Home / சமூகம் / குழந்தை வளர்ப்பு – பெண்ணின் பணி மட்டும் தானா?

குழந்தை வளர்ப்பு – பெண்ணின் பணி மட்டும் தானா?

குழந்தை வளர்ப்பு பெண்ணின் பணி மட்டும் தானா ? இல்லை ஆண் – பெண் இருவருக்கும் பங்கு உண்டா, என்பதைப் பற்றி பேசும் முன்பு,   குழந்தை வளர்ப்பு என்றால் என்ன என்பதைச்  சிறு அலசலுக்கு பிறகு தொடருவோம்.

குழந்தை வளர்ப்பு என்பது என்ன ?

பொதுவாக குழந்தை வளர்ப்பு என்பது குழ‌ந்தைகளுக்கான உணவூட்டம், பராமரிப்பு, விளையாட்டு, கல்வி போன்ற கூறுகளாக மட்டுமே சமூகத்தின் பார்வையில் சுருங்கி நிற்கிறது. இவை மட்டும் தான் குழந்தை வளர்ப்பா என்றால் நிச்சயமாக இல்லை. இவை குழந்தைகளின் எதிர்காலத்துக்கும், உடல்நலனுக்கும், பொறுப்புள்ள சமூகத்தின் அங்கமாக மாற்றுவதற்கும்  பயன்படும் கருவிகள் மட்டுமே.

இந்த அடிப்படை தேவைகளோடு நின்றுவிடாமல், குழந்தைகளின் பண்பு, நன்னடத்தை, மாற்று சிந்தனை, சமூக அறிவு இவற்றை வளர்த்தெடுக்கும் பொறுப்பும் பெற்றோர்களின் கடமையாகிறது.  “நல்ல பண்பு”, “நன்னடத்தை” என்றதுமே, வெறுமனே குழந்தைகளை அமர வைத்து “நன்னெறி கதைகள்” கூறி நல்லொழுக்கத்தை போதிக்கும் பணி அல்ல.  குழந்தைகளின் வளர்ச்சிப் போக்கில் அவர்கள் உளவியலை நலம்பட‌ மாற்றியமைக்கும் ஓர் கூட்டுச் செயல்பாடு. இச்செயல்பாட்டில் அப்பா, அம்மா இருவரின் பங்கும் முக்கியமானதாக இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஓர் குழந்தை வளரத் தொடங்கும் போதே, அம்மாவைப் பார்ப்பதற்கும், அப்பாவைப் பார்ப்பதற்கும் பெரிய வேறுபாடுகளை இயல்பாகவே கற்றுக் கொள்கிறது. அப்பா நல்ல உடைகளை அணிந்து கொண்டு வேலைக்குச் செல்கிறார். குடும்ப பொருளாதாரத்தைப் பார்த்துக் கொள்கிறார். அம்மா வீட்டு வேலைகளை மட்டும் செய்யக் கூடியவள். எப்போதும் வேலை செய்து கொண்டு, வியர்வை நாற்றத்தோடு, எஞ்சியதை உண்டு வாழக் கூடியவளாக குழந்தையின் மனதில் பதிகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஆண் மரியாதைக்குரியவன், பெண்ணிற்கு மரியாதை கொடுக்கத் தேவையில்லை என்பதை அப்பாவிட‌மிருந்தும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடமிருந்தும் அக்குழந்தை கற்றுக் கொள்கிறது.  குறிப்பாக தன் அப்பா “அம்மாவை” ஒருமையில் அழைப்பதையும், அவள் வீட்டில் இருப்பவள், அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று ஒதுக்குவதையும் ஒரு குழந்தை இயல்பாக உள்வாங்கிக் கொள்கிறது.

அது மட்டுமின்றி, ஆண் , பெண் குழந்தைகள் வளர்ப்பில் நாம் பெரிய பாரபட்சத்தைக் காட்டுகிறோம். ஆண் குழந்தைகளுக்கு கூடுதல் உணவு, அடுக்களையில் உனக்கென்ன வேலை ? ஆம்பளப் புள்ள அழலாமா, பொம்பளை மாதிரி ஏன்டா அழுவுற, போன்றவைகளை பெண்களாகிய நாமே இயல்பாக பேசுகின்றோம். ஆணுக்கு பெண் சரிநிகர் என்கிற கருத்து முளையிலே கிள்ளி எறியப்படுகிறது.  பெண் மென்மையானவள், அதிர்ந்து பேசக் கூடாது, சத்தம் போட்டு சிரிக்கக் கூடாது போன்ற அறிவுரைகள் பெண்களுக்கு வாய்க்கக் கிடைக்கின்றன.

