Home / அரசியல் / மோடியின் மருத்துவத் துரோகம் – மக்களை கைவிட்ட மருத்துவ கொள்கை -2017

மோடியின் மருத்துவத் துரோகம் – மக்களை கைவிட்ட மருத்துவ கொள்கை -2017

தேசிய சுகாதாரக் கொள்கை 2017 (National Health Policy (NHP ) 2017) ஏழை மக்களைத் திக்கற்ற நிலைக்குத் தள்ளுகிறது. தரமான, செலவு சிக்கனமான மருத்துவச் சேவையை அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளாமல், தனியார் துறையிடம் அளிக்க வேண்டும் என்று NHP 2017 சொல்கிறது.

– டீ கே ராஜலட்சுமி

இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசின் நிதி அமைச்சகம் தேசியத் தலைநகரில் உள்ள முதன்மையான மருத்துவமனைக்கு பின்வருமாறு எழுதியது. மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகள் பதிவு, படுக்கைக்கான வாடகை, கதிரியக்கச் சோதனைகள், ஆய்வகப் பரிசோதனைகள், மற்ற பிறவற்றின் கட்டணத்தைப் பரிசீலித்து உயர்த்த வேண்டும் என்று அந்த செய்தி சொன்னது. அந்த மருத்துவமனையின் செலவுகளை ஈடுகட்ட தன்னால் முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. பயனாளர் கட்டணத்தை உயர்த்தி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் கட்டண உயர்வு தேவையானதாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டது.

அந்த மருத்துவ மனையில் VIP கவுன்டர் ஒன்றைத் திறக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. அந்த ஆலோசனையை மருத்துவர்கள் கடுமையாக எதிர்த்த காரணத்தால் அது கைவிடப்பட்டது. நாட்டின் மக்கள் மருத்துவச் செலவுக்காக தங்கள் கைப் பணத்தைக் கூடுதலாகச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்ற விழிப்புணர்வு பரலாக ஏற்பட்டுள்ள சூழலில் பயனீட்டாளர்கள் கட்டணம் உயர்த்தப்படுவது நிகழ்ந்தது.

இத்துடன் சம்பந்தப்பட்ட என்று சொல்ல முடியாத சம்பவம் ஒன்று சத்தீஸ்கரில் நடைபெற்றது. கருத்தடை அறுவையை அரைகுறையாக ஒரு மருத்துவர் செய்த காரணத்தால் 21 பெண்கள் இறந்துபோனார்கள். தொழில்நுட்பக் காரணங்களைச் சுட்டிக்காட்டி சத்தீஸ்கர் நீதிமன்றம் அந்த மருத்துவரை விடுதலை செய்தது. இறந்துபோன பெண்களில் பலர் பழங்குடி இளம் பெண்கள். நாட்டின் மருத்துவ சேவை ஓர் பெரிய நரகமாக இருக்கிறது என்பதை இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. இதுபோன்றவற்றை கொள்கை ஆவணம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

மார்ச் 16 அன்று வெளியிடப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கை 2017 வெகு நீண்ட காத்திருப்புக்குப் பின்பு வெளியிடப்பட்டதாகும். ஏனென்றால், இதற்கு முந்தைய சுகாதாரக் கொள்கை அறிக்கை 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்கு முந்தைய அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு 1983. 1983 அறிக்கை 2000 ஆண்டுக்குள் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தது.

இதில் ஆர்வத்தைத் தூண்டும் கருத்து என்னவென்றால், மார்ச் 16, 2017 அன்று கொள்கை அறிக்கையை சுகாதாரம்- குடும்ப நல அமைச்சகம் வெளியிடப்பட்டபோது அதன் நகல் பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட வில்லை. ஏறக்குறைய ஒன்றரை நாள் கழித்த பின்னர் அது அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

14 ஆண்டுகள் கழித்து புதிய கொள்கை ஆவணம் வெளியிடப்படும்போது, அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தக் கொள்கை அறிக்கை செய்வதெல்லாம் 2002 கொள்கை அறிக்கையில் நுழைக்கப்பட்ட பிரச்சனைகளை மறு கட்டமைப்பு செய்திருப்பதும், மறு தகவமைப்பு செய்திருப்பதும் மட்டுமே. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 % சுகாதாரத்திற்கான செலவிற்காக அதிகரிப்பது என்ற உத்திரவாதம் 2012-17 ஐந்தாண்டு திட்டக் காலத்தின் இறுதியில் நடக்கும் என சொல்லப்பட்டது, அதுவும் இப்பொழுது 2025ல் தான் நடைமுறைக்கு வரும் என்று தற்போதைய கொள்கை அறிக்கை சொல்கிறது.

