Home / அரசியல் / ஆறுகள் இறப்பதில்லை; கொல்லப்படுகின்றன! இரா. முருகவேளின் முகிலினியை முன்வைத்து…. தமிழ்நதி

ஆறுகள் இறப்பதில்லை; கொல்லப்படுகின்றன! இரா. முருகவேளின் முகிலினியை முன்வைத்து…. தமிழ்நதி

கலை இலக்கியவாதிகள் தாம் வாழும் சமூகத்தையும் சூழலையும் குறித்து அக்கறை கொண்டவர்களாகவும், எந்த வகையிலான அதிகாரத்திற்கும் எதிரான நிலைப்பாட்டினை எடுப்பவர்களாகவும் இருக்கவேண்டும். அதிகார ஒத்தோடிகள், தமது நடத்தை குறித்து எத்தனைதாம் நியாயங்களை அடுக்கியபோதிலும் வரலாறு அவர்களை நிராகரித்துவிடுகிறது. ஊரே பற்றியெரியும்போது தீயின் அழகினைப் பாடுகிறவர்களும் தமிழிலக்கியத்தில் உண்டுதான். ஆனால், இரா.முருகவேள் அத்தகையதொரு படைப்பாளியன்று என்பதை, தனது இரண்டாவது நாவலாகிய ‘முகிலினி’மூலம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார். ‘முகிலினி’தான் பாயும் கரையோரம் வாழ்ந்த மக்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பேசுகிறது.

‘இந்த நாவலைப் படிக்கும் நண்பர்களுக்கு இது முற்றிலும் புனைவு, எதுவுமே புனைவு அல்ல என்று இரண்டு முரண்பட்ட சித்திரங்கள் கிடைக்கக்கூடும்’என்று நாவலாசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல, வகைமை பற்றிய குழப்பம் தோன்றவே செய்கிறது. அதிலும்-அண்ணாத்துரை, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ராஜாஜி, நம்மாழ்வார் இன்னபிற உயிருடன் நடமாடும், நடமாடிய பாத்திரங்கள் நாவலுள் வரும்போது புனைவு என்பதைக் கடந்து அதற்கொரு வரலாற்று நூலின் தன்மை வந்துவிடுகிறது.

அத்துடன், பெரும்பாலான அத்தியாயங்கள் ஆண்டு, திகதிக் குறிப்புகளுடன் தொடங்குகின்றன. அதுவும்கூட நாவல் என்று ஏற்கெனவே வரித்துவைக்கப்பட்டிருக்கிற வடிவத்திற்கு முரணானதே. இதனை ‘கட்டுரைத்தன்மை’என்று சாடுவாருளர்.

ஆனால், நாவலுக்கோ இதர இலக்கிய வகைமைகளுக்கோ வரையறுக்கப்பட்ட, திட்டமான வடிவம் அவசியமா? கலையானது வரைவிலக்கணங்களுக்குள் அடங்கக்கூடியதா? என்ற கேள்விக்கான பதில் விரிவாக ஆராயப்படவேண்டியது. ஆறு, தன் பாய்ச்சலுக்கேற்றபடி கரைகளைத் தகவமைத்துக்கொள்கிறதா? அன்றேல், கரைகளே ஆற்றின் போக்கைத் தீர்மானிக்கிறதா? என்ற பழக்கப்பட்டதும், இந்நாவலின் பேசுபொருளுக்கு நெருக்கமானதுமான கேள்வியையும் எழுப்பத் தோன்றுகிறது.

கஸ்தூரிசாமி-சௌதாமினி (மேட்டுக்குடி), ராஜூ-மரகதம் (நடுத்தர வர்க்கம்), மாரிமுத்து-மயிலாள் (அடித்தட்டு வர்க்கம்) என்ற மூன்று வர்க்கங்களிலுமுள்ள மூன்று குடும்பங்களை வகைமாதிரியாக வைத்துக்கொண்டு அவர்களைச் சுற்றி கதை வளர்ந்துசெல்கிறது.

