Home / அரசியல் / தந்தைப் பெரியார் 138 ஆவது பிறந்த நாள் கட்டுரை

தந்தைப் பெரியார் 138 ஆவது பிறந்த நாள் கட்டுரை

பகுத்தறிவுச் சிந்தனையாளர், சாதி ஒழிப்பை இலட்சியமாகக் கொண்டவர், தனித் தமிழ்நாடு கோரிக்கையை உயர்த்திப் பிடித்தவர் பெண்ணுரிமைச் சிந்தனையாளர், சமதர்மக் கருத்தியலாளர் என்று பன்முக ஆளுமை கொண்டவர் தந்தை பெரியார். தந்தைப் பெரியாரின் பன்முக ஆளுமையும் பல்துறை பங்களிப்பும் அந்தளவிற்குப் பொது சமூகத்திற்கு எடுத்துச்
செல்லப்படவில்லை. கடவுள் மறுப்பாளர், இந்துமத எதிர்ப்பாளர் என்றளவில் அவரது ஆளுமையைச் சுருக்கிவிட்டதில் அவரது எதிர்ப்பாளர்களுக்கே வெற்றி.

ஈ.வே.ரா. என்ற கடவுள் மறுப்பாளருக்குப் பெரியார் என்று பட்டம் தந்து பாராட்டியவர்கள் திராவிட இயக்கத்துப் பெண்கள்தான். பெரியார் என்று சொல்லாமல் ஈ.வே.ரா. என்று சொல்வதன் மூலம் பெரியாரைச் சிறுமைப்படுத்துவதாக கருதிக்கொள்ளும் பா.ச.க. வைச் சேர்ந்த எச்.ராஜா போன்றவர்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், கடந்த கால மற்றும் சம காலத் தலைவர்களைப் ஆணாதிக்க எதிர்ப்பு விசயத்தில் பெரும்பாலும் விமர்சனப் பூர்வமாகப் பார்க்கும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் அனைவரும் பெரியாரைச் சிறந்த பெண்ணியவாதி என்று
சொல்வதுண்டு. பெண்ணுரிமை தொடர்பாக பெரியார் முன் வைத்த கருத்துகள் இன்றும் பொருத்தமுடையதும் நிமிர்ந்து பார்க்க வைக்கக்கூடியதாகும்.

விதவை திருமணத்தின் உயிரியல் தேவையை உணர்ந்து உரக்கப் பேசி அதை மறுப்பவர்களைத் தலையில் கொட்டியப் பொருள்முதல்வாதி அவர்.

எப்போதும் ஆடையைச் சரிசெய்து கொண்டிருக்கும் இந்த துன்பத்திலிருந்து பெண்கள் தம்மை விடுவித்துக் கொள்வதற்கு சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னவர். இந்த சிந்தனைக்காகவே அந்த மனிதன் வானுயர காட்சியளிக்கிறார்.  ஆண், பெண் வேறுபாடு தெரியாமல் பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

“காதலர் வாழ்வு மறைந்து, கணவன் – மனைவி வாழ்வு வந்ததும் பெண்களின் சுதந்திரம் மறைந்துவிட்டது. பெண் என்றால் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு உள்ளவளாக இருக்க வேண்டும். அதுதான் சிறப்பு என்ற வாழ்வு முறையாக்கப்பட்டு விட்டதால், பெண்கள் மனித சமுதாயத்திற்குப் பயன்பட முடியாமல் போய்விட்டனர். இனியாவது தாய்மார்கள், பெண்களை அறிவு பெற முடியாமல் மூடி வைப்பதைத் தடுக்க வேண்டும். ஆண்கள் பெண்களுக்கு உரிமை கொடுக்க முன்வந்தால் கூட பெண்கள் அதனை ஏற்பதாக இல்லை. காரணம் – நாம் அவர்களை அடக்கி ஒடுக்கி அறிவு பெற
முடியாமல் செய்வதாலேயே ஆகும். ஆண்களைப் போல் பெண்களும் தங்கள் வாழ்க்கைக்கேற்ற ஊதியம் பெறும்படியான தொழிலைச் செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். 20 வயது வரைப் படிக்க வைக்க வேண்டும். தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிட வேண்டும்.” என்று பெரியார் எழுதுகிறார்.

யாரும் பேசத் துணியாததைப் பேசும் துணிவு கொண்டவர் தான் பெரியார். அந்தப் பெரியார் மண்னில் தான் சில ஆண்டுகளாக கெளரவக் கொலைகள் பெருகி வருகின்றன. தடி ஏந்தித் தட்டிக்கேட்பதற்கு அந்த தாடிக்கார ஐயா
இல்லாத வெற்றிடத்தில்தான் மருத்துவர் ஐயாக்களும், சின்ன ஐயாக்களும் காதல் திருமணத்தை எதிர்த்து மறைமுகமாக கெளரவக் கொலைகளை ஆதரித்து வருகின்றனர். ஒரு பெண் தனது துணையைத் தானே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை மனித உரிமையைக் கூட மறுத்து இன்று சாதிக் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றனர்.

