Home / FITE சங்கம் / காக்னிசென்ட் நிறுவனத்தின் கட்டாய பணி நீக்கத்தைத் தடுப்போம்!
17757241_1852886351647744_6355633845977303810_n

காக்னிசென்ட் நிறுவனத்தின் கட்டாய பணி நீக்கத்தைத் தடுப்போம்!

மறுபடியும் ஒரு அப்ரைசல் சீசன் வந்துவிட்டது.

வருடம் முழுக்க இரவும் பகலும் உழைத்துக் களைத்த நாம் ஊக்கத் தொகைகளும், பணிஉயர்வுகளும் மழையாக பெய்யும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

ஆனால் பலருக்கு கிடைக்கவிருப்பது அதிர்ச்சிதான்.டி.சி.எஸ், சின்டெல், ஐ.பி.எம்.ஐத் தொடர்ந்து இப்போது காக்னிசன்ட் தனது ஊழியர்கள் 6,000 பேரை வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறது.

ஆம். காக்னிசன்ட் (சி.டி.எஸ்) தனது ஊழியர்களை பணி விலகல் கடிதம் கொடுக்கும்படி வற்புறுத்தி வருகிறது. கடந்த 3 வாரங்களாக காக்னிசன்ட் வளாகங்களில் கட்டாய பணிவிலகல் கொடுமை நடந்து வருகிறது. இந்த சட்டவிரோத வேலைநீக்கத்தின் முக்கிய இலக்கு மத்திய நிலை ஊழியர்கள் தான்.நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி 20,000 ஊழியர்கள் வரை வேலையிழக்கலாம் என்று தெரிய வருகிறது.

‘குறை செயல்பாடு’கொண்டவர்களை நீக்குதல் என்ற பெயரில் இந்த சட்டவிரோத திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது யதார்த்தத்திற்கு முற்றிலும் எதிரானது. வெளிப்படையற்ற,அறிவியல் அடிப்படையற்ற அப்ரைசல் முறையில் தான் செயல்திறன் அளக்கப்படுகிறது.

மேலாளர் மட்டும் நல்லவராக இருந்தால் அப்ரைசலில் சிக்சர் அடித்து விடுவோம் என்பதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் ரேட்டிங் என்பதே நிர்வாகம் முன்கூட்டியே நிர்ணயிக்கும் லாபவிகிதத்தின் அடிப்படையிலும் வேலைநீக்கம் செய்யப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும்தான் தீர்மானிக்கப்படுகிறது.

இலக்கு நிர்ணயிப்பதும், ரேட்டிங் வழங்குவதும் சொல்லிக் கொள்ளப்படும் விதிமுறைகள்படிதான் நடக்கிறதா?சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் கலந்து பேசியா முடிவெடுக்கிறார்கள்? இல்லை.சொல்லப்போனால் இந்த அப்ரைசல் முறையே ஊழியர்களை சம்பளக்குறைப்பு, வேலைநீக்கம் போன்ற அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வதைக்கும் வருடாந்திர சடங்காகிவிட்டது.

வேலைநீக்கம் என்பது தனிநபர்களை மட்டும் பாதிப்பதில்லை.ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையே தகர்க்கிறது.

17757241_1852886351647744_6355633845977303810_n

நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத கட்டாய பதவிவிலகல், வேலைநீக்கம் போன்றவற்றை நாம் மௌனமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

கடந்த காலாண்டில் வருமானத்தில் நல்ல வளர்ச்சியைக் காட்டிய பிறகும் புதிய பட்டதாரிகளை தொடர்ந்து வேலைக்கு எடுத்து வரும் சி.டி.எஸ் நிர்வாகம் செலவுகளைக் குறைப்பதற்காக மத்திய நிலை ஊழியர்களை குறி வைக்கிறது.இது மற்ற ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவை அனைத்தும் நிறுவனத்தின் லாப விகிதத்தை உயர்த்தி கோடிசுவர பங்குதாரர்களை மேலும் செல்வந்தர்களாக மாற்றும் நோக்கத்தில் தான் செய்யப்படுகின்றன.

ஊழியர்கள் மீதான இந்த கார்ப்பரேட் தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்வது?

வேலைவாய்ப்பு ஏற்படுத்துகிறார்கள் என்ற பெயரில் இந்த பன்னாட்டு, இந்திய நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிலம், நீர், மின்சாரம்,வரிவிலக்கு என ஏராளமான சலுகைகளை வாரி வழங்குகின்றன.ஆனால் இந்த அரசுகள் ஊழியர்களின் உதவிக்கு வரப் போவதில்லை.

ஐ.டி நிறுவனங்கள் NASSCOM/FICCI/ASSOCHAM என்று பல பெயர்களில் சங்கமாக திரண்டிருக்கின்றன. ஆனால் நாம் மட்டும் தனியாட்களாக இருக்க வேண்டுமாம். நமது உரிமைகளை நசுக்குவது என்றால் அவர்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாமும் நமது உரிமைகளை மீட்க ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

IMG-20170329-WA0001-1024x538

இன்றைய சூழல் 2014- ல் டி.சி.எஸ்-ல் நடந்த வேலை நீக்கத்தை ஒத்தது.டி.சி.எஸ் 25,000-க்கும் அதிகமானவர்களை வீட்டிற்கனுப்ப திட்டமிட்டிருந்தது .  பெங்களுரு, சென்னை,  கொல்கொத்தா, திருவனந்தபுரம்,  பூனா,  மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஐ.டி ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டங்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

நண்பர்களே, நமது சக ஊழியர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்வதை எதிர்த்து சங்கமாக திரண்டு குரல் எழுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று அவர்களுக்கு நடப்பது நாளை நமக்கும் நடக்கும்.நாம் நமது உரிமைகளை நமது சொந்த பலத்தினால் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.

நமது கோரிக்கைகள் கீழ்வருமாறு.

1. சி.டி.எஸ் ஊழியர்களை கட்டாய பணிவிலகல் செய்விப்பதையும்,சட்டவிரோத வேலைநீக்கத்தையும் உடனே நிறுத்த வேண்டும்.

2. பாதிக்கப்பட்ட எல்லா ஊழியர்களும் மறுபடியும் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

3. தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு ஊழியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு பணி வழங்கப்பட வேண்டும்.

– Forum for I.T Employees (F.I.T.E) — New Democratic Labour Front (N.D.L.F) — Knowledge Professional Forum (K.P.F)

Print Friendly, PDF & Email

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>