Home / சமூகம் / இந்துத்துவம் / மகாபாரதம் – பெண்ணியப் பார்வையில்

மகாபாரதம் – பெண்ணியப் பார்வையில்

மார்ச் 8 – பன்னாட்டு உழைக்கும் பெண்கள் நாள். இந்த நாள் என்பது பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வென்ற நாள். மார்ச் 8-யை முன்வைத்து இம்மாத இறுதி வரை பெண் உரிமை கட்டுரைகளை வெளியிட இருக்கின்றோம். இந்த கட்டுரை தொடரில் முதல் கட்டுரை இது.

விசை ஆசிரியர் குழு

———-

இந்துகளின் இருபெரும் காப்பியங்களில் ஒன்றாக போற்றப்படுவது “மகாபாரதம்”.  இந்த மகாபாரத கதையில் மையக்கருவாக நான் கருதுவது பொருளை வைத்து ஆடும் சூது விளையாட்டு.  முதலில் பொருட்களை வைத்து சூதாடும் தர்மன் வரிசையாக தோற்க பின்னர் தான் ஆளும் நாட்டை வைத்து விளையாடுகிறான், அதிலும் தோற்று போன பின்னர் இறுதியாக தன் (பஞ்ச பாண்டவர்களின்) மனைவியான பாஞ்சாலியையும் சூதில் வைத்து ஆடுகிறான். அந்த ஆட்டத்திலும் தோற்றுவிடுகிறான்.

பாஞ்சாலியை தங்களின் அரசவைக்கு இழுத்து வரும் துச்சாதனன் பாஞ்சாலி அணிந்திருந்த சேலையை உருவ, பாஞ்சாலி என்னை காப்பாற்ற யாருமே இல்லையா என அபயக் குரல் எழுப்ப “கடவுள்” கிருஷ்ணன் சேலையை கொடுத்து பாஞ்சாலியை காப்பாற்றுகிறார். இதன் பின்னர் பஞ்ச பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர் நடக்கின்றது, இதில் “கடவுள்” கிருஷ்ணன் பஞ்ச பாண்டவர்கள் பக்கம் நின்று அவர்கள் போரில் வெற்றி பெற துணைபுரிகிறார். கௌரவர்கள் எல்லோரும் போரில் கொல்லப்படுகிறார்கள். இந்த காப்பியத்தின் நீதியாக – பெண்ணை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய கௌரவர்கள் கொல்லப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள் என சொல்லப்படுகின்றது.  நிற்க.

பெண்ணை “பொருள்/உடமையாக‌” கருதி சூது விளையாட்டில் வைத்து விளையாடியது தவறு என்று யாருமே, ஏன் “கடவுள்” கிருஷ்ணனும் கூட கண்டித்து, அந்த தவறைச் செய்த தர்மனுக்கு தண்டனை வழங்காதது ஏன்? தர்மன் அந்த தவறைச் செய்யாமல் இருந்திருந்தால் பாஞ்சாலி பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு இருந்திருக்க மாட்டார்.  அப்படியென்றால் மகா பாரத காப்பியத்தில் நடந்த எல்லா பிரச்சனையின் மூல ஊற்று “தர்மனே”. இந்திய தண்டனைச் சட்டம் குற்றம் செய்தவனை விட, குற்றம் செய்யத் தூண்டியவனுக்கே அதிக தண்டனை தர வேண்டும் என்கிறது.

5651723.cms
இதன்படி பார்த்தால் தர்மனுக்கே அதிக பட்ச தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தர்மன் இறுதிவரை தண்டிக்கப்படவே இல்லை. அப்படியென்றால் தர்மனின் செயல் ஒரு குற்றமாகவே யாருக்கும், ஏன் “கடவுள்” கிருஷ்ணனுக்கும் கூட படவில்லை என்பது தானே பொருள். இங்கு ஆண் கடவுள்கள் கூட பெண்ணை உடமையாக பார்க்கும் ஒரு ஆண் தான் என்பதையே இது எடுத்தியம்புகிறது. அப்படிப்பட்ட ஒரு ஆண் (கிருஷ்ணன்) அந்த மகாபாரத போரின் களத்தில் நின்று சொன்னதாக சொல்லப்படும் “பகவத் கீதை”யின் மேல் தான் இங்கு நீதிமன்றங்கள் எல்லா வழக்கிலும் (பெண்கள் மீது நடைபெற்ற பாலியல் வன்முறை வழக்குகளுக்கும்) பாதிக்கப்பட்டவர்களையும், சாட்சிகளையும் சத்தியம் செய்யச் சொல்கிறது என்பது வருத்தத்திற்குறிய ஒரு உண்மை.

பெண்ணை ஒரு பொருளாக/உடமையாக பார்ப்பது அன்றைய மகாபாரதக் கதையின் காலத்திலிருந்து இன்றைய இந்தியா வரை அப்படியே தொடர்கின்றது, அந்த சிந்தனை/கருத்து தான் இன்று பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல்/உளப் பிரச்சனைகளுக்கு மிக முக்கிய காரணம்.