மாநிலங்கள் மருத்துவத் துறைக்காகச் செலவிடுவதை 8 %  ஆக 2020 பட்ஜெட்டில் உயர்த்துவது என்று NHP 2017 உறுதியளிக்கிறது. 99வது சுகாதாரம், குடும்ப நலன் நாடாளுமன்ற கமிட்டி (2016-17 நிதி ஒதுக்கீட்டுக்கானது) ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை வெளியிட்டது. அது மாநிலங்கள் சுகாதாரத்துக்காக எவ்வளவு செலவு செய்கின்றன என்பது பற்றியது. புதிய முறையில் நிதி பங்கீடு செய்யப்படுவதால் மாநிலங்கள் சுகாதாரத்துக்காகச் செலவு செய்வது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், 2016-17 காலத்தில் எந்த மாநிலமும் தனது சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்தான் அந்த நாடாளுமன்றக் கமிட்டி வெளியிட்ட தகவல்.

சில மாநிலங்களின் சுகாதாரச் செலவு குறைக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலங்கள் ஓரளவுக்குத்தான் தங்களின் சுகாதார செலவை அதிகரித்திருந்தன. ”மத்திய அரசின் சுகாதாரச் செலவு ஒதுக்கீடு அதிகமாக குறைக்கப்படுவதால் ஏற்படும் விளைவை ஈடுகட்டுவதற்கு மாநிலங்கள் கூடுதல் செலவு செய்வதற்கு வாய்ப்பாக மத்திய அரசின் நிதியில் மாநிலங்கள்- யூனியன் பகுதிகளின் பங்கு அதிகரிப்பது இருக்கும் என்ற கருத்து தவறானது ஆகிப்போனது”, என்று அந்தக் கமிட்டி குறிப்பிட்டது. உண்மை என்னவென்றால், மையமான சுகாதாரத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு 2016-17 காலத்தில் தேசிய மொத்த உற்பத்தியில் 1.87 % ஆக அதிகரிக்கப்படும் என்று 12 வது திட்ட ஆவணம் பரிந்துரைத்துள்ளது என்ற பொருளாதார ஆய்வு குறிப்பிடுகிறது. மற்றொரு சுவையான செய்தி என்னவென்றால், ”ஒரு அரசு தனது செலவினத்தில் 5 முதல் 6 %  வரை சுகாதாரத்திற்குச் செலவிடவில்லை என்றால், அடிப்படை சுகாதார சேவையின் தேவைகள் பூர்த்தியாகாது” என்று NHP 2015 குறிப்பிடுகிறது.

அரசின் பாத்திரத்தை உறுதி செய்வதற்கு ஏதும் இல்லை:

அனைவருக்கும் சுகாதார சேவைகளை அரசு அளிப்பதற்கான மையப் பாத்திரத்தை உறுதி செய்யும் கருத்து எதுவும் NHP 2017 அறிக்கையில் இல்லை. அரசின் முக்கியமான பாத்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை அறிக்கை. அதற்கு மாறாக, ”மருத்துவர்- நோயாளி விகிதம், நோயாளி- படுக்கை விகிதம், தாதிகள்- நோயாளிகள் விகிதம் ஆகியவை தேவையான அளவை நெருங்குவதற்கு முன்பு, நாட்டின் பூகோளப் பரப்பு முழுவதிலும் ஒன்றே போல் பரவலாக ஆவதற்கு முன்பு, சுகாதாரத்துக்கான உரிமையைப் பற்றி யோசிக்கவே வாய்ப்பில்லை” என்று அறிக்கை சொல்கிறது. சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டுவருதால், இந்த தெளிவுரை எழுதப்பட்டுள்ளது.