இன்னொருபுறம் காதலை மறுக்கும் பெண்களைக் கொலை செய்யும் பழக்கம் தோன்றியுள்ளது. தன்னுடைய துணையைத் தேர்வு செய்யும் உரிமையையும் ஒருவரின் காதலை மறுப்பதற்கு இருக்கும் உரிமையையும் இந்த 21 ஆம் நூற்றாண்டில்கூட மறுக்கும் அவலம் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த களநிலை யதார்த்தமே பெரியாரென்னும் பெண்ணுரிமைச் சிந்தனையாளரின் தேவையை உணர்த்தி நிற்கிறது. அன்று கைலி கட்டிக் கொண்டு திராவிட
இயக்க மாநாடுகளில் பெருந்திரளாகப் பெண்கள் பங்குபெற்றார்கள்.

அத்தகையதொரு சமூகவியக்கப் பின்புலம் அன்று நிலவியது. அந்த மரபை மீட்டெடுக்க வேண்டும். பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயல் கொம்பே என்ற பாடல் வரிகளுக்கிணங்க பெருந்திரளான பெண்கள் வீதிக்கு வருவதற்கு பெரியாருடைய அடித்து நொறுக்கும் பேரிடிச் சிந்தனைகள் பெருந்துணையாய் இருக்கும்.

மீத்தேன் எரிவாயு, கிரானைட் மலைகள், தாது மணல், ஆற்று மணல், நிலக்கரி என்று தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. குறைந்த கூலிக்கு தேவையான மனித ஆற்றல் அளவின்றி உற்பத்திச் செய்யப்படுகின்றது. பணக்காரன் – ஏழை இடைவெளி அன்றாடம் அதிகரிக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக் குவிப்பு தலைவிரித்தாடுகிறது. முதலாளித்துவ அமைப்பு முறையினால் ஏற்பட்டுள்ள தீமைகள் பற்றி இன்னும் பரவலான விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

முதலாளித்துவ அமைப்பு முறையை மாற்றவே முடியாது என்று மக்களுக்கு இருக்கும் மலைப்பான எண்ணத்தைக் கேள்விக்குள்ளாக்கிப் பெரியார் பேசுகிறார்.

“அரசன் வேண்டாம் என்கின்ற விஷயத்தை நாம் அசாத்திய விஷயம் என்றா கருதுகின்றோம்? அரசனுக்கு உள்ள படை, பட்டாளம், வெடிகுண்டு பீரங்கிகளையெல்லாம்விட இந்தப் பணக்காரனுக்கும், முதலாளிக்கும் என்ன அவ்வளவு பலமான காவல் இருக்கின்றது? அரசனைவிடப் பணக்காரனுக்கு என்ன அவ்வளவு அதிகமான வேத, சாஸ்திர, புராணப் பாதுகாப்புகள் இருக்கிறது? அவர்கள் நிலைமையே இப்போது காற்றாய்ப் பறக்கின்றது.

பணக்காரர்கள் நிலைமைக்கு என்ன பவுசு இருக்கிறது? வரிசைக்கிரமத்தில் இவர்கள் நிலைமையும் மாற்றமடைய வேண்டியதுதானே? சும்மா சமய சந்தர்ப்பம் இல்லாமல் அரசனையும் பார்ப்பானையும் திட்டி, ஊரார் மெச்சும்படிப் பேசி, கடவுளையும் மதத்தையும் பரிகாசம் பண்ணிக் கொண்டு இருப்பதுதான் சுயமரியாதைக் கட்சியின் இலட்சியமா? என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகின்றதோ, அவைகளையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர அரசனுக்குப் பதிலாகப் பார்ப்பானை ஏற்றி வைப்பதும், பார்ப்பானுக்குப் பதிலாக பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒருநாளும் சுயமரியாதையாகாது. இவையெல்லாம் சுயநல மரியாதையாகும்.” என்கிறார்.

விவசாயக் கடன் பாக்கி என்ற காரணத்திற்காக தஞ்சை விவசாயி பாலன் காவல் துறையால் அடித்து அவமானப்படுத்தப்பட்ட காட்சியை நாடே பார்த்ததே. கல்விக் கடனை வசூலிப்பதற்காக ரிலையன்ஸ் கொடுத்த
அழுத்தத்தால் லெனின் என்ற பொறியாளர் தற்கொலை செய்துக் கொண்டாரே. வறுமையினால் விவசாயிகள், தொழிலாளிகள், மாணவர்கள் ஆகியோரின் சுயமரியாதை பாதிக்கப்படுகிறதல்லவா? சாதிய ஏற்றத்தாழ்வு
மட்டுமின்றி ஏழ்மை நிலைமையும் இந்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகளின் சுயமரியாதையைப் பாதித்து வருகிறதல்லவா?

