Home / அரசியல் / டிரம்ப் பேசும் அரசியல் என்ன ?

டிரம்ப் பேசும் அரசியல் என்ன ?

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு குறைவான நிலையில்,   குடியரசுக் கட்சியிலிருந்து “டொனால்ட் டிரம்பும்”  ஜனநாயகக் கட்சியின் சார்பாக “ஹிலாரி கிளிண்டனும்” களத்தில் எதிர்த்து போட்டியிடுகின்றனர். இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளைப் போல, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பரப்புரை செய்வது என்றில்லாமல், நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதங்கள் என அமெரிக்க அதிபர் தேர்தல் களம் ரகளையானது.சர்ச்சைகளுக்கும் குறைவிருக்காது.  அது மட்டுமின்றி,  உலக அரசியல் ஒழுங்கைத் தீர்மானிக்கும் முக்கிய புள்ளியாக அமெரிக்க அதிபர் தேர்தல் கவனிக்கப்படுகிறது.

அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் மாகாண வாரியான உட்கட்சித் தேர்தல்களின் போது,  டிரம்ப்பின் பேச்சுகள் அமெரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வெள்ளை இனவெறியை ஆதரிப்பவராகவும், இஸ்லாமிய உலகுக்கு எதிரானவராகவும், டிரம்பின் தேர்தல் பரப்புரைப் பேச்சுக்கள் அவரை முன்னிறுத்தின. அது மட்டுமின்றி, “மெக்சிகோ நாடு அமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்துபவர்களையும் பெண்களை பாலியல் வல்லாங்கு செய்வோரையும் தொடர்ந்து அனுப்பி வருகிறது” என்று ஒரு கூட்டத்தில் பேசினார். மெக்சிகோவில் டிரம்ப்பின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அமெரிக்காவில் ஏதிலிகளை உள்ளே நுழைய விடக் கூடாது எனவும், தொழிலாளர்கள் குறைந்த பட்ச கூலி உயர்வுக் கேட்காதீர்கள், வெளியில் போய் கடினமாக உழைத்து சம்பாதித்துக் கொள்ளுங்கள்” எனவும் தனது தொழிலாளர் விரோதப் போக்கை வெளிக்காட்டினார். தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்துகளை முன் வைக்கிறார் டிரம்ப்.

இந்நிலையில் டிரம்ப்பின் பேச்சுகளைக் கொண்டு அவரை “பாசிஸ்ட்” என்று குறிப்பிட்டு ஹிலாரி ஆதரவு ஊடகங்கள் ஜனநாயக வேடம் போட்டு வருகின்றன. அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு,  அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியே, டிரம்பை அரசியல் களத்தில் இருந்து அகற்ற நினைப்பது தான் நம் கவனத்தை ஈர்க்கிறது. நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட மிகப்பெரிய ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள்,  டிரம்ப்பை முன்னிறுத்தும் கட்சியான குடியரசுக் கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, வால்ஸ் தெருவின் வங்கியாளர்கள்,  எழுத்தாளர்கள் என அனைவரும் ஓரணியில் நின்று டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் புகழ் பெற்ற மார்க்சிய அறிஞர் ஜேம்ஸ் பெட்ராஸ் இது குறித்து சில கருதுகோள்களை முன் வைக்கிறார்.   இதை ஒரு அரசியல் (Coup) சூழ்ச்சி என்றும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவின் மையமான‌ சமூக பொருளாதார  சிக்கல்கள் குறித்து டொனால்ட் டிரம்ப் எழுப்பிய மிக முக்கியமான கேள்விகளை, இரு பெரிய கட்சிகளுமே இருட்டடிப்பு செய்ய முயலுகின்றன. டிரம்பின் கேள்விகள், அவர் எழுப்பும் பிரச்சினைகள் அனைத்துமே இவ்விரண்டு கட்சிகளின் (டிரம்ப் சார்ந்திருக்கும் குடியரசு கட்சி உட்பட) அடிப்படைகளையே தகர்ப்பதாக இருக்கிறது.

டிரம்ப் எழுப்பிய சில முக்கிமான கேள்விகள்,  ஜனநாயக குடியரசு கட்சிகளின் பெருந்தலைகளை உலுக்கியுள்ளது.  இதன் மூலம் பெருவாரியான மக்களின் ஆதரவையும்,  கருத்துக்கணிப்புகளையும் தன் வசமாக்கி இருக்கிறார். அவைகள் என்னென்ன ?

