Home / அரசியல் / ஜல்லிக்கட்டு போராட்டம்: ஒரு ஐ.டி ஊழியரின் சாட்சியம்

ஜல்லிக்கட்டு போராட்டம்: ஒரு ஐ.டி ஊழியரின் சாட்சியம்

தமிழர்களின் மரபுரிமையான ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி அலங்காநல்லூரில் இரவு பகலாக போராடிக் கொண்டிருந்த இளைஞர்களையும் ஊர் மக்களையும் காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது. போராட்டம் நடந்து கொண்டிருந்த பகுதிகளில் மின் தடையை ஏற்படுத்தியும் உணவு குடிநீரை தடை செய்தும் கடும் நெருக்கடிகளை அரசு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நியூஸ் 7 ஐத் தவிர, களத்தில் மற்ற செய்தி ஊடகங்கள் இல்லை. அலங்காநல்லூரில் போராடிக் கொண்டிருந்த‌ இளைஞர்கள் ஆதரவு வேண்டி, சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர். தமிழகமெங்கும் இச்செய்தி, சருகுகளைப் பற்றிய தீயெனப் பரவியது.

17 ஆம் தேதி சென்னை மெரினாவில் கூடிய இளைஞர் கூட்டம் நிரந்தரமாக அங்கேயே தங்கியது. அவர்களுக்கு ஆதரவாக சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் இளைஞர்களும் மாணவ மாணவிகளும் மெரினாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். “ஜல்லிக்கட்டு வேண்டும் ! பீட்டாவை தடை செய்” இந்த இரண்டு கோரிக்கை முழக்கங்களும் மையப் புள்ளியாக இருந்தாலும், விவசாயிகள் தற்கொலை,காவிரி நதிநீர் உரிமை மீட்பு, மத்திய மாநில அரசுகளின் மீதான கோபம் என்று பல்வேறு பிரச்சினைகளும் அங்கே ஓங்கி ஒலிக்கத் துவங்கின.

சென்னையின் பல்வேறு பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்க, சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ஐ.டி ஊழியர்களும் களத்தில் இறங்க ஆயத்தமாயினர். சென்னையில் பத்து லட்சம் ஐ.டி.ஊழியர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை ஒருங்கிணைக்கும் புள்ளியாக, ஒரு முக்கிய போராட்டக்களமாக இருப்பது டைடல் பூங்காவும், பழைய மகாபலிபுரம் சாலையும்.

16114397_1396806703676606_1194729686454842107_n

18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு டைடல் பூங்கா எதிரில் மனித சங்கிலிப் போராட்டத்தை, இளந்தமிழகம் இயக்கம் அறிவிக்கிறது. அப்போராட்டத்தில் கலந்து கொள்ள, 3 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, துரைப்பாக்கம் வழியாக டைடலை அடைய இரு சக்கர வாகனத்தை இயக்கினேன். வழியெங்கும் வாகன நெரிசலில் பழைய மகாபலிபுரம் சாலை நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் நடுவில் எதாவது ஒரு நிறுவனத்தின் முன்பு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து போராட்டங்களிலும் ஐ.டி இளைஞர்களும், பெண்களும் தான். ஜல்லிக்கட்டு ஆதரவு பதாகைகளுடன் , முழக்கங்களுடன் சாலையின் இருமருங்கிலும், யாரையோ வரவேற்கக் காத்திருப்பதைப் போல நிற்கிறார்கள். ஆங்காங்கே விரைந்து செல்லும் கார்களிலும் பைக்குகளிலும் இளைஞர் படை ஆர்ப்பரிக்கிறது. வேறு எதுவும் நகருக்குள் நுழைந்த விட்டோமா என்று என்னையே கேட்டுக் கொண்டேன். 4 மணி வரை டைடல் பூங்காவை அடைய முடியவில்லை. தரமணியில் கடும் வாகன நெரிசல். புரிந்து விட்டது. டைடலில் கூடிய கூட்டம் கட்டுக் கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது என்பதை தரமணியில் இருந்தே உணர முடிந்தது.

