Home / அரசியல் / 500,1000 செல்லாக்காசும் தொடரும் மக்களின் துயரமும் – அரங்கக் கூட்டம்

500,1000 செல்லாக்காசும் தொடரும் மக்களின் துயரமும் – அரங்கக் கூட்டம்

மோடி தலைமையிலான நடுவண் பாரதிய சனதா கட்சி அரசின்  பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி 50 நாட்களைத் கடந்து விட்ட்து. உழைக்கும் மக்கள் தாங்கள் வருந்திச் சேர்த்த சிறு தொகைகளைக் கூட தங்கள் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாமல், வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வரிசைகளிலும் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் அவலநிலை தொடர்கிறது. சிறு தொழில்புரிவோர், சிறு வணிகர்கள், கட்டத் தொழில் என எல்லா தளங்களிலும் பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. விவசாயக் கூலி கொடுக்க முடியாமல் ஏற்கெனவே நலிவடைந்திருக்கும் வேளாண் தொழிலும் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கிறது. வறட்சியால் வாடி வரும் உழவர்கள் இந்த பணமதிப்பிழப்பு மூலம் தங்கள் கடனை அடைக்க முடியாமலும், பயிர்களை காக்க இயலாமலும் தற்கொலை செய்து கொள்வதும் நாளும் அதிகரித்து வருகின்றது.

மக்களின் வாழ்நாள் சேமிப்பை உறிஞ்சியிழுக்கும் வங்கிகள், 63 பெருமுதலாளிகளின் கடன்களை நீக்கம் செய்திருக்கின்றன. இன்னும் அவர்களின் முதலீடுகளுக்கு, கடைகோடி ஏழையின் சிறு சேமிப்பைத் திருடிக் கொண்டிருக்கிறது பா.ச.க மோடியின் கூடடம் . ஒருபுறம் சுரண்டல், மறுபுறம் அதிகார வரம்பு மீறல், நாளொரு வண்ணம் புதிய கேலிக்கூத்தான அறிவிப்புகள், அறிவிப்புகளை திரும்ப பெறுதல் என மக்களின் அன்றாட வாழ்க்கையை சிதைத்து போட்டுள்ளது மோடியின் அதிகாரம்.

இந்த மிகப்பெரிய பொருளாதாரச் சுரண்டலை முழுமையாக புரிந்து கொள்ளவும், நம் பணத்தின் மீதான நம் உரிமைக்காக கேள்வி எழுப்பவும் அது குறித்தான முறையான அறிவுத் தேடலை எதிர் நோக்கியும் இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பாக “500,1000 செல்லாக் காசும் மக்களின் எதிர்காலமும்” என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை (7/1/2017) மாலை சென்னை பனுவல் புத்தக நிலையத்தில் அரங்கக் கூடடம் நடைபெற்றது.

Event 4

சென்னை பல்கலைக் கழகத்தின் பொருளாதார துறை பேராசிரியரான தோழர் மு. நாகநாதன் சிறப்புரை ஆற்றினார்.

இந்தியாவின் 1% மக்களிடம் நாட்டின் 52% விழுக்காடு சொத்துக்கள் இருப்பதாகவும், அவர்கள் யாரும் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படப் போவதில்லைஎனவும் தெரிவித்தார். மொர்ராஜி தேசாய் ஆட்சியின் போது, 10000 நோட்டுக்கள் திரும்பப் பெறுவதற்கே பல்வேறு பொருளாதார‌ நிபுணர்களின் ஆலோசனை பெறப்பட்டது. அக்கால கட்டத்தில் அது மிகப்பெரிய பாதிப்பை பொது மக்களிடையே ஏற்படுத்தவில்லை எனவும், தற்போதையமோடியின் அறிவிப்பு, நாட்டின் 99 விழுக்காடு மக்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது என்றார். மேலும்  “பெரு நிறுவனங்களின் முகவர்கள், அவர்களுக்காக வாதாடுபவர்கள் தான் இன்று நாட்டின் நிதி அமைச்சர்களாக உள்ளனர். அவர்களால் எப்படி மக்களுக்கு நியாயத்தை வழங்க முடியும். அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல், சாமியார்கள் என அனைத்து தளத்திலும் பெரு வணிக நிறுவனங்கள் உள்ளே நுழைந்து விடடன. எனவே இந்தியாவில் தற்பொழுது முதலாளித்துவ சனநாயகம் தான் உள்ளதே தவிர மக்கள் சனநாயகம் இல்லை. ஆதலால் தான் இந்த கள்ளப்பண ஒழிப்பு நடவடிக்கையின் சுமை கூட இன்று சாதாரண ஏழை மக்களின் மீது சுமத்தப்பட்டு, கள்ளப் ஒழிப்பு பிரச்சனை தீராமல் தொடர்கின்றது என தனது உரையில் பதிவு செய்தார்.

வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பின் துணைத்தலைவர் ஃபிராங்கோ தனது உரையில், அம்பானி அதானி உள்ளிட்ட பெருமுதலாளிகள், ஆளும் மத்திய அரசை எப்படி தங்கள் கைப்பாவையாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்தோடு வெளிப்படுத்தினார். இதில் காங்கிரசு, பா.ச.க என எவ்வித பேதமும் இல்லை எனவும், வங்கி ஊழியர்கள் இந்த செல்லாகாசு அறிவிப்பால் படும் துயரங்களையும் பதிவு செய்தார்.

Event 6

தோழர் சுசீலா ஆனந்த், களத்தில் மக்கள்  படும் துயரங்களையும் குறிப்பாக இந்த செல்லாக்காசு அறிவிப்பு பெண்களை எப்படி வெகுவாக பாதித்திருக்கிறது என்பதையும் பதிவு செய்தார். மக்களின் உணர்வுகளையும் கோபங்களையும் அரசியலாக மாற்ற வேண்டிய இயக்கங்கள் ஏன் மெளனம் காக்கின்றன என்ற கேள்வியை முன் வைத்தார்.

தோழர் வெங்கட், இந்த அறிவிப்பு வெளியாகும் முன்னரே பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன எனவும், உஷா ராமநாதனின் புத்தகங்களிலிருந்து சிலமேற்கோள்களைக் காட்டியும் பேசினார். PAYTM மூலம் பணம் அனுப்பலாம். பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒரு ரூபாய்க்கு கூட பணம் அனுப்பமுடியும். ஆனால் எத்தனை பேர் அதைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்று மின்னிலக்க பரிவர்த்தனைகளின் சிக்கல்களை பதிவு செய்தார். தோழர் இசையரசு,சிறு வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் படும் துயரங்களையும் எடுத்துரைத்தார்.  எஞ்சிய மேட்டுக்குடி தங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்து கொள்வோம் என்று பேசும் அபத்தத்தை கேள்விக்குள்ளாக்கினார்.

Event 2

தோழர் நரேன் ராஜகோபாலன் பேசும் போது, 50 நாட்களுக்கு முன் கருப்புப் பணம், லஞ்சம், ஊழல், தீவிரவாதம் இவைகளை ஒழிப்போம் எனப் பேசியமோடி, 50 நாட்களுக்குப் பின் அவைகளை மறந்து, உ.பி தேர்தல் பிரச்சார உரையை தவறுதலாக படித்ததைப் போல நாடகமாடுகிறார் எனவும், சமூகப்பொருளாதாரம் பற்றி கவலைப்படாத அரசு, வெறும் பொருளியலை எண்களாகப் பார்க்கும் அவலம் குறித்தும் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

15895479_1386753461348597_4973499462226613246_o

இறுதியாக பேசிய இளந்தமிழகம் தோழர் வசுமதி, வர்தா புயலுக்குப் பின் மின்னிலக்க  பரிவர்த்தனை பற்றிய ஆரவாரங்கள் முடங்கிப் போனதாக தெரிவித்தார். தொடக்கத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்து ஆதரவளித்த தகவல் தொழில் நுட்பத் துறையினரான ஐ.டி மக்கள் , தற்போது அது நடைமுறையில் எவ்வாறு சாத்தியமில்லை என்ற சிக்கல்களை புரிந்து கொண்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கண் பார்வையற்றோர் இந்த மின்னிலக்க பரிவர்த்தனைகளை எப்படி மேற்கொள்ளப் போகிறார்கள் என்கிற கேள்வியையும் முன் வைத்தார்.

Event 3

கூட்டத்தின் நிறைவாக, பேச்சாளர்களுக்கு இளந்தமிழகத்தின் இயக்க வெளியீடுகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. தோழர் அ.மு.செய்யது கூட்டத்தை தொகுத்து வழங்கினார்.  தோழர் தயாளன் சண்முகா,  தமிழகத்தின் சில சிற்றூர் பகுதிகளில் இந்த செல்லாக்காசு நடவடிக்கையால் பூட்டிய வங்கிகள் முன் காத்துக் கிடைக்கும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை எவ்வாறு பாதித்துள்ளது என வேதனையுடன் பதிவு செய்த காணொளிப்  காணொளித் தொகுப்பு ஒன்று திரையிடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தளங்களில், இந்த செல்லாக்காசு அறிவிப்பின் அரசியலையும், மக்கள் படும் துயரங்களையும் பேசுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

செய்தி தொகுப்பு:

அ.மு.செய்யது

இளந்தமிழகம் இயக்கம்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*