Home / அரசியல் / டிஜிட்டல் பிரதமர் 

டிஜிட்டல் பிரதமர் 

நான் வாழும் காலம் குறித்து நான் எப்போதும்  பெருமைப்பட்டதுண்டு, தொழில்நுட்பம் வளராத, குறைவயது சாவுகள் நிரம்பிய கடினமான கடந்தகாலத்திலும் இல்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சி வீங்கி இயற்கை முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு அதன் விளைவுகளை சமாளிப்பதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கப்போகும் எதிர்காலத்திலும் இல்லாமல், சமகாலத்தில்வாழ்வது குறித்த பெருமிதம் அது , இக்காலம் இயற்கையை முற்றிலுமாக அழித்தொழித்து விட்டிருக்கவில்லை, தொழில்நுட்ப பாய்ச்சல் தான் ஆனாலும் இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவதை போல மக்கள் நலனை விடுத்து எதையெதையோ தேடி பறந்து கொண்டிருக்கிறது அறிவியல்.

அரசியல் சமூக சூழலும் கூட அப்படியானதொரு காலக்கட்டத்தில் தான் இருக்கிறது,  இந்திய ஒன்றியம் பல்வேறு அரசியல் சமூக சிக்கல்களை சந்தித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக மக்கள் விரோதமாக போய் கவிழ்ந்து விடாமல், சூதானமாக மக்களை ஏமாற்றி மக்கள்நல போர்வையில் அவர்களையே சுரண்டுகின்றது அரசு.

Digital PM 1

இந்திய ஒன்றியம் போன்ற பலதரப்பட்ட பண்பாட்டு, தேசிய மக்கள் வாழும் ஒரு நாட்டில் தேர்தலில் வெல்ல அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒத்த கருத்தியல்  ஒன்று தேவைப்படுகிறது, அது தெசியமாக இருந்தது,மதவாதமாக இருந்தது,வர்க்கவாதமாக இருந்தது, இருப்பினும் ஒருமித்த தேசிய உணர்வு என்பது இந்திய ஆட்சியாளர்களுக்கு பகல்கனவாகவேஇருந்து வரும் நிலையில் இந்திய மக்களை ஒன்றிணைக்க ஒரு புள்ளி ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுகிறது, அதை சரியாக புரிந்து கொண்டவர் தான் பகாசுர மோடி! வளர்ச்சி என்பது தான் அந்த பொதுப்புள்ளி.

