Home / அரசியல் / இந்தியா நிர்வாணமாக நிற்கிறது

இந்தியா நிர்வாணமாக நிற்கிறது

உச்ச நீதிமன்றத்தின் உத்திரவு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழக அரசு கோரிய அளவில் வறட்சிக்கான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 28 நாட்களாக பல்வேறு வகையிலான போராட்டங்களைத் தொடர்ந்து  நடத்தி வருகின்றனர்.

தேசிய, மாநில‌ நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டதைத் தொடர்ந்து அதனால் நட்சத்திர உணவங்கள் பாதிக்கப்படுகின்ற‌து எனக் கூறி அவர்களை சந்தித்து மாற்று ஏற்பாடுகளை பரிந்துரைக்கும் பிரதமர்.மோடியினால் 28 நாட்களாகப் போராடும் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை.

நேற்று (ஏப்ரல் 10,2017) பிரதமரை சந்திக்க அழைத்து செல்கின்றோம் எனக் கூறி டெல்லி காவல்துறை விவசாயிகளை அழைத்து சென்று பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு ஏமாற்றி திருப்பி அழைத்துச் செல்ல முயன்ற பொழுது பிரதமர் அலுவலகத்தின் முன் தமிழக விவசாயிகள் நிர்வாணமாகப் போராடி உள்ளனர். எங்கள் அரசு விவசாயிகளுக்கான அரசு, நாங்கள் உருவாக்கும் வரசு-செலவு அறிக்கை (Budget) விவசாயிகளுக்கானது என சொல்லும் மோடி அரசின் உண்மை முகம் இது தான்.

முந்தைய காங்கிரசு அரசு கொண்டிருந்த அதே கொள்கைகளையே காங்கிரசுக்கு மாற்று எனக் கூறி ஆட்சியைப் பிடித்த மோடி அரசும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு வேறு பணிகளுக்கு செல்ல வேண்டும் (விவசாயம் தான் செய்வோம் என அடம் பிடிக்க கூடாது) என முந்தைய பிரதமர்.மன்மோகன் வெளிப்படையாகவே சொன்னார். அதை மோடி தனது கள்ள மௌனத்தின் மூலம் கடைபிடுத்து வருகின்றார்.

விவசாயத்தினால் என்ன தான் பிரச்சனை அரசுக்கு ?

அரசு தான் கொள்கைகளை உருவாக்குகிறது. 1990களுக்கு பின்னர் தனியார்மயம் உள்ளே நுழைந்த பின்னர், எல்லாவற்றையும் அரசு தனியார்மயமாக்குகின்றது. அப்படியானால் விவசாயத்தையும் தனியார்மயப்படுத்த வேண்டும். இங்கு தனியார்மயம் என்பதை பெரு முதலாளி மயம் என புரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் விவசாயம் தான் 60 விழுக்காடு வேலைவாய்ப்பை உருவாக்குகின்றது. மேலும் இங்கு விவசாயம் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கைகளில் தான் உள்ளது. இவர்களை விவசாயத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டுமென்றால், விவசாயத்தை எவ்வளவு சீரழிக்க முடியுமோ, அவ்வளவு சீரழிக்க வேண்டும். அதை தான் மத்திய மாநில அரசுகள் இங்கு 90களில் இருந்து செய்து வருகின்றன.

index (2)

எதை நோக்கி செல்கின்றது விவசாயம் ?

இன்று விவசாயம் என்பது எல்லோராலும் செய்யப்படும் நிலையில் உள்ளது (Production by Mass). அதை ஒரு சிலரின் கையில் (அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளின் கைகளில்)  கொடுக்க வேண்டும் என்பதே அரசின் திட்டம் (Mass Production by Few Corporate Company). இன்று பெரும்பான்மையான மக்களால்(விவசாயிகளால்) விவசாயம் செய்யப்படுவதால் தான் அவர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடுகின்றார்கள்.

இந்நிலை ஒரு சிலர் மட்டும் செய்யும் விவசாயம் என மாறும் பொழுது நாம் விவசாய பொருட்களுக்கான விலையை குறைக்கச் சொல்லி போராட வேண்டி வரும். உதாரணம் – அரிசி ஒரு கிலோ 500 ரூபாய்க்கு ரிலையன்ஸ் அம்பானி விற்பதை எதிர்த்து நாம் போராட வேண்டிய நிலை வரும்.  இன்றும் கூட அம்பானியும், அதானியும் வைப்பது தான் விலை என்ற நிலை உள்ளது. சென்ற ஆண்டு நடந்த பருப்பு விலை ஏற்றம் அதானி கோடி கணக்கில் இலாபமீட்ட செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று என சொல்லும் ஆய்வுகளில் உண்மையில்லாமல் இல்லை. (நன்றி. நண்பர்.ம.பொன்ராஜ் ).

நமது சுயநலத்தின் அடிப்படையின் படி பார்த்தால் கூட இன்று தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளுக்கு நாம் தோள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அரசின் கொள்கைகளை மாற்றாமல் இதற்கு தீர்வில்லை.

நிர்வாணமாக நிற்பது விவசாயிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் தான்.

நற்றமிழன்.ப – இளந்தமிழகம் இயக்கம்

ஓவியம் – நன்றி – கோ.ராமமூர்த்தி , விகடன் இணையதளம்.

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*