2002 கொள்கையையும் தற்போதைய கொள்கையையும் ஒப்பிட்டுப் படித்தால் நம்பிக்கை ஏதும் வரவில்லை. ”மையப்படுத்தப்படாத பொது சுகாதார சேவைகள் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற வேண்டும் என்றால், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து போதுமான நிதியை அளிப்பதற்கான தேவை உள்ளது”, என்று 2002ன் கொள்கை துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறது. 2017ல் வந்திருக்கின்ற கொள்கை அறிக்கை சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து ஒப்புதல் கொடுக்கிறது. ஆனால், ஆண்டு சுகாதார பட்ஜெட்களில் சொல்லப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கும் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் கண்டுகொள்ளக் கூட மறுக்கிறது. மருத்துவத் தேவைகள் மாறிக்கொண்டு வருகின்றன என்று கொள்கை அறிக்கை சொல்வதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அது சொல்லும் மற்றொரு கருத்தையும் கூட ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. பேறுகால மற்றும் சிசு மரணங்கள் வெகு வேகமாக குறைந்துள்ளன என்று சொல்வதைத்தான் இங்கு குறிப்பிடுகிறோம். இப்படியொரு நல்ல படம் தருவதற்கு ஆதரவான ஆதாரங்கள் இந்த துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையிலும் இல்லை, தேசிய சுகாதார‌க் கொள்கை 2017க்கான பின்புலம் (Backdrop to the National Health Policy-2017” என்ற அறிக்கையிலும் இல்லை.

இந்தியாவின் சுகாதார சேவை போதுமான திறன் அற்று இருப்பதாகவும், பேறுகால மரணம் மற்றும் சிசு மரணத்தைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கியிருப்பதாகவும் சுகாதாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கருத்து தெரிவித்துள்ளது. இந்தியா அரசு செய்யும் பொது மருத்துவத்திற்கானச் செலவு உலகிலேயே மிகவும் குறைவாக பொது மருத்துவத்திற்குச் செலவு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை வைத்திருக்கிறது. பட்ஜெட் தொகையில் 1.15 %  மட்டுமே பொது மருத்துவத்திற்காக ஒதுக்கப்படுகிறது. ஆனால், பொது மருத்துவத்திற்காகச் செலவு செய்யப்படும் உலக சராசரி தொகை 5.99 % ஆகும். பொது மருத்துவத்திற்கான நிதி சுருக்கப்படுவதால், மக்கள் கையிலிருந்து செலவழிப்பது அதிகரித்திருக்கிறதென்றும், ஒட்டு மொத்த மருத்துவச் செலவில் அது 64 % இருப்பதாகவும், அதன் காரணமாக 7 %  மக்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு (71வது சுற்று) (71st round of the National Sample Survey Office survey) தெரிவிக்கிறது. மக்கள் கையிலிருந்து மருத்துவத்திற்காகச் செலவு செய்வது பற்றிய கணக்கெடுப்பில் 192 நாடுகளில் இந்தியா 183வது இடத்தைப் பிடித்துள்ளது. நமது அண்டை நாடுகளைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தானும், வங்க தேசமும்தான் இந்தியாவை விடப் பின்தங்கியுள்ளன.

ஏறக்குறைய இந்தியா போன்ற பொருளாதார நிலையுள்ள நாடுகளில் மக்கள் கையிலிருந்து மருத்துவச் செலவு செய்வது எவ்வளவு நாடாளுமன்ற நிலை குழு குறிப்பிட்டது. அது பின்வருமாறு: பிரேசில் (25 %), ரஷ்யா (46 %), சீனா (32 %), தென் ஆப்பிரிக்கா (1.6 %), இலங்கை (42 %) தாய்லாந்து(0.8 %). (இந்திய மக்கள் கையிலிருந்து செய்யும் மருத்துவச் செலவு 64 % என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம்.)

மருத்துவக் கொள்கை (2017) அறிக்கையின் சூழல் ஆய்வுப் பகுதியில், 63 மில்லியனுக்கு அதிகமான பேர் மருத்துவச் செலவின் காரணமாக வறியவர்கள் ஆக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடப்படுகிறது!

அறிக்கையை மிகக் கவனமாகப் படித்துப் பார்த்தால், தடுப்பு மருத்துவம் பற்றியும், உடல்நலத்தை மேம்படுத்துவது பற்றியும், நல்ல தரமான மருத்துவத்தை எந்த பொருளாதாரச் சிக்கலும் மக்களுக்கு நேராமல் அனைவருக்கும் அளிப்பது பற்றியும் அறிக்கை பேசுகிறது என்பது புரிகிறது. மருத்துவச் சேவை கிடைப்பதை மேம்படுத்துவது, தரத்தை அதிகரிப்பது, மருத்துவச் சேவை அளிப்பதற்கான செலவைக் குறைப்பது பற்றியும் அறிக்கை பேசுகிறது. இதற்கான கோட்பாடுகளில் ஒன்று சரிநிகர் சமானம். ஆனால், அதற்கு கூடுதல் செலவு பிடிக்கும் அத்துடன் நிதி பாதுகாப்பும் தேவையானதாக இருக்கும். முதலீடு குறித்து துறையின் நாடாளுமன்ற நிலை குழு பின்வருமாறு சொல்கிறது:

