Home / அரசியல் / மீத்தேன் 2.0 = ஹைட்ரோகார்பன் திட்டம் – நெடுவாசல் போராட்டம்

மீத்தேன் 2.0 = ஹைட்ரோகார்பன் திட்டம் – நெடுவாசல் போராட்டம்

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்றார் திருவள்ளுவர். ஆனால், உழவுக்கு நிந்தனை செய்து தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்கிறார்கள் நம்மை ஆளும் திருவாளர்கள். தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதிகளை விழுங்க வந்த மீத்தேன் திட்டத்தை விரட்டியடித்து நிமிர்வதற்குள் அடுத்த பேரழிவுத் திட்டத்தை நம்முன் நீட்டியிருக்கிறது இந்திய அரசு. அதுதான் ஹைட்ரோகார்பன் (HYDROCARBON) திட்டம்.

ஹைட்ரோகார்பன் என்றால் என்ன?

ஹைட்ரஜன் (HYDROGEN) வாயூவோடு கார்பன் (CARBON) எனப்படும் கரி சேர்ந்தால் உருவாகும் பொருட்கள் ஹைட்ரோகார்பன் (HYDROCARBON) எனப்படும். இப்புவியில் அங்கிங்கெனாதபடி எங்கும் எதிலும் ஹைட்ரோகார்பன் மூலப்பொருட்கள் நிறைந்துள்ளன.

நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட்கள் இருக்கின்றன. (CARBOHYDRATE – CARBON+HYDROGEN). நம் உடலுக்கு ஆற்றல் கொடுப்பவை இவைதான். அதேபோல், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களுக்கு ஆற்றல் கொடுப்பவை ஹைட்ரோகார்பன்கள்.

பயன்பாடுகள் :

நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் அனைத்தும் ஹைட்ரோகார்பன்களே.

மீத்தேனுக்கும் ஹைட்ரோகார்பனுக்கும் என்ன தொடர்பு?

CBM_600

நீரியல் விரிசல் முறையை விளக்கும் படம்

ஒரு கார்பன் அணுவோடு நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் சேர்ந்தால் உருவாகும் பொருள் தான் மீத்தேன் (CH4). எனவே, மீத்தேனை ஹைட்ரோகார்பன் என்னும் பொதுப் பெயரிலும் அழைக்கலாம். மீத்தேன் திட்டத்தை ஹைட்ரோகார்பன் திட்டம் என்றும் அழைக்கலாம்.

ஹைட்ரோகார்பன் திட்டம் :

பிப்.15–ம் தேதியன்று பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 44 எண்ணெய் வளப் பகுதிகளிலிருந்து ஹைட்ரோகார்பன்(இயற்கை எரிவாயு) எடுக்க இந்த ஒப்பந்தம் துணை செய்யும்.

இந்த ஒப்பந்தத்திற்கு மொத்தம் 47 நிறுவனங்கள் விண்ணப்பிருந்ததாகவும், அதில் 5 வெளிநாட்டு நிறுவனங்கள் என்றும் அரசுத் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

40 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய்யும், 22 பில்லியன் க்யூபிக் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதிகளிலிருந்து எடுக்கப்படும் என மோடி அரசு நம்பிக்கை(!) தெரிவித்துள்ளது.

அனுமதியளிக்கப்பட்டுள்ள 44 எண்ணெய் வளமிக்கப் பகுதிகளில் தமிழகத்தின் நெடுவாசலும் (புதுக்கோட்டை மாவட்டம்), புதுச்சேரியின் காரைக்காலும் அடங்கும். நெடுவாசலில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க ஜெம் லேபரேட்ட்டரீஸ் என்னும் தனியார் நிறுவனத்திற்கும், காரைக்காலுக்கு பாரத் பெட்ரோரிசோர்ஸ் லிமிடெட் என்னும் அரசு நிறுவனத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டாவை விழுங்கத் துடிக்கும் மீத்தேன் / ஹைட்ரோ கார்பன் பூதம்

காவிரி டெல்டாவை விழுங்கத் துடிக்கும் மீத்தேன் / ஹைட்ரோ கார்பன் பூதம்

கார்ப்பரேட்களுக்கு வரப் பிரசாதம்:

இந்தியாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளமிக்கப் பகுதிகளை மத்திய அரசு நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி. (ONGC- Oil & Natural Gas Corporation) மற்றும் ஆயில் (O.I.L.- Oil India Limited) கடந்த பல ஆண்டுகள் ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்து ‘கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளப் பகுதிகள்’ (Dsicoverd Oil fileds) என வரையறுத்துள்ளன. இதற்காக பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் வளப் பகுதிகளிலிருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க இனி தனியார் நிறுவனங்களும் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.

