Home / அரசியல் / ஆர்.கே.நகர் இடைத் தேர்தலும் – செத்து போன‌ தேர்தல் சனநாயகமும்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலும் – செத்து போன‌ தேர்தல் சனநாயகமும்

நாளை (ஏப்ரல் 12,2017) நடைபெற இருந்த ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் நேற்று (ஏப்ரல் 10,2017) காலை இரத்துச் செய்யப் பட்டுள்ளது. அதிக அளவு பணம் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்டதே தேர்தல் இரத்திற்குக் காரணம் எனச் சொல்கிறது தேர்தல் ஆணையம்.

டி.டி.வி.தினகரன் தரப்புக் காசை வாரி இறைத்த‌து எனப் பெரும்பான்மையான ஊடகங்கள் பகுதி உண்மையைச் சொல்லின. திருமாவேலன்(விகடன்) ஒரு படி மேலே சென்று வெல்லப்போவது “காசா..மாஸா”? எனத் தலைப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் அதே ஊடகங்கள் மதுசூதன் (பன்னீர் குழு) , திமுகவின் மருது கணேஷ், பா.ஜ.கவின் கங்கை அமரன், தீபா உள்ளிட்டவர்கள் வாக்காளர்களுக்கு கொடுத்த‌ பணம் பற்றிப் பெரிதாகப் பேச வில்லை.

இங்குத் தேர்தலில் நிற்கும் பெரிய கட்சி வேட்பாளர்கள் எல்லோரும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கின்றனர். என்ன கொடுக்கும் அளவில் வேறுபடலாம். ஒருவர் இரண்டாயிரம்கொடுத்தால், மற்றவர்கள் 1500 ரூபாயும், 1000 ரூபாயும், 500 ரூபாய் எனத் தங்கள் சக்திக்கு உள்பட்ட அளவிலும், வெற்றி வாய்ப்பை பொறுத்தும் கொடுக்கும் பணத்தின் அளவுமாறுபடுகிறது. ஆனால் ஊடகங்கள் ஒருவர் மட்டுமே பணம் கொடுப்பது போலப் பாதி உண்மையை மட்டுமே பேசுகின்றன.

இதே போலத் தான் சென்ற முறை சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பொழுது அரவக்குறிச்சி (கரூர்), தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது.அரவக்குறிச்சியில் அதிமுகவின் செந்தில் பாலாஜியும், திமுகவின் கே.சி.பழனிசாமியும் பணத்தை வாரி இறைத்தார்கள். அதே போலத் தஞ்சாவூரிலும் நடந்தது. இந்த இரு தொகுதிகளில் மட்டும் தான் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதா? தமிழகத்தின் மற்ற தொகுதிகள் எல்லாம் ஒரு ரூபாய் கூட வாக்காளருக்குப் பணம் கொடுக்காமல் மிகநேர்மையாகத் தேர்தல் நடந்ததா?

Tamil_DailyNews_631939172745

அரவக்குறிச்சியை விட அதிகப் பணம் திண்டுக்கல் ஆத்தூரில் இறைக்கப்பட்டது. திமுகவில் ஐ.பெரியசாமியும், அதிமுகவில் நத்தம்.விஸ்வநாதனும் போட்டி போட்டுக்கொண்டுபணத்தைச் செலவு செய்தார்கள். அங்கு ஏன் தேர்தல் நிறுத்தப்படவில்லை? இது தான் தேர்தல் ஆணையம் செயல்படும் இலட்சணம்.

ஓட்டுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சம். ஆகவே பணம் கொடுப்பவரை தண்டிப்பது தானே முறை. அதைச் செய்யாமல், தேர்தலை ரத்து செய்வது ஒருவகையில், தேர்தல் ஆணையமே ஊழல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது.

அரவக்குறிச்சியிலும், தஞ்சாவூரிலும் மீண்டும் தேர்தல் நடைபெற்ற பொழுது எந்த வேட்பாளர்கள் பணம் கொடுத்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டு தேர்தல் இரத்து செய்யப்பட்டதோ, அதே வேட்பாளர்கள் தான் நிறுத்தப்பட்டார்கள். அப்படியானால் எதற்காகத் தேர்தல் இரத்துஎன்ற இந்தக் கண்ணாமூச்சி. இந்தியாவில் இன்னும் சனநாயகம் இருக்கின்றது , தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு என்ற பொய்யை நம்ப வைக்கத் தான் இந்தக்கண்ணாமூச்சி ஆட்டங்கள்.

இந்தியாவில் தேர்தல் என்பது சாதியை வைத்தும், பணத்தை வைத்தும் தான் நடக்கின்றது. அதனோடு மத்திய அரசின் அதிகாரமும் சேர்ந்து கொள்கிறது. 2009 நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரசு தேர்தல் ஆணையத்திற்குக் கொடுத்த அழுத்தத்தினால் தான் தோற்ற ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். இன்று உத்திர பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் பெரும்பான்மையை மோடியின் பா.ச.க கைப்பற்றியதும் அப்படித் தான்.

ஆர். கே.நகரில் தேர்தல் இரத்து செய்யப்பட்டிருப்பதற்கு பன்னீர் செல்வம் அணி வெற்ற பெற முடியாத நிலையில் உள்ளது என்பதும் ஒர் காரணமாகும். மோடியின் விசுவாசியான பன்னீர் செல்வம் அணி தோற்பதை மோடியால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

03-poll4-300

வாக்காளர்களுக்கு ஏன் பணம்  கொடுக்கிறார்கள்?

முன்பு தேர்தல் நடக்கும் பொழுது ஒவ்வொரு கட்சியும் தான் செய்த சாதனைகளின் பட்டியலைச் சொல்லி வாக்கு கேட்பார்கள்.  உலகமயமாக்கலும், தனியார்மயமாக்கலும் அதி வேகமாக செயல்பட்டு வரும் இந்த காலத்தில் ஆளும் கட்சிகள் வெகு வேகமாக மேற்சொன்ன கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளன. இந்த கொள்கைகள் மக்களை அதிகம் பாதிக்கின்றன.

ஒரு புறம் மக்களை அதிகம் பாதிக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், மறுபுறம் அந்த மக்களிடம் சென்று வாக்குகளைப் பெற வேண்டும் என்ற கட்டாயம் கட்சிகளுக்கு உருவாகின்றது.  அதனால் மக்களுக்கு நேரடியாக பணத்தை கொடுத்து வாக்கை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் பெரும்பான்மை கட்சிகள் உள்ளன. இதனால் தான் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகின்றது.  திருமங்கலம் இடைத்தேர்தலில் இந்த உத்தியை திமுக தொடங்க, இன்று எல்லாத் தேர்தல்களிலும் இதே உத்தியை எல்லா கட்சிகளும் பின்பற்றுகின்றன.

இன்று தேர்தல் என்பது ஆளும் வர்க்கங்கள் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு, இதில் எப்பொழுதும் மக்கள்வெற்றி பெற முடியாது என்பதே யதார்த்தம். இந்த தேர்தல் அமைப்பு முறையை மாற்றுவதே நம் முன் உள்ள ஒரே தீர்வாகும்.

நற்றமிழன்.ப – இளந்தமிழகம் இயக்கம்.

புகைப்படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. நன்றி தினகரன்.

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*