Home / கலை / சாப்ளினும் – சர்வாதிகாரிகளும்

சாப்ளினும் – சர்வாதிகாரிகளும்

என் ஆதர்ச நாயகன் சார்லி சாப்ளினின் பிறந்த நாள் இன்று(ஏப்ரல் 16). இன்றுடன் அவருக்கு 128 வயது முடிவடைகின்றது. எளிய மக்களின் வாழ்வை அவரைப் போல யாரும் தொடர்ந்து திரையில் காட்டியதில்லை. சார்லி சாப்ளின் வெறும் நகைச்சுவை கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு இயக்குனர், திரைக்கதையாசிரியர், இசையமைப்பாளர், சிறந்த சிந்தனையாளர் என்பதையெல்லாம் தாண்டி உன்னதமான மனிதர் அவர் . ஆம் ஹிட்லர் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் உலகின் பகுதி நிலப்பரப்பை கைப்பற்றி உலகை விழுங்கத் தொடங்கியிருந்த பொழுது, ஹிட்லரை எதிர்த்து “ஒர் மாபெரும் சர்வாதிகாரி(The Great Dictator)” என்ற தன் திரைப்படத்தின் மூலம் தனி மனித போராட்டம் நடத்தினார்.

அந்த திரைப்படத்தில் இறுதிகட்டக் காட்சியில் கோயபல்சிற்கு தான் எழுதிய வசனங்கள் காட்டுகின்றது அவர‌து தீர்க்கத்தரிசனத்தையும், இன்றைய அரசுகளின் உண்மை நிலையையும், அதே போல மானுடத்தின் பாலும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தின் பாலும் அவர் கொண்ட பேரன்பு ஹிட்லரைப் போல இருக்கும் யூதர் ஒருவர் பேசும் இறுதி கட்ட காட்சி வசனத்தில் தெரிகின்றது.

ஹிட்லர் யூதர்களுக்கு செய்த கொடுமையைத் தான் இன்று யூதர்கள் பாலஸ்தீனிய மக்களுக்கு செய்து வருகின்றனர்.  கோயபல்ஸ் அன்று கூறியதைத் தான் இன்று ஊடகங்களும், ஆளும் கட்சிகளின் உறுப்பினர்களும் நம்மிடம் சொல்கின்றார்கள்.  அரசை கேள்வி கேட்காதே, கேட்டால் நீ தேசத்துரோகி . அவர்களைப் பொறுத்தவரை தேசம் என்றால் அரசு மட்டுமே, ஆனால் நம்மைப் பொருத்தவரை தேசம் என்றால் அதில் வாழும் பெரும்பான்மை மக்கள்.

மோடியின் ஆட்சியில் இருக்கும் நாம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய முக்கியமான படம் இது. அன்று ஹிட்லர் செய்ததைத் தான் இன்று மோடி செய்கின்றார். ஹிட்லர் பேசியது ஆரியவாதம் அது கம்யூனிசுட்டுகளையும், யூதர்களையும் வெறுக்கும் சித்தாந்தம், மோடி பேசுவது முதலாளித்துவத்திற்கு ஜால்ரா அடிக்கும் இந்துத்துவவாதம் இதுவும் கம்யூனிசுட்டுகளையும், மற்ற மதத்தினரையும் வெறுக்கும் சித்தாந்தமே. வெறுப்பு சித்தாந்தத்தின் விளைவுகள் தான் ட்ரம்பின் ஆட்சியில் இந்தியர்களின் படுகொலை. சமூக வலைதளங்களில் தினம் ஒரு கருத்து வெளியிடும் மோடி இந்த படுகொலைப் பற்றி எதுவும் பேசவில்லை. திருடனுக்கு தேள் கொட்டினால் எப்படி பேச முடியாதோ, அந்த நிலை தான் மோடிக்கு.  உலக நாயகர் சார்லி சாப்ளின் பேசியதும், விதைத்ததும் அன்பு சித்தாந்தம் மட்டுமே . அந்த வசனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு …

இன்றும் கூட பலர் ஹிட்லரின் படம் என்று சார்லி சாப்ளின் படத்தை பகிர்வ‌துண்டு

இன்றும் கூட பலர் ஹிட்லரின் படம் என்று சார்லி சாப்ளின் படத்தை பகிர்வ‌துண்டு

கோயபல்ஸ் : சனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்ற வார்த்தைகளெல்லாம் மக்களை நாம் ஏமாற்றுவதற்காக மட்டுமே. சனநாயகம், சுதந்திரம், சமத்துவம் போன்ற எண்ணங்களை வைத்துக் கொண்டு எந்த ஒரு நாடும்(முதலாளிகளும்) வளர்ச்சியடைய முடியாது. நமது செயல்பாடுகளுக்கு குறுக்கே இதுபோன்ற சிந்தனைகள் கொண்ட நாடுகள் வருவதால் அவர்களை நாம் நசுக்கி எறிய வேண்டும். எதிர்காலத்தில் எல்லா மனிதர்களும் அரசு சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒழுக்கமாக நடக்கவேண்டும். அதை யார் மறுக்கிறார்களோ அவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள்.

ஹிட்லர்: நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். மனித இனம்  என்பது அவ்வாறானதே. நாம் அடுத்தவர்களின் மகிழ்ச்சியினால் வாழ வேண்டுமே தவிர துன்பங்களினால் அல்ல. நாம் யாரையும் வெறுத்து ஒதுக்கக்கூடாது. இந்த உலகத்தில் எல்லோருக்கும் போதுமான இடம் இருக்கின்றது. அழகான இந்த பூமி மிகவும் உன்னதமானது. சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் நாம் வாழ வேண்டும், ஆனால் நாம் வழி மாறிவிட்டோம். பேராசை மனிதனின் மனங்களை நஞ்சாக்கிவிட்டது.  பகைமை இந்த உலகத்தில் எல்லைகளை உருவாக்கி, நம்மை துயரப்படுத்தி, இரத்த ஆறுகளை ஓடவிட்டுள்ளது. நாம் மிக வேகமாக செல்வதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளோம், ஆனால் நம்மை நாமே ஒரு அறையில் அடைத்துவைத்து விட்டோம்.

இயந்திரங்கள் போதுமானதை விட அதிகமாக உற்பத்தி செய்து நம்மை இன்னும் அதிகமாக வேண்டும் என்ற நிலைக்குள் தள்ளிவிட்டுவிட்டன.  நம்  அறிவு நம்மை மிகவும் மோசமானவர்களாக மாற்றிவிட்டது. நமது புத்திசாலித்தனம் மிகவும் கடுமையானதாகவும், இரக்கமற்றதாகவும் உள்ளது. நாம் நிறைய யோசிக்கின்றோம், ஆனால் மிகவும் குறைவாகவே மற்றவர்களுக்காக கவலைப்படுகின்றோம். நமக்கு தேவை மனிதாபிமானமே அன்றி இயந்திரங்களல்ல. நமக்கு வேண்டியது இரக்கமும், மனிதமுமே அன்றி புத்திசாலித்தனமல்ல.  இந்த தகுதிகளெல்லாம் இல்லாத வாழ்க்கை மிகவும் வன்முறையானதாகவும், இருண்டதாகவும் மாறிவிடும். விமானங்களும், தொலைக்காட்சிகளும் நம்மை மிகவும் நெருங்கியவர்களாக மாற்றிவிட்டது. இந்த கண்டுபிடிப்புகளின் உண்மையான நோக்கமான மனிதனிடம் உள்ள நல்ல குணங்கள் காணாமல் போய்விட்டதை அறிந்து கதறுகின்றன. இவை உலகலாவிய சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் நம்மிடம் வேண்டி நிற்கின்றன.

இப்பொழுதும் கூட நான் பேசுவது பல கோடிக்கணக்கான மக்களை சென்றடைகின்றது. கோடிக்கணக்கான நம்பிக்கையற்ற ஆண்களை, பெண்களை, குழந்தைகளை சென்றடைகின்றது. மனிதனை சித்தரவைதை செய்யவும், அப்பாவி மக்களை சிறைப்படுத்தும் இந்த அமைப்பு முறையினால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள். எவருக்கெல்லாம் எனது குரல் கேட்கின்றதோ, உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்கின்றேன் “நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்”. நம் மீது இன்று படர்ந்துள்ள துயரம் கடந்து போகும் ஒன்று. மனித சமுதாயத்தின் வளர்ச்சியை தடுக்கும் மனிதர்களின் பேராசை மறைந்து போகும். மனிதர்கள் கொண்ட வெறுப்புகள் ஒரு நாள் மறையும், சர்வாதிகாரிகள் இறந்து போவார்கள். மக்களிடமிருந்து அவர்கள் பரித்துக்கொண்ட அதிகாரம் மீண்டும் மக்கள் கைகளுக்கே திரும்பும், மனிதன் இறக்கும் வரை விடுதலை தாகம் தணியாது.