”12வது திட்ட காலம் 2016-17 உடன் முடிவுக்கு வருகிறது. மருத்துவத் துறைக்கான செலவாக தேசிய உற்பத்தியில் 2.5 % ஒதுக்குவதை இந்தியா நெருங்கவேயில்லை. 2017ல் முடிவடையும் 12 வது ஐந்தாண்டு திட்டத்தில், (கிராம- நகர்புர மருத்துவத் திட்டங்களை ஒன்றிணைத்த) தேசிய மருத்துவ இயக்கத்துக்கு (National Health Mission-NHM) ஒதுக்கப்பட வேண்டிய நிதியில் 47 % மட்டுமே ஒதுக்கப்பட்டது. தேசிய மருத்துவ இயக்கத்துக்கான முழு நிதியையும் ஒதுக்கியிருந்தால், நாட்டின் ஆரம்ப சுகாதாரச் சேவையின் தரம் மேம்பட்டிருக்கும். மக்கள் கையிலிருந்து செலவு செய்வது குறைந்திருக்கும்”.

2017-18க்கான நிதி ஒதுக்கீடு 26,690.70 கோடி என்பது மிகவும் பற்றாக்குறையான தொகை என்று நிலைக்குழு குறிப்பிட்டது. ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய தொகை 34,315.66 கோடி ரூபாய். அதனால்,தேசிய மருத்துவ இயக்கத்துக்கு மேலும் 4 ஆயிரம் கோடி ஒதுக்கும்படி பரிந்துரைத்தது. மேலும், 2016-17க்கான திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு மதிப்பு 22,197.95 கோடியாக இருக்க 2017-18க்கான ஒதுக்கீடு 44,920.75 கோடி என்பது பற்றாக்குறையான தொகை என்றும் நிலைக்குழு குறிப்பிட்டது.

அழிவை ஏற்படுத்தும் மருத்துவச் செலவு பற்றியும், அதிலும், மாத வருமானத்தில் 10 விழுக்காட்டிற்கு மேல் ஆகும் மருத்துவச் செலவு ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று என்றும் கொள்கை அறிக்கை சொல்கிறது. ஆனால், மருத்துவச் செலவின் பெரும்பகுதியாக இருக்கும் அம்சங்களான, மருந்து விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகள், அதிகபட்ச சில்லறை விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், சாதாரண ஆய்வக‌ சோதனை உள்ளிட்ட மருத்துவ மனை செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதனைப் பற்றியும் அறிக்கை பேசவில்லை.

மருத்துவ முறையில் உள்ள ஊழலை ஒழிப்பது குறித்து NHP 2017 அறிக்கை பேசுகிறது. ஆனால், மிக அதிகமாக தனியார் மயப்படுத்தப்பட்டுள்ள மருத்துவக் கல்வியிலும் மருத்துவ முறையிலும் ஊழலை ஒழிக்க அது எந்த அமைப்பு முறையையும் பரிந்துரைக்கவில்லை.

தனியார் துறையை சார்ந்திருக்க வாதிடும் கொள்கை அறிக்கை!

ஒருமுகப்பட்ட கொள்கை நடவடிக்கைகளை பொதுத்துறை மருத்துவ அமைப்பின் வழியே நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டு மக்களின் உடல் நலத்தை முன்னேற்ற வேண்டும் என்று பேசும் கொள்கை ஆவணம், ‘பொதுத்துறை’ வழியாகச் செயல்படுவதை படிப்படியாக வெட்டி எறிவதாகத் தோன்றுகிறது! இந்திய அரசின் சொத்தாக இருந்த  ஐந்து மருந்து கம்பெனிகள் கடந்த ஆண்டுகளில் மூடப்பட்டன. இந்திய மருந்து மற்றும் மருந்துப் பொருட்கள் நிறுவனம் (Indian Drugs & Pharmaceuticals Limited),  ராஜஸ்தான் மருந்து மற்றும் மருந்துப் பொருட்கள் நிறுவனம் மற்றும் இரண்டு கம்பெனிகள் என்று நாட்டின் ஆகப் பெரிய பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டன. கொள்கையில் குறிப்பிட்டுள்ள ‘மருத்துவத் துறை பொது நிறுவனங்களைப் பலப்படுத்துவது” என்ற கூற்று அரசின் நேர்மையான கூற்று அல்ல என்பதை அவைக் காட்டுகின்றன.

