Home / FITE சங்கம் / ஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா?!!

ஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா?!!

” இரண்டு நாட்களுக்கு ஒரு முறை HR போன் செய்றாங்க…எப்ப ரிசைன் செய்வ….போன தடவை நடந்த மீட்டிங்-ல, ரிசைன் செய்றனு சொன்னேன்னு சொல்றாங்க..ஆனா, நான் அப்படி சொல்லவே இல்ல…ஆபீஸ்க்கு உள்ள போற பர்மிசன வேற எடுத்துட்டாங்க…என்ன செய்றது- னே தெரியல, நான் ஆபீஸ்க்கு வர்றது இல்லைனு, எங்க வீட்டுக்கு வேற லெட்டர் அனுப்பிச்சிட்டாங்க…நான் பன்ச் பண்ணாலும் அட்டென்டன்ஸ் விழமாட்டேங்குது” என்று தேம்பினாள் கவிதா.” மீட்டிங் கூப்பிட்டு இப்பவே வேலை விட்டு போங்க, ஒன்னு, நாலு மாசம் சம்பளம் தர்றோம்… இல்ல 2 மாசம் நோட்டீஸ் டைம், 2 மாசம் சம்பளம்..எது வேணும்-னு சொல்லுங்கனு கேட்கறாங்க…கழுத்துப் புடிச்சு தள்ளாதது ஒண்ணுதான் குறை-டா மச்சான்…”, “2 மாசம் நோட்டீஸ் டைம்-ல ஆபீஸ் வரலாமா-னு கேட்ட, இல்ல நீங்க வர வேண்டியதில்லை, இங்க வந்தா, நீங்க வேலை தேட கம்பெனியில் இருக்கிற வசதிகளை பயன்படுத்துவீங்க-னு சொல்றாங்க…, என்னோட சம்பளத்துலதான் குடும்ப செலவை பார்த்துக்கறேன், இந்த வேலைய நம்பித்தான் ஊரைவிட்டு பெங்களூரு வந்தேன்…இப்ப நான் வேலை செஞ்சது, காக்னிசன்ட்-னு வெளிய சொன்னா இன்டெர்வியூக்கு யாரும் கூப்பிட மாட்டேங்கறாங்க” என்று புலம்பினான் அர்ஜுன்.” மார்ச் மாசம் வழக்கம் போல, அப்ரைசல் தொடங்கிச்சு, நான் ஒரு ரேட்டிங் போட்டு என்னோட டெலிவரி ஹெட்-க்கு அனுப்பிச்சேன். ஆனா, டீம்-ல இருக்குற 10 % ஆட்களுக்கு MS ரேட்டிங்(Meets Expectation) கொடுக்க சொன்னாங்க…கொடுக்கும் போது, வேலைய விட்டு தூக்கிடுவாங்க-னு சத்தியமா நெனைக்கலடா என்று சத்தியம் செய்தான் காக்னிசன்ட் நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் நண்பன்.

மார்ச் மாதத்தில் 6000 தகவல் தொழில்நுட்பப பணியாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக காக்னிசன்ட் நிறுவனம் அறிவித்தது ஊடகங்களில் செய்தியானது. இன்று அந்த எண்ணிக்கை 15,000 வரை நீளும் என்றும், தொடர்ச்சியாக இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், கேப்ஜெமினி, டெக் மஹிந்திரா என்று ஊழியர்களை வெளியேற்ற வரிசை கட்டி நிற்கின்றன நிறுவனங்கள். அப்படி என்னதான் நடக்கின்றது ஐ.டி நிறுவனங்களில் என்று விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன. ” என்ன அநியாயம் இது ?” என்று கேட்பவர்கள் தொடங்கி, ” லட்சக்கணக்குல கொடுக்கும் போது கேள்வி கேட்டீங்களா, இப்போ சத்தம் போடறீங்க ” என்று பல்வேறு குரல்கள் சமூகத்தில் கேட்கின்றன.

திறமையின்மை என்பது பொய்க்காரணம்

இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்ட, இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை நிதி அதிகாரி திரு. மோகன்தாஸ் பாய், இவையெல்லாம் ஐ.டி துறையில் நடக்கும் இயல்பான நகர்வுகள், புதிய தொழில்நுட்பங்களும், திறமையுமே முதன்மை என்கிறார். ஆனால், ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்த ஒரு ஊழியர் திடீரென்று ஒரு நாள் திறமையற்றவராக எப்படி மாற முடியும், திறமையில்லாத ஒரு ஊழியரை எப்படி இத்தனை நாட்கள் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் விட்டு வைக்கும், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஊழியர்கள்தான் பலியாடுகளா? போன்ற கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.

WhatsApp Image 2017-05-16 at 1.46.31 PM

அதே போல, அனைத்து நிறுவனங்களும் இது தாங்கள் செயல்படுத்தும்  வழமையான நடவடிக்கைதான், திறன் மதிப்பீடு (PERFORMANCE APPRAISAL ) அடிப்படையில் சிலர் வேலைநீக்கம் செய்யப்படுவது ஆண்டுதோறும் நடக்கிறது என்று ஒரே குரலில் கூறுகின்றனர். உண்மையிலேயே, திறமைதான் சிக்கல் என்றால், இவ்வளவு ஆண்டுகள் திறமையின்மையை கண்டறியாமல் நிறுவனம் எப்படி இயங்கியது?, திறமையை வளர்த்துக் கொள்ள ஊழியர்களுக்கு என்ன வாய்ப்புகளை நிறுவனங்கள் உருவாக்கின? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல எந்த நிறுவனமும் தயாராயில்லை.

