தது ஜப்பான். அணு குண்டு வீசி பேரழிவைத் தந்த அமெரிக்காவிடம் சரணடைய ஜப்பானை உந்தித் தள்ளியது என்ன?

இரசியா என்ற சோசலிச நாட்டிடம் சரணடைந்தால் வெகுகாலத்திற்கு ஜப்பானில் மன்னராட்சி நீடிக்க முடியாது. சோசலிச இரசியாவுடன் சரணடைவது என்பது ஏகாதிபத்திய ஜப்பானுக்கு உவப்பானதல்ல. மாறாக அணு குண்டு போட்டு தம் மக்களைக் கொன்று குவித்திருந்தாலும் அமெரிக்காவிடம் போவதுதான் தனக்கு நீண்ட கால பொருளில் பொருத்தமானது என்று கருதியது ஜப்பானில் மன்னராட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்பிய அதன் ஆளும் வர்க்கம். இங்கு ஜப்பானின் தேசிய நலனுடன் சேர்த்து தனது வர்க்க நலனைப் பாதுகாப்பதில் ஜப்பான் ஆளும் வர்க்கம் வெற்றிக் கண்டது என்றே சொல்ல வேண்டும்.  அமெரிக்காவுடன் ஜப்பான் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் முதல் சரத்து மன்னராட்சியைப் பாதுகாப்பது தொடர்பானது என்பதே இதற்கு எளிய ஆதாரமாகும். எது எப்படியோ ஒரு தேசம் என்ற வகையில் ஜப்பான் சரணடைவதும், தலையெடுப்பதும், மீண்டும் சரணடைவதும் தலையெடுப்பதும் என தனது பாதையைத் தெரிவு செய்து கொண்டது.

சாதி, மத, தேசிய, தர்ம போதனைகள், நீதி நியாயங்கள், குழுக்கள், கட்சிகளின் பெயரால் எல்லாம் எடுக்கப்படும் முடிவுகளில் வர்க்க நலன் தீர்மானகரமான பங்கு வகிக்கிறது. அதற்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு இரசியாவிடம் சரணடையாமல் மன்னராட்சியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தையும் நிறைவு செய்யும் வகையில் அணு குண்டு போட்டு தன்னை அழித்த அமெரிக்காவிடமே ஜப்பான் சரணடைந்தமையாகும். இந்த வரலாற்று நாடகத்தில் நடித்த கதாபாத்திரங்களான ட்ரூமன், ஸ்டாலின், சர்ச்சில், இட்லர், முசோலினி, ஐன்ஸ்டீன் ஆகிய யாவரும் வரலாற்றின் கருவிகள்தாம். வர்க்க நலன்களின் பிரதிநிதிகள்தாம்.

அணு குண்டே வீசியிருந்தாலும் தனது வர்க்க நலனுக்கு ஏற்றவனென்றால் அவனே அன்புக்குரியவன்!

– செந்தில்,

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழகம் இயக்கம்

குறிப்பு: வரலாற்றுத் தரவுகள் மு.திருநாவுக்கரசு எழுதிய ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும் என்ற நூலிலிருந்து பெறப்பட்டன.

About செந்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*