Home / கலை / கவிதை / கருப்பன்களின் சத்தியம்

கருப்பன்களின் சத்தியம்

தோட்டத்து வாழை மரக்கன்றுக்கு

தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்தவனை

“டேய் கருப்பா !” வென முதலாளியின் குழந்தை விளித்த

கடைசி நாளில்

வேலை செய்து கொண்டிருந்தான் கருப்பன்.

 

இறந்தழுகிய மாட்டின் பிணங்களை

பாறுக் கழுகுகள் இடைவிடாமல் கொத்தின.

பெரிய தெருவின் வீடுகளில்

சேகரமான மலக்கழிவுகளின் தேசிய வாடை

தூர்வாறப்படாத சாக்கடைகளில் தேங்கி நின்றது.

 

வயதான கருப்பன் இனி பிணமெரிக்கப் போவதில்லையெனவும்

வயது குறைந்த கருப்பன்

சவரக்கத்தியை இனி தொடுவதில்லையெனவும்

கருப்பன்களின் கருப்பிகள்

ஆண்டைகளின் காட்டில்

புல்லறுக்கப் போவதில்லையெனவும்

ஆதி தெய்வங்களுக்குச்

சூடமேற்றிச் செய்த சத்தியத்தின் நெடி

பெரிய தெருவெங்கும் பரவியது.

 

அறுந்த செருப்பை

கக்கத்தில் இடுக்கிக் கொண்டே

இரண்டரை மைல் நடந்து வந்த, மீசை ஆண்டை ஒருவனுக்கு

தாமதமாகத் தான் சென்று சேர்ந்தது செய்தி.

 

கொதித்தெழுந்து

எரிந்தடங்கிய இரவொன்றின்

விடியலின் ஒரு ஓரம்

“அடங்க மறுத்தால் அறுப்போம்” என்கிற பேனரில் கீழ்

ஒன்றுக்கடித்தான் சிறிய கருப்பன்.

 

– அ.மு.செய்யது.

இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*