Home / பொருளாதாரம் / செல்லாததாக்கப்பட்டவை நோட்டுகள் மட்டும்தானா?

செல்லாததாக்கப்பட்டவை நோட்டுகள் மட்டும்தானா?

இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தனது சுற்றுலா வாழ்க்கையில் இருந்த பிரதமர் மோடி, திடீரென  நாட்டில் நெருக்கடி நிலவுவதுபோல் நவம்பர்  8 இரவு தொலைக்காட்சியில் தோன்றி 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கிறார். டிசம்பர் 30 க்குள் தங்களிடமிருக்கும் பழைய 1000, 500 நோட்டுக்களை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமென்கிறார். அதற்கு பிறகுதான் நாட்டில் நெருக்கடியே ஆரம்ம்பிக்கிறது. தாங்கள் உழைத்து சம்பாதித்த பணம் ஒரே நாளில் செல்லாததாக்கப்பட்ட பதட்டம் மக்களிடம் தொற்றுகிறது. வங்கி வாசலிலுல், ஏடிஎம் வாசலிலும் மக்கள் கூட்டம்.

எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் வங்கியில் கட்டலாம், ஆனால் ரூ. 4000 மட்டுமே எடுக்க முடியும், ஏடிஎம் ல் ரூ. 2000 மட்டுமே எடுக்க முடியும் என்கின்றது அரசாங்கத்தின் அறிவிப்புகள். அறிவிக்கப்படாதா பொருளாதார நெருக்கடியில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இப்போது 100 , 50 ரூபாய் நோட்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் நிலை, நாட்டின் பணப்புழக்கத்தில் 84 சத‌வீதம் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கி விட்டு மீதி உள்ள 16 சதவீதமுள்ள் 100 ரூபாய் மற்றும் அதற்கு குறைவான மதிப்புகளைக்கொண்டுள்ள ரூபாய் நோட்டுக்களை கொண்டு எப்படி மக்கள் இயல்பான  வாழ்க்கை வாழ முடியும்.

வங்கிவாசலில் காத்திருந்து மக்கள் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, வேலைப்பளு காரணமாக வங்கிப்பணியாளர்களுக்கும் வேலையின் போதே உயிரிழப்புகளும் நடக்கின்றன. இந்த காலத்தில் திருமணம் நிச்சயித்தவர்கள் தேதிகளை தள்ளி வைக்கின்றனர். மரணங்களை அப்படி ஒத்திவைக்க முடியாதே? வங்கிகளை இதுவரை நாடியிராத பொதுமக்களும் வங்கி வாசலிலும், ஏடி எம் வாசலிலும் காத்து கிடக்கின்றனர். கருப்பு பணத்தை ஒழிக்க மக்கள் சிரமத்தை பொறுத்து கொள்ள வேண்டும் என்கிறார் மோடி. ஆனால் கருப்பு பணம் வைத்திருக்கும் எந்த தொழிலதிபரும், நடிகரும் வங்கி வாசலில் நிற்கவில்லை, கவலைப்படவில்லை, மோடியின் நடவடிக்கையை வரவேற்கின்றனர். அப்படியெனில் பாதிக்கப்படப் போவது யார்?

black money modi cartoon

வெளிவரப்போகும் கருப்பு பணம் எவ்வளவு என்பது பற்றி மோடியிடம் கணக்கு எதாவது உள்ளதா? இந்த நடவடிக்கையை பற்றி முன்கூட்டியே எதாவது திட்டமிருந்ததா என்றால் அப்படி எதுவும் உருப்படியாக இருந்ததாக தெரியவில்லை, தெளிவாக திட்டமிட்டு செய்தால் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாகிவிடுவார்கள் என்ற மொன்னைத்தனமாக ஒரு காரணததை சொல்கிறார். வங்கிகளில் போதிய பணம் கையிருப்பில் இல்லை, புதிதாக விட்ட 2000 ரூபாய் நோட்டிலும் வடிவமைப்பில் அத்தனை குளறுபடிகள். ஏடிஎம் எந்திரத்தில் பொருந்தாது, பள்ளிக்குழந்தைகள் கூட கலர் ஜெராக்ஸ் அடித்து மிட்டாய் வாங்கும் அளவுக்கு அதன் தரம் உள்ளது. அந்த 2000 ரூபாய் நோட்டுக்கும் சில்லறை கிடைக்காது.  என‌வே அதுவும் ஒருவகை செல்லா நோட்டுதான். கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பதுக்க வேண்டுமானல் 2000 ரூபாய் நோட்டுகள் பெருமளவில் பயன்படும்.

