Home / அரசியல் / “நீட்” தேர்வு தகுதி, திறமைக்காகவே ?
image

“நீட்” தேர்வு தகுதி, திறமைக்காகவே ?

1980களின் பிற்பகுதியிலிருந்து கல்வி வணிகமயமாகிவிட்டது. மத்திய , மாநில அரசுகளின் கல்விக் கொள்கை – கல்வியை வணிகமயமாக்குவது தான்.

உயர்கல்வி பெறும் உரிமையை, அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டம் அறிவிக்கவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், எவரும் கல்வி நிறுவனத்தைத் தொடங்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1) (ஜி)யின் கீழ் தொழில் செய்வதற்கான அடிப்படை உரிமை என்று பல தீர்ப்புகளை வழங்கி கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கிவிட்டது.

குறிப்பாக உச்சநீதிமன்ற‌த்தின் 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, T.M.A.PAI வழக்கில், கல்வி வணிகமயமாக்குவதற்கு ஒப்புதல் அளித்துத் தீர்ப்பளித்துவிட்டது.

எனவே, புற்றீசல் போல இந்தியா முழுவதும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும், மற்ற பல கல்லூரிகளும் கிளம்பி கடை விரித்து விட்டன.

குறிப்பாகத் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இலட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் நன்கொடை (Capitation Fees) வசூலிக்கப்பட்டது, வசூலிக்கப்படுகிறது. இதை எவரும் மறுக்க மாட்டார்கள்.

கல்வி வணிகமயமானதால், சாதாரண ஏழை மக்களுக்கு- குறிப்பாக சாதீய சமூகத்தில் சூத்திரர்களுக்கும்( Backward Caste – BC, Most Back ward Caste – MBC), பஞ்சமர்களுக்கும் (SC, ST) மீண்டும் கல்வி என்பது எட்டாக் கனியாகிவிட்டது.

அனைத்துக் கல்வியும், அரசு மட்டுமே அளிக்கும் நிலையும், கல்வியில் தனியார் சுயநிதி நிறுவனங்களை அரசே ஏற்பதுமே, அனைவருக்கும் கல்வி கிடைப்பதற்கு உறுதி செய்யும் நிலையை உருவாக்கும். அதாவது கல்வியில் தனியார்மயத்தை ஒழிப்பதே தீர்வு.

ஆனால் தனியார்மயத்தை தீவிரமாக ஆதரிக்கும் மத்திய அரசு, மருத்துவ கல்வியில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தும் நடவடிக்கை எனக் கூறி, இந்தியா முழுமைக்கும் மருத்துவப் படிப்புக்கான தகுதியாக தேசிய தகுதி, நுழைவுத் தேர்வை    (National Eligibility -cum – Entrance Exam – NEET) – “நீட்” தேர்வை நடத்துவதற்கு 2010 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின் கீழ் விதிமுறைகளை (Regulation) வகுத்தது. இந்த விதிகளின் கீழ், “நீட்” தேர்வை நடத்த 2012-இல் இந்திய மருத்துவ கவுன்சில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளை ஒழிப்பது அல்ல மத்திய அரசின் நோக்கம் இக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதே அதன் நோக்கம்.

இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டில்,  “நீட்”  மட்டுமே தனியார் சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தும் வழியாக இருக்க முடியாது. தமிழகத்தில் நடைபெறும் மாணவர் சேர்க்கை வெளிப்படைத் தன்மையாக தகுதியின் அடிப்படையில் மட்டுமே இருக்கும் பொழுது தமிழகத்திற்கு  “நீட்”  தேர்வு அவசியம் இல்லை. இதே போன்று, பல மாநிலங்களுக்கும் “நீட்” தேர்வு அவசியம் இல்லாமல் இருக்கலாம்.

அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வான  “நீட்” தேர்வு வாயிலாக மட்டுமே 2016-17ஆம் ஆண்டில் அனைத்து மருத்துவக் கல்விக்கும் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 28.04.2016 அன்று உத்திரவிட்டது.

பொது நுழைவுத் தேர்வுக்கு உச்சநீதிமன்றம் உத்திரவிடுவதற்கு காரணம், மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதும், தகுதி அடிப்படையில் மட்டுமே சேர்க்கை இருக்க வேண்டும் என்பதும், கட்டாய நன்கொடையை தடுப்பதுமாகும்.

