Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / வங்க கடலும் – வாளி அரசியலும் !

வங்க கடலும் – வாளி அரசியலும் !

கடந்த சனவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி அளவில் திரவ பெட்ரோலிய வாயு சரக்கு கப்பல் M D B W  Mapil, எண்ணெய் டேங்கர் கப்பல் M D Dawan சரக்கு கப்பல் எண்ணூர் துறைமுகம் அருகே மோதி கொண்டதாக செய்திகள் வர தொடங்கின. இந்த விபத்தில்   M D Dawan எண்ணெய் டேங்கர் கப்பலில் இருந்து கனரக கச்சா எண்ணெய் (HFO / FFO) வெளியேறி கடலில் கலக்க ஆரம்பித்தது.

இந்த விபத்து பற்றிய தகவலை முதலில் தெரிவித்த எண்ணூர் துறைமுக இயக்குனர் பாஸ்கராச்சார் இந்த விபத்தில் கடலில் எண்ணெய் கலந்ததாகவோ, விபத்தில் உயிர் இழப்போ, காயங்களோ ஏதும் ஏற்பட வில்லை இரண்டு கப்பல்களும் நங்ககூரம் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளதாகவும் விபத்து குறித்த பாதிப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.  பின்னர். பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொழுது சுமார் ஒரு டன்(1000 கிலோ) அளவிற்கு இந்த கனரக கச்சா எண்ணெய் கடலில் கலந்ததாகவும் இந்த விபத்து இரு கப்பல்களுக்கு இடையே நடந்த தகவல் பரிமாற்ற இடைவெளி என்று தெரிவித்து இருந்தார். மேலும் இந்திய கடற்படை கடலில் கலந்த கனரக கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் ஞாயிறு காலை முதல் ஈடுபடவுள்ளதாகவும் செய்திகள் தரப்பட்டன. அதை போன்றே கடலோர காவல் படையும் கடலில் கலந்த கச்சா எண்ணையை அகற்றும் பணியை மாசு கட்டுப்பாடு குழு (கிழக்கு), மாவட்ட ஆட்சியர், மாசுவாரியம், எண்ணூர் துறைமுகம், உள்ளூர் மீன்பிடித் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்க பட்டது.

இந்திய கடலோர படையின் கணிப்பின் படி கச்சா எண்ணெய் படலம் என்பது 30X50 மீட்டர் என்றும் அகற்றும் பணி அடுத்த நாளும் தொடரும் என்று தெரிவிக்கபட்டது.

chennai-oil-spills_3800c9e4-eed8-11e6-9744-939f10ba6c21

அடிப்படையில் நாம் இங்கு சிலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும், பேருந்து போல் ஓட்டுநர் ஒரு பேருந்து நிலையத்தில் இருந்து மற்றொரு பேருந்து நிலையத்திற்கு கொண்டு சென்று நிறுத்துவது போல் அல்ல கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்தபடுவது,  பயணிகள் கப்பலோ, சரக்கு கப்பலோ எதுவாக இருப்பினும் ஒரு துறைமுக எல்லைக்குள் உள்ளே வரும் பொழுதும் / வெளியே செல்லும் பொழுதும் அந்த துறைமுகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் அதே போல் துறைமுகத்திற்குள் வரும் பொழுதும் / செல்லும் பொழுதும் துறைமுகத்தில் இருந்து ஒரு கேப்டன் சிறிய படகிலோ அல்லது ஒரு இழுவை கப்பல் மூலமோ சென்று அந்த கப்பலை துறைமுகத்திற்கு உள்ளே கொண்டு வருவார்கள்/ வெளியே கொண்டு செல்வார்கள்.  இதுவே அனைத்து துறைமுகங்களில் இருக்கும் நடைமுறை. ஏனென்றால் உள்ளூரில் இருக்கும் கேப்டனிற்கே  துறைமுகத்தின் ஆழம், நீரோட்டம் தெரியும், அதே நேரத்தில் துறைமுகத்தில் நிறுத்தினால் அதற்கு நாள் கணக்கில் வாடகை செலுத்தவேண்டும், துறை முகத்திற்கு வெளியே நிறுத்தினால் வாடகைத் தொகை கணிசமாக‌ குறையும்.