ஒருங்கிணைந்த மருத்துவ சேவை குறித்த அழுத்தம் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட மருத்துவ சேவையின் அதீத செலவை கணக்கில் கொள்வதாக இல்லை.

(குறிப்பு-பொதுவாக மருத்துவ வசதிகள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. சற்று உடல் நலன் குறைந்தவுடன் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற்று, அல்லது உடல் நலன் காப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பெறுவதை முதல் கட்ட மருத்துவம் என்பார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை, ஆகப் பெரிய அளவு கிராமங்களும் வறியவர்களையும் கொண்டிருப்பதால், அரசின் ஆரம்ப சுகாதார‌ மையங்களும், கிராமப்புற‌ செவிலியர்களும் உள்ளிட்ட துவக்க கட்ட மருத்துவ சேவை- முதல் கட்ட மருத்துவ சேவை என்று அறியப்படுகிறது. இந்த சேவையை பொதுவான மருத்துவப் படிப்பு படித்த மருத்துவர்களும், உரிய படிப்பு முடித்த தாதிகளும், மருந்தாளுநர்களும் அளிப்பர். முதல் கட்ட மருத்துவ சேவையைத் தாண்டி, நீண்ட கால நோய், உயிர் காப்பதற்கான மருத்துவ உதவி, விபத்து மருத்துவ உதவி போன்ற, மருத்துவ மனையில் தங்கி சில நாட்கள் கழிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை இரண்டாம் கட்ட மருத்துவ சேவை என்று குறிப்பிடுகின்றனர். இந்த சேவையை அளிக்க சிறப்பு / மேல் படிப்பு படித்த எம்பிபிஎஸ் மருத்துவர்களும், சிறப்பு தேர்ச்சி/ படிப்பு பெற்ற மருத்துவ ஊழியர்களும் தேவைப்படுவார்கள். பொதுவாக, இந்தியாவில் மாவட்ட மருத்துவமனைகளை இரண்டாம் கட்ட மருத்துவ சேவைக்கு உதாரணமாக சொல்லலாம். இதய நோய், காச நோய் போன்ற பிரச்சனைகளை, சிக்கலான பலதுறை சார்ந்த மருத்துவ நுட்பங்கள் கொண்டு உயிர் காக்கும் உயர் மருத்துவ தொழில்நுட்ப மருத்துவ சேவையை மூன்றாம் கட்ட மருத்துவம் என்று சொல்கிறார்கள். A.I.I.M.S போன்ற அரசு மருத்துவ மனைகளையும், அப்பல்லோ போன்ற வணிக மருத்துவமனைகளையும் மூன்றாம் கட்ட மருத்துவ சேவைக்கான உதாரணமாக சொல்லலாம்.)

18622530_10211429084137187_8528509752932706186_n

அனைவருக்குமான மருத்துவத்திற்கான அர்ப்பணிப்பு அனைத்து மட்டங்களிலும் மருத்துவ சேவைகளை அதிகரிப்பதாக இல்லை. தற்போதிருக்கும் ஊழியர்களையும், கட்டுமானத்தையும் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, அத்துடன், அரசு சாராத் துறையுடன், பொது மக்களின் நலன் கருதி, கூட்டு வைத்துக்கொண்டு செயல்படுவது பற்றி கொள்கை அறிக்கை பேசுகிறது. பொது மக்கள் நலன் கருதி அரசு சாரா நிறுவனங்களுடன் கூட்டு என்பதற்கான பொருள் விளக்கப்படவில்லை. அது போலவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ சேவைகள் மக்களுக்குக் கிட்டும் வகையில் அமைவதற்காக, பொது மருத்துவமனைகளையும், மருத்துவச் சேவைப் பற்றாக்குறை உள்ள இடங்களில், தனியாரிடமிருந்தும், லாப நோக்கற்ற நிறுவனங்களிடமிருந்தும் ”சேவைகளை தேவையான சமயத்தில் (strategic) பெற்றுக்கொள்வது” என்றால் என்ன என்பது பற்றியும் விளக்கம் இல்லை.

தனியார் மருத்துவச் சேவையைக் கட்டுப்படுத்தும் அமைப்பு முறை மிகத் தளர்வானதாக இருப்பதைக் கருத்தில் கொண்டு தனியார் சேவையைப் பயன்படுத்தும் இடங்களில் அதனைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான நிர்வாக முறை என்ன என்று கொள்கை சொல்லி இருக்க வேண்டும்.

