Home / அரசியல் / சசிகலா முதல்வராகிறார் , சனநாயக‌ம் செத்துவிட்டதா?
ஜெயலலிதாவும், சசிகலாவும் ஜெயாவின் வளர்ப்பு மகன் திருமணத்தில்...

சசிகலா முதல்வராகிறார் , சனநாயக‌ம் செத்துவிட்டதா?

நேற்று நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தில்  சசிகலா சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கபடுகின்றார். ஒ.பன்னீர் செல்வம் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். பிப்ரவரி 9ஆம் தேதி முதல்வராக பதவியேற்கின்றார் சசிகலா.

சசிகலா முதல்வராகின்றார் என்ற செய்திக்கு சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்வினை எழுந்துள்ளது. சனநாயகம் செத்துவிட்டது,  இவரெல்லாம் முதல்வராவதா?  என பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி அவர் இடைத்தேர்தலில் நிற்கப் போகும் தொகுதியில் உள்ள மக்கள் “சாதி,பணம்” பார்க்காமல் அவருக்கு வாக்களிக்காமல் அவரைத் தோற்கடித்து சனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும் என்று பலர் சொல்கின்றார்கள். இது எல்லாம் சாத்தியமா, ஏன் இவ்வளவு கோவம் நம்மிடம் என விரிவாக பார்ப்போம்.

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஜெயாவின் வளர்ப்பு மகன் திருமணத்தில்...

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஜெயாவின் வளர்ப்பு மகன் திருமணத்தில்…

தமிழகத்திலும் , இந்தியாவிலும் நடைபெறும் தேர்தல்களில் மக்கள் எதனடிப்படையில் வாக்களிக்கின்றார்கள் ?
என்ற கேள்விக்கு   சாதி அடிப்படையில் என்பது தான் முதல் பதிலாக இருக்கும். ஏனென்றால் அதிமுக, திமுக என பெரும்பான்மையான கட்சிகள் தங்கள் கட்சியைச்  சேர்ந்தவராக இருந்தாலும் அந்தந்த தொகுதிகளில் எந்த சாதியினர் அதிகமாக உள்ளனரோ அந்த சாதியினரைத் தான் வேட்பாளராக நிறுத்துகின்றனர்.  கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவரும், வட தமிழகத்தில் வன்னியர் சாதியைச் சேர்ந்தவரும், தென் தமிழகத்தில் முக்குலத்தோர் சாதியைச் சேர்ந்தவரும் தான் வேட்பாளாராக பெரும்பான்மையாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஏனென்றால் இங்கு பெரும்பான்மையான மக்கள் சாதியை வைத்து தான் யாருக்கு வாக்களிப்பது என தீர்மானிக்கின்றார்கள். அதனால் தான் அதிமுக/திமுகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் பட்டியிலின சாதியைச் சேர்ந்தவர்களை தனித்தொகுதி தவிர்த்து மற்ற தொகுதிகளில் வேட்பாளராக அறிவிப்பதில்லை, ஏனென்றால் சொந்த கட்சிக்காரனே வாக்களிக்க மாட்டான். இது தான் கள யதார்த்தம்.

சாதியை அடுத்து இங்கு அதிக விழுக்காடு இருப்பது கட்சி சார் வாக்குகள், அதிமுகவிற்கும், திமுகவிற்கும் குறைந்தது 10 விழுக்காடு வாக்குகள் எப்பொழுதும் உண்டு. இந்த இரண்டு கட்சிக்கும் உள்ள தொண்டர்களின் பலமும், ஒவ்வொரு கிராமம் வரை நிலைபெற்றுள்ள கட்சி கட்டமைப்பும் இதை பெற்றுத்தருகின்றன.

அடுத்து வெற்றி பெறும் குதிரையை ஆதரிப்பது என்ற உளவியலின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மக்கள் வாக்களிக்கின்றார்கள். அதாவது எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கின்றதாக கருத்தப்படுகின்றதோ அதனடிப்படையில் வாக்களிப்பது. அதிமுக, திமுக கட்சி வேட்பாளர்கள் இதனடிப்படையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வாக்குகளைப் பெருகின்றார்கள்.  எல்லா இடைத்தேர்தல்களிலும் ஆளும் கட்சி வெற்றி பெறுவதற்கான மிக முக்கிய காரணம் இந்த வெற்றி பெறும் குதிரையை ஆதரிப்பது எனும் உளவியல் தான்.