எனவே, எண்ணெய் வளப் பகுதிகளை ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் பெரும் பொருட்செலவு தனியார் நிறுவனங்களுக்கு தவிர்க்கப்படுகிறது. தோண்டியெடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் வளத்தை வணிக‌ ரீதியில் பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் அரசுக்கு ஒரு பங்கை செலுத்த வேண்டும் என்றும் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு வரப் பிரசாதமாகும்.

பாலைவனமாகும் காவிரிப் பாசனப் பகுதிகள்:

மீத்தேன் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் நீரியல் விரிசல் முறையால் காவிரிப் பாசனப் பகுதிகள் பாலைவனமாகும் அபாயத்தை நாம் அறிந்திருப்போம். ஒரு மீத்தேன் கிணற்றுக்கு ஆண்டுக்கு 400 லாரி மணலும், 400 டேங்கர் நீரும் தேவைப்படும். அதில் செலுத்தப்படும் இரசாயன கழிவுகள் நிலத்தை நஞ்சாக்கும். நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விவசாயம் மொத்தமாக அழியும். மனிதன் வாழத் தகுதியற்ற இடமாக காவிரி பாசனப் பகுதிகள் மாறிவிடும்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கும் இந்த நீரியல் விரிசல் முறை பயன்படுத்தப்படுமா? என்பதை இந்திய அரசு இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால், அதைப் பயன்படுத்தும் வாய்ப்புகளே அதிகம் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழகமும், தொடர்கதையாகிவிட்ட விவசாயிகள் தற்கொலையும் மீள வழியில்லாத பேரழிவுத் திட்டமாக இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் அச்சுறுத்துகிறது.

நெற்களஞ்சியம் தான் வேண்டுமா?

வெளிநாடுகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்கள் மக்கள்தொகை குறைவான பகுதிகளான பாலைவனம், கடல்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் தான் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், தமிழகத்தின் காவிரிப் பாசனப் பகுதிகள் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளாகும். ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு கிராமம் என்ற அளவில் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிகளுமாகும். தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களுக்கும் உணவு கொடுக்கும் நெற்களஞ்சியமாக இருக்கின்றன.

இவற்றை மொத்தமாகப் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை இப்பகுதியில் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? எனும் கேள்வி மக்கள் மனதில் ஆழமாக உள்ளது.

வெளிநாட்டில் மீத்தேன் /ஹைட்ரோ கார்பன் எடுக்கும் இடம்

வெளிநாட்டில் மீத்தேன் /ஹைட்ரோ கார்பன் எடுக்கும் இடம்

போராட்டக் களமாகும் நெடுவாசல்:

மீத்தேன் திட்டத்தைத் தான் ஹைட்ரோகார்பன் திட்டம் எனும் புதிய பெயரில் இந்திய அரசு புகுத்த முயற்சிக்கிறது என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி  போராட்டங்கள் நெடுவாசல் பகுதியில் தொடங்கிவிட்டன.

ஆய்வுக்கு வந்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை மக்கள் விரட்டியடித்துள்ளனர். வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை கல்லூரி மாணவர்கள் தொடங்கியுள்ளனர். போராடும் மக்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

வாடிவாசல் போராட்டத்திற்காக கைகோர்த்த இளைஞர்கள் நெடுவாசல் போராட்டத்திற்கும் கைகோர்த்தால் தமிழகமே தப்பிப் பிழைக்கும் என்னும் குரல்களை கேட்க முடிகிறது. செய்வோமா நாம்?
தமிழ்
இளந்தமிழகம் இயக்கம்

About தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*