“வம்பு தும்புகளுக்கு போகாதவர்கள்” என்கிற ஐ.டி ஊழியர்களின் மீதான பிம்பம் உடைந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 2009 ஈழப்போராட்டத்தில் தொடங்கி, டிசிஎஸ் நிறுவனத்தின் முறைகேடான வேலை நீக்கத்துக்கு எதிராகப் போராடி, தொழிற்சங்கம் கட்டும் வரை, ஐ.டி ஊழியர்களின் போராட்டக்குணம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 2013 பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட படங்கள் வெளியான போது மிகப்பெரிய மாணவர் எழுச்சி ஏற்பட்டது. அப்போது இதே டைடல் பூங்காவில் 4500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்ற மனித சங்கிலிப் போராட்டம் ஒரு திருப்புமுனை. தரமணி சிக்னலில் காத்திருக்கும் போது, 2013 மனித சங்கிலி நினைவுகளே மனமெங்கும் நிறைந்திருந்தன. வரலாறு மீண்டும் திரும்புகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

ஒருவழியாக போக்குவரத்து சீரடைந்து டைடலை அடைந்தேன். “தன்னெழுச்சி” என்ற சொல்லாடலுக்கு அன்று தான் பொருள் புரிந்தது. அப்படியொரு கூட்டம். குறைந்தது ஒரு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் டைடல் சிக்னலில் இருந்து, பேருந்து நிலையம் வரை கைப்பற்றி விட்டார்கள். அலுவலகத்தில் எடுக்கப்பட்ட பிரிண்ட் அவுட்டுகளில் “சேவ் ஜல்லிக்கட்டு, பீட்டாவை தடை செய்” ஆகிய வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. வாகன சத்தங்களை, ஜல்லிக்கட்டு முழக்கங்கள் அமுங்கச் செய்தன. வழக்கமாக‌ கெடுபிடிகளைப் போடும் காவல்துறை அன்று கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது. நூறு பேர் கிளம்பினால், இருநூறு பேர் திரும்ப வருகிறார்கள்.

5 மணிக்கு முன்பே இளந்தமிழகம் அறிவித்த மனித சங்கிலிப் போராட்டம் துவங்கி விட்டது. ஜல்லிக்கட்டு வேண்டும் என்கிற கோரிக்கையோடு மட்டும் நின்றுவிடாமல், விவசாயிகள் தற்கொலையை தடுத்திடக் கோரியும், தமிழகத்தில் விவசாயத்திற்கு “முறையான வரையறுக்கப்பட்ட கொள்கைத் திட்டம்” கொண்டு வரக்கோரியும், காவிரியில் தமிழக உரிமையை மீட்டெடுக்கக் கோரியும் முழக்கங்கள் இடம் பெற்றன. அதுவரை ஜல்லிக்கட்டுக்காக மட்டும் நடந்த‌ போராட்டம், தமிழக உரிமைகள், வாழ்வாதாரங்கள் என பரந்த தளத்தை நோக்கி விரிவடைந்தது. அன்றைய காற்று வேறு மாதிரியாக இருந்தது.

16142225_1400184800005463_7785662081509523997_n

இந்த கோரிக்கை முழக்கங்களை பல்வேறு தளங்களுக்கு ஐ.டி ஊழியர்கள் கொண்டு சென்றார்கள். டைடல் மட்டுமில்லாமல், DLF ஐ.டி பூங்கா, எல்காட், சிறுசேரி சிப்காட், சோழிங்கநல்லூர் HCL எதிரில் என்று இத்துறையின் முக்கிய மையங்களில் ஜனவரி 18 மாலையிலிருந்து இளைஞர் கூட்டம் நிரந்தரமாக அமர்ந்து போராடத் தொடங்கியது .

