Home / அரசியல் / மோடியின் கருத்து திணிப்பு

மோடியின் கருத்து திணிப்பு

கடந்த 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கருத்துகணிப்பை அலைபேசி செயலி மூலம் தாமாக முன்வந்து நடத்தினார், நாணய மதிப்பிழப்பு குறித்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களும் , கண்டன குரல்களும், எதிர்கட்சிகளின் நெருக்கடிகளும் முற்றி வரும் நிலையில், நாடாளுமன்றமும் போகாமல், எதற்கும் முறையான விளக்கமும் அளிக்காமல் இதுநாள் வரையில் நழுவிக்கொண்டிருக்கும்  மோடி டிவிட்டர் வலைதளத்தில் இந்த கருத்துகணிப்பு ஆண்டிராய்டு செயலியை வெளியிட்டு நாட்டு மக்களின் கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்,

Narendra Modi App என்று அழைக்கப்பட்ட அந்த செயலி 22ஆம் தேதி காலை பத்து  மணிக்கு வெளியிடப்பட்டு சரியாக 29.30 மணி நேரம் கழித்து கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின, ஐந்து லட்சம் பேர் கருத்தை பதிவு செய்ததாகவும் , பத்து லட்சம் பேர் செயலியை தரவிறக்கம் செய்ததாகவும் அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன, ஏன் வெறும் முப்பது மணிநேரம் மட்டும் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது என்பதெல்லாம் வங்கியிலேயே 17 நாட்களாக வரிசையில் நிற்கும் நம் மக்கள் அறிவுக்கு எட்டாத ரகசியம்.

கேள்விவாரியாக கருத்துகணிப்பு முடிவுகள்,

1)   98% பேர் இந்தியாவில் கருப்பு பணம் இருப்பதாக நம்புகிறார்கள்

       (கொடுக்கப்பட்ட தெரிவுகள் ஆம்/இல்லை)

2)   99% பேர் ஊழல் மற்றும் கருப்பு பணம் ஒழிக்கப்பட வேண்டுமென விரும்புகிறார்கள்

        (ஆம்/இல்லை)

3)   90% பேர் அரசாங்கத்தின் இந்த கருப்புபண ஒழிப்பு நடவடிக்கை அதிசிறப்பு/சிறப்பு என்கிறார்கள்

       (அதிசிறப்பு/சிறப்பு/பரவாயில்லை/இன்னும் கவனம் செலுத்தலாம்/மோசமான அனுபவம்)

4)   92% பேர் மோடியின் இந்த நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்கள்

       (மிகநல்லது/நல்லது/தெரியாது/மோசம்/மிக மோசம்)

5)   90% மக்கள் மோடியின் 500,1000 தடையை ஆதரிக்கிறார்கள்

       (சிறப்பான நடவடிக்கை/ நல்ல நடவடிக்கை / எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது)

6)   92% மக்கள் நாணய மதிப்பிழப்பு கருப்பு பண ஒழிப்பு, ஊழல் மற்றும் தீவிரவாத ஒழிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

       (உடனடி தாக்கம்/ மிதமான மற்றும் நீண்டகால தாக்கம் / குறைவான தாக்கம் / தெரியாது)

7)   பண மதிப்பிழப்பு நில சந்தை, உயர்கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை சாமானியனுக்கு கிடைக்கச்செய்யுமா?

        66% முழுமையாக ஏற்கிறேன்

        27%  பகுதியாக ஏற்கிறேன்

        6%   கருத்து சொல்ல முடியவில்லை (Option Can’t say)

8)   கருப்பு பணம்,ஊழல், தீவிரவாதம் மற்றும் கள்ள நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட இந்த சிரமமாக கருதுகிறீர்களா?

        43% சிரமமே இல்லை

        48% சிறிது சிரமம்,பரவாயில்லை

        8%  ஆம்

9)   சில கருப்புப்பண ஒழிப்பு செயல்பாட்டாளர்கள் இப்போது கருப்புபணம்,ஊழல்,தீவிரவாதம் ஆகியவற்றிற்கு ஆதரவாக போராடுகிறார்கள் என நம்புகிறீர்களா?

        86% ஆம்

        14% இல்லை

                                    Photo 1 digital PM

முடிவுகளின்படி உலகின் 2000 பகுதிகளிலிருந்து ஐந்து லட்சம் பேர் கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்,133 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் எந்த சமூக அக்கறையும் இன்றி பங்கு சந்தைகளில் சூதாடி, உண்டு கொழுத்து, மோடிக்கு முட்டு கொடுத்து ‘மக்கள் நல’ கருத்துகளை உதிர்த்து வருவோர்களை உள்ளடக்கிய இந்த ஐந்து லட்சம் பேர், நேரடியாக நாணய மதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டவர்களை விட மோடிக்கு முக்கியமானவர்கள் அல்லவா? இவர்களை விடவா இந்திய மக்களின் உள்ளக்கிடக்கையை  மற்றவர்களால் பிரதிபலித்துவிட முடியும்?

