Home / அரசியல் / இந்தி தேசியம் ஆள்கிறது… நாம்? தமிழ் இந்து கட்டுரை சொல்லாமல் மறைத்தவை
அதானியின் வானூர்தியில் மோடி

இந்தி தேசியம் ஆள்கிறது… நாம்? தமிழ் இந்து கட்டுரை சொல்லாமல் மறைத்தவை

இந்தி தேசியம் ஆள்கிறது.. நாம்? என்ற தலைப்பில் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் கடந்த புதனன்று(மார்ச் 15) தமிழ் இந்து நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையை மேலோட்டமாகப் படித்தால் அவர் சொல்வதெல்லாம் சரி தானே எனத் தோன்றும் ஒரு தோற்ற மாயையை (Visual Illusion) உருவாக்கும் கட்டுரை இது. பெரும்பாலும் அவரது கட்டுரைகள் இது போலத் தான் இருக்கின்றது.

அதிகாரத்தின் கயிறுகள் யார் கையில் ?  என கேள்வி கேட்டு அந்த கேள்விக்கு டெல்லியில் இருக்கும் நிருபேந்திர மிஸ்தா, அஜித் டோவல் போன்ற சில தலைமை நிர்வாகிகளை  சுட்டுகின்றார்.  இவர்கள் அனைவரும் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் மோடியினால் பணியமர்த்தப்பட்ட கங்காணிகள் மட்டுமே.

உண்மையிலேயே மோடியை(இந்திய அரசை) இயக்குவது  பெரும் பணக்காரர்களாக சமஸ் குறிப்பிடும் அம்பானி, அதானி போன்றவர்களே. இவர்கள் தான் அரசை இயக்குபவர்கள். மோடியின் 500, 1000 ரூபாய் செல்லாமல் ஆக்கும் திட்டத்திற்கும் , டிஜிட்டல் இந்தியாவிற்கும்  அம்பானியின் ரிலையன்ஸ் மணி-க்கும் , ஜியோவுக்கும் , PayTM போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இருக்கும் தொடர்பு ஊரறிந்த ரகசியம்.

எப்படி கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனம் (இங்கிலாந்து ராணி) நம்மை நானூறு ஆண்டுகள் ஆண்டதோ, அதே போல 1990களில் தராளமயம், தனியார் மயம், உலக மயம் அமலாக்கப்பட்ட பிறகு பன்னாட்டு பெரு நிறுவனங்களும், உள்நாட்டு பெரு நிறுவனங்களும் தான் நம்மை ஆள்கின்றனர். ( 1990களுக்கு முன்னர் டாட்டா, பிர்லா போன்ற இந்திய முதலாளிகள் மட்டும் ஆண்டனர்)

இந்தி தேசியம் நம்மை ஆள்கின்றது என்கிறார் சமஸ், ஆனால் இந்தி தேசியத்தின் மூலம் நம்மை ஆள்வது அம்பானியும், அதானியும். இவர்கள் தடையின்றி இயற்கை வளங்களை கொள்ளையடித்து தங்கள் கஜானாவில் நிரப்புவதற்கு இவர்களுக்கு சாதகமாக அரசு சட்டம் இயற்றுகின்றது. முந்தைய காங்கிரசு அரசு செய்ததைத் தான் இன்றைய மோடி அரசும் செய்கின்றது.  என்ன காங்கிரசு அம்பானி, டாடாவை மட்டும் வளர்த்தது என்றால், அதனோடு சேர்த்து மோடி தன் நண்பர் அதானிக்கும் முக்கியத்துவம் கொடுத்து அனைவரையும் சேர்த்து வளர்த்து வருகின்றார்.

அதானியின் வானூர்தியில் மோடி

அதானியின் வானூர்தியில் மோடி

அம்பானி, அதானி உள்ளிட்ட 57 பெரு முதலாளிகளின் சொத்தும் இந்தியாவில் 70% மக்களுடைய சொத்தும் ஒன்று. அதாவது 57= 70,000,00,00. இந்த சமமற்ற சொத்து பங்கீட்டை சமஸ் தன் கட்டுரையில் எந்த விமர்சனமும் செய்யாமல் கள்ள மௌனம் காக்கின்றார். இது தான் இந்தியாவின், தமிழ்நாட்டின் முக்கியமான பிரச்சனை.