“அன்றியும் அரசன் வேண்டாம் என்றாலும், பார்ப்பான் வேண்டாம் என்றாலும், பணக்காரன் வேண்டாம் என்றாலும், இதனால் கஷ்டப்படும் மக்கள் 100க்கு 10 பேர்கூட இருக்கமாட்டார்கள். இவை ஒழிந்தால் சுகப்படும் மக்கள் 100க்கு 90
பேருக்கு மேல் இருப்பார்கள். ஆகவே யாருடைய நன்மைக்கு ஏற்ற காரியம் செய்யப்பட வேண்டியது அறிவாளியின் கடமை என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்” என்கிறார் பெரியார். இன்றைய நிலையில் அந்தப் பணக்காரர்கள் 10% கூட இல்லை. இன்றையக் கணக்குப்படி உலகை ஆண்டு கொண்டிருக்கும் அவர்கள் வெறும் 1% தான். மீதமுள்ள 99% பேருக்கான நலனைப் பற்றித்தான் ஐயா பேசுகிறார்.

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

முதல் தலைமுறையாகப் படித்து ஒருமுறை வெளிநாட்டுக்கு போய் வந்து பள்ளிக்கரணையில் ஒரு வீடு கட்டியவரை நாம் பணக்காரர் என்று குறிப்பிடவில்லை. ”இப்படி ஒரு வீடு கட்டினால் இந்த நாட்டில் ஏன் புரட்சி வராது” என்று அம்பானி மும்பையில் கட்டிவைத்துள்ள வீட்டைப் பார்த்து ரத்தன் டாட்டா சொன்னார். இது போன்றவர்களைத் தான் 1% பணக்காரர் என்று சொல்கிறோம். மனித சமூகத்தின் கஷ்ட நிலைமைக்கும் இழிதன்மைக்கும், ஒப்பற்ற தன்மைக்கும், சதா  கவலைக்கும் காரணமாயிருப்பதே இந்த பணக்காரத் தன்மையும் ஏழ்மைத் தன்மையுமேயாகும். என்று அறுதியிட்டு சொல்லி “செல்வவான் (சோம்பேறியாயிருந்து வாழ உரிமையுடையவன்) என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லையானால் கடவுளுக்கும் மதத்திற்கும் சாதிக்கும் அரசனுக்கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள் என்று பெரியார் முடிக்கிறார். 1926 இல் “சுயமரியாதை”, 1927 இல் “சமதர்மம்” இந்த இரண்டும் தான் பெரியாரின் தலையான கொள்கைகள். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட தந்தை பெரியார்
சோசலிச இலட்சியத்தை உயர்த்திப் பிடித்தார். சுயமரியாதையும் சமதர்மமும் ஒன்றுக்கு ஒன்று பிரிக்க முடியாததாக இருந்து கொண்டிருக்கிறது.

காவிரி , முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி ஆகிய நதிநீர் சிக்கல் அண்டை மாநிலங்களுடன் நீடித்து வருகிறது. நடுக்கடலில் வைத்து தமிழக மீனவர்களைத் தாக்குவதும் படகுகளைப் பிடித்து வைப்பதும் இன்றும் தொடர் கதையாக இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி அறிமுகம், தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு, தேசியக் கல்விக் கொள்கை என்று மையப்படுத்தல் அன்றாட நிகழ்ச்சிப் போக்காக இருக்கிறது. 1938 ஆம் ஆண்டு இந்தித் திணிப்பின் போதே ”தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்கிய பெரியார் இன்றிருந்திருப்பாராயின் பல முறை நம் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும்
என்று உரக்கப் பேசி இருப்பார், ”இந்தியா நம் தாய் நாடு என்று சொல்வதற்குத்தான் ஆதாரம் என்ன இருக்கிறது? இந்தியா என்கின்ற பெயர் இந்த நாட்டுக்கு எப்போது ஏற்பட்டது? இதற்கு எல்லை என்ன? பர்மா போன வருஷம் பிரிந்து விட்டது. அதற்கு முன் இலங்கை பிரிந்து விட்டது. அதற்கு முன் மலேயா பிரிந்துவிட்டது.