பொது மக்களுக்கான மருத்துவத்தின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், மருத்துவமுறை மேலும் பலன் தருவதாகவும், நியாயமானதாகவும், பாதுகாப்பானதாகவும், செலவு சிக்கனமானதாகவும் தனியார் துறை இருக்கும்படி செய்ய வேண்டும் என்று கொள்கை சொல்கிறது. ஆனால், அனைத்து கோணத்திலும், தனியார் துறையைக் கண்காணித்து/ கட்டுப்படுத்தும் அமைப்புகளை உருவாக்குவது குறித்து மௌனம் சாதிக்கிறது. மருந்து பொருள் உற்பத்தி கம்பெனிகள் நேர்மையான தொழில்முறையை மேற்கொள்வதை உறுதி செய்யும் நெறிமுறைகளை அரசு உருவாக்கத் தவறியுள்ளது அரசின் துறைகளுக்கும் அமைச்சகங்களுக்கும் இடையில் நிலவும் இடைவெளியைக் காட்டுகிறது. துறைகளுக்கு இடையிலும், அமைச்சகங்களுக்கு இடையிலும் ஒன்றிணைந்து செயல்படும் நோக்கம் இல்லாததன் காரணமாக ‘அனைவருக்குமான மருத்துவம்’ என்ற முழக்கம் வெற்று முழக்கமாக சரிந்து போகிறது.

வாழ் நாட்களை அதிகப்படுத்துவது, கருவுறுதல் விகிதத்தை (total fertility rate -TFR)2025 வாக்கில் 1 பெண்ணுக்கு 2.1 ஆகக் குறைப்பது போன்ற இலக்குகள் குறித்து கொள்கை அறிக்கை பேசுகிறது. பெண்களுக்கான ‘கருத்தடை முகாம்கள்’ என்பதிலிருந்து விலகி ஆண்களுக்கான கருத்தடை முறைகள் மூலம் மக்கள் தொகை உயர்வை நிலையானது ஆக்குவதற்கான கொள்கையின் கூற்றுகள் புகழப்பட வேண்டியவைதான். ஆனால், பெண்களின் கருத்தடையை ஆதரிப்பதாகத்தான் இன்னமும் அரசின் நடைமுறை கொள்கை இருக்கிறது என்பதையும், பெண்களின் கருப்பைக்குள் செலுத்தப்படும் சாதனங்களைத்தான் அரசின் நடைமுறை ஆதரிக்கிறது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு எண்ணிக்கையை 2025க்குள் 1000க்கு 23 ஆகக் குறைப்பது, சிசு மரணங்களை 2019க்குள் 28 ஆகக் குறைப்பது, பேறுகால இறப்புகளை 2020க்குள் 100 ஆகக் குறைப்பது, இறந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2025க்குள் ஒற்றை இலக்கத்துக்கு கொண்டுவருவது, பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆகக் குறைப்பது என்ற பாராட்டத்தக்க முன்வைப்புகளை கொள்கை அறிக்கை முன்வைக்கிறது. ஆனால், இவற்றைச் சாதிப்பதற்கான சத்துணவுத் திட்டத்திற்கு அரசு நிதி அளிப்பது பற்றி பேச்சு மூச்சே இல்லை! அதுமட்டுமல்ல, இந்திய மக்களின் பட்டினி பற்றியும், சத்துணவுப் பற்றாக்குறை பற்றியும் கொள்கை அறிக்கை எதையும் பேசவில்லை. உலகப் பட்டினி பட்டியலில் இந்தியா முன்னணி இடம் வகிக்கும் நிலையில் அது கொள்கை அறிக்கையில் பேசாமல் விடுபட்டுள்ளது. பொது மருத்துவ முறையை வலுப்படுத்துவது பற்றி ஏதும் இல்லை. இவற்றையெல்லாம் கூட்டிப் பார்த்தால், அனைத்து வயதுப் பிரிவைச் சேர்ந்த மக்களின் உடல் நலத்தைப் பாதிக்கும் முக்கியமான காரணிகளைப் பற்றிய புரிதலே தேசிய சுகாதார‌க் கொள்கைக்கு இல்லை என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைப்பதில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஒரு சராசரி துணை சுகாதார நிலையம், சமவெளிப் பகுதியில் 5,000 பேருக்கும், மலைப் பகுதியில் 3,000 பேருக்கும் சேவை அளிக்கிறது. ஆனால், கொள்கை அறிக்கை கூடுதல் தாதிகளையும், குழந்தைப் பிறப்பைக் கவனிக்கும் திறன் உள்ள கூடுதல் தாதிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது. துணை சுகாதார மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது பற்றி பேசவேயில்லை. இதில் வேதனை என்னவென்றால், அனைவருக்கும் மருத்துவம் என்று பேசும் கொள்கை அறிக்கை, இலக்குடன் கூடிய மருத்துவ சேவையைப் பற்றி பேசுவதுதான். நமக்குக் கிடைக்கும் ஆதாரங்களில் இருந்து பார்க்கும்போது வேர்க்கால் மட்டத்தில் இலக்குடன் கூடிய சேவை போதுமான பலன் அளிப்பதில்லை.