இதைப் போலத் தான் சட்டம் யார் கையில்? எனக் கேட்டு ராம் ஜெத்மலானி உள்ளிட்ட ஒரு சிலரின் பெயரை மட்டும் சொல்கின்றார் சமஸ். இவர்கள் நம் கண்களுக்கு முன்னே தெரியும் நபர்கள் மட்டுமே. உண்மையில் சட்டம் யார் கையில்?

10,000 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என வோடாஃபோன் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. அரசு நீங்கள் அதை கட்டத் தேவையில்லை, உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கட்டுங்கள் என வோடாஃபோனிடம் கெஞ்சி வருகின்றது(1). இதே அரசு தனி நபர் வருமான வரி கட்டவில்லை என்றால் அவர் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றது. நாட்டிற்கு 1.68 இலட்சம் கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக மத்திய தணிக்கை வாரியம் சொன்ன நிலக்கரி ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான குமாரமங்கலம் பிர்லா, ஜிந்தால் உள்ளிட்ட பெரு முதலாளிகள் இன்று  சுதந்திரமாக உள்ளார்கள்.

மாவோயிஸ்டு வேட்டை என்ற பெயரில் அரசு பழங்குடிகளை வேட்டையாடுவதை கண்டித்த பேராசிரியர். சாய் பாபாவிற்கு வாழ்நாள் தண்டனை, அதே நாளில் அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்த சுவாமி.அசிமானந்தா விடுதலை. மாருதி ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை, தொழிலாளர்களை இரவுடிகள் வைத்து அடித்த ஆலை நிர்வாகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு.

இங்கு மிகப்பெரும் ஊழலுக்கு காரணம் இந்த முதலாளிகள் தான் ஆனால் அவர்கள் இதுவரை எந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டதோ, சிறையில் அடைக்கப்பட்டதோ இல்லை. சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மட்டுமே எப்பொழுதும் பலிகடாக்கள் ஆக்கப்படுகின்றார்கள்.  சட்டம் எல்லாம் பெரு முதலாளிகளின் கைகளில் தான்.

“பணக்காரர்கள் சட்டத்தை ஆள்கின்றார்கள்
சட்டம் ஏழைகளை ஆள்கின்றது”

ஊடகங்கள் யார் கையில்? என்ற கேள்விக்கு CNN-IBN, Times Now,Times of India, The Hindu உள்ளிட்ட சில ஊடகங்களை சுட்டுகின்றது தமிழ் இந்து கட்டுரை.

அம்பானியின்  TV 18 நிறுவனத்தின் கீழ் மட்டும் 21 செய்தி ஊடகங்களும்(தமிழில் நியூஸ்18), 28 பொழுது போக்கு ஊடகங்களும் உள்ளன .(2)  அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள எல்லா பெரு ஊடகத்தையும் அம்பானி தனது நிறுவன விளம்பரங்களின் மூலமும், பணம் கொடுப்பதன் மூலமும் கட்டுப்படுத்தி வருகின்றார். (3,4,5,6)

இதனால் தான் அம்பானி நிறுவனம் செய்யும் ஊழல்கள் எதுவும் எந்த பெரு ஊடகத்திலும் வருவதில்லை, சில இணைய தளங்களிலும், சமூக வலைதளங்களில் மட்டுமே வரும். ஊடகங்களையும் இங்கு பெரு முதலாளிகளே ஆள்கின்றனர். எந்த ஊடகம் யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனத் விரிவாக தெரிந்து கொள்ள Who owns your media? என்ற கட்டுரையைப் படிக்கவும்.(3)