சரி வழியை கண்டுபிடித்தாயிற்று ,மக்களை ஏமாற்றி தேர்தலிலும் வென்றாகிவிட்டது, ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமே? இந்திய ஒன்றியம் என்பது  சிங்கப்பூர் போன்றோ மற்ற சிறு நாடுகளை போன்று நிர்வகிக்க எளிதானதோ, தடாலடி மாற்றங்களுக்கு உகந்ததோ இல்லை, பரந்து விரிந்த இந்த நிலப்பரப்பில் பல்வேறு தேசிய இன மக்கள் ,பல்வேறுமொழி பேசும் மக்கள் , வேறு வேறான கலாச்சாரம் கொண்ட மக்கள் உரிமைகள் குறைக்கப்பட்டோ, மறுக்கப்பட்டோ கட்டுண்டிக்கிறார்கள், ஆனால் உலகமயத்திற்கு பின் உருவான புதிய நடுத்தரவர்க்கத்தின் பெரும்பாலானோருக்கு இது குறித்த பிரக்ஞை இருக்கிறதா என்றால் இல்லை, ஆனால் இன்று ஆட்சியாளர்களை முடிவு செய்யும் , ஆட்சியாளர்களின் வஞ்சகத்துக்கு தம்மைஅறியாமல் ஆளாகும் ,ஆளானாலும் அது குறித்த பிரக்ஞை இல்லாமல் ஆட்சியாளர்களுக்கே தெரிந்தோ தெரியாமலோ கொடி பிடிக்கும் முக்கியமான வர்க்கம் இது.இன்று மோடியின் டிஜிட்டல் கிறுக்குத்தனங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இவர்கள் தான், எனக்கு சோறு இருக்கிறது, வீடு இருக்கிறது, என் உழைப்புக்கு முதலாளி ஊதியம் தருகிறான் , அடிப்படை சுகதுக்கங்களுக்கு அரசால் எந்த இடையூறும் இல்லை , அப்படியிருக்க நான் ஏன் அரசை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள், தொழில்நுட்பத்தை முதலில் வரவேற்று அதை முதலில் துய்ப்பவர்களும் இவர்கள் தான் , உலகமயத்திற்கு பிறகு கிட்டதட்ட அரசியல் நீக்கப்பட்ட, சுயநல முதலாளிய பொருளியலில் வாழும் இவர்களின் அதிகபட்ச அரசியல் அறிவுவாட்சப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றின் மூலமே கிடைக்கிறது, அந்த தகவல்கள் உண்மையா பொய்யா என அறிந்துகொள்ள தேவைப்படும் குறைந்தபட்ச பகுப்பாய்வுக்கு கூட அவர்கள் தயாராக இருப்பதில்லை  அல்லது அவர்களுக்கு அது தேவையில்லை, வாட்சப்பிலேயே சொல்லிட்டானுங்க என்கிற ரீதியில் அணுகும் இவர்களால்  மோடி அசாத்திய பலத்துடன் தனது பொய்பரப்புரைகளாலும், குசராத் மாதிரியாலும்  வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.குசராத் மாதிரி என்பது உண்மைதானா அவர்கள் தரும் தரவுகள் உண்மையா என்பது குறித்தெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை, அதனால் தான் மோடி டிஜிட்டல் விளம்பரங்களால் 10000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் வென்று பிரதமராக முடிந்திருக்கிறது,ஏனென்றால் இந்த அவசர கால யுகத்தில் உடனடி மாற்றம் சாத்தியம் என நினைப்போர் இவர்கள் தான், முதல்வன் படம் போல அரசியல் சிக்கல்கள் குறித்த அடிப்படை அறிவு எதுவுமின்றி அதிரடி நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்டோர் இவர்கள் தான். இவர்களை குறிவைத்தால் தான் வெல்ல முடியும் என்பதை மோடி குழு எப்போதோ கண்டறிந்தாயிற்று. இவர்களை சாதிமதம் கடந்து இணைக்க அவர்கள் கண்டறிந்த மையப்புள்ளி பிரச்சாரம் தான் ‘வளர்ச்சி’.

Digital PM 2

சரி வளர்ச்சி வளர்ச்சி என கூவி  வென்று விட்டோம், நம் மறைமுக செயல்திட்டமான முதலாளிகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கிறோம், ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் நலத்திட்டங்கள் என உருப்படியாக எதுவுமே இல்லை, ஒருவேளை மக்கள் வளர்ச்சி போதையிலிருந்து விழித்து கொண்டு அரசை எதிர்க்க துவங்கினால்? அதற்காக மோடி அரசால் அதிரடியாகஅறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் நாணய மதிப்பு நீக்கம்  (Demonetization), அது அறிவிக்கப்பட்டதிலிருந்தே மேற்குறிப்பிட்ட சிலர்  மோடியை கொண்டாடி தீர்த்தார்கள் 70 வருட இந்தியாவின் பிணியை நீக்க வந்த மீட்பராக மோடியை வணங்கினார்கள், மக்கள் படும் துயரங்களை பதிவு செய்வோர் தேச விரோதிகளாகவும் , நாட்டின் நலனுக்காக நாலு நாள் பட்டினி கிடந்தால்ஒன்னும் கொறைஞ்சிடாது என்பது போல பேசுவோர் தெசபக்தி மிக்கவர்களாகவும் கருதப்படுகிறார்கள், இது குறித்தான விவாதத்தில் நண்பரொருவர் நீயென்ன இப்போ பட்டினியா கிடக்கிறாய் ? நீ ஏன் இப்போ மோடியை எதிர்க்கிறாய்  என கேட்டார் , சொறு உனக்கு இருக்கும் போது பட்டினியில் சாகிறவனை பற்றி உனக்கென்ன கவலை என்கிற முதலாளிய சிந்தனையின் நீட்சிஇது.இது போல சாமானிய மக்களின் சிரமங்களை துச்சமாக கருதும் பலரை இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது.

