Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / நெடுவாசல் போராட்டமும் – விஞ்ஞானிகளும்
ஊடக வியாபரிகளின் அறிவியல் மோசடி விவாதங்கள்

நெடுவாசல் போராட்டமும் – விஞ்ஞானிகளும்

புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு பிபரவரி 15 அன்று ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இயற்கை எரிவாயு எடுப்பதனால் என்ன பிரச்சனை ஏற்படும்? தமிழகத்திலேயே பல இடங்களில் எண்ணெய் எடுக்கப்பட்டுத் தானே வருகின்றது இன்று ஏன் போராடுகின்றார்கள் ? நெடுவாசல் விவசாயிகளின் கூற்றையே கேட்போம்.

நெடுவாசலில் எரிபொருள் சோதனை மேற்கொள்ள குத்தகைக்கு நிலம் கொடுத்த விவசாயி கருப்பையா: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆய்வு செய்த ஓஎன்ஜிசி அலுவலர்கள் இங்கு மண்ணெண்ணெய் இருப்பதாக தெரிகிறது. ஆகையால், இந்த நிலத்தை ஆய்வுப் பணிக்கு கொடுங்கள். அதற்கு ஆண்டுக்கு குத்தகை அடிப்படையில் தொகை தருகிறோம் என்றார்கள். நானும் கொடுத்தேன். என்னைப் போல மேலும் 3 விவசாயிகள் நிலம் கொடுத்துள்ளனர். எங்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஆண்டுதோறும் தொகை கொடுத்து வருகின்றனர். எரிபொருள் சோதனை மேற்கொள்வதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டரில் எனது விவசாயத்துக்கான ஆழ்துளை கிணறு உள்ளது. இங்கு சுமார் 1.5 கிலோ மீட்டருக்குள் 21 ஆழ்துளை கிணறுகளை அமைத்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். ஆண்டு முழுவதும் எந்தப் பயிரையும் சாகுபடி மேற்கொள்வதற்கு ஏற்ப வளமுள்ள பகுதி. எண்ணெய் நிறுவனத்தினர் எரிபொருள் சோதனையின்போது எனது ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரோடு எண்ணெயும் சேர்ந்து வந்தது. பிறகு, எரிவாயு சோதனை மேற்கொண்டபோது அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் கருகிவிட்டது. தொடக்கத்தில் எங்களுக்கு இதுபற்றித் தெரியவில்லை. அதனால் விட்டுவிட்டோம். தற்போது உண்மை புரிவதால் இதை எதிர்க்கிறோம்.(1)

வாணக்கன்காட்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்துள்ள விவசாயி ராஜேஷ்: இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, சோதனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக இங்கிருந்து எந்த எரிபொருளும் எடுக்கப்பட மாட்டாது என கூறிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆழ்துளை கிணற்றின் மேல்பகுதி உள்ள மூடியின் உடைந்த பகுதியில் இருந்து எண்ணெய் வெளியேறிக் கொண்டு இருக்கிறது. சுமார் 10 அடி ஆழமுள்ள தொட்டி நிரம்பி, அதிலிருந்து வெளியேறி விளைநிலத்தில் செல்கிறது. எந்த ஒர் இழுவிசை கொண்ட மோட்டாரும் பொருத்தப்படாமல் தானாகவே எண்ணெய் வெளியேறுவது மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது. (1)

நேற்று இந்த ஆள்துளைக் கிணற்றிலிருந்து வெளியேறிய‌ எண்ணெய் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. உடனே அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனே தீயை அணைத்துள்ளார்கள் (2) கீழே உள்ள படத்தை பார்க்கவும். சோதனை செய்யும் பொழுதே இவ்வளவு அலட்சியமாக செயல்படுபவர்கள், பெருமளவில் இயற்கை எரிவாயுவை எடுக்கும் பொழுது எந்தத் தவறும் நடக்காது என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை.

pudhukottai_3138848f

மத்திய அரசின் அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் போராடும் மக்களெல்லாம் விஞ்ஞானிகளா என கேட்கின்றார். எண்ணூரில் கச்சா எண்ணெய் கொட்டிய பொழுது அதை அள்ள மக்களைத் தான் இவர் அழைத்தார். மக்கள் வாளியில் அள்ளிக்கொண்டிருந்த பொழுது நாடாளுமன்றத்தில் நவீன உபகரணங்கள் மூலம் கச்சா எண்ணெய் நீக்கப்பட்டு வருகின்றது எனப் பொய் சொன்ன உத்தமர் தான் இந்தப் பொன்.ராதாகிருஷ்ணன்.