  1.   “திறந்த வர்த்தக ஒப்பந்தம்”  Free Trade agreements  இதை டிரம்ப் எதிர்க்கிறார்.  இந்த ஒப்பந்தமானது,   அமெரிக்காவில் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிய பன்னாட்டு நிறுவனங்களை வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயரச் செய்தது மட்டுமில்லாமல்,  அமெரிக்காவில் செய்த முதலீடுகளை திரும்பப் பெறவும் வைத்தது.
  1.  நிதி மூலதனத்துக்கு மாற்றாக,  அமெரிக்காவில் “பெரிய அளவிலான பொது முதலீட்டு திட்டங்களை” Large Scale public investments ஏற்படுத்துவதன் மூலம் வீழ்ச்சியடைந்த அமெரிக்க தொழிற்சாலை பொருளாதாரத்தை மேம்படுத்துவது.
  1.  ரஷ்யா சீனா உள்ளிட்ட நாடுகளுடனான பனிப்போருக்கு முடிவு கட்டி விட்டு,  அந்நாடுகளுடன் பொருளாதார உறவுகளை உருவாக்குவது,  பேச்சு வார்த்தைகளை ஏற்பாடு செய்வது.
  1. ஐரோப்பாவில் நேட்டோ ராணுவ அதிகரிப்புக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க அரசின் போக்கையும்,  சிரியா, வட ஆப்பிரிக்கா,  ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மூக்கை நுழைக்கும் போக்கையும் டிரம்ப் கடுமையாக சாடுகிறார்.
  1. அமெரிக்காவில் வெளிநாட்டுத் தொழிலாளர் அதிகரிப்பால்,

அமெரிக்க குடிமகன்களின் வேலை வாய்ப்பு பறி போகிறது. கூலியும் குறைகிறது.

டிரம்ப் எழுப்பும் மேற்சொன்ன பிரச்சினைகள் அனைத்தையும் டிரம்ப்பின் எதிர் முகாம் பேச மறுக்கிறது.  அல்லது இந்தப் பிரச்சினைகளின் மையப் புள்ளிகளை இருட்டடிப்பு செய்து விட்டு,  வேறு விதமாக டிரம்ப்பை அடையாளப்படுத்துகிறது.

உதாரணமாக,  ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று டிரம்ப் பேசினால், “டிரம்ப், புதினை ஆதரிக்கிறார். புதின் ஒரு தீவிரவாதி”  என்று கிளப்பி விடுவது.

உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று பேசினால், உலகமயமாக்கலுக்கு டிரம்ப் எதிராக இருக்கிறார் என்று முத்திரை குத்துவது.

அடிப்படையில் உலகமயமாக்கலும் ஏகாதிபத்திய விரிவாக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் தான் டிரம்ப் இருக்கிறார்.

ஒபாமா, கிளிண்டன், புஷ் ஆகியோரின் அரசுகளில் இதுவரை ஏழு போர்களை அமெரிக்கா சந்துத்து விட்டது. இஸ்லாமியர்களுக்கு எதிராக டிரம்ப் கருத்துடையவர் என்பது உண்மை தான் என்றாலும்,   ஹிலாரி, கிளிண்டன், புஷ் ஆகியோர் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுக்கு செயல் வடிவம் கொடுத்தவர்கள்.

ஈராக் , ஆப்கானிஸ்தான் என கோடிக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தது ஜார்ஜ் புஷ்.  ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் தற்போது 50 லட்சம் சிரிய மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  ஏமன் நாட்டில் 10 லட்சம் மக்களை சவுதி படைகளின் மூலம் கொன்றிருக்கிறது அமெரிக்க அரசு. இந்த ஏகாதிபத்திய நலன்களுக்கான போர்கள் தான், அமெரிக்காவின் பொருளாதாரத்தை அதல பாதாளத்துக்குள் தள்ளி விட்டதை டிரம்ப் நினைவு கூறுகிறார்.  இந்த நடவடிக்கைகளுக்கு எதிர் வினையாக, ஏதிலிகளை அமெரிக்காவினுள் நுழைய விடக் கூடாது என்று அவர் பேசுவது தான்,  டிரம்ப் செய்யும் தவறு.  அது மட்டுமின்றி, வெள்ளையின ஆதிக்கம் குறைந்து வருகிறது என்று டிரம்ப் கவலைப்படுவதும், கருப்பின மக்களுக்கு எதிரான இனவெறியராக டிரம்ப் இருப்பதும் மிகப்பெரிய ஆபத்து தான். ஆனால் டிரம்புக்கு எதிரில் நிற்கும் ஹிலாரியின் வரலாறு என்ன என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