தேசிய சுகாதார இயக்கத்தின் கடையாணியாக இருப்பது 9 லட்சம் எண்ணிக்கை கொண்ட ஆஷா (accredited social health activists -ASHAs) ஊழியர்கள்தான். இவர்கள்தான் வீட்டிற்கே சென்று நோய் கடுமை தணிப்பு சிகிச்சையும், மன நல ஆலோசனைகளையும், தொற்று நோய்த் தடுப்பின் ஆரம்ப நடவடிக்கைகளையும் கவனிப்பவர்கள். ஆஷா பணியாளர்களுக்கான பொருளாதாரப் பாதுகாப்பை ஏற்பாடு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் கொள்கை அறிக்கையில் இல்லை. ஆஷா பணியாளர்களை செயல் வீரர்கள் என்று முத்திரை குத்தி அவர்களின் வாழ்வாதரப் பிரச்சனையை முடித்துவிட்டது.

”பிரதானமாக, ஆஷாக்கள் தன்னார்வத்துடன் வந்து பணிசெய்பவர்கள். அவர்கள் செலவழிக்கும் நேரத்திற்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும்”, என்றும், கூடுதல் தகுதிகளைப் பெற்றுக்கொள்பவர்கள், ”மேலும் கூடுதல் நேரம்” கொடுக்கப்படுவார்கள் என்றும் அறிக்கை சொல்கிறது. கிராமப்புற‌ இந்தியாவின் மருத்துவ சேவை முறையின் முதுகெலும்பாக இருக்கும் இந்த பெண் தொழிலாளர்கள் அரசு அளிக்கும் பன்முகப்பட்ட வேலைகளைப் பார்க்கிறார்கள். அரசு சுகாதாரத் துறையில் எட்ட வேண்டிய இலக்குகளை எட்டுபவர்களாக உழைக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண் ஊழியர்களை நிரந்தரப்பணியாளர்காளாக அல்லாமல் தற்காலிக பணியாள‌ர்களாகவே வைத்திருக்க முயற்சிக்கிறது அரசு. தற்காலிக‌ ஊழியர்களாக அவர்கள் இருப்பது அரசின் மருத்துவ‌ இலக்குகளைப் பாதிக்கவே செய்யும்.

உத்திரவாதமான, இலவசமான, அத்துடன் செலவு சிக்கனமான மருத்துவ சேவையை கொள்கை அறிக்கை அளிக்கவில்லை. படிப்படியாக, மேலும் முன்னேறிச் செல்லும் தவணைகளாக இலவச மருந்துகள், பரிசோதனைகள், அத்துடன் கூடுதல் அடிக்கட்டுமானத்திற்கான நிதி ஒதுக்கீடு, ஊழியர் பலத்திற்கான நிதி ஒதுக்கீடு, அதுவும் உறுதி செய்யப்பட்ட பின்பு செய்யப்படும் நிதி ஒதுக்கீடு என்பன நமக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக போதுமான சத்துணவை கொள்கை அறிக்கை கருதவில்லை. நடைமுறையில் பார்த்தால் சமீபத்தில் மாணவர்களின் மதிய உணவு திட்டத்திற்கு ஆதார் அட்டை முன்னிபந்தனை ஆக்கப்பட்டுள்ளது. இது அரசின் துறைகளுக்குள் உள்ள மோதலைக் காட்டுகிறது. குழந்தைகள், வளர் இளம் பிராயத்தவர்கள் பற்றிய உட்தலைப்பில் பிள்ளை பேறு, பாலின ஆரோக்கியம் பற்றி பேசும்போது, போதுமான கலோரிகள் உள்ள, போதுமான சத்து உள்ள உணவை உண்ணுவது பற்றி போகிற போக்கில் சொல்லி செல்கின்றனர். சத்துப் பற்றாக்குறை பற்றி பேசும்போது நுண் சத்துகள் பற்றாக்குறையைப் பற்றி மட்டும் பேசுகின்றனர். நுண் சத்துகள் அளிக்கப்படுவது பற்றி மட்டும் பேசுகின்றனர். மக்கள், அதிலும் குறிப்பாக, பலவீனமான பிரிவினரைச் சேர்ந்த தனியொருவர் எடுத்துக்கொள்ளும் கலோரிகள் குறைந்து வருவது பற்றி மிகப் பெரும் அளவில் ஆதாரங்கள் இருக்கும்போது நுண் சத்துகள் அளிப்பது பற்றி பேசுவது பொருளற்றது.