அடுத்து ஆளும் கட்சி மீதான வெறுப்பில் பெரிய எதிர்கட்சிக்கு வாக்களிப்பது எனும் உளவியல். இந்த வாக்குகளின் எண்ணிக்கை என்பது மக்களை எந்தளவுக்கு ஆளும் கட்சி வாட்டி, வதக்கியுள்ளது என்பதன் அடிப்படையில் இருக்கும். அதிமுக 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகள் பகுதி அளவில் 2016 சட்டமன்றத் தேர்தலில் குறைந்து திமுக அதிக இடங்களை கைப்பற்றியது இந்த புள்ளியின் அடிப்படையில் தான்.  இதைப் போலவே யாராவது ஒரு தலைவர் இறந்து விட்டால் அந்த கட்சிக்கு அனுதாப வாக்குகள் பெருமளவில் விழும்.

12651071_10205810132878854_796306369879226813_n
வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தின் அடிப்படையில் வாக்காளருக்கு விழும் வாக்குகள் என்பது மிகவும் குறைந்த விழுக்காடு தான் வேண்டுமென்றால் ஒரு 2-3% இருக்கலாம். ஏனென்றால் இங்கு கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தவிர்த்து எல்லா கட்சிகளுமே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றன. அப்படியானால் எல்லா கட்சி வேட்பாளருக்கும் குறைந்த பட்சம் டெபாசிட்டை காப்பாற்றி கொள்ளுமளவிற்காவது வாக்கு கிடைக்க வேண்டும், ஆனால் சென்ற சட்டமன்ற தேர்தலில் மூன்றாம், நான்காம் இடம் பெற்றவர்கள் கூட டெபாசிட்டை இழந்தார்கள். பணம் வாங்கி கொண்டு மட்டுமே வாக்களிக்கின்றார்கள் என்ற கருத்து இங்கு ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என சொல்லப்படுபவர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள பொய்யான கருத்து, இது சாதியடிப்படையில் வாக்களிக்கும் மிக முக்கியவற்றை நோக்கி நம்மை கவனம் செலுத்தவிடாமல் இருக்க உருவாக்கப்பட்டது.

அப்படியென்றால் தங்கள் தொகுதிக்கு இவர் நல்லது செய்வார் இந்த‌ வேட்பாளர், சனநாயகத்தை காக்க வேண்டும் என‌ இங்கு யாருமே வாக்களிக்கவில்லையா? என்றால் வாக்களிக்கின்றார்கள் இவர்களின் விழுக்காடும் மிகக்குறைவே. ஜெயலலிதாவை எதிர்த்து சென்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் நின்ற முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான வசந்தி தேவி அவர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 4195. ஜெயலலிதா பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 97218. இத்தனைக்கும் ஜெயலலிதா இந்த தேர்லுக்கு முன் தான் ஊழல் குற்றசாட்டில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்து மத்திய அரசுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக விடுவிக்கப்பட்டார். திமுகவைச் சேர்ந்த சிம்லா முத்துச்சோழன் 57673 வாக்குகள் பெற்றார். யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை(NOTA) என வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 2873.  இந்த கணக்கின்படி பார்த்தால் வெறும் பத்தாயிரம் வாக்குகள் கூட நல்லவருக்கோ, அல்லது சனநாயகத்திற்கோ பதிவாகவில்லை எனத்தானே பொருள்.

அரவகுறிச்சி, தஞ்சாவூரில் சென்ற முறை சட்டமன்றத் தேர்தல் அதிகளவு பணம் கைப்பற்றப்பட்டதால் எனச் சொல்லி இரத்து செய்யப்பட்டு, இன்று இடைத்தேர்தல் நடந்தும் முடிந்து விட்டது.  அதிகளவு பணம் கொடுத்ததாக கூறப்பட்ட அதே அதிமுக/திமுக வேட்பாளர்கள் தான் இடைத்தேர்தலிலும் நின்றார்கள். அதிமுக வேட்பாளர்கள் வென்றார்கள். அன்று யாரும் இது போல சனநாயகம் செத்து விட்டது, நியாயம் செத்துவிட்டது எனக்கூறவில்லையே ஏன் ?

ஆனந்த விகடன் சென்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எப்படி செயல்படுகின்றார்கள் என தொடர் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அந்த கட்டுரைத் தொடரில் எல்லா அமைச்சர்களும் மன்னார்குடி மாபியா என அழைக்கப்படும் சசிகலாவின் குடும்பத்தினால் மட்டுமே அமைச்சரானவர்கள் என வந்ததை நினைவு கூறுகின்றேன். நேற்று வரை திரைமறைவில் ஆட்சி நடத்தியவர்கள் இன்று நேரடியாக ஆட்சி நடத்துகின்றார்கள்.

