Home / அரசியல் / நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது அணு உலையா, பழைய ஈயம்,பித்தளையா ?

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது அணு உலையா, பழைய ஈயம்,பித்தளையா ?

இந்தியா-இரசிய முயற்சியில் உருவான கூடங்குளம் திட்டம் முதல் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 11) அன்று நடந்தது. காணொளி காட்சி முறையில் இரசிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர். ஜெயலலிதா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் பேசிய பேச்சுகளின் உண்மைத் தன்மையை ஆராய்கின்றது இக்கட்டுரை.

“இரசியாவுடன் இந்தியா கொண்டுள்ள நட்புறவின் வெளிப்பாடாக கூடங்குளம் முதலாவது அணு உலையை ஒன்றிணைந்து அர்ப்பணிக்கிறோம். பசுமையான வளர்ச்சிக்கு இரு நாட்டு நட்புறவுகளும் வழிகோலும் என்பதற்கு இது அடையாளம். இரசியாவின் அதி நவீன தொழில்நுட்பத்தில் இந்த அணு உலை அமைக்கப்பட்டிருக்கின்றது- புதின்.(1)

இந்திரா காந்தி ஆட்சிகாலத்தில் இந்திய விஞ்ஞானிகளை அணு சக்தி மூலம் இயங்கக்கூடிய நீர்மூழ்கி போர்கப்பலை உருவாக்கக்கோருகின்றார். இந்திய விஞ்ஞானிகளால் அது முடியாமல் போகின்றது. அப்பொழுது இந்தியாவுடன் நட்புறவாக இருந்த இரசியாவிடம் இப்படி ஒரு நீர்மூழ்கி போர் கப்பலை செய்து தரக்கேட்கின்றார் இந்திரா. ஆனால் இரசியாவோ நாங்கள் உங்களுக்கு நீர்மூழ்கி போர்கப்பலை செய்து தருகின்றோம், ஆனால் அதனுடன் சேர்த்து எங்களது அணு உலைகளையும் நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகின்றது. தனது ஆசை தான் முக்கியம் எனக் கருதிய இந்திராவோ இந்த மிரட்டலுக்கு ஒப்புக்கொள்கின்றார். இந்திராவின் மறைவிற்கு அடுத்து வந்த ராஜீவ் காந்தி அரசு அந்த அணு உலைகள் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றது.

இது தான் உண்மையில் நடந்த நிகழ்வுகள். இந்த நிலையில் 90களுக்கு பிறகான நிதி நெருக்கடிகளால் கப்பல் வாங்க பணம் கொடுக்கமுடியாததால் போர்கப்பல் ஒப்பந்தம் இரத்தானது, இருந்தாலும் கப்பல் கட்டுமானம், கடலில் வெள்ளோட்டம்(Trail) விடுவதற்கான நிதியை இந்திய கடற்படை தந்ததால் பதிலுக்கு 10 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த போர்கப்பல் 2012 ஆம் ஆண்டு இந்தியாவிடம் கையளிக்கப்பட்டது. இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த கப்பலின் இன்றைய பெயர் “INS Chakra”. விஸ்ணுவின் கையில் இருக்கும் சக்கரத்தின் நினைவாக வைக்கப்பட்டதாம். இந்த போர்கப்பல் இரசியாவில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட‌ 2008ஆம் ஆண்டு பெரும் விபத்துக்குள்ளானது.  20 பேர் இந்த விபத்தில் கொல்லப்பட்டனர் என்பது இந்த கப்பலின் தரத்தை நமக்கு நினைவூட்டுகின்றது (2).

அணு உலை நாம் வாங்கவில்லை, கழுத்தில் கத்தியை வைத்து வாங்க நிர்பந்திக்கப்பட்டோம் என்பதே உண்மை, இந்த நிலையில் நேற்றைய நிகழ்வில் புதின் நட்புறவு என எதை சொல்கின்றார் எனப்புரியவில்லை.  மேலும் கூடங்குளம் அணு உலை அதி நவீன தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டது என்கிறார் புதின். அவ்வளவு அதி நவீன தொழில்நுட்பத்தால் கட்டப்பட்ட கூடங்குளம் முதல் அணு உலை செயல்படத்தொடங்கிய அக்டோபர் 2013லிருந்து பிப்ரவரி 2016வரையிலான 2 ஆண்டு நான்கு மாத காலத்தில் மட்டும் 20 முறை நிறுத்தப்பட்டது.