டைடலில் மனித சங்கிலிப் போராட்டம் முடிவடைந்தாலும், இளைஞர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து செல்வதாயில்லை. கூட்டமாக ஓரிடத்தில் அமர்ந்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு திட்டம் தீட்டத் துவங்கினர். இளந்தமிழகம் தோழர்கள் வசுமதி, வினோத், அருணகிரி ஆகியோர் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்வதாயும், இரவு தங்கியிருந்து போராட்டத்தைத் தொடரலாம் என்றும் கேட்டுக் கொண்டனர். முதல் நாள் இரவு போராட்டம் அமைதியாக தொடர்ந்தது. முழக்கங்கள், அரசியல் பேச்சுகள் என களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. மோடி அரசின் செல்லாக்காசு நடவடிக்கையின் விளைவுகள், அதன் அரசியல், விவசாயிகள் பிரச்சினை, ஐ.டிக்கான தொழிற்சங்கமான FITE குறித்து என தோழர்கள் இரவு முழுவதும் ஒவ்வொருவராக கூட்டத்தின் முன்பு பேசினர். போராட்டம் புதிதல்ல என்றாலும், பொதுவெளியில் வீதிகளில் ஐ.டி.ஊழியர்கள் கூடிநின்று அரசியல் பேசுவது அங்கிருந்த அனைவருக்குமே புதிது தான்.

16105698_1396806660343277_7397249030847174273_n

காலையில் போராட்டம், ஒன்று கூடல், அரசியல் உரைகள், கொட்டும் பனியில் தங்குவது என மூன்று நாட்கள், மூன்று இரவுகள் கழிந்தன. நான் மேற்சொன்ன அனைத்து இடங்களிலும் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அங்கும் டைடல் போலவே தீவிர அரசியல் பேச்சுகளுக்கு பஞ்சமில்லை. சனிக்கிழமை ஒரு சில அரசியல் தலைவர்கள், துறைசார் வல்லுநர்களைக் கொண்டு சிறப்புரைகள் திட்டமிடப்பட்டன. அதன்படி, சென்னை கல்லூரி பேராசிரியர் இராமு.மணிவண்ணன், பெரியார் இயக்கத் தோழர் ஓவியாவும், மனநல மருத்துவர் ஷாலினியும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மையம் கலைக்குழுவினரின் பறைநடனம் மற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அரைமணி நேரம் நானும் கொஞ்சம் பேச வாய்ப்பு கிடைத்தது. விவசாயம் எப்படி திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்பதையும், மீத்தேன், கெயில், அணு உலை உள்ளிட்ட நாசகார திட்டங்கள் நம் தலையில் கட்டப்படும் அரசியலையும் பேசினேன்.நமது இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும், நமது மாநில உரிமைகள் பறிக்கப்படுவதையும் பொறுமையாக விளக்கினேன். கல்வி தனியார் மயமாதல், NEET மருத்துவ நுழைவுத் தேர்வு, நமது ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவுகளை எப்படி கலைக்கப்போகிறது? உதிரிகளாக போராடும் ஐ.டி.மக்கள் ஏன் அரசியல் கற்க வேண்டும் ? அமைப்பாதலின் அவசியம் என்ன ? என கலவையான கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். இத்தனை ஆண்டுகள் என்னோடு பணியாற்றும் என் ஐ.டி. தொழிலாளர்களுக்கு மத்தியில் தீவிர அரசியல் பேசியது மிகுந்த மனஎழுச்சியையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.  அன்று மாலை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். விவசாயிகள் பிரச்சினையை நேரடியாக புரிந்து கொள்ள, ஐ.டி ஊழியர்களுக்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

Syed in Tidel protest

tidel jallikattu protest pics

ஒருபுறம் மெரினா போராட்டம் வீரியமடையத் துவங்க, மறுபுறம் டைடல் எல்காட் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருந்தது. அதே எழுச்சி, அதே வேகம் என ஆண்களும் பெண்களுமாக இரவுகளை ஆக்கிரமித்தோம். இளைஞர்களின் இந்த போராட்டங்களுக்கு பொதுமக்கள் பேராதரவு வழங்கினர். ஆட்டோ ஓட்டுனர்கள், ஐ.டி நிறுவனங்களின் வாகன ஓட்டிகள், மற்ற துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் என டைடல் பூங்காவில் தொடர்ந்து குழுமத் தொடங்கியிருந்தனர். சாப்பாடு, குடிநீர், பிஸ்கட், பழங்கள் என்று அட்டை பெட்டிகளில் பொதுமக்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தனர்.  21 சனிக்கிழமை அன்று உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்தாலும், மக்கள் தொடர்ந்து உணவுப் பொட்டலங்களையும், மோர் உள்ளிட்ட தாக சாந்திகளையும் அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருந்தனர். வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படப்போகும் இந்த தமிழின உரிமை மீட்புப் போராட்டத்தில், தங்களின் பங்களிப்பு சிறிதளவேனும் இருந்தாக வேண்டும் என்கிற தன்முனைப்பு ஏழரை கோடி தமிழர்களின் நெஞ்சில் இல்லாமலா போய்விடும்?

