Home / அரசியல் / அறம் குறித்து நீங்கள் பேசலாமா ஆசானே?

அறம் குறித்து நீங்கள் பேசலாமா ஆசானே?

தனது புனைவெழுத்துகளால் தமிழின் முன்னணி எழுத்தாளராக அறியப்பட்டிருக்கும் ஜெயமோகன், இன்னொரு காரணத்துக்காகவும் பிரபலமானவராக,சமூக வலைதளங்களின் பேசு பொருளாக எப்போதும் இருந்து வருகிறார், சமூகம், தேசியம் மற்றும் பொதுப்பிரச்சினைகள் மீதான இவரது பார்வைகள் பிரபலமானவை, இவரது சிந்தனையே இதன் வழிப்பட்டதா அல்லது தான் எப்போதும் விவாதிக்கப்படவேண்டும் என்பதற்காக இத்தகைய பிம்பத்தை கட்டமைக்கிறாரா என்றெல்லாம் கூட நமக்கு ஐயம் ஏற்படுவதுண்டு, அது தமிழின் எழுத்துருவை நிராகரிப்பது, பெண் எழுத்தாளர்கள் மீதான அவதூறு என்பதையெல்லாம் தாண்டி அரசின் சர்வாதிகாரப்போக்கு, சகிப்பின்மை , மதவாதம் போன்றவற்றை விமர்சிப்போரை எல்லாம் தேச விரோதிகளாக சித்தரிக்க முயலும் போது தான் நாம் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. அவ்வகையில் தன் இத்தனை ஆண்டு காலம் பெற்ற வாழ்வியல், அரசியல், பொருளாதார அறிவையெல்லாம் திரட்டி அவர் எழுதியிருக்கும் கட்டுரை மீதான எதிர்வினையே இது, அவரது பாணியிலேயே அறம், தேசபக்தி என தலையை சுற்றி மூக்கை தொட்டு ஜல்லியடிக்காமல் அவரது விமர்சனங்களுக்கு நேரடியான எதிர்வினைகளாக இருக்க செய்திருக்கிறேன்.

அவரது கட்டுரை: http://www.jeyamohan.in/92500#.WDF2wMtX7qC

தான் மோடியை எப்போதும் ஐயத்துடனயே அணுகி வந்ததாகவும் , அவரை எப்போதும் ஆதரித்ததில்லை எனவும் பொய்யில் தான் கட்டுரையையே ஆரம்பிக்கிறார் ஜெயமோகன், அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்ததையும் அது சார்பில் பல்வேறு வலதுசாரி மதவாத தலைவர்களுடன் நெருங்கி பழகியதையும் அவரே பதிவு செய்துள்ளார், ஆனால் இங்கே வலதுசாரிகளை அவருக்கு பிடிக்காமல் இருப்பதற்கான காரணமாக அவர் சொல்வது அவர்களது சமத்துவ மறுப்பும் , நவீனவாத எதிர்ப்புமாம், தனது தீவிர வலதுசாரி அரசியல் சார்பும் , எதிர்குரல்கள் மற்றும் இடதுசாரிகளின் மீதான வெறுப்பும் உலகறிந்ததாக இருக்க, இந்த கட்டுரை தனக்கு ஏற்படுத்தும் குற்றவுணர்விலிருந்து தப்பிக்க இடதுசாரிகளை மதிப்பதாக புழுகுகிறார். அவர்கள் தான் இந்திய கட்டுமானத்தின் முதுகெலும்பு என விஷமத்தோடு ஆரம்பிக்கிறார்.