1112658766

அணு உலை பேரழிவுக்கு உள்ளாகி மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள இரசியாவின் செர்னோபில் நகரம்

இந்த இரண்டு ஆண்டு நான்கு மாதங்களில் வெறும் 372 நாட்கள் மட்டும் தான் வேலை செய்துள்ளது, 468 நாட்கள் வேலை செய்யவில்லை என கூடங்குளம் அணு உலை நிர்வாகமே கூறுகின்றது.(3) அதாவது 50 விழுக்காட்டிற்கு மேல் வேலை செய்யாத ஒரு அணு உலையை அதி நவீன அணு உலை என சொல்வதை கேட்டு நாம் சிரிப்பதா? அழுவதா? எனத் தெரியவில்லை. இப்படி பேரிச்சம்பழத்திற்கு போட வேண்டிய பழைய ஈயம், பித்தளை, இரும்பு உள்ளிட்டவற்றை கொண்டு வந்து இந்தியாவின் தலையில் கட்டிவிட்டு அதை அதி நவீன தொழில்நுட்பம் என சொல்கின்றார் புதின்.

மேலும் கூடங்குளம் அணு உலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்க மாட்டோம் என இதே புதின் தான் முந்தைய பிரதமர். மன்மோகன் சிங்கை மிரட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்தும் வாங்கினார். (4)  ஆம், பழைய ஈயம், பித்தளையை வைத்து கட்டிய இந்த அணு உலை என்று வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகலாம். அப்படி ஏற்பட்டால் இந்திய சட்டப்படி 15,000 கோடி ரூபாயை இந்தியாவிற்கு கொடுப்பதற்கு இரசியா என்ன முட்டாளா?

இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வேன் என சூளுரைத்த பிரதமர்.நரேந்திர மோடியோ இதைப்பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூட கூறாமல் கள்ள மௌனம் காக்கின்றார். உண்மையில் கூடங்குளம் அணு உலை என்பது செயல்படவே இல்லை என்பதை 2013 அக்டோபர் முதலே நாம் பல கட்டுரைகளின் மூலம் அம்பலப்படுத்தி வந்தோம். கட்டுரைகளில் சில “இந்திய அரசின் மின்சாரப் பொய்கள்“, “புதினை திருப்தி படுத்தவே கூடங்குளத்தில் நள்ளிரவு மின்சாரம்!” , “மின்வெட்டுக் காலங்களும் – கூடங்குள அணுமின் நிலையக் கதைகளும்“, “அதோ வந்துவிட்டார்….. இதோ வந்துவிட்டார். …..“,

அதுமட்டுமின்றி கூடங்குளம் அணு உலையில் பல கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது என்பதை விளக்கும் “அணு உலையில் ஊழல் !!!!”, “கூடங்குளம் ஆயிரம் மெகாவாட் புளுகும், ஊழலும்……” என இரு கட்டுரைகளை எழுதியுள்ளோம். ஊழலை எதிர்த்து போராடுவார் என அவரது ஆதரவாளர்களால் எதிர்பார்க்கப்பட்ட மோடி இந்த ஊழலைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசாமல் இன்று செயல்படாத அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். அதுமட்டுமின்றி அதில் அவர் ஆற்றிய உரை என்பது முழுபூசணியை சோற்றில் மறைப்பது போல உள்ளது.

“கூடங்குளம் அணு உலையில் இருந்து சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாமல் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இது இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாமல் மின் உற்பத்தி செய்வதன் தொடர்ச்சியான நடவடிக்கையாக அமைந்துள்ளது. மேலும் ஐந்து 1000 மெகாவாட் மின் திறன் கொண்ட அணு உலைகள் அங்கு நிறுவப்படும்” – மோடி (1)

அணு உலையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது என்பது சூழலுக்கு மாசில்லாதது என்ற பொய் அணு உலை ஆதரவாளர்களால் திரும்ப, திரும்ப சொல்லப்படுகின்றது. அதையே தான் திருவாளர்.மோடியும் கூறியுள்ளார்.