1920

ஆண்பிள்ளைகள் விளக்கமாறை தொடக்கூடாது, வீட்டை சுத்தம் செய்வது பெண்ணின் கடமை, இடுப்பில் குடத்தை வைத்து தூக்குவது பெண்மைத்தனம், அப்பா பேசும் பொழுது ஆண் குழந்தை மட்டுமே முன் நின்று பேச வேண்டும், பெண் குழந்தை வீட்டிற்குள் சென்று விட வேண்டும்  போன்ற முறையற்ற பழக்கங்கள் தந்தையும், தந்தை வழியாக தாயும் குழந்தைகளிடம் திணிக்கும் போக்கையும் பார்க்கின்றோம்.

இந்த பாரபட்சம், ஆண் பிள்ளைகள், பெண்கள் மீது எத்தகைய ஆதிக்கத்தையும் செலுத்தலாம் என்ற நேரடி செய்தியை அவர்களுக்கு சொல்லித் தருகிறது. இப்படியான வளரும் குழந்தைகள்,  பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் செய்யமுடிகிறது. ஒரு குற்றச் செயல் நடக்கும் போது, அந்த பெண் ஏன் 9 மணிக்கு மேல் வெளியே போகிறாள், அவள் ஏன் அப்படி ஆடை அணிகிறாள் போன்ற கேள்விகளையும் கேட்க வைக்கிறது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளின் போது, பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் சமூகத்தைத் தான் நாம் வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த வேறுபாடுகள், பாரபட்சங்கள் எல்லாம் களையப்பட்டு,  பெண்களை நாம் சக மனிதராக, சமமாக நடத்த வேண்டும் என்று குழந்தைகளுக்கு போதிப்பதை விட, அதை நடைமுறை வாழ்வில் தான் நாம் அவர்களுக்கு உணர்த்த முடியும். இந்த நடைமுறை வாழ்வில் கண்டிப்பாக ஆணுக்கும்(தந்தைக்கும்) ஒரு முக்கிய பொறுப்பு இருக்கிறது.

ஒழுக்கம் என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது, அதைப் போலவே வீட்டுப் பணிகள் அனைத்தும் இருவருக்கும் சமமாக பகிர்ந்து கொடுக்க வேண்டும். இதை வெறும் வார்த்தைகளால் வலியுறுத்துவதும் மட்டும் குழந்தை வளர்ப்பில் மாற்றத்தை ஏற்ப்படுத்தாது. தங்களுக்குள் சமத்துவத்துடன் வாழ்வதும் அந்த முன் உதாரணத்தை காட்டி தங்கள் குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பும் தாய், தந்தை இருவருக்குமே சரிபாதி உள்ளது.

பெண் உடமைப் பொருள் அல்ல என்பதை ஆண்களுக்கு வலியுறுத்த, அனைத்து பாலினத்தவர்களுடனும் சமத்துவத்துடன் பழக வேண்டும் என்பதை குழந்தை வளர்ப்பில் இருந்தே தாயும் தந்தையும் வலியுறுத்த வேண்டும். இந்த வகையில் குழந்தை வளர்ப்பில் தாயோடு தந்தையும் கூடுதல் பொறுப்புடையவராக இருக்கின்றார். இவை வெறும் அறிவுரையாக அல்லாமல் நடைமுறை வாழ்வில் நம் வீட்டில் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்று ஒவ்வொரு  ஆணும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள். இக்கேள்விகளுக்கு விடை காண, குழந்தைகளைப் பண்பானவர்களாக சமத்துவத்தை போற்றுபவர்களாக வளர்த்திட தனக்கும் கூடுதல் பொறுப்புண்டு என்பதை உணர்ந்து ஆண்கள் செயல்பட வேண்டும்.

சமீம் – இளந்தமிழகம் இயக்கம்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*