Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / பறவைகளும் குழந்தைகளும்
கார்வெண் மீன்கொத்தி - Pied Kingfisher

பறவைகளும் குழந்தைகளும்

Great Backyard Birds Count – ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு ஆண்டு தோறும் பிப்ரவரி 17 முதல் 20 வரை உலகம் முழுவதும் இயங்கும் பறவையியல் ஆர்வலர்களால் நடத்தப்படுகிறது. இந்த நான்கு நாட்கள் முழுவதுமோ அல்லது ஓரிரு நாட்களோ, நாளொன்றுக்கு குறைந்தது 15 நிமிடங்கள், நாம் அன்றாடம் புழங்கும் இடங்களான நம் வீட்டுத் தோட்டம், கல்வி நிலையங்கள், ஏரி,குளம்,கண்மாய்கள், சதுப்புநிலங்கள் உள்ளிட்ட இடங்களில் வாழும் பறவைகளைக் கணக்கெடுத்து ebird.org இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது குறைந்த பட்ச விதிமுறை.  பறவைகள் மீதும் இயற்கையின் மீதும் ஆர்வம் கொண்டிருத்தலே, இந்த கணக்கெடுப்பில் நாம் பங்கேற்பதற்கான குறைந்த பட்ச தகுதியாக கருதப்படுகிறது. இக்கணக்கெடுப்புகள் உலகின் பல்வேறு இடங்களில் வாழும் பறவைகளையும் வலசை(பயணம்) போகும் பறவைகளையும் அறிந்து கொண்டு, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பறவையியல் ஆய்வாளர்களுக்கு உதவி புரியும். மக்களே இதில் பங்கேற்பதால், மக்கள் அறிவியல் என்றும் இக்கணக்கெடுப்பு அழைக்கப்படுகிறது.

கார்வெண் மீன்கொத்தி - Pied Kingfisher

கார்வெண் மீன்கொத்தி – Pied Kingfisher

இந்த ஆண்டு  பறவைகள் கணக்கெடுப்பில் எம் வீட்டுக் குழந்தைகளையும் ஈடுபடுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். காகம்,குயில்,மைனா, மாடப்புறா இவைகளைத் தவிர ஓரளவு வீட்டைச் சுற்றி வாழும் மற்ற புள்ளினங்களையும் ஓரளவு இனம் காண பழகியிருந்த எம் வீட்டு வாண்டுகள் உற்சாகமடைந்தார்கள். ஒரு நோட்டுப் புத்தகம், பேனா, பறவைகள் பற்றிய ஒரு சிறு களக்கையேடு, இரு கண் நோக்கி(Binocular), குடிநீர் இவைகளை எடுத்துக் கொண்டு ஒரு பகல் நேரம் பெரும்பாக்கம் சதுப்பு நிலம் நோக்கி கிளம்பினோம்.

அக்டோபரிலிருந்து மார்ச் மாதம் வரை, வலசை வரும் பறவைகளின் வரத்து அதிகம் இருப்பதால், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பறவை வாழிடங்கள் திருவிழா கால ஊர் போல இருக்கும். குறிப்பாக நகருக்குள் அமைந்திருக்கும் பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்ளிட்ட சதுப்பு நிலங்களில் வலசை வரும் வாத்து இனங்கள், பூநாரைகள் உள்ளிட்ட நீர்ப்பறவையினங்கள்  கண்களைக் கவருபவை. ஐரோப்பா,மங்கோலியா, இமயமலை ஆகிய பகுதிகளில் குளிர்கால பனி மூடு விடுவதால் இரைகளைத் தேடி, இப்பறவைகள் நம் ஊர்களுக்கு வலசை வருகின்றன.

 

ஊசிவால் வாத்து – Northern Pintail

சென்னைபள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஒப்பிடுகையில்  பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் பறவைகளைக் கொஞ்சம் வெகு அருகாமையில் பார்க்க முடியும். குறிப்பாக தட்டை வாயன், ஊசிவால் வாத்து, நீலச்சிறகி உள்ளிட்ட வாத்து இனங்கள் கூட்டம் கூட்டமாக பெரும்பாக்கம் சதுப்புநிலத்தில் இரை தேடிக் கொண்டிருக்கும் அற்புத காட்சிகளைக் காண முடியும். குழந்தைகள் முதன் முறையாக இப்பறவைகளை நேரில் பார்த்தார்கள். களக்கையேட்டின் உதவியோடு பார்த்த பறவைகளை இனங்கண்டு, ஒரு நோட்டுப்புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.அப்படி பார்த்த பறவைகள் பட்டியல் ஒன்றை வீட்டிற்கு வந்து ebird.org இணையதளத்தில் ஊள்ளீடு செய்தோம்.  தனித்தனி  இனங்களாக 22 பறவையினங்களை குழந்தைகள் பார்த்து பட்டியலிட்டார்கள்.

