Home / அரசியல் / மோடியின் ஆசியோடு மாணவர்களைத் தாக்கும் பாஜக மாணவர் அணி !!
குர்மேகர் கவுர்

மோடியின் ஆசியோடு மாணவர்களைத் தாக்கும் பாஜக மாணவர் அணி !!

சனநாயகத்தின் முகமாக இருக்க வேண்டிய பல்கலைகழங்களில் இன்று திட்டமிட்ட மோதல்களை ஆளும் பாரதிய சனதா அரசு தனது மாணவரணியான அகில இந்திய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி) மூலம் நடத்திவருகின்றது. தங்களுக்குள் தோன்றும் பல்வேறுவிதமான கருத்துகளை பேசி, கலந்துரையாட வேண்டிய இடமான பல்கலைகழகங்களில் உள்ள மாணவர்களின் குரல்வளை “தேசத்திற்கு எதிரானது” என்ற முழக்கத்தின் கீழ் நெரிக்கப்படுகின்றது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைகழத்தின் கீழ் செயல்படும் ரம்ஜாஸ் கல்லூரியில் “போராட்டங்களின் கலாச்சாரம்” என்ற பெயரில் ஒரு கருத்தரங்கத்திற்கு ஜவகர்லால் நேரு பல்கலைகழக ஆராய்ச்சி மாணவரான உமர் காலித்தை பேச அழைத்திருந்தார்கள்.

உமர் காலித் கருத்தரங்கில் பேசக்கூடாது எனக்கூறி பா.ச.க-வின் மாணவரமைப்பு அந்த கருத்தரங்கத்தை நடக்கவிடாமல் செய்தது.  இதனை கண்டித்து  மாணவர், ஆசிரியர்கள் நடத்திய பேரணியில் கலந்து கொண்டவர்களின் மேல் அவர்கள் கல்லெறிந்தும், கட்டைகளால் தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் அந்த பேரணியை ஒளிப்பதிவு செய்ய வந்திருந்த பத்திரிகையாளர்களையும் அவர்கள் தாக்கினார்கள். இந்த வன்முறை நிகழ்வனைத்தும் டெல்லி காவல்துறையினரின் கண் முன்னே நடைபெற்றது. அரசின் அடியாட்களாக இயங்கும் இந்த‌  மாணவர்களின் வன்முறைச் செயலைத் தடுக்கவோ, அவர்களை கைது செய்யவோ முயலாமல் காவல்துறை வேடிக்கை பார்த்தது. டெல்லி காவல்துறை டெல்லி மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராமல் மத்திய பா.ச.க அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு கன்னையா குமார் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார். இந்த ஆண்டு மாணவர்கள், பேராசிரியர்கள் தாக்கப்பட்டனர்.

சென்ற ஆண்டு கன்னையா குமார் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார். இந்த ஆண்டு மாணவர்கள், பேராசிரியர்கள் தாக்கப்பட்டனர்.

இந்த வன்முறையில் காயமடைந்த பேராசிரியர்களும், மாணவர்களும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.  அமைதியாக நடைபெற்ற பேரணி மீது, மோடி அரசின் ஆதரவுடன், திட்டமிட்டு நடைத்தப்பட்ட  வன்முறையை, ஊடகங்கள் இருதரப்பிற்கும் இடையான மோதல் என சொல்லியது.  நகை முரண் என்னவென்றால் ஏ.பி.வி.பி-யின் இந்த தாக்குதலில் இப்படி செய்தி ஒளிபரப்பிய ஊடகங்களின் பணியாளர்களும் தாக்கப்பட்டனர். தனது பணியாளர் தாக்கப்பட்டதையே மறைத்து அரசு சொல்வதை  செய்திகள் என‌ வெளியிடுகின்றன ஊடகங்கள்.

வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி-யைச் சேர்ந்தவர்கள் எழுப்பிய “காவல்துறை எங்கள் பக்கம்” போன்ற முழக்கங்களை காவல்துறையின் கள்ள மௌனம் உறுதிப்படுத்தியது. இந்த வன்முறையில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி-யினர் இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதோடு மட்டும் நிற்கவில்லை. இவர்கள்,

* இந்தியாவில் உயர் கல்வியை தடுக்கும் பாசிச எண்ணம் கொண்டு செயல்படுகிறார்கள்.

* பல்கலைக்கழக வளாகங்களில் நடைபெறும் கருத்துரையாடல்களை  தடுக்கிறார்கள்.