பிரதான பாத்திரங்களில் ஒருவராகிய ராஜூவால், ‘முகிலினி’ என்று விளிக்கப்படும் பவானி ஆறுதான் நாவலின் நாயகி. புறநடையாக, நாயகன் என்று தனியொருவர் இல்லை. பவானி ஆறு-மோயார் நதி இவையிரண்டினதும் கூடுதுறைக்குக் கிழக்கே கட்டப்பட்ட பிரமாண்டமான அணைக்கட்டாகிய பவானி சாகரத்தையொட்டி தொழிற்சாலையொன்று கட்டப்படுவதும், ஆடை உற்பத்திக்குப் பயன்படும் செயற்கை இழை நூலைத் தயாரிக்கும் ‘டெக்கான் ரேயான்’என்ற இந்தத் தொழிற்சாலையின் தோற்றத்தால் பவானி ஆறும் அதைச் சூழ்ந்த இயற்கையும் மக்களின் வாழ்வும் எங்ஙனம் மாசடைந்தன அன்றேல் மாற்றமடைந்தன என்பதுமே இந்நாவல் பயணிக்கும் வழித்தடம்.

மனிதர்கள் தங்கள் பேராசையின் காரணமாக இயற்கைமீது தொடுக்கும் போரை, இழைக்கும் வன்கொடுமையை வேறெந்த நாவலும் இவ்வளவு காத்திரமாகச் சொன்னதாக (எனது வாசிப்பின்படி) நினைவில்லை. குறிப்பிட்ட தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் ஆற்றுநீர் தார் போல கறுப்பாக மாறிக் கனத்து நகரமுடியாமல் பரிதாபமாக நகர்ந்துசெல்வதை, அந்த நீரைக் குடித்த ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் மான்களும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுவதை, அவற்றினதும் செத்து ஆற்று நீரில் மிதந்துசெல்லும் மீன்களினதும் வயிற்றுக்குள் கறுப்பு அடைசல்கள் அடைந்திருப்பதை, செடிகொடிகளும் தென்னைகளும் வயல்களும் பசுமை வற்றி கரிந்துபோவதை, கிணறு உள்ளடங்கலான நீர்நிலைகள் மற்றும் குழாயிலிருந்து வரும் நீருமே கருநிறம்பூண்டு குடிக்கவியலாதபடி கசந்துபோனதை, அந்நீரைக் குடிப்பவர்கள் நோய்வாய்ப்பட்டு சாவிற்கு நெருக்கமாகச் சென்றதை, தொழிற்சாலை வெளிவிடும் கந்தக நாற்றத்தால் காற்று சுவாசிக்கமுடியாதபடி மாசடைந்துபோனதை… வாசிக்க வாசிக்க நெஞ்சு பதைக்கிறது. இதுவொரு இட்டுக்கட்டப்பட்ட கதையல்ல@ உண்மையில் நடந்ததையே முருகவேள் நாவலாக எழுதியிருக்கிறார் என்பதை உணரும்போது வலிக்கிறது.

அதேசமயம், டெக்கான் ரேயானின் நிர்மாணத்தால், அந்தச் சுற்றாடலை அண்டி வாழ்ந்த மக்கள் அடைந்த பொருளாதார ஏற்றங்களும் சொல்லப்படாமலில்லை.

mukilini-full

பிரமாண்டமானதொரு நிறுவனம் அல்லது தொழிற்சாலை எங்ஙனம் இயங்குகிறது, அது எதிர்கொள்ளும் சவால்கள், மேட்டுக்குடி வர்க்கத்தின் ‘நாகரிகமான’ தந்திரங்களும் அவர்கள் பரஸ்பரம் தமக்கிடையில் செய்துகொள்ளும் சமரசங்களும், அனைத்து எதிர்மறை விளைவுகளும் வந்து விடியும் தளமாக அடித்தட்டு மக்களின் தலைகள் இருப்பதும் என சமகாலத்தின் சாட்சியமாக இந்நாவல் அமைந்திருக்கிறது. நேர்வழியில் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு, ஊட்டியின் கடுங்குளிரைப் பொருட்படுத்தாமல் மரம்வெட்டும் வேலைக்குச் செல்லும் மாரிமுத்து என்ற இளைஞன், அட்டையைப் போல இரத்தத்தை உறிஞ்சும் கடூழியத்தினால் ஆரோக்கியம் உறிஞ்சப்பட்டு கால் விரல்கள் ஊனமாகிப்போக மலையிறங்கி வருவதை உழைப்புச் சுரண்டலுக்கு உதாரணமாகக் கூறமுடியும்.

மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவாக டெக்கான் ரேயான் மூடப்படுவதனோடு நாவல் அடுத்தடுத்த தலைமுறைகளை நோக்கி நகர்கிறது. அறுபதாண்டு காலத்தை உள்ளடக்கி, முறையே ராஜ்குமார் பாலாஜி-கௌதம்-சந்துரு என மூன்றாவது தலைமுறை வரை நீள்கிறது.

ஒன்றோடொன்று தொடர்புடையனவே எனினும், டெக்கான் ரேயானின் தோற்றம்-வளர்ச்சி-வீழ்ச்சி, இயற்கை வேளாண்மை, சந்துரு சம்பந்தப்படும் கொலை வழக்கு என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து ஞாபகத்தில் வைத்திருப்பது வசதியாக இருக்கிறது. அதிலும், திகில் படமொன்றை இருக்கை நுனியில் அமர்ந்து பார்ப்பதற்கு ஒப்பான வாகனத் துரத்தலொன்றும், கொலை வழக்கு விசாரணைக் காட்சிகளும் நாவலுக்கு ஜனரஞ்சகத்தன்மை சேர்க்கின்றன. அது நாவலின் தரத்திற்கு எவ்வகையிலும் சேதாரம் விளைவிக்கவில்லை. ‘தரம் என்றால் என்ன?’என்ற கேள்விக்கு அவரவர் இரசனை பதிலிறுக்கட்டும்.

விமானப்படையிலிருந்து ஓய்வுபெற்ற திருமகன் என்பவர், சே குவேராவை விற்பனைப் பண்டமாகக் கொண்டு, ‘புரட்சிகர’வணிக முயற்சிகளில் ஈடுபட யோசித்து, அது வேலைக்காகாமல் போக, ஈற்றில் ஆஸ்கான் என்ற கார்ப்பரேட் சாமியாராக வெற்றிபெறுவதை நகைச்சுவையோடு விபரித்திருப்பார் முருகவேள். அரசு-கார்ப்பரேட் சாமியார்கள்-பெருநிதிய நிறுவனங்கள் ஆகிய மூன்று பங்காளிகளும் நதிகள் கூடுவதுபோல சுவடு தெரியாமல் கூடி எவ்விதம் மக்களைச் சுரண்டுகிறார்கள் என்பதை கசந்த புன்னகையோடு கூறியிருப்பார். தவிர, காவற்றுறையினரது ‘சட்டத்திற்குக் கட்டுப்பட்ட’ நடவடிக்கைகள் வேறு!

பெருநிதிய நிறுவனங்கள், வணிகமயமாக்கலால் கிராமங்களைச் சூறையாடியபின், ‘இயற்கைக்குத் திரும்புவோம்’, ‘கிராமங்களுக்குத் திரும்புவோம்’என்ற புதிய கோசங்களுடன், நரி கோழிக்கூட்டுக்குள் நளினநடை போட்டு ஒய்யாரமாக நுழைவதுபோல, நுழைவதை வெளித்தெரியாத எள்ளலோடு சித்தரித்திருப்பார் நாவலாசிரியர். மத்தியதர வர்க்கத்தினரின் ஆரோக்கியம் குறித்த திடீர் விழிப்புணர்வை, அல்லது நீண்டகாலம் வாழும் வேட்கையை எங்ஙனம் காசாக மாற்றுவது என, நீண்ட மேசைகளின் சுற்றவர குடிநீர் போத்தல்கள் சகிதம் அமர்ந்து விவாதிக்கும் தில்லாலங்கடி பேர்வழிகளைப் பற்றிய சித்திரம் வாசிப்பவர்களது மனங்களில் தோன்றாமற் போகாது. ‘தாய்மண் ஆர்கானிக்கல்’என்ற ‘இயற்கைக்குத் திரும்பும்’ அமைப்பின் நிறுவனராகிய வெண்ணிலவனும் “எல்லாமே பாய்சன் சார்”எனப் பயமுறுத்தும் அவனுடைய மனைவியும் எள்ளலின் உச்சம். (பக்கம்: 433). தொடர்மாடிக் குடியிருப்புகளில் வாழ்வோரை மாடித்தோட்டம் போடும்படி ஊக்குவிக்கிறார்கள் கணவனும் மனைவியும். அதற்கான விதைகளுக்கும் செடிகளுக்கும் நிலத்திற்கும் எங்கு போவது? இஃதென்ன கேள்வி? அதை வழங்கத்தானே அவர்கள் இருக்கிறார்கள்!