அதற்கு முன் நேபாளம், பூட்டான் பிரிந்துவிட்டது. அதற்குமுன் காந்தாரம் காபூல் ( ஆப்கானிஸ்தானம்) பிரிந்துவிட்டது. அதற்கு முன் பர்ஷியா ரஷ்யா பிரிந்துவிட்டது. இப்படியே எவ்வளவோ பிரிந்து எவ்வளவோ சேர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் தாய்நாடு எது? தகப்பன் நாடு எது? புராணகாலத்தில் 56 நாடுகள் இருந்ததே. அப்போது ஒரு நாட்டுகாரன் ஒரு
நாட்டை தாய் நாடு என்று கருதினானா? இப்போதும் நேற்று சட்டசபையில் ஆந்திரர்கள் தங்களை தமிழ்நாட்டிலிருந்து பிரித்து தனி மாகாணமாக்க வேண்டுமென்கிறார்கள். மாகாண சுதந்திரம் கொடுத்து மாகாணத்திற்கு மாகாணம் சர்வ சுதந்திரமாய் தன் தன் காலிலேயே நிற்கும்படியான நிலைமை ஏற்பட்டு ஐரோப்பிய தேசத்தைப் போல் மொழி வாரியாக தனித்தனி நாடாகப் பிரிந்து கொண்டால் இந்தியா எப்படி எல்லோருக்கும் தாய் நாடாகும்? நேபால் நம் ஒரு ஜில்லா
போல் உள்ள விஸ்தீரணம். அவர்கள் இந்தியாவை தாய் நாடென்பார்களா?

சையாமில் பெரிதும் இந்து மதம் தான். அவர்கள் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா?  ஐரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க்கு, ஹாலண்ட், பெல்ஜியம், போர்த்துக்கல், கிரீஸ் ஆகிய நாடுகள் நமது நான்கு ஜில்லா, மூன்று ஜில்லா,
இரண்டு ஜில்லா போன்ற விஸ்தீரணமுள்ளவை. இவர்கள் எல்லோரும் தாங்கள் தங்கள் நாட்டைத் தாய் நாடு என்பார்களே ஒழிய, ஐரோப்பாவைத் தாய்நாடென்பார்களா? ஆகவே தமிழ்நாட்டவர்கள் – திராவிட மக்கள் எந்தக்
காரணம் கொண்டு இந்தியாவை தாய் நாடென்று கூற வேண்டுமென்பதும் எதற்காக இந்தியா பூராவும் எப்போதும் ஒரு குடையின் கீழ இருக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும் என்பதும் எனக்கு விளங்கவில்லை. முதலாவது பாரத நாடு என்பதையும் நாம் எல்லாம் பாரதர்கள் என்பதையும் கூட நான் ஒப்புக்கொள்ள முடியாது.” என்று 1938 இல் பெரியார் பேசுகிறார்.

அதுமட்டுமின்றி, இந்திய விடுதலைக்குப் பின் பெரியாரின் கருத்துகள் கருதிப் பார்க்கத் தக்கவை.

“ 1935 வரை அகில இந்தியா என்று பேசிவந்த நான், வடநாட்டார் ஆதிக்கத்தை உணர ஆரம்பித்ததும் 1938 இல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை முக்கியக் கொள்கையாகக் கடைபிடிக்க ஆரம்பித்தேன். 1950 ஜனவரி 26 ஆம் தேதிய பலம் 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதியைப் போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான்; அதே
பணப்பெட்டிதான் அதே தராசுதான்; அதே படிக்கல் தான்; அதே சரக்குதான்; அதே பித்தலாட்டம் தான். ஆனால், விசாசம் அதாவது ‘டிரான்ஸ்வர்’ செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடியரசு ஆட்சி என்கிற புதுப்பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் ஆதிக பலத்துடனும், மேலும் அதிகப் பாதுகாப்புடனும் 26 ஆம் தேதி முதற்கொண்டு நடைபெறப் போகிறது.

இந்த உண்மையைத் தெளிவாக உணரும் நாம் இதை ஏன் புரட்டு என்று எடுத்துச் சொல்லக் கூடாது? உண்மையை எடுத்துச் சொல்ல நாம் ஏன் பயப்பட வேண்டும்? அக்கிரமத்தை எடுத்துச் சொல்ல நமக்கேன் அச்சம்?” என்று பெரியார் கேட்கிறார்.

குறைந்தபட்சம் மாநில உரிமைகள் பறிபோவது பற்றியாவது நாம் அக்கறை செலுத்த வேண்டும் என்பதைப் பெரியார் பிறந்த நாள் செய்தியாக கருத்தில் கொள்ள வேண்டும். பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள், சமதர்மக் கருத்துகள்,
தமிழ்நாட்டுரிமை பற்றிய கருத்துகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

செந்தில்குமார் – இளந்தமிழகம் இயக்கம்

About செந்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*