Home / அரசியல் / மாட்டிறைச்சி தடையும் – இந்திய ஆதிக்க எதிர்ப்பும்

மாட்டிறைச்சி தடையும் – இந்திய ஆதிக்க எதிர்ப்பும்

இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்கத் தடை என்கிற ஆளும் பா.ஜ.க மோடி அரசின் எதேச்சதிகார அறிவிப்பு,  நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.  எதிர்ப்பலைகளின் நாயகமாக, கேரள அரசு திகழ்கிறது. மலையாளிகள் என்ன உண்ண உணவு வேண்டும் என்று தில்லியிலும் நாக்பூரிலும் உட்கார்ந்திருப்பவர்கள் முடிவு செய்ய வேண்டாம் என்று  கேரள முதல்வர் பினராய் விஜயன் பதில‌டி கொடுத்திருக்கிறார்.

மலையாளிகளில் டிவிட்டர் தளத்தில் “திராவிடநாடு” என்கிற செய்திப்போக்கை இந்திய வலைதளங்களில் முதன்மையாக்கி வருகின்றனர். இதை ஒரு பிரிவினை கோரிக்கையாக இல்லாமல்,  தென் இந்தியா முழுமையும் மோடியின் இந்துத்துவ அரசுக்கு எதிராக இருக்கிறது என்கிற கருத்தை முன் வைத்து வருகிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக எந்த விமர்சனமும் செய்யக் கூடாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக எடப்பாடி அரசு, வழக்கம் போல ஒரு ஓரமாக அமர்ந்திருக்கிறது. கருத்து சொல்ல ஒன்றும் இல்லையாம்.

மோடி அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மட்டுமில்லாமல், மாடு வளர்ப்பு, பால் தொழில் என சம்பந்தப்பட்ட கோடிக்கணக்கானோரின் வயிற்றில் அடித்திருக்கிறது. ஏற்கெனவே பாலுக்கு சரியான கொள்முதல் விலை இல்லை என பால் விவசாயிகள் சாலையில் பாலைக் கொட்டி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் செய்திகளைப் பார்க்கிறோம்.  மாட்டுத் தீவனத் தட்டுப்பாடு, வறட்சி என தொடர்ந்து அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள், இனி பால் சுரப்பு நின்று போன மாடுகளை வெறுமனே எந்த பிரதிபலனும் இல்லாமல் பராமரிப்பது இயலாத காரியம்.

“மாடுகளை வாங்குவது, தீவனம் போடுவது; பால் பீய்ச்சுவது, பால் சுரப்பு நின்று போன மாடுகளை மீண்டும் சந்தையில் இறைச்சிக்காக விற்பது, வந்த பணத்தில் மீண்டும் பால் கொடுக்கும் மாடுகளை வாங்குவது”  இது ஒரு சுழற்சி. மோடியின் இந்த அறிவிப்பால் இந்த சுழற்சியின் ஒரு கண்ணி அறுந்து விழும்.  விற்க முடியாத மாடுகளைப் பராமரிக்க நாளொன்றுக்கு 200 இலிருந்து 300 ரூபாய் வரை ஒரு விவசாயியால் செலவழிக்க முடியாது. சரியான தீவனமின்றி மாடுகள் இறந்து போகும். விவசாயிக்கு மட்டுமின்றி, சுற்றுச் சூழலுக்கும் மாடுகளின் மரணங்கள் மிகப்பெரிய கேடுகளை விளைவிக்கப் போகிறது. கிராமப் பொருளாதாரத்தையே முற்றிலும் முடக்க விருக்கிறது இந்த கருப்புச் சட்டம்.

