Home / அரசியல் / பீம் படையின் தலைவர்.ராவண் கைது

பீம் படையின் தலைவர்.ராவண் கைது

இந்திய அரசியலின் புதிய தலித் எழுச்சி நட்சத்திரம் சந்திரசேகர் ஆசாத் ராவண் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தல்ஹவுசி நகரில் தங்கியிருந்த ராவணை உத்தரபிரதேச சிறப்பு காவல் படையினர் கைது செய்தனர். உத்தரபிரதேசத்தில் சாதி மோதல்களால் பதற்றமான பகுதியாக அறியப்படும் சஹரன்பூரில் நடந்த வன்முறையைத் தூண்டிய வழக்கில் ராவண் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

சஹரன்பூரில் நடந்தது என்ன?

மே 5, 2017 அன்று சஹரன்பூரில் மகாரானா பிரதாப் என்னும் வட இந்திய மன்னனின் ஜெயந்தி ஊர்வலத்தை உயர்சாதி தாக்கூர் மக்கள் நடத்தினார்கள். ஊர்வலம் தலித்துகள் அதிகம் வசிக்கும் ஷப்பீர்பூர் பகுதியை நெருங்கிய போது, தலித்துகளுக்கும் தாக்கூர்களுக்கும் இடையிலான மோதலாக வெடித்தது. இது தரப்பும் கடுமையாகத் தாக்கிக் கொண்ட வேளையில், தாக்கூர் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஆத்திரமடைந்த தாக்கூர்கள் மேலும் ஆட்களை கூட்டிவந்து, 50-க்கும் மேற்பட்ட தலித் குடியிருப்புகளை தீக்கிரையாக்கினர். இதில், தலித் மக்களின் வாழ்நாள் சேமிப்புகள், வாகனங்கள் உட்பட எரிந்து நாசமாகின.

அரசு இயந்திரத்தின் பாரபட்சம்:

இந்த வன்முறையைத் தடுக்க காவல்துறை மெத்தனம் காட்டியது என்றும், 2 மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்ற தீவைப்பு சம்பவத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்னும் புகார்கள் எழுந்தன. மேலும், பாதிக்கப்பட்ட தலித்துகளின் மீதே வழக்கு பதிந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். உத்தரபிரதேச முதல் யோகி ஆதித்யநாத் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், மே 5 வன்முறையில் காவல்துறை தலித்துகள் மீது பாரபட்சமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாயாவதி உட்பட அம்மாநில தலித் தலைவர்கள் இந்த பாரபட்சமான அணுகுமுறையை வன்மையாகக் கண்டித்தனர்.

களத்தில் பீம் படை:

இந்நிலையில், அண்ணல் அம்பேத்கர் பெயரில் பீம் படை என்னும் அமைப்பை நிறுவி தலித்துகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் 30 வயது வழக்கறிஞரான சந்திரசேகர் ஆசாத் ராவண், மே 5 வன்முறையையும், காவல்துறை அத்துமீறல்களையும் கண்டித்து மகாபஞ்சாயத்து என்னும் மாபெரும் கண்டனக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். மே 9-ம் தேதி சஹரன்பூர் காந்தி பூங்கா அருகே நடைபெறவிருந்த கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததோடு, பீம் படையின் நிர்வாகிகள் சிலரையும் கைது செய்தது. இதையடுத்து பீம் படைக்கும், காவல்துறைக்கும் நடைபெற்ற மோதலில், காவல் நிலையம் மற்றும் சில வாகனங்கள் தீக்கிரையாகின. வன்முறையைத் தூண்டியதாக ராவண் மீது காவல்துறை வழக்குப் பதிந்த நிலையில், ராவண் தலைமறைவானார்.