*  அணு உலையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது கதிர்வீச்சு வெளியாகும். மற்ற மின்னுற்பத்தி முறைகளை விட இது மனிதனுக்கு மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் இந்த கதிர்வீச்சு புற்றுநோயை உண்டாக்கி மனிதனை உடனே கொல்லும். மேலும் தலைமுறைகள் தாண்டியும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கல்பாக்கம் அணு உலையைச் சுற்றி ஏற்படும் கதிர்வீச்சினால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக மருத்துவர்.புகழேந்தி, மருத்துவர்.இரமேசு பல ஆய்வுகளை செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார்கள். (5,6,7)

* அணு உலை கழிவுகளின் ஆயுட்காலம் பல ஆயிரம் ஆண்டுகள். இந்த அணு உலை கழிவுகள் தொடர்ந்து கதிர்வீச்சை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்.(8)  இந்த கழிவுகளை பூமியின் ஆழத்தில் புதைத்து வைப்பதே இப்போதுள்ள ஒரே தீர்வு. அமெரிக்கா பல்லாயிரம் டாலர்கள் செலவழித்து சோதனை செய்த மலையைக் குடைந்து அணுக் கழிவுகளை சேமிக்கும் யுக்கா அணுக்கழிவு சேமிப்புத் திட்டம் தோல்வியடைந்துள்ளதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளது. கழிவுகளை தனது நாட்டிற்கு வெகுதொலைவில் ஆழ்கடலிலோ அல்லது வேறு நாடுகளின் அருகிலோ புதைக்கிறது/ வீசுகிறது. கூடங்குளம் அணு உலை கழிவுகளை செயல்படாமல் இருக்கும் கோலார் தங்க சுரங்கத்தினுள் வைக்க திட்டமிடப்பட்டது. பின்னர் கர்நாடக மக்கள் போரட்டத்தினால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அணு உலை கழிவுகள் வைக்கப்படும் இடமென்பது மக்கள் வசிக்காத‌ இடமாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 20-30 கிலோமீட்டர் சுற்றளவில் மக்கள் வசிக்க கூடாது. கோலார் என்பது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி, கோலாரில் அணு உலை கழிவுகளை வைக்க திட்டமிட்டதில் இருந்தே தெரிகின்றது அரசு எவ்வளவு அறிவுப்பூர்வமாக அணு உலைக் கழிவுகளை கையாளுகின்றது என. தேனி நியூட்ரினோ திட்டம் என்பது அணு உலை கழிவுகளை வைக்கும் ஒரு திட்டமாகவும் இருக்கலாம், ஏனென்றால் இந்த திட்டத்தின் அறிக்கையில் அணு உலைக் கழிகளை வைப்பதும் சேர்க்கப்பட்டு, பின்னர் சூழியல் ஆர்வலர்களால் சுட்டிகாட்டப்பட்ட பின்னர் அது தவறுதலாக இணைக்கப்பட்டுவிட்டது என அரசால் சொல்லப்பட்டது.

மின்னுற்பத்தி திட்டங்களியே சூழலுக்கும், மனிதனுக்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியதும், பேரழிவை விழைவிக்கக்கூடியதும்  அணு உலை மின்னுற்பத்தியே. அதனால் தான் அமெரிக்கா, இரசியா, ஜெர்மனி , ஐரோப்பிய நாடுகள் அணு உலைகளை நிறுத்திவிட்டு சூரிய மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி பக்கம் நகர்கின்றன. அதே சமயம் தங்கள் நாட்டில் இருக்கும் அணு உலை கட்டமைக்கும் நிறுவனங்களுக்காக இந்தியா போன்ற நாடுகளை பயன்படுத்துகின்றன.

ஒரு அணு உலையே இன்னும் செயல்படாமல் இருக்கும் நிலையில், மேலும் 5 ஒட்டை அணு உலைகளையும் அமைக்கப்போகின்றார்கள். அதவாது கூடங்குளத்தில் எப்பொழுதும் வெடிக்க கூடிய நிலையில் மொத்தம் ஆறு அணு குண்டுகளை மொத்தமாக கட்டுகின்றது இந்திய அரசு.

marketing-pigs-trough

“மக்களுக்காக தவ வாழ்வு வாழும்” தமிழக முதல்வர்.ஜெயலலிதாவின் பேச்சைப் பார்ப்போம்.