slow-cooked-beef-in-stout-15255-1
மாடுகள் வளர்த்து பால் தொழில் செய்வோர் பெரும்பாலும் சிறு குறு விவசாயிகள் மற்றும் தனியாக வீடுகளில் மாடு வளர்க்கும் கிராம மக்கள். சிறு தொழிலாக, சிறு வணிகமாக பரந்து விரிந்து வெகுமக்கள் கையில் இருக்கும் இந்த பால் வணிகத்தையும் ஒரு சில தனியார் பெருமுதலாளிகளுக்கே தாரை வார்க்கும் திட்டத்தைத் தான் மோடி அரசு கொண்டு வருகிறது.உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 131 கோடி ம‌க்க‌ள்தொகை கொண்ட‌ இந்தியாவில் (உணவு, தேநீர், இனிப்பு வகைகள், வெண்ணெய், நெய், தயிர் போன்றவைகளுக்காக) ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 100 கோடி லிட்டர் பால் தேவை என வைத்து கொண்டால், மாதத்திற்கு 3,000 கோடி லிட்டர் பால் தேவைப்ப‌டும்.  ஒரு லிட்டர் பால் 40 ரூபாய் என்ற நிலையில் மாதத்திற்கு 1,20,000 கோடி ரூபாய் பால் வணிகம். அப்படியானால் ஓர் ஆண்டிற்கு 14,40,000 கோடி ரூபாய் வணிகம். இந்த வணிகத்தை தான் தனியார் பெரு முதலாளிகளிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளது இந்திய அரசு .

எப்படி விவசாயத்தை அடியோடு ஒழித்துக் கட்டி, நமது தற்சார்பை அழித்து தனியார் கையில் கொடுக்க விரும்புகிறார்களோ, அதைப் போலவே இப்போது பால் வணிகத்திலும் நமது தற்சார்பை அழித்து தனியார் கையில் அதை கொடுக்க விரும்புகிறார்கள்.  அது மட்டுமின்றி நமது மாடுகளை பயன்படுத்த‌ நம்மிடமிருந்த உரிமை பறிக்கப்பட்டு, அதையும் தனியார் முதலாளிகள் எடுத்துக் கொள்வார்களாம். மாட்டிறைச்சி என்கிற உணவுப் பொருளும் வால்மார்ட் போன்ற அந்நிய சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கும் அரிய பண்டமாகி விடக்கூடிய சூழலையும் எதிர்நோக்கியிருக்கிறோம்.

ஆளும் பா.ஜ.க அரசுக்கு விவசாயிகள் மீதோ, மாடுகள் மீதோ எந்த கரிசனமும் இல்லை. மாட்டிறைச்சியை உணவாக உட்கொள்ளும் மதச்சிறுபான்மையினரையும், தலித்துகளையும் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து பிரித்து அந்நியப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மாட்டிறைச்சி விவகாரத்தை மோடி அரசு கையில் எடுத்திருக்கிறது.

தனது வீட்டு குளிர் பதனப்பெட்டியில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்கிற ஒரு காரணத்துக்காக, நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரங்களால், அஹ்லாக் என்கிற இஸ்லாமிய முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. வழக்கம் போல ஊடகங்களால் இது மறக்கடிக்கப்பட்டாலும். மாட்டிறைச்சிக்காக சிறுபான்மையினர் மீதான படுகொலைகள் ஆங்காங்கே இந்துத்துவ வெறியர்களால் வட இந்தியா முழுவதும் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த வன்முறைகளை பெரும்பான்மை சமூகம் மெளனமாக கடந்து விட்ட படியால், இந்த மாட்டிறைச்சி தடையை கொண்டு வருவதில் பா.ஜ.க மோடி அரசுக்கு எந்தவொரு தயக்கமும் இருக்கவில்லை.  அதே நேரத்தில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் எந்த ஒரு நிறுவனத்தின் மீதும் ஒரு சிறு தாக்குதல் கூட சங்க பரிவாரங்களால் நிகழ்த்தப் படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

index1

மோடி அரசு ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று ஆண்டுகளில் தான் இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகமாகி சென்ற ஆண்டு உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலுடன் முதலிடத்தை பகிர்ந்து  கொண்டுள்ளது.  இந்தியாவின் மாட்டிறைச்சி உற்பத்தி  ஆண்டிற்கு 42,50,000 டன்கள் , இதில்  18,50,000 டன்கள் மட்டுமே ஏற்றுமதியாகின்றது. மீதி 24 இலட்சம் டன்கள் உள்நாட்டில் நுகரப்படுகின்றது. இந்த 24 இலட்சம் டன்களும் சேர்த்து ஏற்றுமதி செய்யப்படும் பொழுது இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் யாரும் எட்ட முடியாத முதலிடத்தை அடைவதே மோடி அரசின் இலக்கு.  உள்நாட்டில் மாட்டிறைச்சியைத் தடை செய்வதற்கு இதுவே மிக முக்கியமான காரணம். அதனால் தான் மோடி அரசின் புதிய சட்டத் திருத்தம் மாட்டிறைச்சி ஏற்றுமதியைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