சரி கருத்துகணிப்பாவது நேர்மையாக இருக்கிறதா என்று யோசித்தால், மோடியின் மோசடியான முகம் இதிலும் வெளிப்படுகிறது. ‘இல்லை’ என்ற தெரிவு இரண்டு கேள்விகளில் மட்டுமே தரப்பட்டுள்ளது, ஊழல் ஒழிக்கப்பட யார் தான் விரும்ப மாட்டார்கள்? ஊழலை ஒழிக்க எனக்கும் விருப்பம் தான் ஆனால் மோடியின் நாணய மதிப்பிழப்பு நடவடிக்கையை நான் விரும்பவில்லை, நான் எந்த தெரிவை தேர்வு செய்வது? சரி, சாமானியனுக்கு இது எந்த விதத்திலும் உதவாது என்பது என் கருத்து எனக்கிருக்கும் ஒரே நெருக்கமான தெரிவு ‘கருத்து சொல்லமுடியவில்லை’ (Can’t say) , நாணய மதிப்பிழப்பு கருப்பு பணத்தை ஒழிக்காது என நான் பதிலளிக்கப்போனால் எனக்கிருக்கும் ஒரே தெரிவு ‘தெரியாது’.

இது தானா ஐயா அல்லும் பகலும் அயராது, ஊன் உறக்கமின்றி நாட்டு மக்களுக்காக உழைக்கும் பிரதமர் நடத்தும் நேர்மையான கருத்துகணிப்பு?

133 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் Smartphone பயன்படுத்துபவர்களின் பங்கு மொத்த அலைபேசி உபயோகிப்பாளர்களில் வெறும் 29.8%, அதில் வெறும் ஐந்து லட்சம் பேரின் கருத்தைக்கொண்டு, நாடாளுமன்றத்தில் இந்த நிமிடம் வரை பதில் சொல்லாமல் தவிர்த்துக்கொண்டிருக்கும் மோடி நாட்டில் பெரும்பாலானோர் (92%பேர்) தனது நடவடிக்கையை ஏற்பதாக பெருமைப்படுகிறார்.

100 கோடி பேர் இந்தியாவில் அலைபேசி உபயோகிப்பதாக எடுத்துக் கொண்டால், அதில் Smartphone உபயோகிப்பவர்கள் வெறும் 29 கோடி பேர், இந்த செயலியை பயன்படுத்தி கருத்தை பதிவு செய்தவர்கள் ஐந்து லட்சம் பேர், இது மொத்த மக்கள் தொகையில் 0.038%, மொத்த Smartphone உபயோகிப்பாளர்களில் இது 0.17%, இதில் வாக்களித்த 5 லட்சம் பேரில் 7% பேர் இந்தியாவிற்கு வேளியேயிருந்து வாக்களித்திருக்கிறார்கள், நாணய மதிப்பிழப்பின் கொடுமையால் அவர்கள் மிகவும் அவதியுறுகிறார்கள் இல்லையா?

                                   Photo 2 digital PM

நாட்டின் பெரும்பான்மை மக்கள் தங்களது சேமிப்பையும், உழைப்பையும் ஒரே இரவில் இழந்து வங்கி வாசலிலும், தானியங்கி பண இயந்திரங்களின் முன்னும் நிற்கையில் மக்களின் கருத்தை கேட்க பிரதமர் தேர்ந்தெடுக்கும் உத்தி அலைபேசி செயலி, இவர்களின் கருத்தை தான் நாட்டு மக்களின் பெரும்பான்மை கருத்தாக திணிக்கிறார் அதற்கும் முட்டுக்கொடுக்க மோடி பக்தர்கள் இருக்க எப்பேர்ப்பட்ட முட்டாள்தனத்தையும் செய்ய அவருக்கு என்ன கவலை?

குறிப்பிட்ட பொதுப்பிரச்சினைகளுக்காக மேற்கு உலக நாடுகள் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கின்றன, கிரீஸ் நாட்டில் பொருளாதார சீர்குலைவை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பொதுவாக்கெடுப்பு, ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் முடிவை எடுக்கும் பொருட்டு பிரிட்டனில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு ஆகியன சமகால உதாரணங்கள். அனைத்துத் தரப்பு மக்கள் கருத்தை அறிய இவ்வாறான சனநாயக வழிகள் இருக்க, இதுவரை பொதுவாக்கெடுப்பு என்பதை நடத்தியிராத இந்திய அரசாங்கத்தில், அலைபேசி செயலி மூலம் கருத்துக்கணிப்பு நடப்பதும், ஊடகங்களின் அரைவேக்காட்டுத்தனமான பக்கசார்பு கருத்து திணிப்புகளும், அதையும் முழுமையாக நம்பும் மக்கள் அதிகரிப்பதும் நிச்சயம் நமக்கு ஆச்சரியம் ஏற்படுத்தப்போவதில்லை.

– வியன் சதீசுகுமார்

இளந்தமிழகம் இயக்கம்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*