Home / ஈழம் / பார்த்தீனியம் :: நாவல் – நூலாய்வு கட்டுரை

பார்த்தீனியம் :: நாவல் – நூலாய்வு கட்டுரை

தலைப்பு: பார்த்தீனியம்
ஆசிரியர்: தமிழ்நதி
பதிப்பகம்: நற்றிணை
பக்கங்கள்: 512
விலை: ரூ. 450

“எண்பத்தி மூண்டாம் ஆண்டு கலவரத்திலை சிங்கள காடையங்களின்ரை வாளுக்கும் நெருப்புக்கும் பயந்து ஓடினம். எண்பத்தி ஆறாம் ஆண்டு ஒபரேஷன் லிபரேசன் நடவடிக்கையிலை இலங்கை ஆமியின்ரை ஷெல்லடிக்கும் குண்டுவீச்சுக்கும் பயந்து ஓடினம். எண்பத்தியேழாம் ஆண்டு இந்தியனாமி துரத்த அகதியளாகி ஊரைவிட்டே ஓடினம்.”

மேலே உள்ள வரிகள், வானதி என்ற கதாபாத்திரம் சொல்வதாக  ‘பார்த்தீனியம்’ நாவலில் உள்ளது. ஈழ மக்களின் போராட்ட வாழ்வை மிக அழுத்தமாகவும் துல்லியமாகவும் பதிவு செய்துள்ளது, இந்நாவல்.

எழுத்தாளர் தமிழ்நதி அவர்கள் எழுதிய ‘பார்த்தீனியம்’ நாவல் ஈழ அரசியலை முன் வைத்து எழுதப்பட்ட நாவல். மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம் எப்படி தன் கொடிய கரங்களால் மக்களின் அன்றாட வாழ்வை சிதைக்கிறது என்பதை எளிய மொழியில் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார், தமிழ்நதி. யுத்த கால அவலங்களை தன் எளிய மொழியில் நம் கண் முன்னே நிறுத்துகிறார். யுத்தம் மக்களின் காதல் வாழ்வை, சமூக வாழ்வை, குடும்ப வாழ்வை எவ்வாறு சிதைக்கிறது  என்பதை மிக நுணுக்கமாக பதிவு செய்துள்ளார். யுத்த பின்னணியில் ‘வானதி’ மற்றும் ‘பரணி’ கதாபாத்திரங்களின் காதல் வாழ்வையும்,அவர்களின் காதல் சிதைவையும் மிக அழகாகப் படைத்துள்ளார்.

‘பார்த்தீனியம்’ என்ற பெயரை நாவலுக்கு  ஏன் வைத்தார் என்பதை (கீழ்க்கண்டவாறு) கதாபாத்திரங்களின் வழியே சொல்லி செல்கிறார். மிகப் பொருத்தமான/அற்புதமான தலைப்பு.

“பார்த்தீனியம் எண்டு பேர். அவன் இறைச்சிக்காகக் கொண்டந்த ஆடுகளிலை இருந்து பரவியிருக்கவேணும். நிலத்திலை இருக்கிற சத்தையெல்லாம் உறிஞ்சிப் போடும். அதைவிட, தனக்குப் பக்கத்திலை எந்தவொரு செடியையும் வளரவிடாம அழிச்சுப்போடும். வலு கெதியாப் பரவக் கூடியது. ‘இந்தியாவும் பார்த்தீனியமும் ஒண்டுதான்'”

‘அமைதிப்படை’ என்ற போர்வையில் ‘இந்திய இராணுவம்’ ஈழத்தில்/இலங்கையில் நடத்திய அட்டூழியங்களையும், அக்கிரமங்களையும், அநியாயங்களையும் தோலுரித்து காட்டுகிறார் நாவலாசிரியர்.  படிக்கும் எவரின் மனதையும் நிச்சயம் உலுக்கும். தெற்காசிய பிராந்தியத்தில் தன்னை ஒரு வல்லரசாக காட்டிக்கொள்ள இந்தியா எப்படி எளிய மக்களையும், போராளிகளையும் பகடைக்காயாய் பயன்படுத்தியது என்பதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். விடுதலைப்புலிகளையும், மக்களையும் எப்படி நம்பவைத்து இந்தியா துரோகமிழைத்தது என்பதையும் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, விடுதலைப்புலிகளை நிரயுதாபாணிகளாக மாற்றிவிட்டு மற்ற போராளி குழுக்களை வைத்து எப்படி விடுதலைப்புலிகளையும், மக்களையும் அழிக்கும் வேலையை இந்தியா செய்தது என்பதையும் இந்நாவல் பேசுகிறது. ஈழத்தை வைத்துத் தெற்காசிய பிராந்தியத்தில் நடந்த அரசியலையும் நாவல் பேசுகிறது.

13615336_1035574459882774_8743052791895040547_n

கீதபொன்கலன் என்ற கதாப்பாத்திரம் எழுதியதாக வரும் கடிதம் (அத்தியாயம் 43) மிக முக்கியமான ஆவணப்பதிவு. அந்த கடிதத்தில் இருந்து சில வரிகள் மட்டும் கீழே:

“அமைதிப்படை ….! எவ்வளவு அபத்தமான அடைமொழி! ஆபத்பாந்தவர்களென வந்தவர்களே இந்த மண்ணுக்கு பேராபத்தைக் கொணர்ந்தனர். அவர்கள் எங்கள் மக்களைத் தங்கள் வீடுகளிலிருந்து ஓடி ஓடி விரட்டினர்.

யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரியினுள்   புகுந்த இந்திய இராணுவம் நரபலி வேட்டையாடியது. அன்றைய நாளில், அனைத்துலகத்தால் எழுத்தில்தானெனினும் ஜெனீவா ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டிருக்கிற போர் மரபுகள் யாவும் மீறப்பட்டன.

இந்தியா அன்று படுகொலை செய்தது நோயாளிகளை மட்டுமல்ல. எங்கள் நம்பிக்கையையும் சேர்த்துத்தான்.

இன்று இந்த அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கெதிராக துப்பாக்கி ஏந்தி நிற்பது விடுதலைப்புலிகள் மட்டுந்தான். அவ்வகையில், இன்னும் லட்சியத்தைக் கைவிடாதவர்கள்,எனக்காகவும் போராடுபவர்கள் என்ற வகையில் விமர்சனங்களோடும் கூட நான் விடுதலைப்புலிகளையே இன்று நேசிக்கிறேன். அவர்களோடு இணைந்து கொள்ளப்போகிறேன்.”

இந்நாவலின்  மிக முக்கியமானதோர் அத்தியாயமாக நான் கருதுவது அத்தியாயம் 33.மாவீரன் திலீபனின் வீரத்தை (உண்ணாவிரதத்தை) பற்றி பேசும் அத்தியாயம். இந்த அத்தியாயத்தை படித்திவிட்டு அடுத்த மூன்று நாட்களுக்கு நான் இந்த புத்தகத்தை படிக்கவில்லை. கனத்த மனதுடன் அடுத்து வந்த சில நாட்களைக் கடந்தேன். மிகவும் உணர்வுப்பூர்வமானதோர் அத்தியாயம்.

“எனது கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒருபோதும் பின் வாங்க மாட்டேன்”

என்று சொல்லி தன் போராட்டத்தை தொடங்கிய திலீபன் இந்தியாவின் துரோகத்தால் செப்டம்பர், 26 1987 அன்று படுகொலைசெய்யப்பட்டான் (திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தாலும், திலீபன் என்ற மாவீரனின் மரணம் இந்தியா செய்த படுகொலைதான்). இந்த மாவீரனின் சாவிற்கு “இந்தியா” பெருமளவில் பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவின்”அஹிம்சை” என்ற முகமூடியும் கிழிந்தது, இவன் சாவில். இவனின் குறைந்தபட்சக் கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் இந்தியா துரோகம் இழைத்தது.

“நல்லூர்க் கந்தா! இந்தப் பிள்ளையைக் காப்பாற்று” என்றழுத தாய்மாரின் பிரார்த்தனைகள்முருகனின் செவிகளைச் சென்று சேராமல் மண்ணில் வீழ்ந்தனவா ?இத்தனை ஆயிரம் சனங்கள் வைத்த நேர்த்திகளுக்கும் செய்த அர்ச்சனைகளுக்கும் என்னதான் நடந்தது?

வானதியும் தன் பங்குக்கு நேர்த்தி வைத்தாள்.திலீபன்  உயிர் பிழைத்தெழுந்தால்,கோவிலைச் சுற்றி  ‘அடியளிப்பதாக’.”

‘விடுதலைப்புலிகளை’ எந்த அளவுக்கு மக்கள் நேசித்தார்கள் என்பதற்கான சாட்சியங்கள் மேலே சொன்ன வரிகள். இவை மட்டுமன்றி, இந்நாவல் முழுவதும்  பல்வேறு இடங்களில் விடுதலைப்புலிகளும், மக்களும் வேறு வேறு அல்ல என்பதை  நிறுவுகிறார், தமிழ்நதி.விடுதலைப்புலிகள் தங்களுக்காகவும், தங்கள் மண்ணின் உரிமைகளுக்காகவும்தான் போராடுகிறார்கள் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்ததால்தான் போராளிகளுக்கு பக்கபலமாக நின்றார்கள்.

இந்திய ராணுவம் ஈழத்திலிருந்து பெருத்த அவமானத்துடன் வெளியேறியதை பின்வரும் வரிகள் விவரிக்கின்றன.

“ஆனா, தங்களுக்கு இவ்வளவு அழிவு வருமெண்டு அவங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டங்கள் என்ன? இந்தியாவுக்கு பெருத்த அவமானம்!”

“இந்தியாவின்ரை வீழ்ச்சி ஆரம்பத்திலையே தொடங்கீட்டுது. சுற்றலாப் பயணியள் பாவிக்கிற வரைபடங்களை வைச்சுக்கொண்டு சண்டைக்கு இறங்கின புத்திசாலியள் அவை. எல்லாத்துக்கும் மேல சனம் புலியளோடை  நிண்டுது.”

“இப்ப கேவலப்பட்டு வெளியேறுற நிலைமை வரைக்கும் வந்திருக்கு”

“போரற்ற ஒரு நிலத்தில் நாங்கள் பிறந்திருக்கக்கூடாதா?” என்ற வானதியின் எண்ணம்தான் ஈழ மக்களின் உணர்வும். ‘போரற்ற உலகம்’ எவ்வளவு அழகாக இருக்கும் என்ற ஏக்கம்தான் மிஞ்சுகிறது நாவலைப் படித்து முடிக்கும்போது. தமிழின் மிக மிக முக்கியப் படைப்புகளில்  ஒன்று. யுத்த அரசியலைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட தமிழின் அருமையான படைப்பு, இந்த ‘பார்த்தீனியம்’. வாழ்த்துகள் தமிழ்நதி!

—செல்வகுமார்  சுப்ரமணியம் – இளந்தமிழகம் இயக்கம்

About செல்வகுமார் சுப்ரமணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*