Home / அரசியல் / டிரம்ப்பின் அறிவிப்பு தோல்வியடைந்தது எப்படி ?

டிரம்ப்பின் அறிவிப்பு தோல்வியடைந்தது எப்படி ?

டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி, 45 ஆவது அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.  தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து, இன்று வரை தொடர்ந்து டிரம்பை எதிர்த்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையில் பதவியேற்ற முதல் அமெரிக்க அதிபர் டிரம்பாகத் தான் இருப்பார் என்று நம்புகிறேன்.

எதிர்பார்த்தது போலவே, பதவியேற்ற ஏழாம் நாள் முதல் குண்டை வீசினார்.  ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தோருக்கு 90 நாட்கள் அமெரிக்காவினுள் நுழைய தடை ( விசா நீக்கம் ) , ஏதிலிகளுக்கு 120 நாட்கள் தடை,  சிரியாவிலிருந்து வருபவர்களுக்கு மறுதேதி குறிப்பிடப்படாமல் தடை என சிறப்பாணை பிறப்பித்தார் டிரம்ப். அமெரிக்காவிலும் ஏனைய உலக நாடுகளிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு, கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறது.

 trump1(1)
 அமெரிக்க விமான நிலையங்களில் வந்திறங்கிய, தடை செய்யப் பட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள்,  அமெரிக்க நகரங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், விமான நிலையங்களிலேயே தங்கி போராடத் துவங்கினர்.  அமெரிக்கா முழுவதும் பதட்டமும் களேபரமுமாக இருந்தது. சிரியா, இரான், இராக், லிபியா, ஏமன், சூடான், சோமாலியா ஆகிய ஏழு இஸ்லாமிய நாடுகள் டிரம்பின் தடை உத்தரவு பட்டியலில் இருக்கின்றன.

 

இந்த ஏழு நாடுகள் தடை ஏன் ?  டிரம்ப் தரப்பிலிருந்து சொல்லப்படும் காரணங்கள் ?

* வரலாறு நெடுகிலும் இரான் தொடர்ந்து அமெரிக்காவின் பரம வைரி என்கிற ஒரு காரணம் போதும்.   சிரியாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடக்கும் உள்நாட்டுப் போர்,  மத்திய இராக்கிலிருந்து, வடக்கு சிரியா வரை ISIS அமைப்பால் கைப்பற்றப்பட்டிருக்கும்  எல்லைகள், கடந்த ஏப்ரல் 2016 வரை கொல்லப்பட்ட நான்கு லட்சம் மக்கள்,  கடும் துயரங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியேறும் லட்சக்கணக்கான ஏதிலிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக சிரியா இருக்கிறது.

* இராக்கை முழுவதுமாக நாசம் செய்த அமெரிக்க படையெடுப்பு,  இராக்கில் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் நிலையற்றத் தன்மையும், பயங்கரவாத தலையெடுப்பும் இராக்கை இப்பட்டியலில் சேர்த்திருக்கின்றன.
*லிபியாவிலும் ISIS ஆதிக்கம், ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போர், அதிலும் குறிப்பாக அமெரிக்கா ஏமனில், சவுதி அரசின் வான்படைகளைக் கொண்டு நடத்தும் 19 மாத நிழல் யுத்தம், அல்கொய்தாவின் இருப்பு ஆகிய காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
*சூடானில் வடக்குக்கும் தெற்குக்குமான உள்நாட்டு யுத்தம், சோமாலியாவில் ஆதிக்கம் செலுத்தும் அல் ஷதாப் இஸ்லாமிய அடிப்படை வாதக் குழுக்கள்.
மேற்குறிப்பிட்ட, ஏழு நாடுகளில் 5 நாடுகள் அமெரிக்காவால் நேரடியாக‌ சீர் குலைக்கப்பட்டவை. முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்,  அமைதிக்கான நோபல் பரிசு வாங்கிய அமைதிப்புறா ஒபாமா, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி ஆகிய மூவரின் பங்களிப்பும் இந்த சீர்குலைவுகளுக்கும்,  ரத்தம் தோய்ந்த இந்நாடுகளின் வரலாறுகளுக்கும் முழு காரணம் என்பதையும் கருத்தில் கொள்க.