ஆனால் அவர் இந்த வலதுசாரி எதிர்ப்பரசியலின் மீது நம்பிக்கையற்று போனது சகிப்பின்மை பிரச்சாரத்தின் போது தானாம், அது சகிப்பின்மை பிரச்சாரமா, இல்லை உண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்துத்துவ அமைப்புகள் நடத்திய வெறியாட்டத்தின் எதிர்வினையா என்பது யாரும் அறியாததா என்ன? கல்புர்கி உள்ளிட்ட எழுத்தாளர்கள் கொல்லப்பட்டதையெல்லாம் குறித்து எந்த கவலையும் இல்லாத அவருக்கு மூன்று  மாதம் கழித்து சகிப்பின்மை பிரச்சாரம் மறந்துவிடப்பட்டபடியால் அது பொய் பிரசாரம் என்கிறார், மூன்று மாதம் கழித்து அவர் முக்கியமாக கருதும் எதை தொடர்ந்து விவாதிக்கிறார்?  Hit and run என்பது போல எப்போதும் விவாத பொருளாக இருக்க வேண்டி கருத்து உதிர்த்துவிட்டு அது குறித்த எதிர்வினைகளை சட்டை கூட செய்யாமல் ஓடிவிடும், அவரது அரசியலை நாடறியுமே?

கள்ளப்பண ஒழிப்பு மற்றும் அதன் சாத்தியங்கள் குறித்து நாடெங்கும் பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆதாரப்பூர்வமாக பேசிக்கொண்டிருக்கையில், அரசின் இந்த தான்தோன்றித்தனமான  அறிவிப்பை விமர்சிக்கும் அனைவரும் கள்ளப்பணத்திற்கு விலை போனவர்கள் என்கிறார், உண்மையில் விலை போனது அவர்களா இல்லை அரசாங்கம் என்ன செய்தாலும் மூளையில்லாமல் முட்டு கொடுக்கும் மோடி பக்தர்கள் வரிசையில் இருக்கும் ஜெயமோகனா? அவதூறு செய்வதற்கு முன் அவர் குறிப்பிடும் எந்த சிந்தனையாளருக்காவது ஆதாரப்பூர்வமாக தனது மறுப்பை பதிவு செய்தாரா என்றால் இல்லை.மோடி பக்தர்கள் கைக்கொள்ளும் கண்மூடித்தனமான உத்தியை கையாள்கிறார்.

இந்தியாவில் கருப்பு பண பொருளியலை ஒழிக்கும் அவரது  தன்முனைப்பு புரிகிறது, ஆனால் அதற்கு அவர் காரணமாக முன்வைப்பது நாட்டின் வரிவிதிப்பு முறை மற்றும் காகிதப்பண பரிமாற்றம், மேலும் கருப்பு பணம் முதலீடாக இல்லாமல் தேங்குவது தான் அதிலுள்ளா பிரச்சினை என்கிறார், கருப்பு பணம் குறித்த அவரது விசாலமான புரிதல் உண்மையில் எனக்கு புல்லரிப்பை ஏற்படுத்தியது, கருப்பு பணம் பெரும்பகுதி இந்தியாவில் தான் இருக்கிறது என்கிறார் ஆனால் அது பூக்காரம்மாவின் சுருக்கு பையிலும், சிறிய அளவில் வணிகம்  நடத்துபவர்களிடமும் தான் முடங்கி கிடக்கிறதா என்ன? இவர்கள் வாங்கும்,விற்கும் பொருட்களுக்கு வரியும், சேவை வரியும் செலுத்தாதவர்களா என்ன?

கருப்பு பணத்தின் பெரும்பகுதி ரொக்கமாக தேங்குவதாக சினிமாத்தன கற்பனை செய்து கொள்ளும் அவர் வெளிநாடுகளுக்கு திருப்பி விடப்பட்டு அந்நிய முதலீடுகளாக இந்தியாவுக்கே திரும்ப வரும் செயல்படும் கருப்பு பணத்தை பற்றி கேள்ப்பட்டிருக்க மாட்டாரா என்ன? பங்கு சந்தை சூதாட்டத்தில்  பார்ட்டிசிப்பேட்டரி நோட் என்ற வடிவத்தில் இயங்கும் பல லட்சம் கோடி கருப்பு பணத்தை குறித்த அவரது  பார்வை என்ன?

