Home / அரசியல் / காவிரி நதி நீர்  உரிமை  சிக்கலில் தமிழர் உரிமையை மறுக்கும் சமஸின் கட்டுரைக்குப் பதில்

காவிரி நதி நீர்  உரிமை  சிக்கலில் தமிழர் உரிமையை மறுக்கும் சமஸின் கட்டுரைக்குப் பதில்

கடந்த வெள்ளி அன்று தமிழ் இந்துவில் திரு.சமஸ் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை ஒரு கோடி விவசாயிகளின் உரிமையை மறுக்கும் கட்டுரை. சுமார் 20 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையாக இருக்கும் காவிரி நதி நீர் உரிமையைக் கேட்க நமக்கு தகுதி உண்டா? என்று சினிமா பாணியில் கேட்டிருக்கிறார் அவர். இன்றைய தலையெங்கம் தமிழக அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை வரவேற்றிருக்கும் அதே நேரத்தில் இன்னொருபுறம் சமஸின் கட்டுரை வேதனையளிப்பதாக அமைந்துள்ளது.

1986 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்கக் கோரி 1990 இல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தை நாடி அதன் மூலம் அப்போது  ஓர் இடைக்காலத் தீர்ப்பு பெறப்பட்டது. அதன்படி கர்நாடகம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டும். 1991  இல் அந்த இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.  அதை தொடர்ந்துதான் வரலாற்றில் மறக்க முடியாத அந்த கலவரம் நடந்தேறியது. தாலிக் கயிறின் நிறம் கருப்பா? மஞ்சளா? என்று பார்த்து தமிழர்கள் அடையாளம் காணப்பட்டனர். இலட்சத்திற்கும் மேற்பட்டோர் ஏதிலிகளாய் தமிழகத்திற்கு அடித்துவிரட்டப்பட்டனர். தமிழகத்தில் அவர்களுக்கு என்று இரண்டு அகதி  முகாம்கள் திறக்கப்பட்டன. 12 பேர் கொலை செய்யப்பட்டனர்.  2007 இல் நடுவர் மன்றம் 192 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. 2013 இல் அந்த தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.  இப்போது 2016 ஆம் ஆண்டு சம்பா சாகுபடிக்காக தமிழக விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காவிரி நீர் கிடைக்காமல் போய்விட்டதால் ஏக்கர் ஒன்றுக்கு தலா 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் முழுக்கப் போராடிக் கொண்டிருந்தனர் விவசாயிகள். செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி பரபரப்பான காவிரிச் சிக்கலில் இன்று அக்டோபர் 21 ஆம் நாள். 1991 ஆம் ஆண்டு நடந்தது போல் ஒரு வெறியாட்டம் நடந்துவிடுமோ என்று தமிழகம் திகைத்து நின்றதும் இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்து முடிந்தது. செப்டம்பர் 29 ஆம் நாள் அன்று அக்டோபர் 4 ஆம் நாளுக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. அன்று தீர்ப்பை ஏற்றுக் கொண்ட இந்திய அரசு அக்டோபர் 4 ஆம் நாள் நாடாளுமன்றம் வாயிலாகத் தான் அமைக்க முடியும் என்று கதை சொன்னது. முப்பது ஆண்டுகள் காத்திருந்த ஒருவரின் தலையில் துண்டைப் போட்டதற்கு சமமான காட்சி அது.  2016 அக்டோபர் 4 ஆம் நாளைத் தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடப் போவதில்லை. அக்டோபர் 17,18  ஆம் தேதிகளில் தமிழகமங்கும் வெற்றிகரமான போராட்டங்கள் நடந்துள்ளன. இதுவரை காவிரிச் சிக்கலில் இவ்வளவு பெரிய போராட்டங்கள் நடக்கவில்லை. இந்திய அரசின் ஓரவஞ்சனை அப்பட்டமாக தெரிகிறது. தமிழர்களின் உரிமை மறுக்கப்படுவது ஒளிவு மறைவின்றி வெளிப்படுகின்றது. ஒருபுறம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துக் கொண்டுள்ளன. இதற்கெல்லாம் முகம் கொடுக்க முடியாதபடி மாநில முதல்வர் நோய் வாய்ப்பட்டிருக்கிறார். இந்தப் பின்னணியில் சமஸின் இன்றைய கட்டுரை தமிழக விவசாயிகளுக்கு எதிரானது, தமிழர் உரிமைக்கு எதிரானது, அவரது ஊசலாட்ட அரசியல் என்பது தீர்மானகரமான நேரத்தில் எப்படி ஆளும்வர்க்கத்தின் பக்கம் சாயும் என்பதற்கு ’தண்ணீர் சாட்சியாக’ அமைந்துவிட்டது.

மிக மோசமாக சுரண்டும் முதலாளிக்கு எதிராக தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். “இப்போது வாங்கும் சம்பளத்தில் பாதியை நீங்கள் டாஸ்மாக் கடையில் சென்று குடித்து வீணாக்கிக் கொண்டிருக்கும் போது கூலி உயர்வு கேட்டுப் போராடுவதற்கு உங்களுக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா?”  என்று அங்கு வந்த ஒரு ’நியாயவான்’ தொழிலாளிகளைப் பார்த்துக் கேட்டால் எப்படியோ அப்படித் தான் சமஸ் எழுதிய கட்டுரையின் ’நியாயம்’  தெரிகிறது.