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு, மொத்தம் 56000 பணியாளர்கள் வேலை இழப்பர் என்று கூறப்படுகிறது.  இந்த 56000 பணியாளர்கள் 2017 ஆம் ஆண்டில்தான் அனைத்து நிறுவனங்களுக்கும் “திறமையற்றவர்களாக”தெரிந்தார்கள் என்பது விந்தை.

அமெரிக்க ஆட்சி மாற்றம் காரணமா?

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிரான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. H1B விசா எனப்படும் பணியாளர்க்கான விசா பெரும் முறைகளில் மாற்றம் இருக்கும் என்றும் அறிவிப்புகள் வந்து உள்ளன. அதோடு, இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசும், இன்போஸிசும் இந்த விசா பிரிவை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு என்னவென்றால், H1B விசா பெற்று பணி நிமித்தமாக அமெரிக்க வரும் ஊழியர்களுக்கு, நிறுவனங்கள் ஆண்டுக்கு குறைந்தது 80000 அமெரிக்க டாலர்களையாவது தரவேண்டும் என்று கூறுகிறது.

இதுவரை, குறைவான சம்பளத்தில் ஊழியர்களை கண்டம் விட்டு கண்டம் அனுப்பிய பெருநிறுவனங்கள்,  அதிக(உரிய) சம்பளம் தருவதால் தங்களுடைய லாபம் குறையும் என்று அறிந்து மாற்று வழிகளை சிந்திக்கத் தொடங்கியுள்ளன.

உதாரணமாக, இன்போசிஸ் நிறுவனம் 10000 ஊழியர்களை அமெரிக்காவிலேயே பணிக்கு அமர்த்து போவதாக, அதாவது இங்கு இருக்கும் பணியாளர்களை அனுப்பாமல், அங்கிருக்கும் பணியாளர்களையே வேலைக்கு அமர்த்தப் போகிறது.

இதையொட்டி, லாபநோக்கின் முதல் பலியாக ஊழியர்களின் கழுத்தில் கத்தி வீசுகின்றன நிறுவனங்கள்.

ஐ.டி நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றனவா?

இன்றைய சூழலில், எந்த ஒரு நிறுவனமும் நட்டத்தில் இயங்கவில்லை. மாறாக, தாங்கள் இந்த ஆண்டு எவ்வளவு லாபமீட்டுவோம் என்று நிறுவனங்கள் அறிவித்தனவோ, அதை எட்ட முடியாமல் மட்டுமே உள்ளன. ஐ.டி நிறுவனங்கள் முன்னறிவித்த லாபங்களை எட்டுவதற்கு, பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் செயலில் இறங்கியுள்ளன நிறுவனங்கள்.

Untitledஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை, டிரம்ப் கொண்டு வந்த மாற்றங்கள், தானியங்கி துறையின் தாக்கம் என்று எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும், முதன்மை காரணமாக இருப்பது நிறுவனங்களின் லாபநோக்கு மட்டுமே.வேலையிழக்கும் பணியாளர்கள் என்ன செய்கிறார்கள்?2014 ஆம் ஆண்டு, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், ஆட்குறைப்பில் ஈடுபட்ட போது, ஊழியர்களுக்கு ஆதரவாக களம் கண்டு, ஒரு பெண் ஊழியரின் பணியைத் திரும்ப பெற‌ உதவிய தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மன்றம் ( FITE  – Forum for IT Employees  ) உள்ளிட்ட தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.FITE  எனும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மன்றம், சென்னையிலும், ஹைதராபாத்திலும் காக்னிசன்ட் ஊழியர்களைத் திரட்டி, தொழிலாளர் ஆணைய‌ங்களில் புகார் மனு அளித்துள்ளது.

FITE  சார்பில் ஊழிர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு மனுவை ஏற்றுக் கொண்ட தொழிலாளர் வாரிய அதிகாரி, கடந்த மே 11-ஆம் தேதி ஊழியர்களுக்கும், நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளார். அடுத்தகட்ட பேச்சு வார்த்தை, வருகின்ற 26 ஆம் தேதி நடைபெறுகின்றது.

IMG-20170329-WA0001-1024x538

பணிநீக்கங்கள் தீர்வு அல்ல!

தங்களுக்காக உழைத்த பணியாளர்களை, திறமையில்லாதவர்கள் என்று முத்திரை குத்தி பணி நீக்கம் செய்வதன் மூலம், உடனடி லாபத்தை வேண்டுமானால் நிறுவனங்கள் அடைந்துவிடலாம். ஆனால், ஐ.டி .நிறுவனங்கள் வளர்ச்சியின் அடையாளம் என்றிருக்கும் முகத்திரை கிழிந்து கொண்டு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

ஊழியர்களும் தங்களுடைய உரிமையைக் கேட்டுப் பெற ஒன்றிணைந்து குரல் கொடுப்பது இன்றியமையாதது ஆகிறது.

அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றம், மாறிவரும் தொழில்நுட்பங்கள்,  தானியங்கி துறையின் வருகை என ஆயிரம் காரணங்களால் ஐ.டி துறை பாதிக்கப்பட்டாலும் நிறுவனங்களும், பணியாளர்களும் இணைந்தே இந்த சிக்கல்களை எதிர்கொள்ள முடியுமே தவிர, ஊழியர்களை பணி நீக்கம் செய்வதால் அல்ல!

கதிரவன் – இளந்தமிழகம் இயக்கம்.

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*