காசுமீரி இசுலாமிய மக்கள் கடந்த 27 ஆண்டுகளாக இராணுவ ஆட்சியின் கீழ் பாதிக்கப்பட்டு, இந்திய இராணுவத்தின் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
காசுமீர் பள்ளத்தாக்கில் இப்பொழுது வீசி வரும் கடும் குளிர் ஊன்களை ஊடுருவக் கூடியது, ஆனால் அதனால் கூட பொது மக்களின் உத்வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் தோற்றுப்போகின்றது. கடும் குளிர்காலத்தில் கூட, அந்த பகுதியில் தங்கி இருக்கும் சில போராளிகளைக் கொல்ல நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்கள் வரும் பொழுது அந்த பகுதி மக்கள் அதை எதிர்த்து போராடுகின்றனர், சில சமயங்களில் போராளிகள் தப்பிச்செல்லவும் உதவுகின்றனர். (மெரினா போராட்டத்தில் மாணவர்களை காத்த மீனவ மக்களை நினைவு கூறுங்கள்). பாதுகாப்புப் படைகளைப் பொறுத்த வரை போராளிகளுக்கு உதவும் பொது மக்கள் “தேசவிரோதிகள்”, அதனால் அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஒடுக்கலாம். (மீனவர் குப்பத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை நினைவு கூறுங்கள்).
உண்மையில் சொல்லப் போனால் பொது மக்கள் போராளிகளைக் காப்பாற்ற தங்களுது உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். அது ஏனென்றால் கொல்ல படும் ஒவ்வொரு போராளியும் காஷ்மீரியே, பெரும்பான்மைப் போராளிகள் இந்திய ஆதிக்கத்தில் இருக்கும் கிழக்கு காசுமீரைச் சேர்ந்தவர்கள், ஒருசிலரே பாகிசுதான் ஆதிக்கத்தில் இருக்கும் மேற்கு காசுமீரைச் சேர்ந்தவர்கள். வெளியே கடும் குளிர் இருந்தாலும் ஒர் போராளியோ அல்லது போராளிகளோ “போலி மோதலில்”(Encounter) கொல்லப்படும் பொழுதும், குறிப்பாகக் பொது மக்கள் கொல்லப் படும் பொழுது அது பெரும் திரள் மக்கள் போராட்டத்தைத் தூண்டிவிடுகின்றது. பொது மக்கள் போராட்டம் வேகமெடுக்கும் நேரத்தில் இந்திய இராணுவம் பொது மக்கள் கூட்டத்தை நோக்கி சுடத் தொடங்குவதால் அலை, அலையான போராட்டங்கள் உருவாக்குகின்றன.
காசுமீரி மக்கள் கடந்த 27 ஆண்டு காலமாக இராணுவ ஆட்சி எப்படி இருக்கும் என்பதை நேரடியாக உணர்ந்துள்ளனர். ஒட்டுமொத்த பள்ளத்தாக்கும் ” தொந்தரவான” பகுதியாக இருக்கின்றது, இதில் பொது மக்களை கொலை செய்தல், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குதல், சித்ரவதை செய்தல், காணாமல் போகச் செய்தல் என இராணுவம் செய்யும் எந்த ஒரு குற்றத்திற்கும் விசாரணை கூட இல்லாமல் இருப்பதால் “சுதந்திரமாக கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களை செய்து வருகின்றனர்”.
காசுமீரில் கடந்த சூலை 8ல் இருந்து தொடர்ந்து நடந்து வரும் மக்கள் எழுச்சியில் இதுவரை நூற்றுக்கும் அதிகமான பொது மக்கள் இராணுவத்தினால் கொல்லப்பட்டுள்ளனர் என “காணாமல் அடிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பெற்றோர் அமைப்பின்” (The Association of Parents of Disappeared Persons -APDP) சனவரி 10, 2017 தேதியிட்ட ஒரு அறிக்கை சொல்கின்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண் தெரியமொலோ அல்லது கண் பார்வைத் தெரியாத அளவுக்கு இந்திய இராணுவத்தின் பெல்லட் குண்டுகளினால் (Pellet Bullets) பாதிக்கப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு சட்டம், 1978 (பொடா, மிசா போன்ற மிகக் கடுமையான சட்டம்) கீழ் பல ஆயிரம் பொது மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்கள். அதிகாரப்பூர்வ அரசாங்க புள்ளிவிவரங்கள் வெவ்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுக்களின்கீழ் சுமார் 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது. தொடர்ந்த ஊரடங்கு உத்தரவு, ஊடக, இணையத் தடை, சுதந்திரமாக பேசுவது, அமைதியான முறையில் கூடுவது போன்ற அடிப்படை உரிமைகளுக்கு நிரந்தரத் தடை இது தான் காசுமீரில் என்றும் நாம் காண்பது.
