Home / அரசியல் / “சாதியம், பெண்களின் அடிமை நிலை” – மீனா மயில்

“சாதியம், பெண்களின் அடிமை நிலை” – மீனா மயில்

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு என்ற ஒன்று உள்ளது என இருவர் கூறியுள்ளார்கள். பெண்களுக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏராளமான பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளின் பிறப்பிடம் சாதி..சாதியின் பிறப்பிடம் மதம். இந்த நாட்டின் அடிப்படை பிரச்சனையாக நான் கருதுவது சாதி. இன்றைய இந்தியா இரண்டு பிரிவாக உள்ளது.

1. சேரி இந்தியா
2. ஊர் இந்தியா

கிராமங்கள் மட்டுமல்ல, நகரங்களும் இவ்வாறு தான் உள்ளன. வர்ணாசிரமம் மனிதர்களை நான்கு வகையில் தான் பிரித்துள்ளதா என்றால் இல்லை. 6000 சாதிகளாக பிரிந்துள்ளார்கள். சாதியால் பிரிக்கப்பட்ட அந்த பிரச்சனை. சாதி ஒழிப்பின் மூலம் தான் சரிசெய்யப்பட வேண்டும். இங்கு ஒரு குழந்தை சாதியுடன் தான் பிறக்கின்றது. இறக்கும் வரை சாதியை சுமந்து கொண்டு தான் செல்கின்றது. மதம் பிடிக்கவில்லை என்றால், கடவுள் பிடிக்கவில்லை என்றால் நாம் அதை மாற்றிக்கொள்ள சட்டம் நமக்கு உரிமை கொடுக்கின்றது. ஆனால் சாதியை மாற்றிக்கொள்வதற்கான உரிமையை சட்டம் வழங்கவில்லை. அவ்வாறு இருப்பின் இந்நேரம் தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லாம் பார்ப்பனர் சாதிக்கு மாறி இருப்பார்கள். தலித் மக்கள் இன்றும் சாதிய இழிவை சுமந்து கொண்டு தான் திரிகின்றார்கள். சத்ரபதி சிவாஜி ஒருமுறை நாம் பார்ப்பனராக ஆக முடியாதா என்று பல தரப்பட்ட பார்ப்பனர்களையும் அழைத்து கேட்க, அவர்கள் பார்ப்பனராக பிறப்பவன் மட்டுமே பார்ப்பானாக முடியும். நீங்கள் சத்ரியராக பிறந்த இழிவை சுமந்து கொண்டு தான் இருக்க வேண்டும் என்று கூறிச் சென்றார்கள்.

unnamed

இங்கே சமூகத்தில் பல‌ புனைவுகள்(Myth) உண்டு.

புனைவு 1: கல்வி சாதியை ஒழித்து விடும். ஆனால் கல்வி சாதி உணர்வை மாற்றவில்லை என்பது தான் உண்மை. நமக்கு சமூக வரலாறாக கற்பிக்கப்படுபவை எவை சாதி இந்துக்களான காந்தி, நேருவைப் பற்றிய நிகழ்வுகளும், வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி மட்டுமே, ஆனால் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நடந்த சாதி எதிர்ப்பு போராட்டம் நமக்கு கற்பிக்கப்பட வில்லை(அதாவது நமது பாடப் புத்தகங்களில் இல்லை). தீண்டாமை பற்றிய விழிப்புணர்வு சரியாக நமக்கு கற்றுத்தரப்படவில்லை.

படிச்சா சாதி போயிருக்கணும்னா…இந்நேரம் 65 விழுக்காடு சாதியில்லாமல் போயிருக்க வேண்டும்(கல்வி கற்றோர் விழுக்காடு 65 எனக்கொள்க). கல்வியால் சாதி ஒரு பொழுதும் போகாது.