அதுமட்டுமின்றி சசிகலாவை விமர்சித்து வரும் பதிவுகள் பெரும்பான்மையாக‌ ஒரு வேலைக்காரப் பெண் முதலமைச்சராவதா என்ற வகையிலேயே உள்ளன.  இது கீழ்நிலையில் உள்ளவர்களை மட்டம் தட்டும் கேவலமான ஆண்டை மனப்பான்மையன்றி வேறல்ல.  சசிகலா விமர்சிக்கப்பட வேண்டும், அவர் செய்த ஊழல்களை வைத்தும், முதலமைச்சருக்குரிய தகுதிகள் அவரிடம் என்ன இருக்கின்றது என்பதை வைத்தும் விமர்சிக்கப்பட வேண்டும்.   ஆனால் அதை ஆண்டை மனப்பான்மையிலிருந்தோ, உங்களிடம் உள்ள சாதி மனப்பான்மையிலிருந்தோ அல்ல. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த பொழுதும் சசிகலா குடும்பம் தான் இயக்கியது. ஆனால் அதை யாரும் இந்தளவிற்கு விமர்சிக்கவில்லை. ஒரு வேளை திரைமறைவில் இருந்து இயக்கினால் பரவாயில்லையா?

9-11-11a
தமிழகம் சட்ட மன்றத் தேர்தலில் யாருக்கு பெரும்பான்மை இடங்களை அளித்தது? ஊழலை மட்டுமே செய்து வந்த ஒரு கட்சிக்கு, அதன் தலைமையான ஜெயலலிதாவிற்க்கு.  ஜெயலலிதாவின் ஆட்சியில் இதுவரை எங்காவது சனநாயகம் இருந்திருக்கின்றதா? சட்டசபையில் தான் கொண்டு வரும் தீர்மானங்களின் மீது விவாதமே நடத்தக்கூடாது என எப்பொழும் 110 விதியின் கீழ் தீர்மானம் வாசித்து, சட்டப்பேரவையை ஒரு ஜால்ரா மன்றமாக மாற்றினவர். திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நலப்பணியாளர்களை நடுத்தெருவில் நிறுத்தியவர். தாங்கள் கற்ற கல்விக்கு வேலை கேட்டு போராடிய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் மீது காவல்துறை ஏவி தாக்கிய காருண்யம் மிக்கவர். ஊடகங்களை ஒரு முறை கூட சந்திக்காதவர். சென்னை வெள்ளத்தை உருவாக்கி மக்களை நடுத்தெருவில் நிறுத்தியவர். எல்லா அமைச்சர்களையும் தனது விருப்பத்திற்கேற்றபடி பந்தாடி, கட்சியில் யாரும் சிந்திக்க கூடாது, சுயமரியாதை அற்று காலடியில் விழுந்து கிடக்க வைத்தவர்.

இப்படி சுயமரியாதையும், சுய சிந்தனையும் அற்ற ஒரு கூட்டத்திற்கு பெரும்பான்மையாக வாக்களித்து விட்டு இன்று அவர்கள் சுயமாக சிந்தித்து , எதிர்த்து பேச வேண்டும் என நினைத்தால் எப்படி? நாம் ஒன்றும் மாய உலகத்தில் இல்லை.  ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது இங்கு ஏதோ சனநாயகமும், மக்களாட்சியும் தேனாறாக ஓடியது போலவும், இன்று ஏதோ அது இல்லாதது போலவும் நடிப்பது எதற்காக?