 Digital PM 3

குறிப்பிட்ட இந்த நாணய மதிப்பு நீக்க நடவடிக்கையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்,திருமணங்கள் தள்ளிப்போயிருக்கின்றன, சிறு/குறு/நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன, கூட்டுறவு தொழில்கள் முற்றிலுமாக முடங்கியிருக்கின்றன, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது,இன்று வரையிலும் சாமானிய மக்கள் வங்கி வாசலிலும் ATM முன்பும் காத்திருக்கிறார்கள், இப்படியாக மக்கள் எண்ணற்ற பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில்

மோடியோ தன்னை தேர்ந்தெடுத்த டிஜிட்டல் நார்சிஸ்ட்டுகளை (digital narcissist) போலவே ட்விட்டரில் கருத்து தெரிவிப்பதிலும் , செல்பி எடுப்பதிலும் , அலைபேசி வாயிலாக கருத்து கணிப்பு நடத்துவதிலும் பிசியாக இருக்கிறார், மான் கீ பாத்- ல் ரேடியோவில் தோன்றி பேசுகிறார், பேட்டி பச்சாவ் என்ற பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்காக மகளோடு செல்பி எடுக்கசொல்கிறார்,ஸ்வச் பாரத் திட்டத்திற்காக செயலி வெளியிடுகிறார், அயல்நாட்டு  அவைகளில்  Prompter உதவியுடன் பேசி கைத்தட்டல் அள்ளுகிறார், எழுதி கொடுத்தவற்றை அப்படியே வாசிக்கும் மோடி Mrs. என்பதை M.R.S என படித்து அசிங்கப்படுகிறார், ஒலிப்பெருக்கி கிடைத்துவிட்டால் போதும் சிங்கம் போல கர்ஜிக்கிறார், அதுவே அவர் பதில்சொல்ல கடமைபட்டிருக்கும்நாடாளுமன்ற அவையென்றால் பூனையாக பதுங்கி விடுகிறார், எனக்கு நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன் என விளக்கம் வேறு கொடுக்கிறார்.

Digital PM 4

மோடி அரசு இறுதியாக நாட்டு மக்களை பணமில்லா பரிமாற்றத்திற்கு மாற சொல்வதில் குறியாய் இருக்கிறது, அதுவும் இந்தியாவை  டிஜிட்டல் மயமாக்க துடிக்கிறது, இந்தியா உண்மையில் பணமில்லா பரிமாற்றதிற்கு தயாராக இருக்கிறதா அதை விடவும் டிஜிட்டல் இந்தியா சாத்தியமா  என்பது குறித்தெல்லாம் எவ்விதமான ஆதாரப்பூர்வமான ஆய்வுகளும் அரசிடம் இல்லை.

இந்திய பொருளாதாரமே முறைசாரா தொழில்களாலும் , கிராம பொருளாதாரம் சார்ந்தும் இருக்கும் நிலையில், அவர்களல்லாத சிறு கூட்டமான தொழில்/சேவை துறை சார்ந்த தம் சக டிஜிட்டல் நார்சிஸ்ட்டுகளின் (digital narcissist) வாழ்க்கையை ஒட்டுமொத்த இந்தியாவுக்கான அளவுகோலாக கொண்டு அனைவரையும் பணமில்லா பொருளாதாரத்திற்கு மாற சொல்லி அதற்குசலுகைகளும் அறிவிக்கிறார்கள்,

