Home / அரசியல் / தற்காலிக அசெளகரியங்கள்

தற்காலிக அசெளகரியங்கள்

ஒரு வழி

ஒரு திறப்பு

ஒரு மாற்று

ஒரு ரொட்டித் துண்டு

இவைகளுள் ஏதேனும் ஒன்று

சாத்தியமாகக் கூடிய‌

பெருநகரமொன்றில்

வீங்கிய கால்களோடு

நீண்ட வரிசைகளில்  காத்திருந்த‌

இளைஞன் ஒருவன் சொன்னான்.

“எல்லாம் நாட்டின் நன்மைக்காகத் தான்”.

 

சில ரூபாய் நோட்டுக்களை

பெற்றுக் கொண்ட பெண்ணின் பதட்டம்

போர்க்காலத்தின் கடைசி

உணவுப் பொட்டலமொன்றை

கொள்முதல் செய்வதை ஒத்திருந்தது.

ஏதோ ஒரு மருத்துவமனையை

நோக்கி அவள் விரைந்து கொண்டிருந்தாள்.

 

அதுவரை ஏறியிராத பேருந்தில் ஏறி

மலைகளைத் தாண்டி

மணற்புயலைக் கடந்து

சிறு நகரமொன்றின் வங்கிக் கிளையை

நோக்கி ஒருவன் சென்று கொண்டிருந்தான்.

நீண்ட வரிசையொன்றின் வாலைத்

தொடும் போது அச்சிறுநகரின்

எல்லையில் அவன் நின்றான்.

 

வரிசைகளில் நிற்பவர்களை

எதிர்பார்த்து அவர்களுக்காக

யாரோ காத்திருந்தார்கள்.

பசியோடு குழந்தைகளும்

நோயுற்ற முதியவர்களும்

வலியோடு கர்ப்பிணிகளும்

திருமண வீடுகளும்

காய்கறி மூட்டைகளும்

விற்பனைச் சரக்குகளும்

கூலியாட்களும்

பூச்சி மருந்து வாங்க விவசாயிகளும்

 

ஒன்றிரண்டு காகிதங்களை

எதிர்பார்த்து ஒரு தேசமே

காத்திருந்தது.

 

காத்திருப்பு ஒரு பொது

மனநிலையாக‌ மாறியது

விடிந்ததும் உடுத்திக் கொள்ள‌

வேண்டிய ஒரு ஆடையாக‌

அலமாரிகளில்

தொங்கிக் கொண்டிருந்தது.

 

எல்லா அசெளகரியங்களும்

தற்காலிகமானவை தான்

ஐம்பது நாட்கள் கொடுங்கள்

இழந்தவைகளை உங்களுக்கு

மீட்டுத் தருகிறேன்

என சத்தியம் செய்தார் மன்னர்.

 

ஓரிரு வாய்ச் சோறின்றி

உறக்கமின்றி கழித்த

நீண்ட இரவுகளையும்

தேயிலைத் தொழிலாளர்களின்

வாரக் கூலிகளையும்

வட்டிக்கு வாங்கி அழுகிய

தக்காளிகளையும்

உடைக்கப்பட்ட உண்டியல்

சில்லுகளையும்

நின்று போன திருமணங்களையும்

மீட்டுத் தரவில்லை என்றால்

என்னை தூக்கிலிடுங்கள்

எனக்  கண்ணீர் வடித்தார் மன்னர்.

 

சில தாள்கள் இல்லாமல்

உயிரிழந்த பச்சிளம் குழந்தையையும்

தற்கொலை செய்து

கொண்ட இளம்பெண்களையும்

மாரடைப்பால உயிரிழந்த‌

தந்தைகளையும்

ஐம்பது நாட்களுக்குப் பிறகு

பரம பிதாவாகிய நான்

நிச்சயம் உயிர்ப்பித்துக் காட்டுவேன்.

 

தேச‌ வளர்ச்சிக்காக‌

தேச நலனுக்காக‌

பிரபஞ்சங்களைப்

புரட்டிப் போடப் போகும்

பெரும் மாற்றத்திற்காக‌

இத்தற்காலிக அசெளகரியங்களை

நீங்கள் பொறுத்துக் கொள்ளத் தான்

வேண்டுமெனவும் அருளினார்.

 

வரிசைகளின்

செருப்புக் கால்களில்

மிதிபட்டு இறந்தது

மன்னரின் குரல்..

 

அ.மு.செய்யது

இளந்தமிழகம் இயக்கம்

 

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*