TheCaravan_Mediaownership_19012015

அதே போல போகிற போக்கில் “138 ஆண்டுகளுக்கு முன்பே (இந்திய‌)தேசிய பத்திரிகைகளுக்கு சவால் விடத்தக்க ஒரு ஆங்கில பத்திரிகை-தி இந்து இங்கு தொடங்கப்பட்டது” என சமஸ் தன் கட்டுரையில் கூறுகின்றார். தமிழகத்தில் “தி இந்து” பத்திரிகை தொடங்கப்பட்டது என்பது உண்மை தான் ஆனால் அது என்று தமிழக நலனைப் பற்றி பேசியது? தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள், அதனால் இலங்கை கடற்படை சுடுகின்றது என திமிராக செய்தி வெளியிட்டது “தி இந்து”. ஈழத்தமிழர்களை அழிப்பதில் இந்திய அரசிடம் பேரம் பேசி இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டதற்கு தானே இன்று “தி இந்துவின்” முதலாளியாக இருக்கும் என்.ராமிற்கு “சிங்கள ரத்னா” விருது வழங்கப்பட்டது.

“தி இந்து” ஆங்கில நாளிதழை பெரும்பான்மை தமிழக மக்கள் படிப்பதில்லை. தமிழகத்தில் தன் பத்திரிகை விற்கப்பட வேண்டும் என்றால் தமிழ் தேசியம் பேசி ஆகவேண்டிய கட்டாயம் அதற்கு இருக்கின்றது, அதனால் தமிழ் இந்துவில் மட்டும் அதைப் பேசுகின்றது. “தமிழ் இந்து” தமிழ் தேசியம் பேசும் அதே நேரத்தில் அதற்கு நேரெதிராக “தி இந்து” ஆங்கில பதிப்பு இந்தி(ய‌) தேசியம் பேசி வருகின்றது. இதற்கு பெயர் பச்சோந்தித்தனம்.

இங்கு நம்மை ஆளும் முதலாளிகள் தங்களுக்கு “இந்தி தேசியம்” தேவைப்படுவதால் அதனை அனுமதிக்கின்றனர் / தாங்குகின்றனர். நாளை “தமிழ் தேசியம்” தேவை என்றால் அவர்கள் அதனையும் அனுமதிப்பார்கள். இதை தான் மோடி புரிந்து கொண்டு இந்துத்துவத்தை முதலாளித்துவத்திற்கு பிடித்த மாதிரி மாற்றி குஜராத்தில் தனது ஆட்சியில் அமல்படுத்தி காட்டினார்.

குஜராத் மாதிரி என்பது காங்கிரசு(மன்மோகன்) மாதிரியை விட அதிக பலனை முதலாளிகளுக்கு தந்தது.  மன்மோகன் அரசு ஒவ்வொன்றையும் யோசித்து இந்திய நடைமுறைக்கு தகுந்த மாதிரி மாற்றி வாழைப் பழத்தில் ஊசி போல் ஏற்றியது பெரு முதலாளிகளுக்கு பிடிக்க வில்லை. எதையும் கண்டு கொள்ளாமல், மக்களை காலில் போட்டு மிதித்து தங்களது பணப்பையை மட்டும் நிரப்பும் சர்வாதிகார குஜராத் மாதிரி அவர்களுக்கு மிகவும் பிடித்தது. அதனால் மோடி வளர்ச்சியின் நாயகனாக முதலாளிகள் ஊடகங்களில் காட்டப்பட்டார்.

ஊடகங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பிய “படித்த” மக்கள் அதை அப்படியே நம்பினர். “படித்த” மக்கள் சொல்வதெல்லாம் சரியாக இருக்கும் என நம்பும் பாமர மக்களும் நம்பினார்கள். இப்படியாக மேலிருந்து கீழ்வரை மோடி பிம்பம் திணிக்கப்பட்டது. இப்படித் தான் மோடி இந்தியாவின் தலைவரானார். இப்படித் தான் ஜெயலலிதா மக்கள் முதல்வரானார்.