திரு.நாராயணன் அவர்கள் ஒரு தலித் சாதியைச் சேர்ந்தவர். முதலில் IFS படித்து (அந்த காலத்து IAS), முதலில் கவர்னராகவும், பின்னர் துணை குடியரசுத்தலைவராகவும், இறுதியாக இந்தியாவின் குடியரசு தலைவரானார். ஆனால் இந்தியாவின் முதல் குடிமகனான பின்ன‌ரும் கூட அவர் பிறந்த ஊரில் அவர் செருப்பு அணிந்து செல்லமுடியாமல் ஊரார் அவரை தடுத்தார்கள். நாட்டின் முதல்குடிமகனுக்கே இது தான் நிலை.

unnamed1

புனைவு 2: நகரமயமாக்கல் சாதியை ஒழித்து விட்டது. இதுவும் கூட முற்றிலும் தவறான ஒரு கருத்தே.
உதாரணத்திற்கு சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள், அதுவும் கூட

வட சென்னை (வியாசர் பாடி, இராயபுரம்) சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட மக்களும் அதிகம் வாழும் பகுதி.

தென் சென்னை (மயிலாப்பூர், மந்தைவெளி) பார்ப்பனர்கள், ஆதிக்க சாதி மக்கள் அதிகம் வாழும் பகுதி. என்றே பிரிந்துள்ளது. சேரி இந்தியா, ஊர் இந்தியா கட்டமைப்பில் தான் சென்னையும் உள்ளது.

சென்னை என்ற நகரத்தை உருவாக்கியவர்களை தனியே பிரித்து வைத்து விட்டு நகரம் வளர்கின்றது. வட சென்னையில் இருப்பவர்கள் குடும்பம், குடும்பமாக (வளர்ச்சி என்ற பெயரால்)நகரத்தை விட்டு வெளியே எறியப்படுகின்றார்கள். ஆனால் இதையே தென் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு குடும்பத்தை உங்களால் அசைக்க முடியுமா?

மேலும் நகரங்களில் யார் சாதி பார்க்கின்றார் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. நீங்கள் எந்த ஊர், நீங்கள் ஒரு மொழியை எப்படி பேசுகின்றீர்கள் (Dilect), என்ன சாப்பிடுகின்றீர்கள் என்பதை வைத்து அவர்கள் உங்கள் சாதியை உங்களை கேட்காமலேயே கண்டுபிடித்துவிடுவார்கள். இதே சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்று. இந்திய ஆட்சி அலுவலராக (IAS) பணியாற்றிய ஒருவருக்கு வீடு கொடுத்த ஒரு மார்வாடி குடும்பம் அவர் குடிவந்த சில தினங்களிலேயே வீட்டை காலி செய்யச் சொல்லியது. அவர்கள் அதற்கு கூரிய காரணம் நீங்கள் உங்கள் சாதியை எங்களிடம் கூறாமல் மறைத்து விட்டீர்கள். நீங்கள் பசுவை சாப்பிடுபவர்கள், நாங்கள் ப‌சுவை கும்பிடுபவர்கள் என்று கூறியது.

காதல் சாதியை அழித்து வருகின்றது. காதலுக்கும் சாதிக்குமான மோதலில் சாதி தான் வெற்றி பெற்று வருகிறது. இங்கே இந்தியாவில் திருமணத்தின் மூலம் தான் சாதி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகின்றது. ஒருவர் என்ன வியாக்கியானம் பேசினாலும் இறுதியில் அவரது திருமணம் சாதியின் அடிப்படையிலேயே இங்கே நடக்கின்றது. இதை நம் முகத்தில் அறைந்து சொல்வது இன்றும் நடக்கும் “கௌரவக் கொலைகள்(Honour killings).