தான் credit card, mobile wallet வைத்திருப்பதை போலவே , காய்கறி விற்பவரும், தெருவோர சிறு வணிகரும் , வைத்திருப்பார்கள் என நினைப்பது , அவர்களுக்கு அதை பயன்படுத்துவதில் எந்த சிரமமும் இருக்காது என நினைப்பது  இந்தியா மின்சார இணைப்பில் பெற்றிருக்கும் கட்டமைப்பு, இந்திய இணைய வேகம் , கட்டணம், இடையூறில்லா தொடர்பு (Uninterrupted connection)என்பன குறித்த எந்த புரிதலும் இல்லாமல் வழக்கம் போல மோடி துதி தொடங்கிவிட்டது,

Digital PM 5

தினம் 500 ரூபாய்க்கு வியாபாரம் செய்யும் காய்கறி கிழவி எப்படி cashless ஆவார்? தெரு தெருவாக cooker repair செய்யும் தொழிலாளி எப்படி cashless ஆவார்? தினமும் சொற்ப வருமானம் கொண்ட இவர்கள் cashless ஆவதால் கட்ட வேண்டிய கூடுதல் கட்டணம் எவ்வளவு? இவர்களின் பண பரிவர்த்தனைகளை முறைப்படுத்த துடிக்கும் மோடி அரசின் உண்மையான நோக்கம்என்ன? யாருடைய நலன்? எதற்காவது இவர்களிடம் பதில் உண்டா?

இங்கே தொழில்நுட்பம் நன்கு கைவந்தவர்களுக்கே இணைய பரிவர்த்தனை என்பது பல சிக்கல்களை தோற்றுவிப்பதாக உள்ளது, வாடிக்கையாளர் சேவை மையங்களை அணுகுவது மோசமான அனுபவமாக இருக்கிறது, நாட்டில் Smartphone பயன்படுத்துவோர் மொத்த அலைபேசி உபயோகிப்பாளர்களில் வெறும் 29.8%, இணையம் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளவர்கள் மொத்த மக்கள் தொகையில் 34.8% (Internet access through any device), மின் இணைப்பு கிடைக்கப்பெறாத வீடுகள் 31%, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை எடுத்துக்கொண்டால் நிலைமை இன்னும் மோசம், அங்குள்ள மக்களிடையே நிலவும் இந்திய ஒன்றிய எதிர்ப்பு மனநிலையே இதற்கு சான்று.

இந்த வசதிகள் எல்லாம் நன்கு கிடைக்கப்பெற்ற வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் அமெரிக்கா இன்னும் 55% பரிவர்த்தனைகளை பணம் மூலமே மேற்கொள்கிறது, பணமில்லா பரிவர்த்தனையில் உலகில் முன்னிலை வகிப்பதாக கருதப்படும் சிங்கப்பூரில் இன்னமும் 39% பரிவர்த்தனைகள் பணம் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியா இதுவரையிலும் 2% தான் பணமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது, நிலைமை இப்படி இருக்க மக்களின் மீட்பர் மோடி திடீரென ஒருநாள் தொலைக்காட்சி முன் தோன்றி பணமில்லா பரிமாற்றத்தை திணிக்க முயல்வதெல்லாம் எப்பேற்பட்ட மூடத்தனம்?

மோடி நவம்பர் 8 தொலைக்காட்சியில் தோன்றி நாணய மதிப்பு நீக்கத்தை அறிவித்த போது, கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கவும் தான் இந்த நடவடிக்கை என்றார், தொடர்ந்த நாட்களில் தீவிரவாத ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, என என்னென்னவோ புலம்பி பார்த்தார், ஆனால் நிலைமை மோசமடைவது கண்டு , பணமில்லா பொருளாதாரம் தான் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார், அருண் ஜெட்லியும் இதே கருத்தை சில நாட்களுக்கு முன் தெரிவித்தார், நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி கழுதையை உதைத்து குதிரை பந்தயத்தில் ஓடச்செய்வதற்கு ஒப்பான மூடத்தனம் இது.