தாங்கள் பெற்றப் பிள்ளைகளை, தங்களது அன்பு உறவுகளை காணாமல் தேடும் பெற்றோர்களின், உறவினர்களின் வலி அவர்களை பார்க்கும் பொழுது நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. APDP யின் கணக்குப் படி, 1989 ஆம் வருடத்தில் இருந்து சுமார் 8,000 முதல் 10,000 காஷ்மீரிகள் காணாமல் அடிக்கப்பட்டுள்ளார்கள். உமர் அப்துல்லா தலைமையிலான முந்தைய ஜம்மு&காசுமீர் அரசு 3744 பேர் (இந்திய இராணுவத்தினால்) கட்டாயமாக காணாமல் அடிக்கப் பட்டு பின்னர் இந்திய இராணுவத்தின் “போலி மோதல்களில்”(Fake Encounters) கொல்லப்பட்டனர் என சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டது. ஆனால் “இந்திய அரசும்”, “இராணுவமும்” இது போன்ற கட்டாயமாக காணாமல் அடிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யும் எந்தச் செயலையும் இதுவரை ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்து மறுத்து வருகின்றார்கள். அதுமட்டுமின்றி இராணுவத்தின் வன்முறை செயல்களுக்கு வன்முறையில் பாதிக்கபட்டவர்களே காரணம் என்றும் கூறுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் 10 ம் தேதி அன்று APDP அமைப்பைச் சேர்ந்தவர்கள் காசுமீரில் (இராணுவத்தினால்) கட்டாயமாக காணாமல் அடிக்கப்படுவதற்கு எதிராக அமைதியான அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டும், காணாமல் போனவர்களின் நினைவுகளை சுமக்கும் நாட்காட்டியையும் வெளியிட்டு வருகின்றனர். தங்களது குடும்பத்தைச் சேர்ந்த (காணாமல் அடிக்கப்பட்ட) குழந்தைகள், உறவுகளின் நினைவுகள் தங்களின் மனதில் இருந்து அழியா வண்ணம் உள்ளது அவர்களின் இச்செயல்பாடுகள். அதுமட்டுமின்றி (இராணுவத்தின்) கட்டாயமாக காணாமல் அடிக்கப்படுதலைத் தடுப்பதற்கு எந்த ஒரு பாதுகாப்பு சட்டமும் இயற்றமால் வேடிக்கை பார்க்கும் காசுமீர் மாநில அரசின் கையாலாகாதத் தனத்தையும் இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அடுத்தடுத்து வந்த மத்திய அரசாங்கம் கூட தான் கையெழுத்திட்டுள்ள கட்டாயமாக காணாமல் அடிக்கப்படுவதிலிருந்து எல்லா மக்களையும் பாதுகாக்கும் பன்னாட்டு சட்டத்தை உறுதி செய்யாமல் பொறுப்பற்று உள்ளது.
காசுமீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களுக்கு எதிராக கடந்த 27 ஆண்டுகளாக இராணுவத்தை பயன்படுத்தி வருகின்றது இந்திய அரசு. இந்திய அரசின் கடுமையான ஒடுக்குமுறையினால் பெரும்பான்மையான காசுமீர் மக்கள் இந்தியாவின் கீழ் வாழவிரும்ப வில்லை. “பிராந்திய ஒருமைப்பாடு”,”மதச்சார்பின்மை” என்ற முழக்கத்தின் மூலம் மேற்சொன்ன அடக்குமுறை அனைத்தையும் டெல்லியில் உள்ள மத்திய அரசு நியாயப்படுத்துகின்றது. மேலும் காசுமீர் பள்ளத்தாக்கில் நடக்கும் அனைத்திற்கும் பாகிசுதானே காரணம் என்றும், எல்லா பொது மக்கள் போராட்டமும், போராளிகளின் போராட்டமும் “பாகிசுதான் உதவியுடன்” தான் நடக்கின்றன என்றும் குற்றம் சாட்டுகின்றது.
இன்றைய மத்திய அரசாங்கத்தின் “தேசியவாதம்” எல்லா இந்தியர்களுக்கானதல்ல; இந்திய மக்களில் ஒரு பிரிவினராக உள்ள மதவெறி பிடித்த இந்துத்துவ தேசியவாதத்தை அது கடைபிடிக்கின்றது. மதச்சார்பினைமையின் பெயரால் காசுமீரி இசுலாமியர்களின் மேல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள தங்களின் மதவெறி பிடித்த இந்துத்துவத்தை திணிப்பதில் அவர்களுக்கு எந்த ஒரு கவலையுமில்லை. காங்கிரசு கடைபிடித்த தேசியவாதமும் இதற்கு குறைவானதல்ல என நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதே போல பாகிஸ்தானின் தேசியவாதமும் மேலான ஒன்றல்ல.
எப்படி மதவெறி பிடித்த இந்துத்துவ தேசியவாதிகள் பாகிசுதானில் உள்ள பலுச்சிசுதான் தேசியப் போராட்டத்தை ஆதரிக்கின்றார்களோ, அதே போல பாகிசுதானில் உள்ள மதவெறி பிடித்த இசுலாமியர்கள் காசுமீர் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதாக சொல்கின்றனர், அதே சமயம் பாகிசுதான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதியை அடக்கி ஒடுக்கி வருகின்றார்கள். ஆனால் கடந்த 27 ஆண்டுகளாக இராணுவ அடக்குமுறைய காசுமீர் மக்களின் மேல் இந்திய அரசு பயன்படுத்தி வருவதால் “காசுமீர் விடுதலை” (Azaadi) எனும் குரல் (முழக்கம்) இந்திய அரசின் அடக்குமுறைக்கு எதிராக காசுமீரி மக்களின் இதயத்திலிருந்து எழும் குரலாகும்.
மொழியாக்கம் – விஜய் பிரபாகரன். – இளந்தமிழகம் இயக்கம்
மூலப்பதிவு:
http://www.epw.in/journal/2017/7/editorials/azaadi%E2%80%94freedom-indian-oppression.html