image001

உதாரணத்திற்கு இரண்டு…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கீதா(கம்பளத்து நாயக்கர் சாதி) என்பவர் பாலச்சந்தர்(தலித்) என்பவரை காதலித்து திருமணமான பின்னர் சங்கீதாவின் குடும்பத்தினர் சங்கீதாவின் வீட்டுக்கு சென்று காவல்துறையின்(சாதியை கட்டிக்காக்கும் நிறுவனம்)  மூலம் கட்டப்பஞ்சாயத்து செய்து அவர்கள் இருவரையும் பிரிக்கின்றார்கள். பின்னர் சங்கீதாவை அந்த பெற்றோர்கள் தங்கள் ஊருக்கு கூட்டிச் செல்கின்றார்கள். இந்த பெண் தலித் சமூகத்தை சேர்ந்தவனுடன் உறவு கொண்டு விட்டதால் ஊருக்கு தீட்டுப்பட்டு விட்டதாக கூறி ஊரையே கழுவி விடுகின்றார்கள். மேலும் சங்கீதாவை சங்கிலியால் கட்டி வைத்து நாய்க்கு உணவு வைக்கும் தட்டில் உணவை வைக்கின்றார்கள்(தலித் சமூகத்தை அம்மக்கள் பார்க்கும் நிலையில் அந்த பெண்ணை வைக்கின்றார்கள்). மூன்றாம் நாள் சங்கீதாவிற்கு விச ஊசி போட்டு சிறுக, சிறுக அந்த பெண் உயிரிழப்பதை அவர்கள் காண்கின்றார்கள். சங்கீதா இறந்த பின்னர் அவர் சாம்பலை எடுத்து வந்து ஊரைச் சுற்றி தூவிவிடுகின்றார்கள்.

இரண்டாவது நிகழ்வு…..நிரூபமா ராவ் என்ற பெண் திடீர் என்று இறந்துவிடுகின்றார். முதலில் அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக என்றும், பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையிடம் கூறியுள்ளார்கள். ஆனால் உடல் அறுவை சோதனையில் அவர் மூச்சு முட்டி இறந்ததாகவும், மேலும் அந்த பெண் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததும் அறிக்கையில் வந்தது. இவர் ஒரு பத்திரிகையாளராக இருந்ததால் இந்த விசாரணைக்கு அழுத்தம் அதிகரிக்க, காவல்துறை பெற்றோரை மேலும் விசாரிக்கையில் பார்ப்பனரான எம் மகள் வேறு சாதியைச் சேர்ந்த பையனுடன் திருமணமாகி அவன் கருவைச் சுமந்ததால் அந்த பெண்ணின் அம்மாவே அவளை கொன்ற உண்மை வெளிவந்தது.

பெண்கள் எல்லோரையும் நாம் ஒரே தட்டிலேயே வைத்துப்பார்க்க முடியாது. பெண்களுக்கும் சமூகம் சாதிய வேறுபாட்டை பிறப்பிலிருந்து பயிற்றுவிக்கின்றது. ஆணுக்கு சொத்தாகவும், பெண்ணுக்கு கலாச்சாரமாகவும் சாதி இங்கே பயிற்றுவிக்கப்படுகின்றது. பெண்கள் அணியும் தாலியில் கூட‌ இங்கு சாதி இருக்கின்றது(ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொருவிதமாக தாலியைச் செய்வர்). ஆதலால் இங்கு பெண்கள் அனைவரையும் ஒரே குழுவாக பார்ப்பது சிரமமாகும்.

khairlanji-meera-kumar1-300x279

கயர்லாஞ்சி பகுத்தறிவு கொண்டவர்களை உலுக்கிய ஒரு கொடூர நிகழ்வாகும். ஆனால் இந்த நிகழ்விற்கு ஊடகங்களில் போதிய கவனம் கொடுக்கப்படவில்லை. போட்மாங்கே என்ற ஒருவருடைய குடும்பம் கயர்லாஞ்சிப் பகுதியில் வசித்து வந்தார்கள். அவர் தன் குழந்தை படிக்க வைத்தார். மேலும் தன் நிலத்தில் தானே விவசாயம் செய்து சுயமரியாதை மிக்க வாழ்வு வாழ்ந்து வந்தார். அவரது பெண்ணான சுரேகா மிகவும் உறுதியான பெண்ணாக வாழ்ந்து வந்தார். அதெப்படி ஒரு தலித் குடும்பம் இவ்வாறு இருக்கலாம் என்று ஆத்திரம் அடைந்த சாதி இந்துக்கள்(ஆதிக்க சாதியினர்) ஆத்திரம் அடைந்து போட்மாங்கே(அப்பா) ஊரில் இல்லாத நேரம் பார்த்து அந்த குடும்பத்தை தாக்கி இருக்கின்றார்கள். இதில் மிகவும் கொடூரமான நிகழ்வாக அம்மாவையும், அவரது பெண்களையும் அவர்களது  மகன்களையே வன்புணர்ச்சி செய்யச் சொல்ல, அவர்கள் மறுக்கவே, அவர்களை கொன்று, அந்த பெண்களின் பிறப்புறுப்பில் க‌த்தி போன்ற கூரான ஆயுதங்களை பாய்ச்சியுள்ளார்கள்.  ஏன் அந்த ஊரில் பெண்களே இல்லையா? இருந்தார்கள்…ஆனால் அந்த பெண்கள் மனித உணர்வே அற்று, இந்த கொடூர நிகழ்வைப் பார்த்து சிரித்து மகிழ்ந்து சாதி இந்துக்களாக இருந்தார்கள்.

