Home / அரசியல் / தமிழக மீனவர் பிரிட்ஜோவை கொன்றது இலங்கை அரசா? இந்திய அரசா ?

தமிழக மீனவர் பிரிட்ஜோவை கொன்றது இலங்கை அரசா? இந்திய அரசா ?

வங்க தேச மீனவர்கள் மியான்மர் கடற்பகுதிக்குள் சென்று மீன் பிடிக்கிறார்கள். ஜப்பானிய மீனவர்கள் ஆசிய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். இவ்வளவு ஏன்? இலங்கை மீனவர்களே இந்தியாவின் கேரளப் பகுதியிலும் லட்சத் தீவுப் பகுதிகளிலும் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். மாலத்தீவுக் கடற்பரப்புகளிலும் மீன் பிடிக்கத் தான் செய்கிறார்கள். அப்படி எல்லை தாண்டிச் செல்லும் வேற்று நாட்டு மீனவர்களை, சம்பந்தப்பட்ட நாட்டின் இராணுவமோ அல்லது கடற்படை அதிகாரிகளோ தடுத்து நிறுத்தி சோதனை நடத்துவார்கள். ஆவணங்களைச் சரி பார்ப்பார்கள்.  போதை, ஆயுதங்கள் கடத்தல் ஏதும் நடக்கின்றதா என்பதை கண்டறிய நடத்தும் வழக்கமான சோதனைகள் தாம் அவை.

தேவைப்பாட்டால் கைது செய்வார்கள். பின்னர் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பிறகு விடுதலை செய்து விடுவார்கள். இந்த நடைமுறைகள் எல்லாம் பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் பன்னாட்டுச் சட்டங்கள், மீன் பிடி உரிமைகள் இவைகளின் அடிப்படையில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைகள் தான்.

சிங்கள அரசு இந்த பன்னாட்டுச் சட்டங்களை எல்லாம் மதிப்பதில்லை. இந்திய அரசின் நேரடி வளர்ப்பில், சுகம் கண்டு கொண்டு கொண்டிருக்கும் சிங்கள அரசுக்கு தமிழக மீனவர்களைக் கொல்லவும், வாயில் கிரீஸ் அள்ளி வைக்கவும், ஒன்றுக்கடிக்கவும் படகு வலைகளைச் சேதப்படுத்தவும் மீன்களைத் திருடிச்செல்லவும் பெரிய காரணங்கள் தேவைப்படுவதில்லை. கிரிக்கெட்டில் இலங்கை தோற்றால் கூட சுடுவார்கள். தற்போது தமிழக மீனவர் பிரிட்ஜோ(21)  சுட்டுக் கொல்லப்பட்டதற்கு சிங்கள அரசுக்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் தமிழக மீனவன் சுட்டுக் கொல்லப்படுவதற்கும், ஏற்கெனவே கொதி நிலையில் இருக்கும் தமிழக அரசியலை திசை திருப்பி,  மீனவர்கள் பிரச்சினையில் குவி மையப்படுத்துவதற்கும் இந்திய அரசுக்குத் தான் தேவை இருக்கிறது.

17190525_1145672332207896_8519894387394472144_n

ஜல்லிக்கட்டு, நெடுவாசல், தாமிரபரணி என தமிழகம் தொடர்ந்து போராட்ட எழுச்சியின் உச்சத்தில் இருக்கிறது. போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யக் கூடிய அரசின் வழக்கமான உத்திகள் எடுபடவில்லை. இந்த கொந்தளிப்பிலிருந்து, வேறொரு கொந்தளிப்பிற்கு மடை மாற்றம் செய்வதன் மூலம் நெடுவாசல் எழுச்சியை நீர்த்துப் போகச் செய்ய முடியும் என இந்திய அரசே இந்த படுகொலையை திட்டமிட்டிருக்கலாம்.

மேலும் தற்பொழுது ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பாக விவாதம்  நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தமிழக மீனவரை கொல்ல  இலங்கை அரசு முயலாது, ஏனென்றால் இராஜ தந்திர ரீதியில் இது இலங்கை அரசை கடுமையாக பாதிக்கும். ஆனால் இந்த கொலையை  இந்திய அரசு செய்வதற்கு மேலே சொன்னது போல நிறைய காரணங்கள் உண்டு.

இதற்கு முன்னர் எல்லை தாண்டி வந்தார்கள் சுட்டோம் என திமிருடன் சொன்ன இலங்கை கடற்படை மீனவர்.பிரிட்ஜோவை தாங்கள் சுடவில்லை என தெரிவித்துள்ளது(1,2).  ஆனால் பெரும்பான்மையான‌ ஊடகங்கள் இலங்கை கடற்படை தான் சுட்டது, இலங்கை அரசு இது குறித்து விசாரிக்கின்றோம் என கூறியுள்ளதாக பொய்ச் செய்தியை தொடர்ந்து பரப்பி வருகின்றது(3,4).  இந்திய அரசின் உத்தரவின் படி பிரிட்ஜோவை சுட்டு கொலை செய்தது இந்திய கடற்படையைச் சேர்ந்தவர்கள் தான் செய்திருக்க வேண்டும் என நாம் கருத வேண்டியுள்ளது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் கண்டித்து  இனி நாம் போராட வேண்டியது இலங்கை அரசை எதிர்த்து மட்டும‌ல்ல,  இந்திய அரசையும் சேர்த்தே எதிர்க்க வேண்டும்.  அது தான் தமிழக மீனவர்களுக்கு விடிவைத் தரும்.

அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்

தரவுக‌ள்:

1) ‘துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை!’- மறுப்பு தெரிவிக்கும் இலங்கை’

2)  Sri Lankan Navy denies killing Indian fisherman

3) Tamil Nadu Fisherman’s Killing: Sri Lankan Navy Has Promised Probe

4) Indian fisherman killed in Sri Lankan Navy firing; Centre can’t be mere spectator, says Stalin

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*