டிரம்பின் அறிவிப்புக்குத் தடை:

டிரம்பின் இந்த அறிவிப்புக்கு, அமெரிக்க (Federal court) உயர்நீதிமன்றம் தடை விதித்தது.. “இந்த ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களால் அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், நிச்சயமாக இந்த அறிவிப்பு அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது” என்று அமெரிக்க ஃபெடரல் நீதிபதி,  ஜேம்ஸ் ரோபார்ட் சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

travel2

ஜனவரி 27 ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்ட போது,  செப்டம்பர் 11  மற்றும் பெண்டகன் மீதான தாக்குதல்களையும் நினைவு கூர்ந்தார்.  இந்த இரண்டு தாக்குதல்களிலும் ஈடுபட்டவர்கள்,  தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களிலிருந்து ஒருவர் கூட கிடையாது என்கிற‌ செய்தி, ஒரு நகை முரண்.

செப்டம்பர் 11 தாக்குதல்களில் செயல்பட்டவர்கள் 19 பேர். இதில் தலைமைப் பொறுப்பேற்ற ஹட்டா என்பவர் எகிப்து நாட்டைச் சேந்தவர். இருவர் அமீரகத்தைச் சேந்த இளைஞர்கள். ஒருவர் லெபனான் நாட்டைச் சேந்தவர். மீதமுள்ள 15 இளைஞர்கள் சவுதி அரேபியா நாட்டைச் சேந்தவர்கள். இவர்களுக்கு பணமுதவி கிடைத்ததும் சவுதி நாட்டிலிருந்து தான். டிரம்பால் தடை செய்யப்பட்ட இந்த ஏழு நாடுகளில், சவுதியோ எகிப்தோ இல்லை. காரணம் டிரம்ப் சவுதி நாட்டில், எட்டு நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.  எகிப்து சர்வாதிகாரியான அப்டெல் ஃபட்டல் அல் சிசியோடு பொருளாதார உறவுகளும் இருக்கின்றன. கத்தார், குவைத், துருக்கி போன்ற நாடுகளில் அவர் ஆடம்பர விடுதிகள் கட்டும் திட்டத்தில் இருக்கிறார். ஆகவே அமெரிக்காவின் பாதுகாப்பு என்பது டிரம்பின் பொருளாதார தேடல்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

அமெரிக்க ஃபெடரல் நீதிபதியின் இந்தத் தடையை எதிர்த்து, அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்பின் தரப்பிலிருந்து மேல் முறையீடு செய்யப்பட்டது. அங்கேயும் டிரம்பின் மூக்கு உடைபட்டது தான் மிச்சம். அமெரிக்க மேல் நீதிமன்றம் , கீழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற இரண்டு வாரங்களில், அமெரிக்க நீதிமன்றங்கள் முன்னும் அமெரிக்க மக்கள் முன்னும் ஒரு பலத்த சட்டத் தோல்வியை சந்தித்திருக்கிறார் டிரம்ப்.  அமெரிக்காவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு ஏதேனும் குந்தகம் ஏற்பட்டால் அமெரிக்க நீதிமன்றங்களே பொறுப்பு என லேசாக அவர் முனகினாலும், அடுத்த வாரம் வேறு ஒரு புதிய அறிவிப்போடு வருகிறேன் என தற்போது பதுங்கி இருக்கவே செய்கிறார்.  நீதிமன்றங்களின் இந்த உத்தரவை அடுத்து,  விமான நிலையங்களில்  போராடிக் கொண்டிருந்த லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், ஏதிலிகள்  அமெரிக்காவுக்குள் நுழைந்தார்கள்.  அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க அவர்களை வரவேற்றார்கள்.

063_632966172-635x357

 

டிரம்பின் அறிவிப்புக்கான எதிர்வினைகள்:

 

  • டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு முதல் உடனடி எதிர்வினையாக, இரான் இனிமேல் இரானிய நாட்டுக்குள் அமெரிக்கர்கள் நுழைய முடியாது எனவும்,  அடுத்த 48 மணி நேரத்துக்குள் அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் எனவும் அறிவித்து , டிரம்புக்கு பேரிடியை இறக்கியது.
  • கனடிய பிரதமர், ஜஸ்டின் டிருடீயூ ,  உங்கள் நம்பிக்கைகள் பற்றி எனக்கு கவலை இல்லை. ஏதிலிகளான உங்களை கனடா எப்போதும் வரவேற்கும் என தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். ஸ்காட்லாந்தும் ஏதிலிகளை வரவேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
  • இங்கிலாந்து நாட்டுக்குள் டிரம்ப் நுழைய தடை விதிக்க வேண்டுமென இங்கிலாந்து பாராளுமன்றதுக்கு மனு அளிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், டிரம்புக்கு எதிராக கடும் விவாதங்கள் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.
  • ஃபோர்ட், நைக், கோல்ட்மன் சாக்ஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் அனைத்தும் டிரம்பின் இந்த தடையை வரவேற்கவில்லை.  ஸ்டார் பக்ஸ் எனும் காபி நிறுவனம் , பத்தாயிரம் ஏதிலிகளை புதிதாக பதவி அமர்த்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
  • அமெரிக்காவிலும், வெளிநாடுகளில் ட்ரம்பின் இந்த அறிவிப்பை எதிர்த்து கடுமையான போராட்டங்களை மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
  • அமெரிக்க கிறித்தவர்கள்,  ஆயிரக்கணக்கானோர் மஸ்ஜிதுகளில் ஒருநாள் கூடி குரான் பற்றிய பிரசங்கத்தில் பங்கேற்றனர்.