சத்துணவுப் பற்றாக்குறையைப் போக்கவும் நுண் சத்துகள் பற்றாக்குறையை நீக்கவும் உணவைப் பன்முகப்படுத்துவது பற்றிய சிந்தனைப் போக்கு ஒன்று உள்ளது. ஆனால், பொருளாதார ரீதியாகக் கட்டுப்படியாகவில்லை என்பதாலும், மாறிவரும் விவசாய முறையின் காரணமாகவும் மக்கள் அன்றாடம் உண்ணும் உணவே கைக்கு எட்டாததாக ஆகிவிட்டது. இருந்தபோதும், குழந்தைகள் – பெரியவர்கள் மத்தியில் இருக்கும் சத்துப் பற்றாக்குறையைத் தீர்க்க பல்வகை உணவுப் பொருட்களைச் சேர்த்து உண்ணுதல் சரியான மாற்று என்று அறிவியல் சமூகத்தின் ஒரு பிரிவு கருதுகிறது. ஆனால், அரசின் கொள்கை ஆவணமோ சத்தூட்டப்பட்ட உணவு (food fortification) என்ற தொழில் திட்டத்தை நோக்கியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பன்முகப்பட்ட உணவை அளிக்கும் கடப்பாட்டிலிருந்து அரசு தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது. ”பன்முகப்பட்ட உணவுதான் மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும் என்றாலும், துணை உணவு அளித்தல் (supplementation) சத்தூட்டப்பட்ட உணவு அளித்தல் (fortification) சத்துகள் பற்றாக்குறை இடைவெளியை நிரப்புவதற்கான குறுகிய கால- குறுகிய நீண்ட காலத்துக்கான (short and medium term) விரும்பத்தகுந்த மாற்றாக இருக்கும்”, என்று கொள்கை அறிக்கை சொல்கிறது. சத்துப் பற்றாக்குறை பிரச்சனையில் கொள்கை அரை மனதுடன் செயல்படுகிறது என்பது தெளிவு.

வாங்கும் திறனில் அல்லது பன்முகப்பட்ட உணவைப் பெறுவதில் மக்கள் தொகையில் பெரும்பான்மையினருக்கு இருக்கும் பிரச்சனை காரணமாக நோய்த் தாக்குதலும் மரணமும் ஏற்படுகிறது என்று கொள்கை ஆவணம் கருதவில்லை. புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை (millennium development goals) எட்டுவது அல்லது ஆண்- பெண் விகிதத்தின் சரிவு ஏற்பட்டாலும் மிகச் சரியான கர்ப்ப விகிதத்தை எட்டுவது என்ற இலக்கு நோக்கிய ஒற்றைப் பார்வை கொள்கையின் பார்வையைப் பாதித்துள்ளது.

பிரேசில், தாய்லாந்து போன்ற நாடுகள் அனைவருக்குமான சுகாதாரம்/ மருத்துவத்தை எட்டுவதை நோக்கிச் சென்று சாதனை செய்ய முடியுமென்றால், இந்தியா ஏன் செய்ய முடியாது என்ற கேள்வியை  NHP 2015 எழுப்பியுள்ளது. ஆனால், பிரச்சனை என்னவென்றால், அனைவருக்குமான மருத்துவம் என்பதல்ல கேள்வி. அனைவருக்குமான மருத்துவத்தை எட்டுவது அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அந்தக் கடமையை தனியாருக்கு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு கையைக் கட்டிக்கொள்வதல்ல. மனிதர்களின் நல வாழ்க்கை என்பது உத்திரவாதத்தால் மட்டும் பெறப்படுவதல்ல. சட்டம் ஒன்று போடப்படாமலேயே கூட அதனை உத்திரவாதம் செய்வதற்கு செயல்பட்டாக வேண்டும்!

(Frontline இதழில் வந்த கட்டுரையின் சற்று சுருக்கப்பட்ட மொழியாக்கம்)

மூலப்பதிவு – டீ.கே. ராஜலட்சுமி
தமிழில் – மதிவாணன்.

மூலப்பதிவு :
http://www.frontline.in/cover-story/a-policy-letdown/article9604206.ece

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*