Neet protest

நுழைவுத் தேர்வு மூலம் தான் மாணவர் சேர்க்கை என்ற நிலை ஏற்பட்டதும், கட்டாய நன்கொடை என்ற பெயரில் மறைமுகமாக பெற்று வந்த பெரும் தொகையைத் தனியார் சுயநிதிக் கல்லூரிகள் நடத்தும் வியாபாரிகள் மருத்துவக் கல்வி கட்டணத்தை மிகவும் உயர்த்தியதன் மூலம் இலாப வேட்டையைத் தொடர்கின்றனர்.  அதாவது, ஆண்டிற்கு ஏறத்தாழ இரண்டு இலட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் என இருந்ததை, ரூபாய் பதினைந்து முதல் இருபது இலட்சமாக உயர்த்தி விட்டனர். கட்டணக் கொள்ளையை “நீட்” தடுக்க முடியவில்லை என்பதற்கு 2016-17  “நீட்”  அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திய தனியார் மருத்துவ கல்லூரிகள் கட்டணம் என்ற பெயரில் வசூலித்த தொகையே சான்று.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு  “நீட்”  பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்பதால், தமிழ்நாட்டிற்கு  “நீட்”  தேர்வு தேவை இல்லை.

காரணம், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை  +2 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒற்றைச்சாளர முறையில் (Single Window System) நடைபெறுவதால் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்ப்பில் தகுதியும், வெளிப்படைத் தன்மையும் உள்ளது.

மிக முக்கியமாக, அகில இந்திய அளவில் நடைபெறும்  பொதுத் தேர்வு, மத்திய பாடத் திட்டத்தின் (CBSE) கீழ் நடைபெறுகிறது. ஆனால் தமிழகத்தில் +2 படிக்கும் மிகப் பெரும்பாலான மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தின் கீழ்தான் பயின்று வருகின்றார்கள்.

இரு பாடத் திட்டங்களும் வெவ்வேறானவை. தேர்வு முறையும் வெவ்வேறானவை. எனவே மத்திய பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் நுழைவுத் தேர்வை, தமிழகப் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்வது இயலாத காரியம்.

ஏற்கனவே, நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தான் தமிழ்நாட்டில் மருத்துவ சேர்க்கை இருந்தது. நகரத்தில் பயிலும் மாணவர்கள், நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று நுழைவுத் தேர்வை எதிர்கொள்வதால், கிராமப்புற மாணவர்கள் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவப் படிப்பில் சேருவது இயலாமல் போயிற்று.  எனவே, தமிழக அரசு நுழைவுத் தேர்வை இரத்து செய்து, +2 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இருக்கும் என்று 2007 ஆம் ஆண்டில் சட்டம் இயற்றியது.

image

இச்சட்டம் துணைவேந்தர் நிலையில் இருந்த கல்வியாளர்கள் தலைமையில் ஆன வல்லுநர்கள் குழு பரிந்துரையின் அடிப்படையில் இயற்றப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்ற‌ம் அத்தீர்ப்பை உறுதி செய்தது.

அதற்குப் பிறகு ஒருவர் தொடர்ந்த வழக்கில் 28.04.2016 உச்சநீதிமன்றத்  தீர்ப்பு இந்தியா முழுக்க “நீட்” மூலம் மாணவர் சேர்க்கையை கட்டாயப்படுத்தியது.

மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு மறைந்த முதல்வர் . ஜெயலலிதா அவர்கள் அகில இந்திய பொது நுழைவுத் தேர்விலிருந்து , தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்தார். அந்த அழுத்தத்தின் காரணமாக, மத்திய அரசு, மே 2016ல் ஒரு அவசர சட்டத்தை இயற்றியது.

அந்த அவசரச் சட்டத்தின் படி, 2016-17-ல் மட்டும் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை “நீட்” தேர்வின் படி இருக்காது. மேலும், ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள நடைமுறைப்படி அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளிலும் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் மாணவர் சேர்க்கையை கட்டாயப்படுத்தியது. அவ்வாறே 2016-17ல் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் சேர்ந்தனர்.

மேலும் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில் தான். தமிழகத்தில் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இங்கு மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களிடம் மிகமிகக் குறைந்த தொகையே கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக் கட்டணம் சுமார் ரூபாய் 20,000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவரும் இக்கட்டணத்தைச் செலுத்த முடியும்.