1980 ரூபர்ட் முர்டோச் தலைமையிலான உலக ஊடகங்களின் துணை கொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக மிகப்பெரிய இனவெறிப் பரப்புரையை ( Racial Profiling) அமெரிக்கா கட்டவிழ்க்கத் தொடங்கியது.  இன்று அந்த பரப்புரைகளை சுழியமாக்கும் நடவடிக்கைகளை அந்த முகாமைச் சேர்ந்த டிரம்பே ஏற்படுத்தி வருகிறார். மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் போதைப் பொருள் கடத்துபவர்கள். பெண்களை பாலியல் வல்லாங்கு செய்பவர்கள் என்று அவர் கத்தும் போதும் அதை யாரும் நம்பத் தயாராக இல்லை. அதே வாயில்,  முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என அவர் கூறும் போது,  அக்கருத்தும் மெக்சிகோ கருத்தோடு சேர்ந்து நிராகரிக்கப்படுகிறது.

ஒபாமா பொறுப்பில் இருந்த எட்டு ஆண்டுகளில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், ஒரு தருணத்தில் கூட ஒபாமாவை விமர்சித்து பேசியது கிடையாது. அதன் பொருள் ஒபாமா தவறே செய்யாதவர் என்பது அல்ல. இருவருக்கும் ஒரே நோக்கங்கள் தான் இருந்தன. இருவரின் கைகளிலும் இரத்தக்கறை படிந்திருக்கிறது என்பது தான் அதன் மறை பொருள். உலகெங்கும் ஏதிலிகளை உருவாக்கக் காரணமான கொடூர போர்களை நடத்தியதில் ஒபாமா, புஷ் இருவருக்கும் சம பங்கு இருக்கிறது. இந்த பாசிச சர்வாதிகாரத்தின் ஒரு பயங்கரவாத நீட்சியாகத் தான் டிரம்பையும் பார்க்க முடிகிறது. சுருக்கமாகச் சொல்லப் போனால்,  அத்வானிக்கும் மோடிக்கும் இடையிலான வேறுபாடு தான் அது.  மிதமான பயங்கரவாதி. தீவிரமான பயங்கரவாதி இரண்டு சொல்லாடலுக்கும் என்ன வேறுபாடு ?

டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியான மறுகணம், சனநாயகம் & பன்முகத்தன்மையிலும் சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டிருக்கும் நாடுகளும் தலைவர்களும் பதறியடித்துக் கொண்டு தம் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். உலகிலேயே அதிகமான இஸ்லாமிய மக்களைப் பெற்றிருக்கும் ஒரு ஜனநாயக நாடான இந்தியாவின் தரப்பிலிருந்து, ஒரு சிறு எதிர்ப்பு கூட இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இந்தியாவின் இந்த கள்ள மெளனம்,  வளர்ந்து வரும் உலக  பாசிசத்துக்கு தம் பங்களிப்பைச் செலுத்துகிறது என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இஸ்லாமியர்களை என் நாட்டுக்குள் நுழைய விட மாட்டேன் என்கிற ஒரு கருத்தும்,  இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்களே என்கிற கருத்தும் வேறு வேறல்ல. அமெரிக்காவின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் இந்த வலது சாரி பாசிச சர்வாதிகாரியின் அறிவிப்புக்கான தடை, உலகெங்கும் பன்முகத்தன்மையையும் மனித நேயத்தையும் போற்றும் ஜனநாயக சக்திகளுக்கு ஒரு தற்காலிக வெற்றியே. ஆனால் நாம் பயணிக்க வேண்டிய பாதை நெடியது.

அ.மு.செய்யது.
இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*