140121-5

சிப்பாய்களே உங்களை சர்வாதிகாரிகளிடம் கையளிக்காதீர்கள். அவர்கள் உங்களை அடிமைப்படுத்தி, நீங்கள் என்ன யோசிக்க வேண்டும், உணர வேண்டும் என உங்களுக்கு கூறுவார்கள், உங்கள் தசைகளைப் பிழிந்து வேலை வாங்குவார்கள். அவர்கள் உங்களை ஒரு ஆட்டுமந்தையைப் போல, துப்பாக்கியில் போடப்படும் குண்டுகளைப் போல மட்டுமே நடத்துவார்கள். உங்களை இதுபோன்ற செயற்கையான மனிதர்களிடம் ஒப்படைக்காதீர்கள். இயந்திரத்தனமான மூளையையும், இதயத்தையும் கொண்ட இயந்திர மனிதர்களே. நீங்கள் இயந்திரங்கள் அல்ல, நீங்கள் ஒரு ஆட்டுமந்தையல்ல. நீங்கள் மனிதர்கள். உங்கள் இதயத்தில் மனிதத்தன்மையின் மீதான காதல் உள்ளது. நீங்கள் யாரையும் வெறுக்க மாட்டீர்கள். அன்பே இல்லாதவர்கள் தான் மற்றவர்களை வெறுப்பார்கள். அன்பில்லாத, செயற்கையான வெறுப்பு அது.

சிப்பாய்களே மனிதனை அடிமைப்படுத்துவதற்காக போராடாதீர்கள், விடுதலைக்காகப் போராடுங்கள். கடவுளின் அரசு மனிதனுக்குள்ளே தான் இருக்கின்றது, ஒரு மனிதனுக்குள்ளோ, ஒரு கூட்டத்திடமோ அல்ல, நம் எல்லோரிடமும் அது இருக்கின்றது, மக்களாகிய உங்களிடமே எல்லா ஆற்றலும் இருக்கின்றது. இயந்திரங்களை உருவாக்கும் ஆற்றல், மகிழ்ச்சியை உருவாக்கும் ஆற்றல். இந்த வாழ்க்கையை சுதந்திரமானதாகவும், அழகாகவும், ஒரு உன்னதகரமான கண்டுபிடிப்பாகவும் மாற்றக்கூடிய ஆற்றல் மக்களாகிய உங்களிடமே இருக்கின்றது. சனநாயகத்தின் பெயரால் அந்த அதிகாரத்தை நாம் பயன்படுத்துவோம். ஒன்றாக இணைந்து ஒரு புதிய உலகிற்காக போராடுவோம்.

tumblr_ng2e7wn3091sczi2xo1_500

ஒரு நாகரிகமான உலகம், அந்த உலகம் மக்களுக்கு உழைப்பதற்கான வாய்ப்பையும், எதிர்காலத்தையும், ஓய்வுக்கால பாதுகாப்பையும் கொடுக்கக்கூடியது. இவற்றை எல்லாம் செய்து தருகின்றோம் என்று வாக்குறுதிகளுடன் சர்வாதிகாரிகள் தோன்றினார்கள். அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையே நம்மிடம் கூறினார்கள். அவர்களால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. கண்டிப்பாக நிறைவேற்றவும் மாட்டார்கள். சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொண்டு மக்களை எல்லாம் அடிமைப்படுத்துவார்கள். இந்த வாக்குறுதிகளை எல்லாம் நாமே நிறைவேற்றப் போராடுவோம், உலகை விடுவிக்க போராடுவோம், பேராசையினாலும், வெறுப்பினாலும் உருவாக்கப்பட்டுள்ள தேச எல்லைகளை எல்லாம் தகர்த்தெறிவோம். இந்த முறை ஒரு உன்னதமான காரணத்திற்காக போராடுவோம். இந்த உலகத்தில் அறிவியலும், வளர்ச்சியும் எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கட்டும். சிப்பாய்களே சனநாயகத்தின் பெயரால் எல்லோரும் ஒன்றிணைவோம் !

நற்றமிழன்.ப – இளந்தமிழகம் இயக்கம்

சார்லி சாப்ளினின் அந்த உன்னதமான உரைவீச்சு இங்கே:

 http://www.youtube.com/watch?v=QcvjoWOwnn4&feature=related

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*