இவ்வளவு சிரமங்களையும், முட்டாள்தனங்களையும் பொறுத்துக்கொண்டு இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன? எவ்வளவு கருப்பு பணம் வெளிவர போகிறது? கருப்பு பணம் என்பது குறைந்த அளவே பணமாக இருக்கிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். அது முதலீடுகளாக, சொத்துக்களாக உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் முடக்கப்பட்டுள்ளன என்கின்றனர். அவற்றை கண்டுபிடிப்பது பற்றி மோடி அரசால், இந்த  நடவடிக்கைகளில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

கருப்பு பணம் பற்றி தேவ்கர் என்ற பொருளாதார வல்லுநர், 2010ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘The Drivers and Dynamics of Illicit Financial Flows’ என்ற நெடிய ஆய்வுக் கட்டுரையில், இந்திய நாட்டில் உருவாகும் கருப்பு பணத்தில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே உள்நாட்டு சொத்துகளில் முதலீடு செய்யப்படுவதாக கூறுகிகிறார்.(ஆதாரம் ‘இந்திய கறுப்புப் பணம்: அளவும் அதன் முதலீட்டு முறைகளும்’ ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் ).  கவனிக்கவும் அந்த ஒருபங்கும் சொத்துகளில் முதலீடு.

வெளி நாட்டில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை முழுவதும் இல்லை என்றாலும் பின்வரும் முறையில் ஒரு பகுதியை கணக்கிட முடியும் என்கிறார் தேவ்கர்.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு மின்சாரம் தயாரிக்கத் தேவையான உயர் தொழில்நுட்பக் கருவிகள் வாங்கப்படுவதாகக் கொள்வோம். அதற்கு இந்திய நிறுவனம் பிரான்ஸ் நிறுவனத்துக்கு பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு பல நிறுவனங்கள் பல நாடுகளிலிருந்து தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்யும். இவை அனைத்தும் வகைப்படுத்தப்பட்டு அந்த ஆண்டு இந்தியா, பிரான்ஸ் நாட்டிலிருந்து இத்தனை இயந்திரங்களை இவ்வளவு விலைக்கு வாங்கியது என்ற தகவல் தொகுப்பு இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தால் வெளியிடப்படும். இதே போன்றதொரு தகவல் தொகுப்பை பிரான்ஸ் அரசின் வர்த்தக அமைச்சகமும் வெளியிடும். இந்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரப்படி, 2014ஆம் ஆண்டு ரூ. 5000 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கொள்வோம். அதே ஆண்டு பிரான்ஸ் நாடு ரூ 2,000 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதியானதாக தெரிவித்திருப்பதாகக் கொள்வோம். இந்த இரு புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ரூ 3,000 கோடி இந்தியாவிலிருந்து வெளியேறி இருப்பதும் (இயந்திரங்கள் வாங்குவது என்ற பெயரில்) ஆனால் அது பிரான்ஸ் நாட்டின் கணக்கில் வராததும் தெரியவரும். இந்த ரூ. 3,000 கோடியும் இந்தியாவிலிருந்து இறக்குமதி என்ற பெயரில் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்ட கள்ளப் பணம் ஆகும்.

இந்த பத்தாண்டுகளில் இவ்வாறு இந்தியாவைவிட்டு வெளியே கொண்டுசெல்லப்பட்ட கள்ளப் பணத்தின் அளவு ஆண்டொன்றுக்கு சராசரியாக ரூ. 34,69,972 கோடிகளாகும்.கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்பட்ட கள்ளப் பணத்தின் அளவு ரூ. 350 லட்சம் கோடியாகும். இவ்வாறு Mispricing வழியாக வெளியே கொண்டு செல்லப்பட்ட கள்ளப் பணம், மொத்த கள்ளப் பணத்தில் ஏறத்தாழ 84 விழுக்காடு ஆகும். இம்முறையின்றி வேறுசில வழிகளும் இருக்கின்றன என்கிறார்.

