Home / ஈழம் / இலங்கை புறக்கணிப்பு / ஈழ இனப்படுகொலையை நினைவுகூர்தலும் – விடுதலைக்கான திட்டமிடலும் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

ஈழ இனப்படுகொலையை நினைவுகூர்தலும் – விடுதலைக்கான திட்டமிடலும் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களும் சிங்கள மக்களும் ஒரே அரசமைப்பின் கீழ் ஒன்றிணைந்து வாழ முடியாது என்பதற்கு இன்று வரலாற்று சாட்சியாக முள்ளிவாய்க்கால் கடற்கரையும் வட்டுவாகல் பாலமும் இருக்கின்றது . ஈழத் தமிழர்கள் மீது அரை நூற்றாண்டிற்க்கும் மேலாக அடக்குமுறையையும், இனஅழிப்பையும் தொடரும் சிங்களப் பேரினவாத வரலாற்றில், மகிந்த இராசபக்சேவின் தலைமையில் மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் கடற்கரை வரை மரணம், மரணம், மரணம் என இன அழிப்பு உச்சகட்டத்தை அடைந்தது. இப்போரில் தமிழர்களின் பண்பாட்டு, பொருளியல், வாழ்வாதாரம் என அனைத்து கட்டமைப்புகளும் அழித்தொழிக்கப்பட்டது ஒருபுறம், இலட்சக்கணக்கில் மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த பொழுது, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மெளனமாக அந்த மனிதப் பேரவலத்தை ஆதரித்தது, மறுபுறம் இன அழிப்புக்கு உள்ளாகி வரும் ஈழத் தமிழர்களுக்கான நீதி அனைத்து தளங்களிலும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது.

8 ஆண்டுகள் கடந்து விட்டது,  2009 இல் இனக்கொலை குற்றவாளி இராசபக்சே அரசு தன் இராணுவத்தின் கொடூர முகத்தை அப்பாவி பொதுமக்கள் மீது காட்டியது. அதே போல இப்போதும் ஆட்சி மாற்றம் என்ற பெயரில் இலங்கையின் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் கூட்டு சேர்ந்து உள்நாட்டில் மக்கள் மீது அடக்குமுறைகளை தொடர்ந்த படி பன்னாட்டுத் தளத்தில் நீதி கோரும் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை வீழ்த்திட மூர்க்கமாக செயல்பட்டு வருகின்றனர். போராட்டமே தங்கள் குரலை வெளி உலகிற்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் இறுதிப் போரில் உயிருடன் கைது செய்யப்பட்ட தங்கள் உறவுகளை விடுதலை செய்யக் கோரியும், இராணுவம் ஆக்கிரமித்த காணிகளை(நிலத்தை) விடுவிக்கக் கோரியும்  தொடர்ந்து பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர்.

கேப்பாபிலவு, மயிலிட்டி, இரணைதீவு உள்ளிட்ட இடங்களில் சிங்கள இராணுவத்தின் காணி பறிப்புக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் போருக்குப் பிறகும் தமிழர் தாயகத்தில் தொடரும் சிங்கள ஆக்கிரமிப்பின் சாட்சியாக இருக்கின்றன. சிங்கள இராணுவத்தால் உயிருடன் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட (Enforced Disappearance) தமிழர்களின் நிலையை அரசு வெளிப்படுத்தக் கோரி கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் வரும் மே 27(2017) அன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் சார்பாக  ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இப்போராட்டம் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டமாக நடைபெற்று வருகின்றது. இலங்கை அரசுடன் இணக்கம் காட்டி இயல்பு நிலை திரும்பிவிட்டதாக காட்ட முயலும் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளின் முகத்திரையை கிழிப்பதாக இப்போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் (Common wealth countries) மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அன்றைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனிடம் காணமல் ஆக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் தங்கள் உறவுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்தனர். ஐநா அதிகாரிகள் பான்கீ மூன், நவநீதம்பிள்ளை, சையது அல் உசைன், இந்திய பிரதமர் மோடி என பலரிடம் இதே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இதுவரை 4 முறை தீர்மானமும், விவாதமும் நடைபெற்று விட்டது, அரசு தரப்பில் எவ்வளவோ ஆணையங்கள் அமைக்கப்பட்டுவிட்டது. ஆனால்  மே 2009 முள்ளிவாய்க்காலில் தங்கள் உறவுகளை இராணுவத்திடம் கையளித்த மக்கள் இன்றும் தங்கள் உறவுகளின் உண்மை நிலை குறித்து அறிய முடியாமல் போராடி வருகின்றனர். இது தான் இன்றைய ஈழத் தமிழர்களின் வாழ்நிலை.