“இத்திட்டத்தை செயல்படுத்த முழுமையான ஒத்துழைப்பை எப்போதும் அளித்துள்ளேன். சமூக சொத்துகள் மற்றும் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் எவ்வாறு மக்களின் அச்சத்தைப் போக்க முடியும் என்ற பாடத்தை இது நமக்கு அளித்துள்ளது. கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளின் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன” (1)

சங்கரன் கோவில் இடைத்தேர்தலின் போது “அணு உலையை எதிர்த்து போராடும் உங்களோடு ஒருத்தியாக நான் இருப்பேன்” என சொன்னவர் தான் ஜெயலலிதா.  இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் கூடங்குளம், இடிந்தகரை பகுதிகள் ஒரு போர் பிரதேசம் போல தமிழக அரசால் மாற்றப்பட்டது. வானூர்தி(Aeroplane)) ரோந்து கூட நடந்தது. தாழ்வாக பறந்த வானூர்தியால் மீனவர்.சகாயம் கொல்லப்பட்டார். காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் மணப்பட்டைச் சேர்ந்த அந்தோணி ஜான் கொல்லப்பட்டார். வீடு புகுந்து மக்கள் வேட்டையாடப் பட்டார்கள். (9)வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்ட போது கூட இல்லாத வகையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன.  வழக்கிற்கு அலைந்தலைந்தே ரோசிலின் மேரி கொல்லப்பட்டார்.

மக்களின் அச்சத்தை உரையாடல்கள் மூலம் போக்குவதே சனநாயகம். ஆனால் ஜெயலலிதா தலைமையிலான அரசு வன்முறை, கடுமையான ஒடுக்குமுறையை ஏவியே கூடங்குளம் அணு உலையை இயக்கியது. அரசின் செயல்பாடுகளால் மக்களின் அச்சம் அதிகமானதே தவிர குறையவில்லை. இன்றுவரை அணு உலையில் விபத்து ஏற்பட்டால் தப்பிப்பது எப்படி என ஒரு பயிற்சி கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அளிக்கப்படவில்லை. ஏன் சென்னையை ஓட்டி தான் கல்பாக்கமும் உள்ளது. கல்பாக்கம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்பது கல்பாக்கத்தை ஒட்டியும், சென்னையிலும் வாழும் மக்களுக்கே தெரியாது. இந்த நிலையில் தான் இருக்கின்றது மக்களின் பாதுகாப்பு தொடர்பான தமிழக அரசின் செயல்பாடு.

அன்று முதல் இன்று வரை மக்கள் போராடும் பொழுதெல்லாம் காவல்துறையை அனுப்பி ஒடுக்கும் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுபவர் தான் ஜெயலலிதா. மக்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற சொல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியும் இன்று வரை நீதிமன்ற தீர்ப்பை கூட மதிக்கமால் எல்லா வழக்குகளையும் திரும்ப பெறாமல் சில வழக்குகளை மட்டும் திரும்பப் பெற்று  ஆணவத்தோடு செயல்படும் ஜெயலலிதா அவர்கள் சொல்கின்றார் மக்களின் அச்சம் போக்கப்பட்டதாக.

கூடங்குளம், அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு 500 கோடி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறுகின்றார் ஜெயலலிதா. அந்த 500 கோடிகளில் என்னென்ன பணிகள் செய்யப்பட்ட என சொன்னால் நலம். ஏனென்றால் இன்றுவரை கூடங்குளத்திற்கே ஒரு அரசு பேருந்து கூட இல்லை, தனியார் பேருந்து வசதி தான் உள்ளது. காற்றாலை உள்ளிட்ட பல மின் திட்டங்கள் மூலம் தமிழகத்திற்கே மின்சாரம் அளிக்கும் தூத்துகுடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்னும் பல மணி நேரம் மின் தடை. உண்மையில் அன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிராக செயல்பட்ட பல கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்களுக்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு அவர்களின் வாயடைக்கப்பட்டது. இந்த 500 கோடியில் எவ்வளவு கோடி அரசியல்வாதிகளால் ஊழல் செய்யப்பட்டதோ ?