சசிகலா மட்டுமல்ல ஜெயலலிதாவிற்கும் சரி, எம்.ஜி.ஆருக்கும் சரி முதலமைச்சராவதற்கு எந்த ஒரு தகுதியும் இருந்ததல்ல, ஏனென்றால் இவர்கள் யாரும் மக்கள் பிரச்சனையில் தோளோடு தோள் நின்று பதவிக்கி வந்தவர்களல்ல. என்ன எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோர் திரையில் நடித்து மக்களுக்கு அறிமுகமானவர்களாக இருந்தார்கள், சசிகலாவிற்கு அந்த அறிமுகம் இல்லை. எந்தவித கொள்கையும் இல்லாத கட்சி அதிமுக, அதை ஆட்சியில் அமர்த்திவிட்டு இன்று திடீரென குய்யோ, முறையோ என கத்துவதில் எந்த பயனும் இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் எந்த ஒரு பிரச்சனையுமில்லையா? ஹிட்லர், இராஜபக்சே உள்ளிட்டவர்கள் எல்லாம் அந்த தேசத்து மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான். அவ்வளவு ஏன் குஜராத்தில் ஒரு மதவன்முறையைத் தூண்டி 2000த்திற்குமதிகமானோரை கொன்றவரைத் தான் நாம் பிரதமராக்கி இருக்கின்றோம். அடுத்து நடைபெறப்போகும்  இடைத்தேர்தலில் சசிகலா வெற்றி பெற்றுவிட்டால் எந்த ஒரு பிரச்சனையுமில்லையா?

மக்கள் திரள் போராட்டங்கள் - கூடங்குளம் போராட்டம்

மக்கள் திரள் போராட்டங்கள் – கூடங்குளம் போராட்டம்

இதோ மத்திய பா.ஜ.க அரசு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பை கொண்டு வர உள்ளது. எப்படியும் பா.ஜ.க தனக்கு பிடிக்காத சசிகலாவை வெளியேற்ற அவரை குற்றவாளி என தீர்ப்பளிக்கும். அடுத்து பா.ஜ.க சொல்வதை செய்யும்  பன்னீர்செல்வம் போன்ற ஒரு பொம்மையை ஆட்சியில் அமர்த்தும். பன்னீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் என நாமும் சனநாயகம் திரும்பிவிட்டது என திருப்தியாகி விடுவோம். இதே பன்னீரின் ஆட்சியில் தான் அமைதியாக போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரையும் காவல்துறை தாக்கியது, அதே நேரம் காவல்துறை பாதுகாப்போடு காந்தியை கொன்ற கோட்சேவிற்கு ஆதரவாக மக்களை மதத்தை வைத்து பிரித்து வன்முறையை உண்டாக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாங்கள் ஊர்வலம் சென்றார்கள் என்பதையும் நினைவூட்டுகின்றேன்.

முதலில் நாம் சாதி பார்த்து, ஜெயிக்கிற குதிரை பார்த்து, விசுவாசத்தின் பெயரால் நாம் பங்கு கொண்டுள்ள கட்சியைப் பார்த்து வாக்களிப்பதை நிறுத்தி, நமது தொகுதிகளின் தேவை என்ன, அதை அந்த வேட்பாளர் செய்வாரா? அவர் ஊழல் செய்யாதவரா? என பார்த்து வாக்களிக்க வேண்டும். யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை(NOTA)  என நாம் அளிக்கும் வாக்கு,  யாரோ ஒருவரை வெற்றி பெறத்தான் செய்து கொண்டிருக்கின்றது.  அதனால் அது சரியான தீர்வல்ல.

அதுமட்டுமின்றி சனநாயகம் என்பதிலும், மக்களாட்சி என்பதிலும் மக்களுடைய பணி என்பது தேர்தலில் வாக்களிப்பதோடு முடிவடைதல்ல. அப்படி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு சரியாக பணி செய்கின்றது என கண்காணித்து, அந்த அரசு செய்யும் தவறுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதால் மட்டுமே நடக்கும். எல்லாவற்றிற்கும் அமெரிக்காவைப் பார் என சொல்லும் மேட்டுக்குடி, நடுத்தர வர்க்க‌ மக்களே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரானவர் ட்ரம்ப் , ஆனால் அவர் அதிபர் பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை அவரை எதிர்த்து அவர் செய்யும் சனநாயக விரோத செயல்களை எதிர்த்து தொடர்ந்து அமெரிக்க மக்கள் போராடி வருகின்றார்கள். நீதிமன்றத்தில் அவர் கொண்டு வரும் பிரிவினைவாத சட்டங்களை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து போராடுகின்றார்கள்.

அப்படி நாம் ஆளும் அரசை எதிர்த்து நடத்தும் போராட்டம், பல்வேறு சவால்களை நம் முன்னால் கொண்டு வரும், அதையும் கடந்து மன உறுதியோடு தொடர்ந்து போராடுவதன் மூலம் தான் மக்களாட்சியை வென்றெடுக்க முடியும்.

நற்றமிழன்.ப – இளந்தமிழகம் இயக்கம்

கேலி சித்திரம் – நன்றி – கார்ட்டூனிஸ்ட் பாலா

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*