 

புள்ளிமூக்கு வாத்து - Spot Billed Duck

புள்ளிமூக்கு வாத்து – Spot Billed Duck

கடந்த ஓராண்டாக பறவைகள் பார்க்கும் எனக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. பறவையியல் ஆர்வலர்கள் தன் வாழ்நாளில் புதிதாக பார்த்த பறவையினங்களை Lifer என்று குறிப்பிடுவார்கள். அப்படியாக எனக்கு இந்த கணக்கெடுப்பில் இரண்டு Lifer-கள் கிடைத்தன. ஒன்று (Pied Avocet) என்றழைக்கப்படும் கோணமூக்கு  உள்ளான். மற்றொன்று Comb duck என்றழைக்கப்படும் செண்டு வாத்து. எனது பதிவுக்காக, அவற்றை படமெடுத்து வைத்துக் கொண்டேன். இணைய தளத்திலும் இரு பறவைகளின் படங்களோடு உள்ளீடு செய்து பதிவேற்றினேன்.

இயற்கையப் பேண மனிதருக்கு கற்றுக் கொடுக்க ஒரே வழி, அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே அதைச் சொல்லித் தருவது தான் என்று நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர் கான்ராட் லாரன்ஸ் சொல்லியிருக்கிறார். அவ்வகையில் இன்று பறவை பார்க்க‌ மட்டுமல்ல. மனிதர்கள் வாழ, பல்லுயிர் பெருக அவசியமான சதுப்பு நிலங்களையும் ஏரிகளையும் இன்று குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன். பெருஞ்செலவு செய்து விடுமுறை நாட்களில் தீம் பார்க்குகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் நாம், குழந்தைகளுக்கு இம்மாதிரியான இயற்கையோடு இணைந்த பொழுதுபோக்கு முறைகளை அறிமுகம் செய்து வைப்பது, இயற்கை மீதான அவர்கள் ஆர்வத்தைத் தூண்ட மட்டுமல்ல, இயற்கையை பேணி காப்பதற்கும் பொறுப்புள்ள சமூகமாக வளர்வதற்கும் துணை புரியும்.

birding

பதிவு செய்த பறவைகள் பட்டியல்
==========================================

1.  நீலச்சிறகி வாத்து – Garganey
2. ஊசிவால் வாத்து – Northern Pintail
3. தட்டை வாயன் – Northern Shoveler
4. கோணமூக்கு உள்ளான் – Pied Avocet
5. செண்டு வாத்து – Comb duck
6.  கூளக்கடா – Spot Billed Pelican
7. புள்ளிமூக்கு வாத்து – Spot Billed Duck
8. நாமக்கோழி – Common Coot
9. சிறிய நீர்க்காகம் – Little Cormorant
10. சீழ்க்கை சிரவி – Fulvous Whistling duck
11. நீலவால் பஞ்சுருட்டான் – Blue Tailed Bee-eater
12. கார்வெண் மீன்கொத்தி – Pied Kingfisher
13. நத்தைகுத்தி நாரை – Asian openbill
14. சங்குவளை நாரை – Painted Stork
15. செந்நீல கொக்கு – Purple Heron
16. வெண்மார்பு மீன்கொத்தி – White throated Kingfisher
17. பவளக்கால் உள்ளான் – black winged Stilt
18. மாட்டுக் கொக்கு – Cattle Egret
19. சின்ன‌ கொக்கு – Little Egret
20. மடையான் – Indian pond Heron
21. கரிச்சான் – Black Drongo
22. நீல தாழைக்கோழி – Purple Swamphen

அ.மு.செய்யது – இளந்தமிழகம் இயக்கம்

இந்த பதிவு சில மாறுதல்களுடன் தமிழ் இந்து நாளிதழின் மாயா பஜார் (சிறுவர்களுக்கான இதழ்) இணைப்பிதழில் வெளியாகியுள்ளது. தமிழ் இந்துவிற்கு நன்றி. அக்கட்டுரையின் திருத்தப்படாத‌ முழு பதிவு.

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*