கூடங்குளம் திறக்கப்பட்டால் , தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை தீரும், மின் வெட்டு இல்லாமல் போகும் என்று பரப்புரை செய்த மத்திய , மாநில அரசுகள், இதுவரை கூடங்குளத்தில் உற்பத்தி செய்த மின்சாரம் எத்தனை மெகாவாட் என்பதை பொது மக்களுக்கு அறியத் தருமா ?

இந்த உண்மையை மக்களுக்கு எடுத்தியம்ப வேண்டிய ஊடகங்களோ கூடங்குளம் அணு உலையை ஏதோ மிகப்பெரிய சாதனை போல திரும்ப, திரும்ப கூறி அரசின் பிரச்சார பீரங்கிகளாக செயல்படுகின்றன. சனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள் எப்பொழுதோ செல்லரித்துவிட்டன. மேலும் அரசு கொடுக்கும் விளம்பரங்களினால் தான் பல ஊடகங்கள் இயங்குகின்றன. அதனால் அவர்கள் அரசை பகைத்து கொள்வதில்லை. 2013 ஆம் ஆண்டு வரையிலான அணு உலை ஒப்பந்தங்களின் மதிப்பு ஆறு இலட்சம் கோடி, அதற்கு பிறகு நிறைய அணு உலை ஒப்பந்தங்கள் போடப்பட்டுவிட்டன. இதில் எவ்வளவு ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என யாராலும் கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால் இந்திய அணுசக்தி வாரியம் செயல்படுவது பாதுகாப்பு துறையின் கீழ். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நீங்கள் கேள்வி கேட்டாலும் இந்தியாவின் பாதுகாப்பின் பெயரால் உங்களுக்கு பதில் மறுக்கப்படும்.

இரசிய மக்கள் ஒரு செர்னோபில் பேரழிவிற்கு ஆளானார்கள். தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதாக கூறப்படும் சப்பான் புகுசிமா பேரழிவிலிருந்து இன்னும் மீளவில்லை. ஏன் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அணு உலை மையத்தை நெருங்குவதற்கான செயல்திட்டத்திலேயே இன்றும் இருக்கின்றது. இராணுவ வீரர்கள் பயணித்த‌ ஒரு விமானத்தையே எங்கிருக்கின்றது என கண்டுபிடிக்க முடியாத இந்திய அரசு தான் அணு உலை பேரழிவிலிருந்து தடுக்கும் என நாம் நம்புவதும் ஓடும் இரயிலின் முன்னே நிற்பதும் ஒன்று.

கூடங்குளம் உள்ளிட்ட எல்லா அணு உலைகளையும் எதிர்த்து போராடுவதன் மூலமே நமது எதிர்கால சந்ததியினர் நலமாக உயிர்வாழ முடியும். நமது சந்தியினரை காப்பாற்றும் சுயநலம் கூட அற்ற நிலையில் தான் நாம் இன்று உள்ளோம். அதனால் தான் இது போன்ற காலாவதியானவற்றை நம் தலையில் ஆட்சியாளர்கள் கட்டுகின்றார்கள். நாம் விழிப்புணர்வு பெற்று போராட வேண்டும். இனியும் நாம் தூங்கிக்கொண்டிருந்தால் நம்மை மட்டுமல்ல, நமது சந்தியினரைக் கூட நாம் காப்பாற்ற முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்படுவோம்.

– நற்றமிழன்.ப

இளந்தமிழகம் இயக்கம்

மேலும் படிக்க / தரவுகள்..

1)http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8969599.ece

2) https://en.wikipedia.org/wiki/Russian_submarine_Nerpa_(K-152)

3) http://www.thenewsminute.com/article/kudankulam-reactor-tripped-20-times-was-grid-468-days-who-accountable-38901

4)http://www.visai.in/2012/08/04/%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

5) http://www.dianuke.org/pugazhenthi-kalpakkam/

6) https://www.saddahaq.com/the-harmful-effects-of-nuclear-power-plant-in-kalpakkam

7) http://www.sacw.net/article134.html

8) https://en.wikipedia.org/wiki/Radioactive_waste

9) http://www.visai.in/2012/04/26/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%aa/

 

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*