* தங்கள் அமைப்போடு சேர‌ மறுக்கும் மாண‌வர்களை மிகவும் கீழ்த்தரமாக அவர்களின் தாயையும் சேர்த்தே பழிக்கும் இவர்கள் தான் மறுபுறம் வாய் கிழிய “பாரத் மாதா கீ ஜே” எனவும், “இந்தியா எனது தாய் நாடு” எனவும் கத்துகிற‌வர்கள்

* கல்வியை வியாபாரமயாக்கும் அரசை எதிர்த்து போராடாத இவர்கள், அதை எதிர்த்து போராடுபவர்களை “தேசத்துரோகி” என குற்றமும் சாட்டுபவர்கள்

அமைதி பேரணியின் மேல் வன்முறையை ஏவிய பாரதிய சனதா கட்சியின் மாணவர் அமைப்பினர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராடிய மாணவர்களின் மேல் தடியடியை நடத்தி ஆளும் பா.ச.க அரசின் ஏவல் நாயாக செயல்பட்டது டெல்லி காவல்துறை. அதுமட்டுமின்றி டெல்லி பல்கலைகழக‌த்தில் படிக்கும் மாண‌வர் நஜிப் அகமதை பல்கலைகழகத்தில் இருந்து காண‌வில்லை என்ற வழக்கில் வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட ஏபிவிபி மாண‌வர்களின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்காமல், அவர்களை விசாரணை செய்யாமலும் இருக்கின்றது டெல்லி காவல்துறை.

இந்த நிலையில் தான் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வாளாகத்தில்  144 தடை உத்தரவை காவல்துறை  போட்டுள்ளது, இருப்பினும் ஏபிவிபியை சேர்ந்த மாண‌வர்கள் மட்டும் மோட்டார் வாகனங்களில் கையில் கட்டை உள்ளிட்ட‌ ஆயுதங்களுடன் அமைதி பேரணியில் ஈடுபட்ட‌ மாண‌வர்களைத் தேடி விடுதி, பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றிவந்துள்ளார்கள்.

குர்மேகர் கவுர்

குர்மேகர் கவுர்

ஏ.பி.வி.பி கூலிப்படையின் வன்முறையை கண்டித்த மாணவி. குர்மேகர் கவுரின் மேல் பாலியல் வன்முறை நடத்துவோம் என மிரட்டியுள்ளனர் ஏ.பி.வி.பியைச் சார்ந்தவர்கள். இதனை கண்டித்து குர்மேகர் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் ஆளும் மோடி அரசின் ஆதரவு பெற்ற மாணவர் இயக்கம் என்ற பெயரில் ஏ.பி.வி.பி கூலிப்படை திட்டமிட்டு வன்முறையில் ஈடுபடுகின்றது. டெல்லி காவல்துறை மோடி அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வன்முறையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படாமல், இந்த வன்முறையில் தாக்கப்பட்ட மாணவர்கள் “தேசத்துரோகம்” போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்யப்படுவதும் சிறையில் அடைக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

சாதி, மத, பாலின வேறுபாடின்றி “மாணவ சமுதாயம்” என்ற ஒற்றுமையுடன் இருக்கும் மாணவர்களை சாதி, மத, பாலின வேறுபாடுகளைத் தூண்டி துண்டாடி வருகின்றது ஆளும் மோடி அரசும் அவர்களின் மாணவர் அமைப்பு என்ற பெயரில் செயல்படும் கூலிப்படையுமான ஏபிவிபி.யும்.  இதை எல்லாம் தாண்டி மாணவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும், அது தான் சமூகத்திற்கு நல்லது. அரசின் ஆதரவோடு மாணவர்களின் சிந்தனையை தடுக்கும், குரல்வளையை நெரிக்கும் மோடி அரசின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள எல்லா மாணவர்களும், சனநாயகத்தை வேண்டும் எல்லா மக்களும் கண்டிக்க வேண்டும்.

ஏ.பி.வி.பி-யின் வன்முறையை எதிர்த்து போராடும் நான் தனியே இல்லை ஒட்டுமொத்த இந்திய மாணவர்களும் என்னோடு (எங்களோடு) இருக்கின்றார்கள் என்ற குர்மோகரின் கூற்று உண்மை என நிரூபிக்க வேண்டிய தார்மீகக் கடமை மாணவர்களுக்கு இருக்கிறது.

பல்கலைக்கழகத்தில் சனநாயகத்திற்காக போராடும் மாணவர்களுடன் துணை நிற்போம். உண்மையான மக்கள் சனநாயகத்தை வென்றெடுப்போம்.

– பரத் டோனி – இளந்தமிழகம் இயக்கம்.

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*