Home / அரசியல் / மோடி – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு – டீலா? நோ டீலா?

மோடி – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு – டீலா? நோ டீலா?

தமிழக  முதல்வராக பதவியேற்ற பின்பு எடப்பாடி பழனிசாமி இன்று தில்லியில் பிரதமர்.மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் மோடியிடம் மருத்துவ படிப்பிறகான‌”நீட்” நுழைவு தேர்வு இரத்து தொடர்பான சட்டம், நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டம், கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டம், கேரள அரசு பவானி ஆற்றில் கட்டிவரும் தடுப்பணைகள், வறட்சி நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்து பேச இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஊடகங்கள் தெரிவிக்காத முக்கியமான ஒன்றைத் தான் பழனிசாமி மோடியிடம் பேச உள்ளார்.

சசிகலா தரப்புடன் பேரம் படியாததால் அல்லது அவரை பிடிக்காத காரணத்தினால் தான் அவருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. அவர் முதல்வராக இயலாத நேரத்தில் அவர் கைகாட்டிய ஒரு விசுவாசி தான் பழனிசாமி. அவர் முதல்வராக வரக்கூடாது தான் காலால் இடும் கட்டளையை தலையை அடமானம் வைத்தாவது செய்யும் ஓ.பன்னீர்செல்வம் போன்றவரே முதல்வராக வர வேண்டும் என்றே மோடி விரும்பினார். ஆனால் மோடியின் விருப்பத்திற்கு மாறாக‌ சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து பழனிசாமி முதல்வரானார்.

இந்த சூழலில் தான் இந்த சந்திப்பு திங்களன்று (27/02) நடைபெற்றது. இந்த சந்திப்பில் மோடியுடன் அவர் பேசப் போவது பேரமே. படிக்காதவன் திரைப்படத்தில் விவேக் ஒரு காட்சியில் சொல்வது போல குண்டூர் உனக்கு, நல்லூர் எனக்கு என்பது போன்ற பங்கு பிரிக்கும் பேரமே.  மோடி தான் கொண்டு வரும் மக்கள் விரோத,  பெருமுதலாளிகள் நல சட்டங்களை பாராளுமன்றத்தில் உங்கள் கட்சி ஒப்புக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி தமிழகத்தை பாழாக்க‌ மத்திய அரசு கொண்டு வரும் நெடுவாசல் இயற்கை எரிவாயு போன்ற திட்டங்களை ஒப்புக்கொள்ள வேண்டும், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் (சங் பரிவார) இந்துத்துவ கும்பல் காலூன்ற வழிவகை செய்ய வேண்டும் என்பவற்றை தனது தரப்பு கோரிக்கையாக மோடி வைப்பார்.

இதற்கெல்லாம் ஒப்பு கொள்கின்றோம் ஆனால் மீதமுள்ள நாலரை ஆண்டுகள் எங்களை ஆட்சியில் இருந்து கொள்ளையடிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று பழனிசாமி தரப்பு தங்கள் கோரிக்கையாக பழனிசாமி வைப்பார். இதில் உடன்பாடு எட்டப்பட்டால் இன்று எதிர்கட்சிகள் பழனிசாமி பெரும்பான்மைய நிரூபித்ததை எதிர்த்து மத்திய அரசிற்கு அனுப்பப்பட்ட புகார்களும், ஆளுநர் கொடுத்த அறிக்கைகளும் குப்பைத் தொட்டியில் வீசப்படும்.

cm-meets-pm

இந்த பேர உடன்படிக்கை தான் இந்த சந்திப்பில் நடைபெறப் போகும் முக்கிய பேச்சுவார்த்தை. மற்றபடி தமிழகம் எதிர்கொண்டு வருவதாக மேற்சொன்ன  பிரச்சனைகளை எல்லாம் பழனிசாமியும் பேசப்போவதில்லை, பேசினால் மோடியும் கேட்கப்போவதில்லை. ஆனால் தான் இந்த பிரச்சனைகளை தான் மோடியுடன் பேசியதாக அவரும் கூறுவார் ஊடகங்களும் அதை அப்படியே செய்தியாக சொல்லும்.

சனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இன்று துருப்பிடித்த இரும்பாக உள்ளன.  பெரும்பான்மையாக மக்கள் பார்க்கும் அச்சு/காட்சி ஊடகங்கள் அனைத்தும் அரசின் விளம்பரங்களை கவ்விக் கொண்டு அரசு சொல்லும் செய்தியை இவர்கள்  புலனாய்வு/திறனாய்வு செய்து நடுநிலை செய்திகளாக வெளியிடுகின்றன.  தேர்தல் வரும் காலங்களில் மட்டும் ஆளும் அரசை விமர்சித்து சில செய்திகளை வெளியிடுவார்கள்.

இன்று சனநாயகம் என சொல்லப்படுவது பெரும்பான்மை மக்களுக்கானதாக இல்லை, மோடி, பழனிசாமி உள்ளிட்ட‌ஆளும் வர்க்கத்திற்கும், அவர்களை இயக்கும் பெரு முதலாளிகளுக்குமானதாகவும், மக்களை பிரிவினைக்குள்ளாக்கும் இந்துத்துவ வெறியர்களுக்குமான சிறுபான்மைக்காக‌ உள்ளது. இது தான் யதார்த்தம். இந்த உண்மையை எந்த அச்சு/காட்சி ஊடகமும் நமக்கு சொல்லாது, ஏனென்றால் அவர்களும் இந்த கூட்டணியில் பங்காளிகளே. மக்கள் போராட்டங்களின் போது காவல்துறை தங்கள் ஊடகவியலாளர்களை தாக்கியதைக்கூட அவர்கள் செய்தியாக வெளியிடுவதில்லை.

மக்களாகிய நாம் தான் இந்த போலி சனநாயகத்தை நமது தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் தூக்கியெறிந்து பெரும்பான்மை மக்களுக்கான சனநாயகத்தை நிறுவ வேண்டும்.நற்றமிழன்.ப‌

-இளந்தமிழகம் இயக்கம்

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*