கடந்த நவம்பர் மாதம் ஐந்நூறு, ஆயிரம் செல்லாது என்கிற அறிவிப்பினால் இந்திய மக்களாகிய நாம் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளானோம், மணிக்கணக்கில் ஏடிஎம் வரிசைகளில் நின்று நம் நேரத்தையும் பணத்தையும் தொலைத்தோம், ஆனால் பா.ஜ.க-வின் ரெட்டி சகோதரர்கள் புதிய இரண்டாயிரம் ரூபாயில் மாலை, வாள் என பல கோடி செலவு செய்து திருமணம் நடத்தியதையும் நாம் கண்டோம். ஏழைகளும், நடுத்தர மக்களும் வங்கியில் வரிசையில் நிற்க, பணக்காரர்களின் வீடுகளில் வங்கிகள் வரிசையில் நின்றன.  இப்போது மாட்டிறைச்சிக்கு தடை என்கிற அறிவிப்பின் மூலம் மீண்டும் ஒரு மிகப்பெரிய நேரடி தாக்குதலை, நாட்டு மக்களின் மீது மோடி அரசு தொடுத்திருக்கிறது. மக்களின் உணவுத் தேர்வு, உரிமைகளின் மீது அரசு தலையிடுவது பாசிசம் மட்டுமல்ல, அது ஒரு அரச பயங்கரவாதம்.

மோடி அரசு ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளில் உறுதியளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தாலும்,  இங்கு பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை. மக்கள் தம் சொந்த பணத்தை வங்கியிலிருந்து எடுப்பதற்கே, கப்பம் கட்ட வேண்டிய அவலச்சூழல். மாறாக அம்பானி, அதானி, பாபா ராம்தேவ் உள்ளிட்டோருக்கு கோடிக்கணக்கான இயற்கை வளங்களை மோடி தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார். மூன்றாண்டு ஆட்சியின் பொருளாதாரத் தோல்விகளை மறைக்க, இப்படியான குட்டிக் கரணங்களைப் மோடி அரசு போட வேண்டியிருக்கிறது.

மத்திய அரசின் இந்த வெறுப்பரசியலையும் கோமாளித்தனங்களையும் இந்தச் சுற்றில் அவ்வளவு சுளுவாக மோடி அரசு கடத்திச் செல்ல முடியாது. இந்தியப் பன்மைத்துவத்துக்கும் சனநாயகத்துக்கும் விடப்பட்ட சவாலை, இந்தியச் சமூகம் எதிர்கொள்ளத் தயாராகி விட்டது. உழைக்கும் மக்களின் உணவான மாட்டிறைச்சி, மோடி அரசுக்கு சாவுமணி அடிக்கப் போகிறது. எடப்பாடி அரசு வேடிக்கை பார்க்கட்டும். ஜூன் 5 ஆம் தேதி , மோடி அரசின் சட்டநகலை விவசாயிகள் முச்சந்தியில் வைத்து கொளுத்தப் போவதை எடப்பாடி அரசு வேடிக்கை பார்க்கட்டும். மதச் சிறுபான்மையினரை அச்சுறுத்தி அரசு நடத்த முடியாது என்பதையும், தில்லியின் வெறுப்பரசியலை  “திராவிட நாடு” என்கிற முழக்கம் சுக்கு நூறாக்கப் போகிறது என்பதையும் எடப்பாடி அரசு வேடிக்கை பார்க்கட்டும். வேடிக்கை பார்க்கும் அரசுகள் தூக்கியெறியப்படும் என்பதை உணரும் வரை எடப்பாடி அரசும் வேடிக்கை பார்க்கட்டும்.

அ.,மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*