ஆகவே இந்த இரு கப்பலின் தகவல்கள் அனைத்தும் எண்ணூர் அல்லது சென்னை துறைமுகத்தில் பதியப்பட்டு இருக்கும், முதலில் கச்சா எண்ணெய் கலப்பு ஏதும் கடலில் இல்லை என்றும், அதன் பின் கடலோர காவல்படை ஒரு சிறு பகுதியை குறிப்பிட்டதும், அதன் பின் வரும் தகவல்கள் நாற்பது முதல் அறுபது டன்(60,000கிலோ) எண்ணெய் கலந்து இருப்பதாகவும் எண்ணெய் படலம் எண்ணூர் முதல் புதுச்சேரி வரை பரவி உள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

கடந்த சில நாட்களாக கச்சா எண்ணைய் படலத்தை அகற்றும் பணியில் அரசு ஊழியர்களைத் தாண்டி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ இளைஞர்கள் மட்டுமே பணியாற்றி வந்தார்கள். இதில் கவலைக்கு உரிய விடயமாக பார்க்கபடுவது இந்தப் பணியை தொழில்நுட்ப ரீதியாகவோ, பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு நடைபெறவில்லை என்பதினை பெருமான்மை ஊடகங்கள் சொல்லவில்லை, இப்படி ஒரு பேரிடர் நிகழ்ந்திருக்கும் போது மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு ஏன் வரவில்லை? எண்ணூர் துறைமுகத்திலேயே இருக்கும் “எண்ணெய்க் கசிவு கட்டுப்பாட்டு படை”(Oil Spill Response Team) இதுவரை ஏன் வரவில்லை? என எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அரசு கொடுக்கும் செய்திகளை செவ்வனே ஒளிபரப்பி வருகின்றது. இது தான் ஊடக அறமா?

chennai-oil-spills_00f2bdd8-eed6-11e6-90af-e8d3e91f500c

கனரக எரிபொருள் எண்ணெய் (HFO-Residual Fuel Oil) / உலை எரிபொருள் எண்ணெயால் (FFO- Fuel Furnace Oil) ஏற்படும் உடல் நல பாதிப்புகள் :

கடுமையான வாய்வழி நச்சுத்தன்மை, கடுமையான உட்தோலுக்குரிய நச்சுத்தன்மை, தோல் எரிச்சல், கண் எரிச்சல் உண்டாகும் என்பதற்கான பல  ஆதாரங்கள் இணையத்தில் கிடைக்கப்பெறுகின்றது.  மேலதிக தகவலுக்கு இந்த‌ பாதிப்புகளைப் பற்றி கச்சா எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஹரீஷ் மாறன் எழுதிய “எண்ணூர் எண்ணெய் கசிவை தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள‌ ஆபத்துகள் ” கட்டுரையை படிக்கவும்.

மீனவர்கள் பாதிப்பு:

அண்மையில் மாணவர் போரட்டத்தின் இறுதியில் அரசின் ஒடுக்குமுறை காவல்துறை முலம் ஏவப்பட்டது, இந்த வன்முறையினால் சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உடல் அளவில், மனதளவில், பொருளாதார ரீதியாகவும் என பலவாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூர் என மூன்று மாவட்ட‌ மீனவர்களையும் தாண்டி சென்று கொண்டு இருக்கின்றது இந்த கச்சா எண்ணைய் படலம். ஒரு பக்கம் ஆழ்கடலில் பிடிக்கப்படும் மீனவர்களுக்கு பாதிப்புகள் வராது என மீன் வள துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டாலும், செங்கல்பட்டு மீன் சந்தையில் கூட மீன் வாங்க மக்கள் அஞ்சுகின்றனர்.  இதனால் மூன்று மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றுமுழுதாக நொறுக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள் மட்டுமல்ல மீன்பிடித் தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வும் கடுமையான  பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளது.