ஆறு நாட்கள் தமிழகம் முழுமைக்கும் போராட்டம் அமைதியாகத் தான் நடந்தது. நள்ளிரவில் ஆண்களின் தோழமையில், கடற்கரையிலும் வீதிகளிலும் குழந்தைகளும் பெண்களும் படுத்துறங்கி போராடியது, ஒட்டு மொத்த இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக மாறிப் போனதை  பலரும் எழுதிக் குவித்து விட்டார்கள். ஆறாவது நாள், அரசு தன் விஷ நாக்குகளான காவல்துறையை ஏவி போராட்டத்தைக் கலைக்கத் தொடங்கியது. ஆயிரக்கணக்கானவர்கள் கலைந்து செல்ல அரைமணி நேர அவகாசம் கூட கொடுக்காமல், மெரினாவில் போராடிய இளைஞர்கள் மீது தடியடி நடத்த ஆரம்பித்தது. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் என காவல்துறையின் பூட்சு கால்களும் லத்திகளும் யாரையும் விட்டு வைக்கவில்லை. சென்னை மெரினாவுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு, போராடும் இளைஞர்களை அச்சுறுத்தியது காவல்துறை. வீதிகளைத் தானே அடைக்க முடியும், கடலை எப்படி அடைப்பீர்கள் ? கடல் மார்க்கமாக தங்கள் படகுகளில் ஓடோடி வந்த மீனவச் சொந்தங்கள் உணவுப் பொட்டலங்களையும், குடிநீரையும் போராடும் இளைஞர்களுக்கு அளித்தனர். அதையும் கொடுக்க விடாமல், பிடுங்கித் தின்றது காவல்துறை. மெரினாவில் போராட்டம் தொடர்ந்து நடக்க, மீனவ குப்பங்களான நடுக்குப்பம்,  ரூதர்புரம் ஆகிய பகுதிகளில் காவல்துறை தனது ஒடுக்குமுறையைச் செலுத்த ஆரம்பித்தது. இந்த வெறியாட்டம் மதுரை,கோவை என போராட்டம் நடந்து கொண்டிருந்த பல்வேறு பகுதிகளிலும் விரிவடையத் துவங்கியது.

பட்டினம்பாக்கம் பகுதிகளில் அமைந்துள்ள இந்த மீனவ மக்களின்  ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கில், தமிழக அரசே காவல்துறையை ஏவி இந்த ஒடுக்குமுறையை மேற்கொண்டது என்பது தான் கசப்பான உண்மை. மீனவ குடிசைகளை எரித்தது, 250க்கும் மேற்பட்ட மீன் கடைகளை எரித்து சாம்பலாக்கியது, மீன்களைத் திருடியது, வாகனங்களுக்கும் ஆட்டோக்களுக்கும் தீ வைத்தது என காவல்துறையின் வெறியாட்டங்கள் காணொளிகளாக பதிவாகி, சமூக ஊடகங்களில்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

