Home / சமூகம் / குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு

குழந்தைகள் இல்லாத உலகத்தை நாம் ஒரு கணம் கூட சிந்திக்க இயலாது. ஒரு குழந்தையின் வரவு அக்குடும்பத்திற்கு மட்டும் அல்ல, கணவன் மனைவி உறவையும் மேலும் பலப் படுத்துகிறது. பெரும்பாலான குடும்பங்களில் இன்றளவும் குழந்தைப் பராமரிப்பு பெண்ணின் (அம்மா) கடமையாகவே எண்ணப்படுகிறது. ஆணின் (அப்பா) கடமை பொருள் ஈட்டுவது  என்ற நிலையே இருக்கிறது.

குழந்தை வளர்ப்பில் தாய், தந்தை இருவருக்கும் சம பங்கு இருப்பதாகவே கருதுகிறேன்.  என் கணவர் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் என் குழந்தைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டல், சோறு ஊட்டுதல், தூங்க வைத்தல், ஆய் போனால் கழுவுதல் என எல்லா வேலைகளையும் செய்வார்.  இதை செய்வதில் என் கணவர் எந்த வித கௌரவமும் பார்ப்பதில்லை. குழந்தையின் அன்பை அதிகம் பெருகிறார், மனம் மகிழ்ச்சி அடைகிறார். உங்கள் குழந்தையின் பிஞ்சு விரல்கள், முத்து இதழ்கள், உங்கள் மேல் தொடும் தருணங்கள் இனிமையும் இன்பமும் கூட.

வேலைக்கு போகும் பெண்கள் வீட்டில் குழந்தை பேணுவதில் பங்களிப்பு ஓரளவு இருக்கிறது. ஆனால், வீட்டில் இருக்கும் பெண்கள் நிலைமை மோசம். குழந்தையைப் பார்த்துக் கொள்வதை விட வேறென்ன வேலை என்ற எண்ணம்.

தாய், தந்தை இருவரும் சேர்ந்து  குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் போது, அக்குழந்தை தானாகவே ஆண் / பெண் என்ற பாகுபாடு இன்றி வளர்கிறது. என் தந்தை வீட்டைத் தூய்மை செய்வது, சமைப்பது, துவைப்பது என அனைத்து வேலைகளையும் செய்வார். அதை பார்த்து வளர்ந்த என் சகோதர‌ர்களுக்கும் வீட்டு வேலைகளை செய்வதில் எந்த தயக்கமும் இல்லை.

ஆணுக்குப் பெண் சமம் என வாய்ச் சொல்லில் உங்கள் குழந்தைக்கு அறிவுரைக் கூறுவதை விட்டு அவர்கள் முன் வாழ்ந்து காட்டுங்கள். குழந்தைகள் நம் சொல்லை அள்ள செயலைத் தான் பார்த்து வளர்கின்றன. தந்தையும் வீட்டு வேலை செய்யும் பொழுது, வீட்டு வேலை பெண்களுக்கானது என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வராது. குழந்தைகளையும் சிறு வேலைகளில் உதவ செய்யுங்கள்.