தமிழக அரசு கடந்த 2001ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் 45 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி பழவேற்காட்டில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரையிலான 1076 மைல் தூர கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29 வரையிலான 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம். தற்பொழுது ஏற்பட்டு உள்ள கச்சா எண்ணைய் படலத்தை சீர் செய்ய ஓரிரு மாதங்கள் கூட‌ ஆகும், ஏனென்றால் கச்சா எண்ணெய் 52கிலோமீட்டருக்கும் மேல் பரவியுள்ளது, அதை அகற்றும் பணிகளோ 5-10 கிலோமீட்டர் பகுதிகளில் அதுவும் ஒரு சில இடங்களில் மட்டுமே நடைபெற்று வருகின்றது. ஒரு வேளை இந்த கச்சா எண்ணெய் படலத்தை இந்த மாதம்(பிப்ரவரி) இறுதிக்குள் முடிந்தாலும் மீனவர்களால் உடனே தொழில் தொடங்கமுடியாது. ஏனென்றால் மேற்பரப்பில் தெரியும் கச்சா எண்ணெய் படலத்தை மட்டுமே அகற்றிவருகின்றார்கள். கடலின் உள்ளே ஆழத்தில் கலந்து விட்ட கச்சா எண்ணெயின் பகுதிகளை அகற்றவில்லை.

chennai-oil-spills_2ab8eec2-eeda-11e6-9744-939f10ba6c21

இந்த பாதிப்புகளால் முன்பு போல் மீன்கள் கிடைப்பது கடினம், அப்படியே கிடைத்தாலும் மக்களுக்கு இந்த எண்ணெய் கசிவினால் மீன்கள் மீது உருவாகி இருக்கும் அச்சம் நீங்குவதற்கு சில மாதங்களாகும். , அதனால் மீன் கிடைத்தாலும் வியாபரம் நடப்பதென்பது மிகப்பெரிய‌ கேள்வி குறி ! ஆகவே இந்த பேரிடரினால் சனவரி இறுதியிலிருந்து மே இறுதி வரையிலான காலம் மீனவர்களுக்கு இருண்ட காலமாகி உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின்  பொறுப்பற்றதனம் :

ஒரு மாபெரும் கச்சா எண்ணைய் கசிவு பேரிடர் நடந்த பின் அதை கணிக்கவும் தெரியாமல், எந்தத் தொழில்நுட்ப யுத்தியையும் கையாளாமல் ஒரே ஒரு தூண்டில் வளைவில் சேரும் கச்சா எண்ணெயை வாளியில் அள்ளுவதும், டிராமில் கொண்டு உற்றுவதும் என கச்சா எண்ணைய் கசிவு அப்புறபடுத்தும் காட்சிகளை அரங்கேற்றி வருகின்றது, இதன் பாதிப்புகள் உணராமல் உரிய‌ பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி மீனவர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், அரசு ஊழியர்களுடன் பணியில் இடுபட்டு உள்ளார்கள், அப்படி அள்ளப்படும் கழிவுகள் எங்கு எடுத்து செல்லபடுகின்றது என்ற சரியான தகவல்கள் எதுவம் இதுவரை தெரிவிக்கப்பட வில்லை.

அடிப்படையில் இதுபோன்ற விபத்துகளை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு, எண்ணூர் துறைமுகத்தின்
“எண்ணெய் கசிவு கட்டுப்பாட்டு படை” போன்ற அரசு நிறுவனங்களும், மத்திய எண்ணெய் நிறுவனங்களின் குழுவும் தான் கையாள வேண்டும் ஆனால் மத்திய, மாநில அரசுகள் அதைப்பற்றி கவலைகள் ஏதும் இல்லாமல் சுற்றுலாவிற்கு சென்று வருவது போல் சென்று அந்த இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

மருத்துவ முகாம் நடத்துகின்றோம் என ஆளும் அதிமுக கூறி உள்ளது, மிஸ்டு கால் முலம் தமிழகத்தில் பல இலட்சம் உறுப்பினர்களை சேர்த்த பாரதிய சனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சரோ தங்களிடம் இந்த கச்சா எண்ணைய் படலத்தை அகற்றும் நவீன கருவிகள்  உள்ளதாகவும், அவைகளை நடுக்கடலில் மட்டுமே உபயோகிக்க முடியும் இந்த விபத்து கரையில் நடத்து உள்ளத்தால் தங்களால் எதுவும் செய்ய முடியாது. மனிதர்கள் மட்டுமே இந்த கசிவு எண்ணை படலத்தை நீக்க முடியும் என்று செய்தியாளர்களிடம் கூறுகின்றார் அதுவும் ஆறு நாட்கள் கழித்து.