இப்படி எல்லா முரண்பாடுகளிலும் எடுத்துக் காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆற்று மணல் கொள்ளை, நீர் மேலாண்மை, ஆற்றில் கலக்கப்படும் ஆலைக் கழிவுகள் என்று அத்தனையையும் காரணமாகச் சொல்லி காவிரிச் சிக்கலுக்கு புதுத் தீர்வு சொல்கிறார் சமஸ். மேற்படி சிக்கல் எல்லாம் காவிரி ஆற்றுக்கு மட்டுமில்லை தமிழகத்தில் உள்ள தாமிரபரணி, பாலாறு, முல்லை பெரியாறு போன்ற 33 ஆறுகளுக்கும் உண்டு என்பதை சமஸும் மறுக்கவில்லை. எனவே, பொதுவாக தமிழகத்தில் உள்ள ஆற்று நீர் மேலாண்மை, வேளாண் தொழில்நுட்பம், விவசாயச் சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் காட்டி காவிரியில் தமிழர்கள் கேட்கும் உரிமைக்கு எதிராக கொண்டு வந்து நிறுத்துகிறது அவரது கட்டுரை. காவிரிச் சிக்கல் இரண்டு தேசிய இனங்களுக்கு இடையிலான சிக்கல். மேற்படி சிக்கல்கள் முதலாளித்துவ வளர்ச்சிக் கொள்கைக்கும் விவசாயத்திற்கும் இடையிலான முரண்பாடு, சூறையாடும் முதலாளிகளுக்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடு.  இப்படி அறிவியல் பூர்வமானப் பகுப்பாய்வுகளைத் தவிர்த்துவிட்டு பொதுவான ’நியாயம்’ பேசும் தொனியில் உரிமை மறுப்பையே அரசியலாக முன் வைத்துள்ளார்.

  1. முன்பு ஒருமுறை மரண தண்டனை எதிர்ப்பு, ஆயுள் தண்டனை ரத்து தொடர்பான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, ”நீதிமன்றத் தீர்ப்பையே கேள்விக்குள்ளாக்காதீர்கள். அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று வாதாடாதீர்கள்” என்று ஒருவாதத்தை வைத்தார் சமஸ். இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையான நடுவர் மன்றத் தீர்ப்புக்கு மாறான ’நியாயங்களைத்’ தான் முன்வைக்கிறார் சமஸ்.
  2. இந்தக் கட்டுரையில் 1924 இல் வெறும் 1.40 இலட்சம் ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்து கொண்டிருந்த கன்னடர்கள் தங்கள் விவசாயப் பரப்பை அதிகரிக்கும் வரலாற்று நியாயத்தைப் பேசுவதன் நோக்கம்கூட தமிழக உரிமையை மறுப்பதுதான். ஏனெனில் மாண்டியா விவசாயிகள் பெங்களூர் நகருக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தொடக்கரணஹல்லி இறைவை நிலையத்தில் இருந்து  நாளொன்றுக்கு 54 கோடி லிட்டர் தண்ணீர் 100 கி.மீ தொலைவில் உள்ள பெங்களுருக்கு கொண்டு செல்லப் படுகிறது. கர்நாடகத்தில் நடக்கும் முதலாளித்துவ வளர்ச்சிக்கும்  கர்நாடக விவசாயிகளின் சிக்கலுக்கும் தொடர்பே இல்லையா?

சமஸின் கட்டுரை அதன் சாரத்தில் முதலாளித்துவ வளர்ச்சிக் கொள்கையை ஆதரிப்பதும் தமிழ்த் தேசிய உரிமையை மறுப்பதும் தான்.

  1. வரலாற்று வளர்ச்சி விதிகளுக்கு ஊடாக ஒவ்வொரு சமூகமும் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்கின்றது.  நிச்சயமாக இது ஒரு விதிவாதக் கூற்று அல்ல. அதே நேரத்தில் ஓர் அறிவியல் பூர்வ பார்வைக்கு ஊடாக அந்த விதிகளைக் கண்டறிய முடியும். அப்படி காண முடியாதவர்கள் அக விருப்பங்களுக்கு அப்பால் உண்மையை உற்று நோக்கப் பழகினால் அதை புரிந்து கொள்ள முடியும். இந்த இரண்டு மாத வெள்ளோட்டம் தீர்மானகரமான ஒரு வரலாற்று வரைபடத்தைக் காட்டி நிற்கின்றது. நமது விருப்பத்திற்கு அப்பால் தெற்காசியப் பிராந்தியத்தில் வர்க்க முரண்பாடுகள் தேசிய, மத, சாதிப் பிரச்சனைகளாகவே வெளிப்படுகின்றன. எனவே, தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது என்பதை உலகெங்கும் நடக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஊடாக புரிந்து கொள்ள வேண்டும்.
  2. அதுவும் தவறு இதுவும் தவறு என்ற பாணியிலான நடுநிலையாளர்களை வழிநடத்தும் சித்தாந்தம் உண்டு. அவர்களில் சிலர் பின்நவீனத்துவ முகாமை சேர்ந்தவர்கள். முற்போக்காக தோற்றமளித்தாலும் நிலவிக் கொண்டிருக்கும் பிற்போக்கான சமூக  மதிப்பீடுகளைக் கொண்டு ஆளும் அரசுக்கு அரணாய் விளங்குகின்றனரோ என்ற கவலை இது போன்ற நிலையெடுப்புகளைப் பார்க்கும்போது மேலெழுகிறது.
  3. கோட்பாட்டுப் பிரச்சனைக்கு இடம்கொடுப்பது அவர்களுடைய ஆளும் வர்க்க சார்பு தான். அது எல்லா நேரத்திலும் வெளிப்படுவதில்லை. ஆனால், தீர்மானகரமாக நேரங்களில் தவிர்க்கவியலாதபடி தீர்மானகரமாக வெளிப்பட்டே தீரும். அதுதான் சமஸின் இன்றைய கட்டுரை.

– செந்தில்

ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழகம்

About செந்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*