ஆறாவது நாள், மெரினாவில் காவல்துறை தனது வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போதும், ஐ.டி ஊழியர்கள் டைடலில் இருந்து கலைந்து செல்லவில்லை. ஜல்லிக்கட்டுக்கான கோரிக்கை முழக்கம், நேரடியாக அரசின் வன்முறையை கண்டிக்கும் முழக்கங்களான உருமாறின. காவல்துறையைக் கண்டித்தும், இளைஞர்கள் மாணவர்கள் மீதான தடியடிச் சம்பவங்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினோம். 23 மாலை ஐந்து மணிக்கு போராட்டம் நிறைவு பெற்றது. தோழர்கள் வசுமதி, பட்டுராசன், அருணகிரி இவர்களோடு, பட்டுராஜா, அகிலன்,சி.ஆர்.பாலாஜி, டைடல் லோகேஸ்வரி , கிருபாகரன் உள்ளிட்ட தோழர்களும் ஆறு நாட்கள் களத்தில் இடையறாமல் இயங்கிக் கொண்டிருந்தனர். இங்கே பெயர்கள் விடுபட்டிருக்கலாம். ஆனால் ஒரு குழுவோ ஒரு இயக்கமோ நிச்சயமாக இந்த போராட்டத்தை முழுமையாக ஒருங்கிணைத்தது என்று சொல்லிவிட முடியாது. வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஐ.டி.ஊழியர்கள், பொதுமக்களின் இயல்பான தன்னெழுச்சியே ஆறு நாட்கள் இந்தப் போராட்டக்கனலை அணையாமல் பாதுகாத்தது.

2011 எகிப்து துனிஷியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மாபெரும் மக்கள் புரட்சி அந்நாட்டு சர்வாதிகார ஆட்சியாளர்களை 30 நாட்களுக்குள் நாட்டை விட்டே ஓட வைத்தது. “அரபு வசந்தம்” என்றழைக்கப்படும் அந்த போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்களை அணி திரட்ட சமூக ஊடகங்கள் பெரும்பங்காற்றின. அப்படியான ஒரு புரட்சி இங்கு ஏற்படவில்லையென்றாலும் கூட,புரட்சி நடப்பதற்கான முஸ்தீபுகளை இந்திய ஆட்சியாளர்கள் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அடையாளம் கண்டு கொண்டிருப்பார்கள்.

ஜனவரி 26, சென்னை காமராஜர் சாலையில் வெறிச்சோடிப் போன இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டம், மக்களின் தரப்பிலிருந்து இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

இந்த இளைஞர்கள் வேகமாக அணிதிரளக் கூடியவர்கள். ஜல்லிக்கட்டுக்காக மட்டும் இவர்கள் வரவில்லை. அரசுகள், ஆட்சியாளர்கள், பெருமுதலாளிகள் என இவர்களின் கோபப் பார்வை பெரியது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி எளிதில் ஒரு கருத்தைக் கொண்டு சேர்க்கக் கூடியவர்கள் என்கிற செய்தி அவர்களுக்கு உவப்பாக இருக்க முடியாது தான்.அது மட்டுமின்றி மதச் சிறுபான்மையினரை எப்படியேனும் தனிமை படுத்தி துண்டாடலாம் என்கிற ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க சதிக் கோட்பாடுகள் தவிடு பொடியாயிருக்கின்றன. ஜல்லிக்கட்டு ஆதிக்கசாதி விளையாட்டு என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டாலும், போராடிய மக்கள் சாதிகளைப் பார்க்கவில்லை. மதங்களைப் பார்க்கவில்லை. போராடும் லட்சக்கணக்கான பொது மக்களிடையே சில நூறு முஸ்லிம்களால் அமைதியாக தொழுகை நடத்த முடிகிறது என்கிற ஒரு சிறு செய்தியே அவர்களை நிம்மதியிழக்கச் செய்கிறது.

தமிழக முதல்வருக்கே இந்த நல்லிணக்கம் வயிற்றில் புளியைக் கரைக்கிறது என்றால் மோடிக்கு சொல்லியா புரிய வேண்டும்?

மக்கள் போராடக் கற்று கொண்டு விட்டார்கள். போராட்டங்களே தீர்வை நோக்கிய வழி என்ற கல்வி அவர்களை சென்று சேர்ந்து விட்டது. அதன் உடனடி பலனையும் அறுவடை செய்து விட்டார்கள். நேரடியாக அரச ஒடுக்குமுறையையும் சந்தித்து விட்டார்கள். இன்று இக்கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும்(சனவரி 27) நள்ளிரவு, விடிந்ததும் காவல்துறை வெறியாட்டங்களுக்கு இலக்கான மீனவப்பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க, எம்முடைய‌ ஐ.டி இளைஞர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

-அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*