சந்தைக்கு வந்திருக்கும் ஒரு புதிய இருசக்கர வாகனத்தை வாங்கி ஓட்டினால் ஒரு பெண், அதுவும் அன்று திருமணமாகப் போகும் ஒரு பெண் கூட அப்படியே அந்த வாகனத்தை ஓட்டிச் செல்பவன் பின்னாள் வந்துவிடுவாள், ஒரு வாசனைத் திரவியத்தை தனது உடலில் ஒரு ஆண் பூசிக் கொண்டால் தனது கழுத்தில் உள்ள தாலியைக் கூட கழற்றி வைத்து விட்டு ஒரு பெண் வந்து விடுவாள் என்பது போன்ற மிகக் கேவலமான ஆணாதிக்கச் சிந்தனையை வைத்து தான் இங்கு பல பொருட்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன. இந்த சிந்தனையனைத்திற்குமான  மூல ஊற்று “பெண் என்பவர் ஒரு பொருள்/உடமை அவருக்கு என சொந்தமாக சிந்தனை எதுவும் கிடையாது என்ற அந்த மகாபாரத தர்மனின் சிந்தனையே”.

allu-arjun-hero-glamour-ad-photos1
இங்கு கலாச்சாரத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் மேற்கூறிய எந்தவொரு விளம்பரத்தையும் எதிர்த்து போராடியதில்லை, போராடவும் மாட்டார்கள், ஏனென்றால் அவர்களின் மதங்கள் எல்லாம் பெண்ணை ஒர் உடமையாக மட்டுமே பார்க்கிறது. ஆனால் இதே  (எல்லா மதத்தையும் பின்பற்றும்) ஆண்கள் கலாச்சாரம் கெட்டுப் போவதாகவும், பெண்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்றும் பேசுவார்கள். இது அயோக்கியத்தனமானது.

ஒழுக்கம் என்பது ஆண்/பெண் இருபாலருக்கும் பொதுவாக வைக்க வேண்டும். அதை விடுத்து அதை பெண்ணிற்கு மட்டும் வைப்பது தவறு மட்டுமல்ல, முட்டாள் தனம். எப்படி என பின்வரும் உரையாடல் மூலம் பார்ப்போம்.

கலாச்சார காவலர்கள் : பெண் ஒழுக்கமாக இருக்கணும்

நான் : சரி…

கலாச்சார காவலர்கள்: ஆண் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை

நான் :  ஒழுக்கமில்லாத ஆணால், ஒழுக்கமான பெண் பாதிக்கப்படுவாளே

கலாச்சார காவலர்கள் : ஆமாம், இருந்தாலும் பெண் ஒழுக்கமாக‌ இருக்க வேண்டும்..

நான் : உங்கள் கலாச்சாரத்தில் தீயைத் தான் வைக்க வேண்டும். ஒழுக்கம் வேண்டுமென்றால் அது இருபாலருக்கும் பொதுவாக தான் இருக்க வேண்டும், ஒருபாலருக்கு மட்டும் தான் ஒழுக்கம் என்றால் அதன் பெயர் ஒழுக்கமல்ல, கேவலம். அந்த கேவலம் தான் உங்கள் கலாச்சாரம் என்றால் அதை எதிர்க்க வேண்டியது பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரது கடமை…

பெண் என்பவரும் ஆணைப் போலவே ஒர் உயிர், ஆணுக்கு இருப்பது போலவே உணர்வுகள், சிந்தனைகள் எல்லாம் பெண்ணுக்கும் உண்டு. பெண் என்பவர் ஒர் வாகனத்தைப் போலவோ, அல்லது வீட்டைப் போலவோ  பொருளோ/உடமையோ அல்ல.  இந்த புரிதலை எல்லா ஆண்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்,  அதை நாம் (இந்த சமூகம்) தான் தொடர்ச்சியான பரப்புரைகளின் மூலம், விவாதங்களின் மூலம், கருத்து பரிமாற்றங்களின் மூலம் ஏற்படுத்த வேண்டும்.

எல்லா மதங்களின் புனித நூல்களும் இதே போல ஆண்களால் எழுதப்பட்டது தான், புனித நூல் என்று ஏற்றுக்கொண்டதாலேயே அதிலுள்ளவற்றை அப்படியே எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. சக பாலினமான பெண்ணிற்கும் நம்மைப் போலவே எல்லா உணர்வுகளும் உண்டு, அவர்களும் நம்மைப் போலவே ஆறறிவு கொண்ட சிந்திக்கும் மனிதர்கள் தான் என்ற புரிதலை நம்முள் பதிப்போம்.

—நற்றமிழன் – இளந்தமிழகம் இயக்கம்

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

2 comments

  1. தோழருக்கு முதலில் நன்றி. உடமைப் பொருள்ளல்ல பெண்கள் சக உயிரி என்பதை உரக்க சொல்கிறது கட்டுரை
    மகாபாரதம் மட்டும் அல்ல இராமயணமும் இன்னும் பிறவும் பெண்களை பொருளாக பாதுகாக்க வேண்டிய பண்டமாக சுட்டிக் காட்டுகின்றன.தர்மரை நோக்கி நீங்கள் எழுப்பிய கேள்வி சிறப்பு.

    • நீங்கள் கூறியுள்ளது போல எல்லா புனித நூல்களிலுமே இந்த ஆணாதிக்க பார்வை உள்ளது தோழர்.

Leave a Reply to Selvi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*