‘மூவாயிரம் கிலோ மீட்டர் நீளமும் அகலமும் கொண்ட இந்தியா ஏன் மாடித்தோட்டம் போடவேண்டும்?’கௌதமின் ஊடாக கேள்வி எழுப்புகிறார் முருகவேள்.

டெக்கான் ரேயான் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க சதவீத பங்குகளை வைத்திருக்கும் பெரும் பணக்காரராகிய கஸ்தூரிசாமியின் மனைவியாகிய சௌதாமினி என்ற பெண், அறிவார்த்தமும் ஆளுமையும் கொண்டவராகச் சித்தரிக்கப்பட்டிருக்க, இதர பெண் கதாபாத்திரங்கள் பலவீனர்களாக வார்க்கப்பட்டிருப்பது ‘முகிலினி’யின் அழகோடு ஒட்டாத மரு. தமிழ்ப்பற்று மிக்கவராகிய ராஜூவின் மனைவி மரகதமும், இடதுசாரி அரசியல் பேசும் ஆரானின் மனைவி பொன்னாத்தாவும் மணிமேகலையும் இதர பெண்களும் மனதில் நிற்காத கிளைப்பாத்திரங்களாக வந்து மறைகிறார்கள். இந்நாவல் தொடங்கிய காலகட்டமாகிய 1953-இல், மிதமிஞ்சிய ‘சுதந்திரத்தை வழங்குவது’என்பது யதார்த்தத்திற்குப் புறம்பானது என நாவலாசிரியர் எண்ணியிருக்கலாம். ஆனால், சமகாலம்வரை நாவல் நீட்சி பெறும்போது அவ்விடயம் கவனிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இதன் பொருள், இந்நாட்களில் பெண்கள் தங்களுக்கு ‘வழங்கப்பட்ட’சுதந்திரத்தை என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதல்ல. ஐம்பதுகளோடு ஒப்பிடும்போது, பெண்களின் நிலை ஓரளவு முன்னேறியிருக்கிறது என்பதாகும். மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த கௌதமைக் காதலிக்கும் வர்ஷினியும்கூட தற்காலத்திற்கேயுரிய பண்பெனக் கூறப்படும் சுயநலம் சார்ந்து சிந்திப்பதோடல்லாமல், தனித்துவமான குணாதிசயங்கள் அற்ற பிளாஸ்டிக்தன்மை கொண்டவளாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். இலட்சியவாதம் பேசும் ஆரான், ராஜூ, திருநாவுக்கரசு… ஓரளவு அத்தன்மைகள் கொண்டுள்ள கௌதம், சந்துரு இவர்களோடு ஒப்பிடும்போது பெண் பாத்திரங்கள் தீர்க்கமாக அமையவில்லை.

1953-இல் தொடங்கி சமகாலம்வரையிலான அறுபதாண்டுகளுக்கு மேலான வரலாற்றை, மூன்று தலைமுறைகளின் கதையை ஒரு படைப்பில் தளர்வின்றிச் சொல்வது மிகவும் சிரமம். அதிலும் வரலாறு சார்ந்த புதினங்களுக்கேயுரித்தான வரண்டதன்மை (சாண்டில்யன் வகைமைகள் இதற்குள் உள்ளடங்கா!)சலிப்பை ஏற்படுத்திவிடக்கூடியது. ஆனால், ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஆறு போல சலசலவென்று ஓடும் நடை. அந்த நடையைக் கூட்டிச் சென்றதில் நாவலாசிரியரின் அழகியல் கவிந்த இயற்கை வர்ணனைகளுக்குப் பெரும் பங்குண்டு. பவானி ஆற்றைப் பற்றிய சித்திரங்களும், அணைக்காடு மற்றும் மலைக்காடு பற்றிய விபரணங்களும் அழகியலின் ஈரம் செறிந்தவை.