இந்நிலையில் 04.08.2016 இல் நாடாளுமன்றம், அகில இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் 10-D என்ற பிரிவைச் சேர்த்து சட்டம் இயற்றியுள்ளது. அதன் படி, இந்தியா முழுமைக்கும் மத்திய பாட‌த்திட்டத்தின் கீழ் நடைபெறும்”நீட்” தேர்வின் மூலம் மட்டுமே அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும்.

எனவே 2017-18 ஆம் ஆண்டு முதல், மருத்துவ கல்வியில் மாணவர் சேர்க்கை “நீட்” தேர்வின் அடிப்படையில் தான் தமிழகத்திலும் இருக்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

இதனால், நமது அரசு மருத்துவக் கல்லூரிகளில் நம் மாணவர்கள் எவரும் படிக்க இயலாது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, மத்திய பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்க்ளே இனி பயில்வர்.

2016 மார்ச்சில் தமிழகத்தில்  நடைபெற்ற +2 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் 8,33,682 மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால் மத்திய பாடத்திட்டத்தின் (CBSE) கீழ் 13,625 மாணவர்கள் மட்டுமெ தேர்வு எழுதினர். தமிழகத்தில் 2% மாணவர்கள் கூட மத்திய பாடத்திட்டத்தின் கீழ் +2 தேர்வு எழுதவில்லை.

அதாவது, தமிழ்நாடு மாநில பாடத்திட்டதின் கீழ் பயிலும் 98% மாணவர்களுக்கு மருத்துவ கல்வி மறுக்கப்படும் அபாயம் உள்ளது.  தமிழகத்தில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவான எண்ணிக்கையில் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் +2  படிப்போர் மட்டுமே “நீட்” தேர்வினால் பயன்பெறுவர்.

மத்திய பாடத்திட்டத்தின் கீழ் பயில்வோர், பணக்கார வீட்டு பிள்ளைகளும், உயர் சாதி பிள்ளைகளும் தான் என்ற உண்மையை கணக்கில் கொள்ள வேண்டும். (ஏனென்றால் அ)

எனவே மருத்துவக் கல்வி ஏழைகளுக்கு – சூத்திரர்களுக்கும்(B.C , MBC), பஞ்சமர்களுக்கும் (SC, ST) மறுக்கப்படும்  அநீதியை எதிர்த்து போராடுவது தவிர வேறு வழியில்லை.

மத்திய அரசு சட்டத்தை, மத்திய அரசு இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் எப்பொழுதும் மருத்துவக்கல்வியில் மாணவர் சேர்க்கை +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என முன்னாள் தமிழக முதல்வர். ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று நடவடிக்கை எடுப்பதற்கு தமிழகத்தின் அனைத்து மக்களும் – தமிழகத்திற்கு “நீட்” தேர்வு வேண்டாம் என்றும், +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்றும் ஒரே குரலில் – டெல்லியில் கேட்கும் அளவிற்கு ஒலிக்க பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பல இலட்ச மாணவர்களும் , இளைஞர்களும் பங்கேற்ற ஜல்லிக்கட்டுப் போராட்ட கோரிக்கை முழக்கங்களில் “நீட்” எதிர்ப்பு கோரிக்கையும் இடம் பெற்றிருந்ததை 28.01.2017 நாளிட்ட தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையில் மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாடு அரசு பின்பற்றிவரும் +2 மதிப்பெண் அடிப்படையிலான ஒற்றைச் சாளர முறையே தொடர்ந்து பின்பற்ற தமிழ்நாடு சட்டமன்றம் ஏகமனதாக சட்டமியற்றி ஆளுநர் ஒப்புமைக்கு அனுப்பியுள்ளது. ஆளுநர் ஒப்புமைக்குப் பிறகு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 254(2) யின் கீழ் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கும் இச்சட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க எந்த தடையையும் ஏற்படுத்தால் உரிய பரிந்துரைகளை மத்திய அரசு செய்ய வேண்டும்.  தமிழ்நாடு மக்களின் நலன்கருதியும், மாநில உரிமையை காத்திடவும் உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திட தமிழ்மக்கள் ஒன்றுபட்டுக் குரலெழுப்ப வேண்டும்

து. அரிபரந்தாமன் – நீதிபதி (ஓய்வு) – சென்னை உயர்நீதிமன்றம்.

நன்றி – பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, கல்வியாளர் – பிரின்ஸ் கஜேந்திரபாபு.

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>