IMG_1073

இந்தியாவை பொறுத்தவரை காங்கிரசு தலைமையிலான ஆட்சியில் 13 ஆவது சட்டத் திருத்தம் என்ற பெயரில் ஐந்தாண்டு காலம் கடத்தப்பட்டது, இன்று பாரதிய சனதா கட்சி தலைமையிலான ஆட்சியில் வெறும் வீடு கட்டிக் கொடுக்கும் மறுவாழ்வு பணிகளோடு இன அழிப்புக்கான நீதி விசாரணை கோரும் போராட்டத்தை முற்றிலுமாக முடக்கிவிட்டனர். புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற பெயரில், ஐ.நா மனித உரிமை மன்றம், உலக நாடுகளின் அழுத்தத்தில் இருந்தும் சிறீசேனா-ரணில் அரசு தொடர்ந்து தப்பித்து வருகின்றது.  மொத்தத்தில் மகிந்த இராசபக்சே தலைமையில் இராணுவ வெற்றி கண்ட சிங்களப் பேரினவாதம், ஆட்சி மாற்றம் என்ற பெயரில் அனைத்து கட்சிகளையும் கூட்டுச் சேர்ந்து இன அழிப்பு குற்றச்சாட்டில் இருந்து இலங்கை அரசைக் காக்கும் அரசியல் வெற்றிக்கான அனைத்து வேலைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வும் வழங்காது, இன அழிப்பு குற்றத்திற்கு நீதியையும் மறுத்து வரும் சிறீசேனா ஆட்சியின் தோல்வி என்பது சிங்களப் பேரினவாத இலங்கை அரச கட்டமைப்பின் தோல்வி என்பதை, உலக நாடுகள் உணரச் செய்ய வேண்டியவர்களாக தமிழர்கள் நாம் இருக்கின்றோம். இதுவே நீதி கோரும் தமிழர்களின் போராட்டத்திற்கு உலக அளவில் வலுசேர்க்கும். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தலை உலகம் முழுவதும் தமிழர்கள் நினைவு கூறும் நிகழ்வாகும், பிற தேசிய இனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வாகவும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். உலகின் பிடியில் இருந்து தப்பிக்க முயலும் இலங்கை அரசின் இனஅழிப்பு குற்றங்களை உலக மக்கள் அனைவரும் அறிய வைக்கும் தொடர் போராட்டமாக இந்நிகழ்வு அமைய வேண்டும்.

VRB_900

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற சல்லிக்கட்டு ஆதரவு போராட்டமும், நெடுவாசல் போராட்டமும் சனநாயகப் போராட்டங்களில் பெருந்திரள் மக்கள் பங்கேற்பையும் அதற்கான வெற்றியை கண்ட போராட்டமாகவும் அமைந்திருந்தன. இப்படிப்பினையில் இருந்து தங்கள் போராட்டத்தை பெருந்திரள் மக்கள் போராட்டமாக உருமாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். அதை மெய்ப்பித்திடும் வகையில் அரச தலைவர்கள், அரசியல் கட்சியினர், தனிநபர் தலையீடு, அனைத்துலக அமைப்புகளின் வெற்று வாக்குறுதி என யாரிடமும் நீதிக்கான ஆதரவு கிடைக்காத ஈழத் தமிழர்களும் அவர் தம் மாணவ சமுதாயமும் தங்கள் கோரிக்கைகளுக்கு தாங்களே போராட வீதிக்கு வந்துள்ளனர். இப்போராட்டங்களை ஒன்றுதிரட்டி வெற்றியாக்க வேண்டியதும், ஒற்றுமையாக முன்நகர வேண்டியதும் நம் அனைவரின் கடமையாகும். அதுவே முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு நீதிகோரும் முழுமையான நினைவு கூறுதலாக அமையும்.

இத்தருணத்தில் தமிழ்நாட்டு மக்களாகிய நாம் ஈழத் தமிழர்களின் இனஅழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கும் பெருங்கடமை கொண்டவர்களாக இருக்கின்றோம் என்பதையும் நினைவு கூறுவோம். முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியர்களின் அர்ப்பணிப்புடன் 2009 இல் போரை நிறுத்திடக் கோரி போராட்டக் களம் கண்டோம், 2013 இல் தமிழ்நாடு மாணவர்களின் எழுச்சியுடன் இனஅழிப்புக்கு பன்னாட்டு விசாரணை கோரி போராடினோம். இப்போராட்டம் அதே எழுச்சியுடன் தொடர வேண்டும், கட்சிகள், தலைமைகள் மாறினாலும், சிங்கள – இந்திய கூட்டு தொடர்கின்றது. தொடர்ச்சியாக சிங்கள அரசை பாதுகாத்து தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டில், அயலுறவுக் கொள்கையில் நீதி, அறத்தின் அடிப்படையில் தமிழர் ஆதரவு நிலைப்பாடு ஏற்படும் வரை இந்திய அரசை எதிர்த்து வலிமையாக போராடிடுவோம் என இந்நினைவேந்தலில் நாம் உறுதி ஏற்போம்.

இளங்கோவன் – இளந்தமிழகம் இயக்கம்

About இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*