பெரு முதலாளிகளின் விருப்பப்படியே ஒரு நள்ளிரவில் மக்களிடம் இருந்த 500, 1000 ரூபாயை செல்லாமல் செய்து, அதை வங்கிகளில் கட்ட வைத்தார், இன்று வங்கிகள் அந்த காசை பெரு முதலாளிகளுக்கு கடனாக கொடுக்கின்றன. ரொக்க பரிமாற்றத்தை குறைத்து டிஜிட்டல் பரிமாற்றத்தை நோக்கி மக்களைத் தள்ளுவதன் மூலம் ரிலையன்ஸ் மணி,  PayTM போன்ற பெரு நிறுவனங்களின் பணப் பையை கமிசன் தொகையின் மூலம் நிரப்புகின்றார்.

eposter03

மோடி சொன்ன வளர்ச்சி, அச்சே தீன்(நல்ல காலம்) எல்லாம் பெரு முதலாளிகளுக்கானது. முதலாளிகளின் மனதை குளிர்விப்பது போலவே, தன்னை வளர்த்த ஆர்.எஸ்.எஸ் (சங் பரிவாரம்) இந்துத்துவ வெறியர்கள் நடத்தும் கொலை, கொள்ளைகளை கண்டும் காணாமல் இருந்து அவர்களையும் வளர்த்து வருகின்றார்.

“இந்துத்துவ வெறி” பெரு முதலாளிகள் அடிக்கும் கொள்ளையிலிருந்து மக்களை திசை திருப்புவதாலும், எதையும் கேள்வி கேட்க அனுமதிக்க மறுப்பதாலும் பெரு முதலாளிகள் அதனை கண்டு கொள்ளாமல், வளர்வதற்கு அனுமதித்து வருகின்றனர்.

இன்று தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களும் எதிர்கொண்டு வருவது இந்த பிரச்சனை தான். இதற்கு தமிழ் தேசியம் தீர்வாகுமா? இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள ஷிவ் நாடார் தமிழர் தான், காங்கிரசு கட்சியின் (சோனியா குடும்பத்தின்) பொருளாதாரத்தை கவனித்து வரும் ப.சிதம்பரம் தமிழர் தான். சன் தொலைகாட்சி குழுமத்தின் முதலாளி மாறன் தமிழர் தான், இன்று மோடி அரசில் இருக்கும் பொன்னார் கூடத் தமிழர் தான். இவர்களெல்லாம் தமிழர்களின் நலன்களை என்றைக்காவது பிரதிநிதித்துவப் படுத்தினார்களா?

இந்தி தேசியத்தில் உள்ள முதலாளிகளின் ஆதிக்கம், சாதி, மத, பாலின, வட்டார‌ பாகுபாடுகள் அற்ற சமத்துவ தமிழ் தேசியம் தான் நம்முன் உள்ள பிரச்சனைக்கு தீர்வாகுமே தவிர, சமஸ் கூறுவது போல நிறைய  தமிழ் “இந்திய ஆட்சி பணியாளர்களை” உருவாக்குவதோ, தமிழ் ஊடகங்களை உருவாக்குவதோ, தமிழன் சட்டம் படித்து தில்லி நீதிமன்றத்தில் வாதாடுவதோ தீர்வாகாது.

நற்றமிழன்.ப – இளந்தமிழகம் இயக்கம்.

மேலும் படிக்க / தரவுகள்

சமஸ் கட்டுரைக்கான சுட்டி –

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/article9584656.ece

1) http://www.livemint.com/Companies/ryhW0B9yhCYYHhZ995zyPI/Tax-department-to-challenge-HC-ruling-in-Vodafone-case.html

2) https://en.wikipedia.org/wiki/Network_18

3) https://www.newslaundry.com/2014/02/05/who-owns-your-media-4

4) http://www.caravanmagazine.in/vantage/the-big-five-the-media-companies-that-the-modi-government-must-scrutinise-to-fulfill-its-promise-of-ending-crony-capitalism

5) https://sabrangindia.in/article/almost-all-tv-channels-are-controlled-mukesh-ambani-threatening-independent-journalism-p

6) http://www.sify.com/news/mukesh-ambani-could-own-every-journalist-in-the-next-five-years-p-sainath-news-columns-qetmqMigfbgae.html

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*