Oil spill in Chennai

ஒரு கச்சா எண்ணெய் கசிவை கூட சரி செய்ய இயலாத நிலையில் தான் மத்திய, மாநில அரசுகள் உள்ளன என்பதே கள யதார்த்தம்.  நாளை கூடங்குளம் அணு உலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் இந்த அரசுகளின் பணி இப்படி தான் இருக்கும். மடிந்து மண்ணாகிப் போவது மக்களாகிய நாம் தானே. எப்படி போபாலில் பேரழிவை ஏற்படுத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆண்டர்சனை பத்திரமாக அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்களோ, அப்படி தான் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் அங்குள்ள அறிவியலாளர்களை, மேலாளர்களை, நிர்வாகிகளை உடனடியாக உலங்கு வானூர்தி (Helicopter) மூலம் பத்திரமாக மீட்டு மக்களை எல்லோரையும் கொன்று விடுவார்கள் என்பது தான் கடந்த கால, நிகழ் கால செயற்பாடுகள் நமக்கு உணர்த்தும் பாடம். கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளின் உண்மை நிலையை நாம் அறிய வேண்டும், அங்கு ஒரு விபத்து ஏற்பட்டால் மக்களை எப்படி காப்பது என்ற பேரிடர் மேலாண்மை பயிற்சி மக்களுக்கு தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும், இனிமேல் தமிழகத்தில் ஒரு அணு உலை அமைக்கப்படக்கூடாது என‌ நாம் போராட வேண்டும். ஏனென்றால் போராடாமல் நமக்கு எதுவும் கிடைக்காது.

hqdefault

சுற்றுசூழல் சீர்கேடு :

இந்த கச்சா எண்ணைய் படலத்தின் முலமாக கடல் வாழ் உயிரினங்கள் கடும் அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றது உள்ளன குறிப்பாக இந்த காலங்களில் இனபெருக்கம் செய்ய கடற்கரையை நோக்கி வரும் பங்குனி ஆமைகள், மீன்கள்,  நண்டுகள் பல இடங்களில் உயிர் இழந்து கரை ஒதுங்கி உள்ளது. இதுமட்டுமின்றி ஆழ்கடலில் உள்ள நுண்ணியிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது, உணவுச் சங்கிலி மூலம் பெரும்பான்மையான‌ கடல் வாழ் உயிரினங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலகில் பல இடங்களில் இது போன்ற பேரிடர்கள் நடைபெற்று உள்ளது, அவ்வாறு நடத்த பொழுது பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்ன ? அந்த விபத்துகள் முலம் நடந்த சுற்றுசூழல் சீர்கேடுகள் என்ன என்பதினை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றது ஆகவே வரலாற்றில் இருந்து பாடங்களை கற்று மீண்டு எழுவோம்.

பட்டுராசன் – இளந்தமிழகம் இயக்கம்

—-

இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பாக பின்வரும் கோரிக்கைகளை அரசுக்கு வைக்கின்றோம்.

1) அரசு முதலில் நடந்த விபத்து பற்றி வெளிப்படையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

2) தமிழக அரசு மீனவர்களுக்கு உரிய நிவாரணத்தை இந்த(பிப்ரவரி) மாதத்திலிருந்து மே மாத இறுதி வரை கொடுக்க வேண்டும்.

3) கச்சா எண்ணெயை உயிரி தொழில்நுட்பம் மூலம் முழுவதுவாக நீக்க வேண்டும்.

4) இந்தப் பேரிடரினால் ஏற்பட்டுள்ள  சூழல் பாதிப்பு / பொருளாதார பாதிப்பு மொத்தத்தையும் இதற்கு காரணமான கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும்.

5) இந்தப் பேரிடருக்கு காரணமான கப்பல் நிறுவனமும், இந்த பேரிடர் தொடர்பான தவறான தகவல்கள் தந்து உண்மை நிலையை சொல்லாத துறைமுக அதிகாரிகள் உட்பட இந்த பேரிடருக்கு காரணமான எல்லோரும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

—- இளந்தமிழகம் ஒருங்கிணைப்பு குழு.

புகைப்படங்கள் நன்றி – Hindustan Times

About இராசன் காந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*