Home / அரசியல் / மோடி இந்தியரா?

மோடி இந்தியரா?

பஞ்சாப், உத்திரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்த பிரச்சாரத்தில் பாரதிய ச‌னதா கட்சியின் சார்பாக பிரதமர் மோடியே களத்தில் இறங்கி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றார். பஞ்சாப் மாநிலத்தில் அவர் பேசும் பொழுது “அன்னியரை ஆள விடாதீர்கள்” என பேசினார். “அன்னியர்” என அவர் சொன்னது ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை.

 அதே போல “நான் உத்திர பிரதேசத்தின் தத்து பிள்ளை” என அந்த மாநிலத்தில் உரையாற்றியுள்ளார்.  மோடி இந்தியாவின் பிரதமர், பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்தவர். இந்தியாவின் பிரதமராக இருக்கும் ஒருவர் எதற்காக பஞ்சாபில் “அன்னியரை ஆளவிடாதீர்கள்” என்கின்றார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டவர் இல்லை, இந்தியர்கள் தானே அப்படியிருக்க நாட்டின் ஒற்றுமையை வளர்க்க வேண்டிய பிரதமர், எதற்காக மக்களிடையே பிரிவினையை உண்டாக்குகின்றார் ?

pm-in-punjab-rally_032c66ce-e91f-11e6-a2d8-09470c086dd7

 இதே போல தான் நான் உத்திரபிரதேசத்தின் தத்து பிள்ளை என்ற உரையும். மோடி பிரதமர் பதவிக்கு போட்டியிடும் போது நான் இந்தியாவின் பிள்ளை என்று முழங்கினார். இன்றும் அதே முழக்கத்தை உத்திர பிரதேச தேர்தலிலும் முன்வைக்க வேண்டியது தானே? எதற்காக அவர் உத்திர பிரதேசத்தின் தத்து பிள்ளையாக வேண்டும் ? உத்திர பிரதேசம் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் தானே. இந்தியாவின் பிள்ளை, உத்திர பிரதேசத்தின் பிள்ளையும் தானே ?

 நான் அந்த மண்ணின் மைந்தன் என சொல்லி அந்த மாநில மக்களின் உணர்ச்சியைத் தூண்டி பாரதிய சனதா கட்சிக்கு பஞ்சாபிலும், உத்திர பிரதேசத்திலும் வாக்கு பெற முயலுகின்றார் மோடி. இது தான் அவரது உரை முன்வைக்கும் கருத்து. எதற்கெடுத்தாலும் இந்தியா,  தேச ஒற்றுமை என முழங்கும் மோடியும், அவரது கட்சியினரும் தங்கள் கட்சி  மாநிலங்களில் ஆட்சிக்கு வர இது போன்ற பிரித்தாளும் சூழ்ச்சிகளைத் தான் முன்வைக்கின்றனர். ஒரு தேசத்தின் பிரதமரே இது போன்ற செயலில் ஈடுபடுவது தேசத்தை பிரிவுக்குள்ளாக்கும்.  இது பிரிவினைவாதம் இல்லையா? மோடி பிரிவினைவாதி இல்லையா?

 இது மட்டுமின்றி உத்திரபிரதேசத்தில் ஆட்சியில் உள்ள அரசு “இரம்ஜான் பண்டிகை நேரத்தில் மின்சாரம் வழங்குகின்றது, தீபாவளி பண்டிகை நேரத்தில் மின்சாரத்தை தடை செய்கின்றது” என்றும்  பேசியுள்ளார்  மோடி. மோடியின் இக்கூற்று அப்பட்டமான பொய். அப்படி உண்மையாக இருந்திருந்தால் அம்மாநில அரசின் மேல் இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அவர் நடவடிக்கை எடுத்திருப்பார். தேச ஒற்றுமையை காப்பேன் என சொல்லி பதவியேற்ற  மோடி இந்தியர்களை இந்து , முஸ்லிம் என மத ரீதியாக கேவலம் வாக்குகளுக்காக பிரித்தாளுகின்றார்.  மோடியின் இச்செயல்கள் தேசத் துரோகம் இல்லையா?

 மூச்சுக்கு முன்னூறு முறை தேச ஒற்றுமை, பாரத் மாதாகி ஜே என சொல்லும் பாரதிய சனதா கட்சியினரின், மோடியின் உண்மை முகம் இது தான்.  2014ல் பிரதமர் தேர்தலின் போது மோடி வாக்குறுதி அளித்த வளர்ச்சி, “அச்சே தீனை”(நல்ல காலம் வருகின்றது)  ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும் மோடியால் ஏற்படுத்த முடியவில்லை.

eposter03

தொடர் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றம், 500,1000 ரூபாய் நோட்டை செல்லாமல் செய்த‌ திட்டத்தின் தோல்வி, விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம் என மோடி வாய்ச்சவடால் தொடர்ந்து பொய்த்து வருகிறது.

இதில் ஏதேனும் ஒன்றிலாவது உருப்படியாக வெற்றி பெற்றிருந்தால், அதைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க முடியும். தேர்தல் நேரங்களின் மக்களின் வாக்குகளுக்காக உணர்வுகளைத் தூண்டுவதும், ஆட்சியதிகராத்திற்கு வந்த பின்பு தன்னை பின்னால் இருந்து இயக்கும் பெரு முதலாளிகளின் நலனுக்காகவும், சங் பரிவாரத்தின்(R.S.S) செயல்களுக்கு அரசின் ஆதரவையும் தருவதையும் தனது முழுநேர பணியாக கொள்கின்றார் மோடி.

தேசப்பற்று, தேச ஒற்றுமை ஆகிய மோடியின் முழக்கங்களை அவரே இன்று குப்பையில் வீசியெறிந்து விட்டார். ஓட்டுக்காக எதையும் பேசுவோம், எதையும் செய்வோம் என்பது தான் இவர்களின் இன்றைய நிலை. மோடி நீங்கள் இந்தியாவின் பிள்ளையல்ல. “சங் பரிவாரத்தின், பெரு முதலாளிகளின்  பிள்ளை” நீங்கள்.  முதலில் ஒரு நல்ல குடிமகனாக இருக்க முயலுங்கள் திருவாளர்.மோடி.

நற்றமிழன்.ப‌

இளந்தமிழகம் இயக்கம்

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

One comment

  1. Arumaiyana padhivu Thozhare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*