Child Care-jpg-934

குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்கும் போது ஆண் குழந்தைக்கு பந்து, மட்டை, கார் போன்றவையும், பெண் குழந்தைக்கு பார்பி டால், சொப்பு சாமான்(சமையல் பாத்திரங்கள்), கரடி பொம்மை வாங்கி தருவது நம் பழக்கத்தில் உள்ளது. இந்த பழக்கத்தை பெற்றோர் ஆகிய நாம் தான் மாற்ற வேண்டும். பிங்க் நிறம் பெண் குழந்தைகளுக்கும், பிங்க் தவிர்த்து மற்ற நிறங்கள் (பெரும்பாலம் நீலம்) ஆண் குழந்தைகளுக்கும் என்று வலியுறுத்தி வளர்த்து வருகிறோம். எல்லா பொருட்களும், எல்லா நிற‌ங்களும் பொதுவானது என‌ சொல்லி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. அது போலவே ஆண், பெண்னை விட உடல் வலிமையானவன் என்ற எண்ணம் ஊற்றியே வளர்க்கிறோம். வீட்டில் ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை விட அதிக உணவு தேவை என்று உணவு பறிமாறுவதில் வேறு படுத்தல் தவறு. இயற்கையில் உடல் அமைப்பு இரு பாலருக்கும் வேறு பட்டாலும், அவர்களின் வளர்ச்சிக்கு ஒரே அளவான சத்தான உணவு தேவை என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஒரு 5 வயது சிறுமி பேண்ட்-சட்டை ஆண்கள் தான் அணிய வேண்டும், அதனால், எனக்கு அணிய விருப்பம் இல்லை என்கிறாள். தான் சிறுவனை விட வேகமாக ஓட முடியாது என்று சொல்கிறாள். இதைப் பார்க்கும் பொழுது நாம் மோசமான தலைமுறையினரை உருவாக்கிக் கொண்டு உள்ளோமோ என எண்ணம் தோன்றுகிறது. நான் அந்த குழந்தையிடம், ”நீ பேண்ட், சட்டை அணிவது தவறு இல்லை உனக்கு எந்த உடைப் பிடித்து இருக்கிறதோ அதை போட்டுக்கோ. சிறுவனை விட வேகமாக ஓட முடியும், உன் மனதில் தான் வலிமையில்லை” என்றேன்.

”ஆம்பள புள்ள பொட்டபுள்ள மாதிரி அழக்கூடாது”, ”ஆம்பள சிங்கம்ல நீ”, “பொம்மள புள்ள கோவப்பட கூடாது, அடக்கமா இருக்கனும்” போன்ற சொல்லாடல் தன் பேரன், பேத்தியிடம் சொல்லும் தாத்தா, பாட்டிகள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். கோபம், வெட்கம், அழுகை, சந்தோசம் போன்ற உணர்ச்சிகள் இரு பாலருக்கும் சமம் தானே!! இதில் பேதம் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? பெண்களுக்கு கோபம் இல்லாமல் இருக்க, அவர்கள் உயிரற்ற பிணமா??

ஆணோ பெண்ணோ, அவர்களது உடல் அமைப்பு, மாதவிடாய்  , எதிர் பாலினத்தின் உடல் பிரச்சனைகள் ஆகியவற்றைப் பற்றிய அறிவு, விழிப்புணர்வு தேவை.

பாலியல் கல்வி வீட்டிலிருந்தே தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம். பொத்திப் பொத்தி வளர்க்க பெண்கள் பொக்கிசமோ, அருங்காட்சி பொருளோ இல்லை. இயற்கையில் இயல்பாய் இருப்பதை பேச பெற்றோர் எந்த தயக்கமும் காட்டத் தேவையில்லை.

உஙகள் குழந்தைகளை வலுவான தன்னம்பிக்கையுடன் வளர, சிண்ட்ரெல்லா , இளவரசி, snow white, sleeping beauty போன்ற கற்பனை கதைகள் சொல்லாமல், நிஜ வாழ்க்கையில் சாதனைப் புரிந்த கல்பனா சாவ்லா, மேடம் கியூரி, ராணி லட்சுமி பாய், மலாலா , ஐன்ஸ்டீன், சி. வி. ராமன், தாமஸ் ஆல்வா எடிசன்  போன்ற பலரின் வாழ்க்கையினை கதைகளாகச் சொல்லி வளர்க்க வேண்டும்.

இரு பாலரும் சமம் என்ற எண்ணத்தை ஆண், பெண் குழந்தைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டும்.  நல்ல சிந்தனை, ஆற்றல், எண்ணம் கொண்ட தலைமுறையை உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

சமந்தா – இளந்தமிழகம் இயக்கம்

நன்றி – புகைப்படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

About சம‌ந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*