Home / அரசியல் / சவூதியின் மனுநீதி சோழனும், நமக்கான பாடமும்

சவூதியின் மனுநீதி சோழனும், நமக்கான பாடமும்

மனுநீதி சோழனின் மகன் வீதிவிடங்கன் ஒரு கன்று குட்டியை தேர் ஏற்றி கொன்றுவிட்ட குற்றத்திற்காக, கன்று குட்டியின் தாய்ப்பசு நீதி மணியை இழுத்து ஒலி எழுப்ப, நீதி வழுவாத மன்னன் மனுநீதி சோழன் தன் மகனை தானே தேரேற்றி கொன்ற ஆர்வமூட்டும் கதையை கேட்டு மெய்சிலிர்த்து வளர்ந்தவர்கள் தான் நாம் எல்லோரும். இக்காட்சியை ஒத்த சமகால நிகழ்வொன்று உலகிலேயே முற்போக்குக்கு முன்னுதாரணமாக விளங்கும் சவூதி அரேபியாவில் கடந்த வாரம் நிகழ்ந்திருக்கிறது, சவூதியின் தற்போதைய மன்னன் சல்மான் பின் அப்துல் அசிஸ் தன் பேரன் செய்த  கொலை குற்றத்திற்காக அவரை மன்னிக்காமல் சவூதியின் இஸ்லாமிய சட்டப்படி தலை துண்டித்த நிகழ்வு தான் அது, சம்பவம் நடந்தது தான் தாமதம் உலகின் ஒட்டு மொத்த முற்போக்கு/பிற்போக்கு/நடுநிலைப்போக்கு ஊடகங்களும், இஸ்லாமிய சமூக மக்கள் மட்டுமின்றி பிறமத மக்களும் மன்னரின் நீதி நேர்மையை போற்றி புகழ்ந்து வருகிறார்கள், இது போன்ற முன்னுதாரணம் பிற்காலத்தில் அனைத்து நாட்டிலும் சட்டம் அனைவருக்கும் சமமாக அமைய வழி வகுக்கும் என்று என் நண்பர் ஒருவர் கூட பூரித்துக்கொண்டார், இத்தனைக்கும் அவர் தன்னை முற்போக்குக்கு நேர்ந்து விடப்பட்டவராக கருதிக்கொண்டிருப்பவர்.

ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தை போராட்டம், விழிப்புணர்ச்சி நிலையிலிருந்து தள்ளி வைக்க பல்வேறு உத்திகளை உலகம் முழுவதும் கையாண்டு வருகிறது, அவர்களை ஏதேனும் ஒரு புள்ளியில் தாமும்  இந்த அரசமைப்பில் சம உரிமையுடன் தான் வாழ்கிறோம் என்று நம்ப வைக்கும் கடமை ஆளும் வர்க்கத்துக்கு இருக்கிறது, அதாவது மன்னரின் குடும்பத்திற்கும் தனக்கும் ஓரே நீதி தான் என்கிற ரீதியில், ஆனால் உண்மை அப்படியேவா இருக்கிறது?

சவூதியின் அரச குடும்பத்தை சார்ந்த ஒருவர் இதற்கு முன் 1975ம் ஆண்டு குற்றத்திற்காக கொல்லப்ப்பட்டிருக்கிறார், அதன் பின் 2016ல் ஒன்று இடைப்பட்ட 40 வருடங்களில் 4000த்துக்கும் குறையாமல் மரண தண்டணைகள் சவூதியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன, (இது உத்தேச தகவல் தான், இந்த இளவரசரோடு சேர்த்து இந்த வருடம் மட்டும் 158 பேர்), 40 வருடங்களில் இந்தியா,இலங்கை,பிலிப்பைன்ஸ்,வங்கதேசம்,இந்தோனேசியா உள்ளிட்ட  ஏழை ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் தான் அதிகம் கொல்லபட்டிருக்கிறார்கள், இதுவே மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் என்றால் சட்டம் திரும்பி உட்கார்ந்து கொள்கிறது.  சவூதியில் வருடாந்திரம் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள், சவுக்கடிகள் எத்தனை, யாருக்கு வழங்க்கப்படுகின்றன என்பன போன்றவற்றை ஆராய்ந்தாலே இதன் அடிப்படை நுண் அரசியலை புரிந்து கொள்ளலாம், மன்னராட்சி முறையை சாடுவோர், ஏமனில் சவூதி படைகள் நடத்தும் அட்டகாசத்தை தோலுரிக்கும் எழுத்தாளர்கள், சனநாயகத்தை வலியுறுத்துவோர் என பலர் குற்றப்போர்வையில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த இடைப்பட்ட காலங்களில் சவூதி அரச குடும்பத்தினர் குற்றமே இழைத்ததில்லையா? போதை பொருள் கடத்தலில் தொடங்கி, வன்புணர்வு, கொலை உள்ளிட்ட கணக்கிலடங்காத குற்றங்களில் சவூதி அரச குடும்பத்தினர், நடத்தி வருகின்றனர், மன்னராட்சியை எதிர்க்காமலிருக்க மக்களுக்கு சலுகைகள், இப்படியான கண்துடைப்பு நீதி உள்ளிட்டவை அரசுக்கு அவசியமாகிறது.

மோசமான மனித உரிமை மீறல்களை அமெரிக்காவின் துணையோடு நடத்திக்கொண்டிருக்கும் சவூதியில் நசுக்கப்படும் தொழிலாளர் உரிமை, மிக மோசமாக சுரண்டப்படும் தொழிலாளர்கள் குறித்தெல்லாம் இச்சம்பவத்தை மெச்சுவோருக்கு எந்த கருத்தும் இல்லை.

பலதார மணமுறையின் காரணமாக  சவூதி அரச குடும்பத்தின் வழி வந்தவர்கள், இளவரசர் எனும் தகுதியோடு இன்றைய தேதிக்கு 6000க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் அடுத்த மன்னராகி விட முடியுமா என்றால் இல்லை, மன்னர் சல்மானே 2015ல் மன்னராகும் வரை இளவரசராகத் தான் இருந்தார் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும், இவர்களில் எங்கோயிருக்கும் யாரோ ஒரு இளவரசரை கொன்று விட்டு நீதிக்காவல் வேடம் போடுவது நகைப்புக்குள்ளாகிறது.

இதை பாராட்டுவோர் மன்னராட்சியின் கொடுமைகள், இஸ்லாமிய அடிப்படைவாதம், மோசமாக நசுக்கப்படும் பெண்ணுரிமைகள் போன்றவற்றை வசதியாக மறந்துவிட்டு நீதி ஏதோ அரசு நமக்கு இடும் பிச்சையென புரிந்து கொள்வது தான் கொடுமை.

உண்மையில் மரண தண்டனையால் குற்றங்கள் குறைகின்றன என பூரிப்படையும் மக்கள் வருடா வருடம் சவூதியில் அதிகரித்து வரும் மரண தண்டணைகளின் எண்ணிக்கை குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும்.

– சதீசுகுமார்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*