எலியை பிடிக்க வீட்டையே கொழுத்திய கதையாக கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் நடக்கும் இந்த முட்டாள்த்தனமான நடவடிக்கையை விமர்சித்து நாடெங்கிலும் பொருளாதார அறிஞர்கள் தரவுகளோடு விமர்சிக்கையில் அவர் அவர்களை விலை போனவர்கள் என்கிறார், மோடி எதிர்ப்பு மனநோயாளர்கள் என்கிறார், உண்மையில் அவரது  எதிர்வினை இவர்களுக்கான பதிலாக ஆதாரப்பூர்வமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்?

ஆனால் அவரோ வங்கி மற்றும் ஏடிஎம் வரிசையில் நிற்பவர்கள் வரி செலுத்தாத வணிகர்கள் மற்றும் கள்ளப்பணம் வைத்திருப்பவர்கள், கள்ளப்பணத்திற்கு கமிஷன் பெற நிற்பவர்கள் என்பதாக நிறுவுகிறார், மேலும் ஒரு படி போய் வரிசையில் நின்று இறந்தவர்களின் உடல்நிலையை சாடி நாட்டில் யார் எங்கு செத்தாலும் இதை காரணம் காட்டுவதாக சொல்ல உண்மையில்  வலதுசாரி வெறியர்களால் தான் முடியும்.

இதன் உச்சமாக விஜய் மல்லையாவை தோற்றுப்போன தொழிலதிபர் என்கிறார்,பெருமுதலாளிகளின் கடன் தள்ளுபடிகளை நியாயப்படுத்துகிறார் பொதுப்பணத்தை முதலாளித்துவ பொருளியலில்  முதலீடு செய்து இழப்பு ஏற்பட்டால் அதற்கு காரணம்  முதலாளி அல்ல, உள்கட்டமைப்பை மேம்படுத்தாத அரசியல்வாதிகள் என்றொரு கோணத்தை முன்வைக்கிறார்,உண்மையில் வங்கிகளில் இருக்கும் பணம் பொதுமக்களின் பணம் என்ற பிரக்ஞையுடன் தான் பேசுகிறாரா? இதே சலுகையை கடன் வாங்கும் எல்லோரும் சொல்ல இயலுமா? மல்லையாவுக்கு வழங்கப்பட்டது பெரும்பாலும் unsecured லோன் என்பது குறித்த அவரது பார்வை என்ன?

இன்றைய அரசியல் பொருளாதார சிக்கல்கள் குறித்தும், முதலீட்டியம் குறித்தும் எந்த பரந்துபட்ட பார்வையும் இல்லாமல் தனியார் நிறுவனங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு, அவை இல்லாமல் நாட்டின் பொருளாதாரம் இல்லை, அவர்களுக்கு கடன் வழங்குவது நாட்டின்/ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற அவரது  வாதத்தை கூட அவரது  அரசியற்பாற் பட்டு புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் கள்ளத்தனமாக போலி முற்போக்குத்தனம் பூண்டு, சிக்கலான விசயங்களை அறம், தார்மீகம் என்று சுற்றி வளைத்து, அவரது  குள்ளநரி அரசியல் சார்பை நியாயப்படுத்த மக்களை/ முற்போக்கு/ சனநாயக சக்திகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் அவருக்கு  அறம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்பது தான் புரியவில்லை.

– வியன் சதிசுகுமார்

About சிறப்பு கட்டுரையாளர்கள்

5 comments

 1. Well said….. good write up

 2. ஜெயமோகன் என்ற எலி அம்மணமா ஒடுகிறது… என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது..அது ஏன் கோவணத்துணிகளையாவது கடைசியாக அணிந்து கொண்டுள்ள மற்றவர்களின்கோவணங்களையும் உருவிக் கொண்டு ஓடுகிறது என்பது தான் நமது கேள்வி

 3. மீன்காரியம்மா..கீரைகாரியம்மா… டீக்கடைகாரய்யா..