ISIS உருவாக்கியதே ஒபாமா தான் என்று சொல்லும் டிரம்பின் கருத்துகளை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கருத்துடைய புவியரசியல் வல்லுநர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.டிரம்பின் “அமெரிக்கா மட்டுமே” கொள்கை,   கடல் கடந்த இராணுவப் போர்களையும்,  உலக மயமாக்கலையும் கடுமையாக சாடுகிறது.  அமெரிக்கப் பொருளாதாரம் சீரழிந்தது மட்டுமின்றி, அமெரிக்க மக்களின் வாழ்நிலை சுருங்கி விட்டதையும் டிரம்ப் எடுத்துக் காட்டுகிறார். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “பெரியண்ணன்” கொள்கைக்கு எதிராக இருக்கிறது.  இன்று அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் முக்கிய கட்சிகளும் உச்சநீதிமன்ற நீதிபதியும் டிரம்புக்கு எதிராக ஓரணியில் திரண்டு நிற்பதன் அடிப்படை காரணம் இது தான்.

வெளியுறவுத்துறை விவகாரங்களில், டிரம்ப் பிரச்சினைக்குரியவர். தான் மட்டுமே நம்பகமான ஒரு தேர்வு என்று ஹிலாரி பேசிக் கொண்டிருக்கிறார். ஹிலாரி ஆதரவு ஊடகங்களும் இக் கருத்தையே பரப்புரை செய்து கொண்டிக்கின்றன. ஆனால் 2009 , அமெரிக்க அரசின் செயலராக பொறுப்பேற்ற ஹிலாரி , உலகெங்கும் ஏற்படுத்திய நாசங்களை சுருக்கமாகக் காண்போம்.

கடந்த ஏழு ஆண்டுகளில், அமெரிக்க அதிபராக இருந்து தான் செய்த மிகப்பெரிய தவறு,  கடாஃபியை லிபியாவின் அதிபர் பொறுப்பிலிருந்து விரட்டியடித்தது தான் என்று ஒபாமா ஒரு நேர்காணலில் ஒத்துக் கொண்டார். கடாஃபிக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை,  பயங்கரவாதக் குழுக்கள் எப்படி நிரப்பின என்பதையும் அவர் விவரித்தார். இந்த நடவடிக்கைகளில் பின்னணியில், ஹிலாரியின் செயல்நுட்பங்கள் இருந்தன என்பதையும், ஹிலாரியே பெருமையாக ஒரு சிபிஎஸ் தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி ஹைதி போன்ற ஏழ்மையான நாட்டில், ஹைதி  பெருமுதலாளிகளோடு இணைந்து கொண்டு, குறைந்த பட்சக் கூலிக்கெதிரான போராட்டங்களையும் கோரிக்கையையும் ஹிலாரி ஒடுக்கினார்.  கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக ஹைதி தேர்தலையும் ஒரு தலைபட்சமாக ஹிலாரி நடத்த வைத்தார். ஹிலாரியின் மீது ராஜ விசுவாசம் கொண்ட ஹைதி தலைவர், மைக்கேல் மார்ட்டெலி , தேர்தலில் மேற்கொண்ட நடைமுறை ஊழல்களை எதிர்த்து, ஹைதி மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடியதும் நடந்தது. இதைப் போல தனது நலன்களுக்காக, ஹோண்டுராஸ் நாட்டில், அதிபர் மேனுவேல் செலாயாவை துப்பாக்கி முனையில் கைது செய்து, கோஸ்டாரிக்காவுக்கு நாடு கடத்திய சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க அரசும் ஹிலாரியும் முக்கிய பங்காற்றினர்.

2011 ஆம் ஆண்டு இறுதியில் , அரபு நாடுகளில் ஜனநாயகத்தை வேண்டி கிளர்ச்சிகள் ஏற்பட்டிருந்த காலத்தில்,  சிரியா அதிபர் பஷார் பல் அஷாத்தை பதவி விலகுமாறு, ஹிலாரி கிளிண்டன் விமர்சித்தார். துருக்கியிலும் ஆட்சி மாற்றத்தை வேண்டி, ஹிலாரி பேசிய உரையானது,  ஐசிஸ் அமைப்புகளின் எழுச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியது. 2015ல் லட்சக்கணக்கானோர் சிரியாவிலிருந்து ஏதிலிகளாக வெளியேறிய துயரமும் நடந்தது.