எந்தவித முன்னேற்பாடும் இன்றி அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை, வெறும் 2% அளவில் நொண்டியடிக்கும் பணமில்லா பொருளாதாரத்தை ஒரே நாளில் அனைவரையும் செய்ய சொல்ல துடிக்கும் அரசின் நடவடிக்கை, இதனால் மக்கள் அடைந்து வரும் சொல்லோணா துயரம் இவற்றை பேசுபவர்கள் தேச விரோதிகளா? அல்லது , கண்ணை மூடிக்கொண்டு இவற்றை ஆதரிப்பவர்களா?

Digital PM 6

நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த டிஜிட்டல் நார்சிஸ்டுகளின் உச்சபட்ச அரசியல் அறிவு பேஸ்புக்,வாட்சப் செய்திகளாக இருக்கிறது, அவர்கள் செய்யும் அதிகபட்க அரசியல் அந்த செய்தியை கண்ணைமூடிக்கொண்டு பகிர்வதாக இருக்கிறது, இதே போல சில வாரங்களுக்கு முன் மோடி பொதுக்கூட்டம் ஒன்றில் விளையாட்டாக பகிரபட்ட வாட்சப் காணொளி ஒன்றை உதாரணமாக சொல்லி, பிக்கைக்காரர்களெல்லாம் Swipe machineக்கு மாறிவிட்டதால் மக்களை பணமில்லா பொருளாதாரத்திற்கு மாற சொல்கிறார், ஒரு Swipe machine வாங்க என்னென்ன அடையாள அட்டைகள் தேவை, எந்த வகையான வங்கி கணக்கு தேவை அதில் எவ்வளவு பணம் தேவை, உண்மையில் பிச்சைக்காரர் Swipe machine வைத்திருப்பது சாத்தியமா என்பது போன்ற எந்த உண்மையும் தன் சக டிஜிட்டல் நார்சிஸ்ட்டுகளை போலவே அவர்களின் தலைவனான மோடிக்கும் தேவையில்லை.

டிஜிட்டல் இந்தியாவின் முகமாக அறியப்பட்ட மோடியை, சுஜாதாவின் என் இனிய இயந்திராவில் வரும் அதிபர் பாத்திரம் போல் என்றாவது ஒருநாள் திடீரென  வெறும் Holographic 3D projection தான் மனிதனே கிடையாது என அறிவித்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

 இறுதியாக ஒன்று

இப்போது இந்த கட்டுரையை நான் சிரமப்பட்டு பேனா பேப்பரிலெல்லாம் எழுதவில்லை , இதோ என் பயணத்தினூடே அலைபேசி வாயிலாகவே தட்டச்சி எழுதிக்கொண்டிருக்கிறேன், இன்று பெரும்பாலான எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் வழி இது தான் , பேப்பரில் எழுதி பின்னர் தட்டச்சு செய்யும் பழைய முறையெல்லாம் இப்போது இல்லை, இதை யாரும் யாருக்கும்திணிக்கவும் இல்லை, தொழில்நுட்பம் வளர்கிறது, உயிரினங்களின் பரிணாமம் போல தேவைப்படும் தொழில்நுட்பம் யாரும் சொல்லாமலேயே மனிதனின் வாழ்வோடு பிணைந்துவிடுவதும், தேவையில்லாதது வழக்கொழிவதும் காலங்காலமாக நிகழ்வது தான்.இந்தியாவின் உள்கட்டமைப்பு வளரும் போது பணமில்லா பரிவர்த்தனை என்பது தானாக மக்களை ஆட்கொண்டுவிடும், அதைவிடுத்து தொழில்நுட்பத்தை மிகை நுகர்வு கலாச்சாரமாக மாற்றி திணித்தால் ஏற்படும் விளைவுகளை வரலாறு அறியும்.

-வியன் சதிசுகுமார்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*