  ”எங்கும் ரசீதே இல்லாத வணிகம் நிகழ்வதை நாம் அறிவோம். நாம் பெறும் ரசீதுகளேகூட பொய்யானவை . ஒவ்வொருநாளும் நாம் ஈடுபடும் வாங்கல் விற்கல் அனைத்தும் கள்ளப்பணத்திலேயே. ”
  என்று ஜெயமோகன் ஜி அறத்தின் குரல் ஓங்கி ஒலிப்பது மோடி ஜீ குரல்தானே..?

  • முறையாக ரசீது கொடுத்து நம் டவுசரை உருவும் பெருவணிக நிறுவனங்களைப்பற்றி இவ்வளவு பெரிய அறக்காவலருக்கு சொல்ல எதுவுமில்லாமல் போனது வருத்தம் தான்!

 4. சதிகளால் சூழப்பட்ட​தே உலகம்

  Posted by ம​கேஷ் மேல் ஜூன் 23, 2012

  தன்னை தனித்துக் காட்டிக் கொள்ள
  எப்படி எல்லாம் கவிதை எழுத வேண்டுமென
  அவளுக்குத் தெரிந்திருக்கிறது

  தன்னை சாதி ​சொல்லித் திட்டியவர்களை
  எப்பொழுது பழிவாங்க வேண்டுமென
  அவனுக்குத் தெரிந்திருக்கிறது

  அவளின் படுக்கையறைகளுக்குள்ளும்
  ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம்
  அவனின் கேமராக்கள்

  அவனின் உள்ளாடைகளுக்குள்ளும்
  ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம்
  அவளின் கையடக்க மைக்குகள்

  இருவருக்கும் தெரிந்திருக்கிறது
  இன்னொருவரின் அன்றாட ஷெட்யூல்
  தங்கள் கைத்தொலைபேசிகளில்
  ரிமைன்டர் வைத்துக் கொள்ளும்போதே
  தன் இனிய எதிரிகளுக்கும்
  சேர்த்தே வைத்துக் கொடுப்பார்கள் போலும்

  எல்லோருக்கும் தெரியும்
  நம்மைத் தெரிந்து கொள்வதைவிட
  நம் எதிரியைத் தெரிந்து கொள்வதே பலமென்று

  எந்தெந்த பிரச்சினைகளில்
  எந்தெந்த எதிரிகளை
  எந்தெந்த எதிரிகளிடம் சிக்கவைக்க வேண்டும்
  என்ற சூத்திரம் கற்றுக்கொண்டால்
  வாய்ப்பிருந்தால் நல்ல அரசியல்வாதியாகலாம்
  விருப்பமிருந்தால் நல்ல இலக்கியவாதியாகலாம்

  வேட்டைக் களத்தில்
  நரியைப் போல காத்திருப்பதில்
  வல்லவர் ஜெயமோகன்

  அசந்த நேரத்தில் நரிகள்
  இரையை வலுவாக சூழ்ந்த பிறகு
  வேட்டையாடியவை
  புலியேயானாலும், சிங்கமேயானாலும்
  பறிகொடுத்த வெறியோடு
  பதுங்கி ஓடவேண்டியதுதான்.

  “நரிகள் வலிமையானவையல்ல” அதன் அர்த்தம்
  அவை ஆபத்தானவையல்ல என்பதல்ல.

  நிலத்தில் ஆடும் மிருகங்களை
  நீருக்கு அழைப்பதிலும்
  நீரில் ஆடும் மிருகங்களை
  நிலத்திற்கு இழுப்பதிலும்
  வெற்றிகரமான சமண்பாடுகளை
  கண்டு கொண்டுவிட்டால்
  நீங்களும் ஆடலாம்
  இந்த சதிகளால் சூழப்பட்ட உலகில்
  ஒரு சதுரங்க ஆட்டத்தை வெற்றிகரமாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*