இந்தியாவிலிருந்து இந்த ஆண்டில் வெளியேறிய கருப்பு பணத்தின் மதிப்பு ரூ. 56 லட்சம் கோடி என்கிறது கட்டுரை, மோடியால் உள்நாட்டில் செல்லாக்காசாக்கப்பட்டது ரூ. 14 லட்சம் கோடி. இதில் எல்லோருடைய பணமும் உள்ளது. கருப்பு பணம் மிகக்குறைந்த அளவே இருக்கும். 20 சதவீதம் என வைத்துக்கொண்டால் கூட 2.8 லட்சம் கோடி. கருப்பு பணம் வைத்திருக்கும் பேர்வழிகள் இதையும் 100, 50,2000 நோட்டுக்களாக மாற்றி வைக்கவே முற்படுவார்கள். தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தொடர்புகள், புறவாசல் வழியாக பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்களை புதிய நோட்டுக்களாகவும், சொத்துக்களாகவும் மாற்றி விடுவார்கள். ஆக ரூ. 2.40 லட்சம் கோடியில் பாதிக்கு மேல் வெள்ளையாக்கப்பட்டுவிடும் பாதி கிடைப்பதாக வைத்துக்கொண்டால் ரூ. 1.20 லட்சம் கோடி கிடைக்கும்.

ரூ. 1.20 லட்சம் கோடி கருப்பு பணம் கிடைப்பதற்கு அடையப்போகும் நட்டம் எவ்வளவு. அறிவிக்கப்படாத பொருளாதார தடை நாட்டில் இருக்கிறது. மக்களிடம் புழக்கத்திற்கான பணமில்லை, செலவு செய்யவே பயப்படுகின்றனர். தொழில்கள் முடங்கி கிடக்கின்றன.  இந்தியாவில் ஒரு நாள் நடைபெறும் பந்துக்கு (வேலைநிறுத்தம்) ரூ. 10000 கோடியிலிருந்து ரூ. 25,000 கோடி வரை நட்டம் என்கிறார்கள். ஒரு நாளைக்கு ரூ. 10000 கோடி நட்டம் என வைத்துக்கொண்டாலும் 50 நாட்களுக்கும் சேர்த்து ரூ.5 லட்சம் கோடி வருகிறது. இதில் வங்கிகளில் காத்துகிடக்கும் மனித உழைப்பு கணக்கிடப்படவில்லை. இந்த தொழில் முடக்கத்தால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நட்டம் கணக்கிடப்படவில்லை.

ஏறத்தாழ ரூ. 1 லட்சம் கோடியை வெளிக்கொண்டுவர இப்படி மக்களை வதைக்கும் மோடி, வெளி நாட்டில் சொத்துக்களாகவும், வங்கிகளில் இருப்பதை கொண்டு வரும் அளவு துணிச்சல் இல்லையெனினும், இந்தியாவில் உள்ள 10 பெரிய மனிதர்களின் வாரக்கடனையும், கம்பெனிகளின் வாராகக்கடனையும் வசூலிப்பதன் மூலம் ரூ. 8 லட்சம் கோடி பெற முடியும். ஆனால் மோடியின் கோட்டுச்செலவிலிருந்து தேர்தல் விமான பயணச்செலவு வரை செய்பவ்ர்கள் அவர்கள்தானே அதனால் விசுவாசம் காட்டுகிறார். மீறி நடவடிக்கை எடுக்க நினைத்தால் மோடிக்கு பிரதமர் நாற்காலியே இருக்காது என தெரியும். எனவேதான் அப்பாவி மக்களை தெருவில் நிறுத்திவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

wilful loan defaulters wilful loan default companies

இந்த பழைய 1000, 500 ரூபாய் நோட்டு செல்லாததாக்கப்பட்டதால். எதுவுமே நோக்கமில்லையா என்றால் இருக்கிறது, ஆனால் மக்களுக்கானது இல்லை, மோடியின் ஆதரவாளர்களான நடுத்தர வர்க்கத்தினரே இரண்டு ஆண்டுகளாக‌ அவரின் செயலற்ற தன்மையைக்கண்டு வெறுத்து போயுள்ளனர். இப்போது மோடி துணிச்சலாக கருப்பு பணத்திற்கு எதிராக முடிவெடுத்துவிட்டார் என அந்த நடுத்தர வர்க்கத்தினர் திரும்பவும் துதி பாட ஆரம்பித்துவிட்டனர்.