மக்களுக்கு ஒர் இடர் ஏற்படும் பொழுது பெரும்பான்மையான விஞ்ஞானிகள் தலைமறைவாகிவிடுகின்றார்கள். அதே மக்கள் போராட்டம் என வரும் பொழுது மட்டும் எல்லாத் தொலைகாட்சி விவாதங்களிலும் முதல் ஆளாக வந்து அமர்ந்து மக்கள் போராடுவது தவறு, அவர்கள் அச்சம் கொள்வதற்கு ஏதுமில்லை என அரசு சொல்லச் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்புக்கின்றனர்.

உலகிலேயே மிகப் பாதுகாப்பான அணு உலை என அப்துல்கலாம் சொன்ன கூடங்குளம் அணு உலை ஆண்டில் பாதி நாட்கள் ஏதாவது ஒரு கோளாறால் செயல்படாமல் உள்ளது. இன்றும் கூடச் செயல்படாமலேயே உள்ளது.  கதிர்வீச்சினால் புற்றுநோய் வராது என அரசு சொல்லச் சொன்ன பச்சைப் பொய்யை அப்படியே சொன்ன மருத்துவர்.சாந்தா போலத் தான் உள்ளனர் இந்த விஞ்ஞானிகள்.

ஊடக வியாபரிகளின் அறிவியல் மோசடி விவாதங்கள்

ஊடக வியாபரிகளின் அறிவியல் மோசடி விவாதங்கள்

இங்கு அறிவியல் பெரும்பான்மை வணிகமயமாகி விட்டது. ஒரே ராக்கெட்டில் 124 செயற்கை கோள் விட்ட இந்த‌ இந்தியாவில் இன்னமும் எந்த வித உபகரணங்களும் இன்றி மனிதர்கள் தான் மலத்தை, கழிவு நீர் சாக்கடைகளைத் தூய்மை செய்கின்றனர், அந்தப் பணியில் கொல்லப்படுகின்றனர் என்பது தான் கள யதார்த்தம்.

இன்று நெடுவாசலில் போராடும் விவசாயிகளும் அறிவியலாளர்களே. எந்த மண்ணில் எது விளையும், எந்த காலத்தில் பயிர் செய்ய வேண்டும் என்ற அறிவியலை அறிந்தவர்கள், வானத்தைப் பார்த்தே இன்று மழை வருமா வராதா என கணிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் இந்த விவசாயிகள். செயற்கைகோள்கள் தரும் புள்ளிவிவரங்களைப் பார்த்து இன்று மழை வரலாம், வராமலும் போகலாம் என சொல்லும் அரசு அறிவியலாளர்கள் அல்ல எம் விவசாயிகள்.

ஆழி பேரலை வருவதற்கு முன்பே தீவுகளின் மேடான பகுதிக்கு சென்ற பழங்குடிகளும், கடல் நீரோட்டத்தை அறிந்து படகை செலுத்தும் மீனவர்களும் அறிவியலாளர்களே. அறிவியல்/விஞ்ஞானம் என்பது படித்துப் பட்டம் வாங்குவதால் மட்டும் வருவதல்ல. உலகின் மிக முக்கியான கண்டுபிடிப்பாகக் கருதப்படும் நெருப்பையும், சக்கரத்தையும் கண்டுபிடித்தவர்கள் யாரென்றே நமக்கு தெரியாது. பள்ளிக்கூடத்தால் தகுதியில்லாதவர்கள் என விரட்டப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன் போன்றவர்கள் தான் இன்று அறிவியல் உலகம் போற்றும் மிகப்பெரும் விஞ்ஞானிகள்.

ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியின் மூலம் பிறந்ததே அறிவியல். ஆனால் இன்று பெரும்பான்மையாக விஞ்ஞானிகள் என சொல்லப்படுபவர்கள் நான் சொல்வதை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே நம்பு என்கின்றார்கள். இவர்களுக்கும் இன்னும் கடவுள் தான் மனிதனை படைத்தான் என நம்பும் மதவாதிகளுக்கும் எத ஒரு வேறுபாடும் இல்லை. பெரு நிறுவனங்களிலும்/அரசிடமும் கூலிக்கு மாரடிக்கும் விஞ்ஞானிகளைப் புறக்கணிப்போம். மக்களோடு மக்களாக நிற்கும் உண்மையான விஞ்ஞானிகளை ஆதரிப்போம்.  மக்கள் போராட்டத்திற்குத் தோள் கொடுப்போம்.

நற்றமிழன்.ப‌
இளந்தமிழகம் இயக்கம்

தரவுகள்:

1)நெடுவாசல் விவசாயிகளின் கூற்று “அடுத்த போராட்டகளமா நெடுவாசல்” என்ற தமிழ் இந்துவில் வெளியான கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழ் இந்து ஊடகத்திற்கு நன்றி

2) புதுக்கோட்டை அருகே எண்ணெய் கிணற்றில் தீ

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*