அமெரிக்க அரசின் செயலராக பதவியில் இருந்து கடைசி கால கட்டத்தில் கூட ஹிலாரி செய்த நடவடிக்கைகள்,  சிரியா ஈராக்கில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக அமைந்தது.  சிரியா அதிபர் அல் அசாத்துக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்க, அமெரிக்கா பாதுகாப்புத்துறை செயலர் லியோன் பெனட்டாவின் ஆதரவோடு ஏற்பாடு செய்தார் ஹிலாரி. தொடக்கத்தில் ஒபாமா இதை மறுத்தாலும், பின்பு அவரும் இத்திட்டத்திற்கு இசைவு தெரிவித்தார்.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான இந்த ஆயுதங்களும் அமெரிக்க கூட்டு நாடுகளின் ஆயுதப் புழக்கமும் ஐசிஸ் அமைப்பின் வளர்ச்சிக்கே துணை புரிந்தன. அசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை விட, ஐசிஸ் அமைப்பு வலுப்பெற்றது. சிரியா, இராக், லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஐசிஸ் அமைப்பு கிளை பரப்ப இந்த ஆயுதங்களே காரணமாக அமைந்தன.  ஈராக் , சிரியா நாடுகளில் அமெரிக்கத் தலையீட்டால், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மட்டுமின்றி , பத்து லட்சம் ஏதிலிகள் 2015 2016க்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவுக்கு இடம் பெயர்ந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட‌ மிகப்பெரிய ஏதிலிகள் நெருக்கடியாக இது பார்க்கப்படுகிறது.

அரபு நாடுகளிலேயே ஏழ்மையான நாடு ஏமன். இன்று வரை, தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில், ஏமன் நாட்டில் அப்பாவி மக்களை சவுதி அரேபிய படைகள் கொன்று வருகின்றன. தூங்கிக் கொண்டிருக்கும் மக்கள், அன்றாடம் வேலைக்குச் செல்லும் மக்கள் என்று சவுதி விமானங்களின் குண்டு வீச்சுகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய தாக்குதல்களுக்காக, சவுதி அரேபியாவுக்கு 46 பில்லியன் அளவுக்கு ஆயுதங்களை வழங்கியது அமெரிக்கா. தேசிய நலனுக்காக இந்த ஆயுத விற்பனையை ஆதரித்து, ஹிலாரி கிளிண்டன் கடுமையாக விவாதித்தார்.

உண்மையில் பாசிசத்தை நடைமுறைப்படுத்த தேவையான செயல்திட்டமோ, அமைப்புப் பின்னணியோ, மக்கள் திரள் வலிமையோ டிரம்ப்புக்கு இல்லை. சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், ஏமன் என கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கும், பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதற்கும்,  ஏதிலிகள் நடுக்கடலில் தத்தளிப்பதற்கும் காரணமான அமெரிக்காவின் போர்களில் ஹிலாரியின் பங்கை மறைத்து விட்டு,  “அமெரிக்காவின் முதல் பெண் அதிபர்” என அவரைத் தூக்கிப் பிடிக்கின்றன அமெரிக்க ஊடகங்கள்.

ஏதிலிகளை உள்ளே நுழைய விடாமல் செங்கற்சுவர் எழுப்புவேன் என்று டிரம்ப் சொல்வதற்கும்,  ஏற்கெனவே இராணுவச் சுவர்களை அமைத்து அதை செய்து கொண்டிருக்கும் முந்தைய அரசுகளுக்கும் என்ன வேறுபாடு இருக்கப் போகிறது ?  டிரம்ப் தம்பட்டம் அடிக்கிறார். ஹிலாரி சத்தமின்றி செய்து முடிக்கிறார்.   அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக் கட்டிலில் அமரும் எவரும் பாசிசத்தின் கருவிகளே.

உலகெங்குமுள்ள உழைக்கும் மக்கள், இஸ்லாமிய தேசங்கள் மற்றும் ஆப்பிரிக்கர்களைப் பொறுத்தவரை ஒபாமாக்கள், கிளிண்டன்கள், டிரம்ப்புகளின் நிறத்தில் பாலினத்தில் வார்த்தைகளில் தான் வேறுபாடுண்டு.  செயலில் அல்ல.

– அ.மு.செய்யது

இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*