அடுத்தது இந்திய குடும்பங்கள் குறைவாக இருந்தாலும் பொருளாதார ரீதியில் சுய சார்பு தன்மைக்கொண்டவை சுய சேமிப்பைக்கொண்டவை, அவ்வளவாக  வங்கிகளை சார்ந்து இருப்பதில்லை, ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட வங்கிகள்தான் பணத்தை கையாள்வதில் முதன்மையான  இடத்தில் உள்ளன. தனி நபர் சேமிப்புகள் குறைவு, அதனால்தான் 2008/09 அமெரிக்க வங்கிகளின் திவாலால் பல அமெரிக்கர்கள் தெருவுக்கு தள்ளப்பட்டனர். ஆனால் இந்தியாவில் வங்கிகள் திவால் ஆனால் அவ்வளவு பாதிப்புகள் இராது. மக்கள் தங்களிடம் உள்ள சுய சேமிப்பை  கொண்டு தப்பித்துவிடுவார்கள். சில்லறை வர்த்தகமும் அவ்வளவாக வங்கிகளை சார்ந்து இல்லை.

people deposit corporates loan

இப்போது மோடியின் நடவடிக்கையால் வங்கிகளில் வழியாக கையாளப்படாத எல்லாப்பணமும் கருப்பு பணம் என்பதுபோல் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்திய குடும்பங்களில் வழிச்சேமிப்பு முறைகளின் மீது மோடி தொடுத்திருக்கும் தாக்குதல். அரசாங்கம் மக்கள் சம்பாதிக்கும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களுக்கு வரி கேட்கலாமே ஒழிய, வங்கிகள் வழியேதான் அனைத்து சேமிப்புகளும் இருக்க வேண்டும் என சொல்ல உரிமையில்லை.

இப்படி பொதுமக்களின் சேமிப்புகளை வங்கிகளுக்கு வரவழைத்து அவற்றை அதானி, அம்பானி, மல்லையாக்களுக்கு கடன்களாக அள்ளிக்கொடுப்பதல்ல அரசின் வேலை. வளர்ந்த தேசங்களிலேயே வங்கிகளின் கொள்ளைகளை மக்கள் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இன்னமும் படிப்பறிவற்றோர் உள்ள இந்திய நாட்டில், படித்திருந்தாலும் வங்கி, ஏடிஎம் போன்றவை பழக்கப்படாத நாட்டில் மோடியின் சர்வாதிகாரமான இந்த அறிவிப்பு, கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு வங்கிகள் மூலம் திரட்டப்படும் முதலீடே ஆகும்.

கருப்பு பணம்தான் இலக்கென்றால் மோடி 5 வருடங்களுக்கு முன்பு பேசியபடி வெளி நாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு அனைவரது வங்கிக்கணக்கில் ரூ. 15 லட்சம் போடட்டும். அடுத்து வெளி நாட்டில் சொத்துக்கள் வாங்கி வைத்து இருப்பவர்களின் சொத்துக்களை தனது அதிகாரத்தின் மூலம் கொண்டு வரட்டும், இங்கிருக்கும் பெருமுதலாளிகள், நிறுவன‌ங்களின் வாராக்கடன்களை வசூலிக்கட்டும். இங்கிருக்கும் எளிய மக்களின் அடுக்களையிலும், சுருக்குப்பையிலும் இருக்கும் பணம் எங்கும் போய்விடாது. அரசாங்கமும், வங்கிகளும், கார்ப்பரேட்டுகளும் சேர்ந்து கூட்டு களவானித்தனத்தில் ஈடுபடும் தேசத்தில் அதை வைத்து இருப்பது அவர்களின் உரிமையும் கூட.

– வெ.தனஞ்செயன்

இளந்தமிழகம் இயக்கம்

நன்றி:

மின்னம்பலம்,

ஜூனியர் விகடன்

முகநூலில் பதியப்பட்ட கேலிச்சித்திரங்கள்

About தனஞ்செயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*