‘அவன் இங்கே முதன்முதலாக வந்தபோது, மழைக்காலம் உச்சத்திலிருந்தது. அப்போது மலைகளின் அடிவாரம்வரை முகில்களால் மறைக்கப்பட்டிருக்கும். இந்த மலைகளின் பின்னணியில் இருண்ட வானும், கருமேகங்களும் உக்கிரமான அழகுடனிருக்கும். காற்று ஓயாமல் வீசியடித்துக்கொண்டிருக்கும். அவ்வப்போது வானம் வெளிவாங்கும்போது சிகரங்களை ஒட்டி வெண்முகில்கள் தவழ்ந்துசெல்லும். புதிதாகத் தோன்றிய வெள்ளி ஓடைகள் கோடு கோடாக பசிய மலைகளிலிருந்து இறங்கிக்கொண்டிருக்கும். புல்மண்டிய பாறைகள் மழை ஈரத்தில் பளிச்சிடுவதை இங்கிருந்தே காணமுடியும். அப்போது, பளீரென்று நீலநிறத்தில் ஒளிவிடும் வானமும், மலைகளும் வரைந்து வைத்த ஓவியம் போலிருக்கும்.’

ஒரு நாவலை நிறைவாக எழுதி முடிப்பதென்பது தொலைவில் தெரியும் ஒளிப்பொட்டின் தூரத்தை அறியாமல் அதை நோக்கி நடப்பதைப் போன்றது. (‘நிறைவு’என்பது ஒரு பேச்சுக்கு. படைப்பாளி நிறைவு கொள்வதேயில்லை.) நெருங்கி விட்டோம் என்றெண்ணும்போது விலகிச் செல்லக்கூடிய இலக்கு அது. ‘முகிலினி’போன்ற வரலாற்று நாவலை எழுத, இரா.முருகவேள் எத்தனை புத்தகங்களைப் படித்திருப்பார்? பொருட்படுத்தியும், கண்டுகொள்ளாமலும் பேசிய எத்தனை மனிதர்களைச் சந்தித்திருப்பார்? எத்தனை மைல்கள் பயணித்திருப்பார்? மூளை உழைப்பினைக் கணக்கிலெடுக்காத நிலத்தில் எத்தனையெத்தனை மணித்தியாலங்களை சிந்தனையிலும் எழுத்திலும் செலவழித்திருப்பார்? ‘உடோபியா’என்றழைக்கப்படும், இலட்சியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனையுலகு பற்றிக் கனவுகாணும் ஒருவராலேயே இத்தகைய நாவலொன்றைப் படைக்க இயலும். ‘சந்துருவையும் திருநாவுக்கரசையும் போன்றவர்கள் அதிகாரங்களால் பந்தாடப்படும்போது நான் அவர்களுக்காக குரல் கொடுக்க முன்னிற்பேன்’ என்று கூறும் கௌதமிலும் முருகவேளே தெரிகிறார்.

ஆரான் போன்ற உண்மையான இடதுசாரிகளையும், திருநாவுக்கரசு போன்ற தன்னிலிருந்து மாற்றத்தைத் தொடங்குகிற மனிதர்களையும் பின்னிறுத்தி இவ்வுலகம் விரைந்தெங்கோ சென்றுவிடும்; அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வரலாற்றிலிருந்து மறைந்துபோவார்கள் என்பது அனுமானிக்கத்தக்க யதார்த்தம்.

பல பொருட்களை வெவ்வேறு தருணங்களில் மேலே எறிந்து ஒன்றையும் தவறவிடாமல் பிடிக்கிற வித்தைக்காரனின் சாமர்த்தியம் நாவலை முடித்த விதத்தில் தெரிகிறது. சம்பவங்களும் மனிதர்களும் ஈற்றில் தற்காலிகமாகவேனும் ஒரு முத்தாய்ப்பை அல்லது தரிப்பை அடைந்தேயாதல் நியதி. அடைகிறார்கள்.

ஆற்றில் தொடங்கி ஆற்றில் முடிகிறது கதை. மனிதர்கள் இறந்துபோவார்கள். மழை பொய்க்காதவரை நீர்நிலைகள் இறப்பதில்லை. பதிலாக, ஆறுகளும் இயற்கை வளங்களும் மனிதர்களாலேயே கொல்லப்படுகின்றன. அந்தப் புரிதலை அறிவார்த்தத்தோடு எடுத்துரைப்பதில் ‘முகிலினி’ வழியாக முருகவேள் வெற்றி பெற்றிருக்கிறார்.

எழுத்தாளர் . தமிழ்நதி

நன்றி – அம்ருதா இதழ்.

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*