திண்ணியத்தில் பஞ்சாயத்து தலைவியான இராஜலட்சு என்ற பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவரை அடித்து, அவர்களின் சாதியின் பெயரைச் சொல்லி இழிவாக திட்டி, மனித மலத்தை கரைத்து அவர்கள் இருவரின் வாயிலும் ஊற்றிய பிறகு தான் அவரது ஆத்திரம் அடங்கியுள்ளது. இங்கு பெண்களும் சாதிய உணர்வோடு தான் உள்ளார்கள். இங்கே பாலினப்பாகுபாடுகள் இல்லாமல் சாதி பயிற்றுவிக்கப்படுகின்றது.

சாதி ஒழிந்து விட்டது என்பதில் துளியும் உண்மை இல்லை. குழந்தைகள், ஆண், பெண் என எல்லோரிடமும் சாதி இருக்கின்றது. பெண்களுக்காக கொடுக்கப்படும் 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக உள் ஒதுக்கீடு தேவை என்பதை மேற்கூரிய உதாரணங்கள் நமக்கு உணர்த்துகின்றன. உள் ஒதுக்கீடு எல்லாம் வேண்டாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிக நேர்மையாக சரியான பங்கீட்டை அவர்கள் தருவார்களா என்றால் இல்லை.

உயர் சாதியினருக்கு மிகவும் பிடிக்காத வார்த்தைகளில் ஒன்று “ஒதுக்கீடு”. 3000 ஆண்டு கால இழப்பை சரிசெய்யும் சிறு மருந்தாக இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதைக் கூட அவர்களால் பொறுத்தக்கொள்ள முடிய வில்லை. டாக்டர். அம்பேத்கர் சட்டமியற்றியதால் என்னால் இங்கு பேச முடிகின்றது. 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பற்றி பேசும் பெண்கள், உள் ஒதுக்கீடு பற்றியும் பேச வேண்டும்.

நான் எனது 10 ஆண்டு கால ஊடகத்துறை பணியில் நானும் பாலின பாகுபாட்டை பார்த்திருக்கின்றேன். நான் மதத்தை கடந்து வந்து விட்டதால் அவை எனக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. இந்து மதத்தை தூக்கிக் கொண்டிருக்கும் வரையில் நீங்கள் பெண்ணடிமை தனத்தையும் தூக்கிக்கொண்டு தான் திரிகின்றீர்கள். பெண்ணடிமைத் தனத்தை பாதுகாப்பது இந்து மதம். இந்து மத‌த்தை அழிக்கக்கூடிய‌ போராட்டத்தை எல்லோரும் முன்னெடுக்க வேண்டும் என்று நான் இந்த உரையின் தொடக்கத்தில் கூறிய இருவரும் கூறியுள்ளார்கள், அவர்கள் தான் டாக்டர்.அம்பேத்கர், தந்தை.பெரியார்.

உரை குறிப்பு, தட்டச்சு – நற்றமிழன்.ப – இளந்தமிழகம் இயக்கம்

……

இளந்தமிழகம் இயக்கம் (அன்று Save Tamils Movement)  மார்ச் 8 -2011 சர்வதேச உழைக்கும் பெண்கள் நாளை கொண்டாடுவதற்கும், பெண்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கும் 27.03.2011 லயோலா கல்லூரியில் நடத்திய “நியூயார்க்கிலிருந்து திருப்பூர் வரை” கருத்தரங்கில் கலந்து கொண்ட தோழர்.மீனா மயில் பேசிய உரையின் வரி வடிவம்

unnamed

About விசை

One comment

  1. Nice article. Thought to add this. Caste comes from religion and religion comes from god.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*