தலித்துகளுக்கு நியாயம் கேட்பதற்காக நடக்கவிருந்த கூட்டத்தை உத்தர பிரதேச அரசு மறுத்த நிலையில், டெல்லியில் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்தார் ராவண். வாட்ஸ்-அப் மூலமாக ராவண் விடுத்த போராட்ட அழைப்பு, வட இந்திய இளைஞர்கள் மத்தியில் தீயாகப் பரவியது. தலைமறைவாக இருந்த போதும், மே 21 நடக்கவிருந்த கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப் போவதாக ராவண் அறிவித்திருந்தார்.

unnamed

அதிரவைத்த டெல்லி போராட்டம்:

ராவணின் அழைப்பைக் கேட்டு மே 21-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் கூடிய கூட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். பீம் படை என்ற வாசகம் பொறித்த ஊதா நிற தொப்பி அணிந்து, விண்ணதிர ஜெய் பீம் என்ற முழக்கத்துடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் டெல்லி சாலையில் அணிதிரண்டனர். பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கரின் உருவங்களையும், அவர்தம் சமூக சீர்திருத்த மற்றும் சாதி ஒழிப்புக் கருத்துகளையும், தம் உடலிலும், பதாகைகளிலும் வரைந்த மாபெரும் இளைஞர் திரளைக் கண்ட வட இந்திய அரசியல் தலைவர்கள் ஆச்சர்யத்தில் திகைத்தனர். தலித் எழுச்சி அரசியலின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக அப்பெருந்திரள் கூட்டத்தின் நடுவே தோன்றிய ராவண் எழுச்சியுரையாற்றினார்.

சமத்துவம். விடுதலை, நியாயம்:

தலித்துகள் யாரையும் விட கீழானவர்களோ, அசுத்தமானவர்களோ அல்ல, அவர்கள் இந்நாட்டில் உள்ள அனைவருக்கும் முன்னோர்கள் என்று தொடங்கிய ராவண், தலித்துகள், பிற்படுத்தப்போட்டோர், சிறுபான்மை மக்களின் நீதிக்காக தனது செயல்பாடுகள் இருக்கும் என்றும் தெரிவித்தார். தங்களது யுத்தம் அதிகாரத்தைப் பிடுங்க அல்ல என்றும், சமத்துவத்தை நிறுவுவதற்கும், ஒடுக்குமுறையை எதிர்ப்பதற்குமான சண்டை என்றும் தெரிவித்தார் ராவண்.

அடிவாங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்தால், இந்நாட்டில் இருக்கும் ஆரியக் கூட்டம் தெறித்து ஓடிவிடும் என்னும் ராவணின் முழக்கத்துக்கு கரவொலி விண்ணைப் பிளந்தது. நீதிபதி கர்ணனின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அவர், தலித் மக்களுக்காக குரல் கொடுக்காத எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். தாதாசாகேப் கன்ஷி ராமின் வழிவந்த தான், தலித்துகளின் முன்னேற்றத்திற்காக வாழ்வை முழுமையாக அர்ப்பணிப்பதாகவும் ராவண் சூளுரைத்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய தந்தை அம்பேத்கர் அளித்துள்ள உரிமைகளை ஒடுக்கப்பட்ட மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அன்னா ஹசாரேவின் போராட்டத்தை ஒளிபரப்பிய ஊடகங்கள், தங்கள் போராட்டத்தை இரட்டடிப்பு செய்வது ஏன் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்கும் காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தான் கைது செய்யப்பட்டால் ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், அதற்கு பதிலாக சஹரன்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டு அநியாயமாக சிறையிலிருக்கும் தலித்துகளை விடுவிக்க போராட்டங்கள் செய்ய வலியுறுத்தினார். சமத்துவம், விடுதலை, நியாயத்துக்கான ராவணின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கூடியிருந்த இளைஞர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பல ஆண்டுகளாக தங்கள் மனதில் இருந்த ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷ‌ குமுறலாக, ராவணைப் பார்ப்பதாக போராட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

unnamed1

இராவண் கைது:

இலட்சக்கணக்கான மக்கள் முன் பேசிய ராவணை காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மீண்டும் தலைமறைவான ராவண், சிறையிலிருக்கும் 37 தலித்துகளை விடுதலை செய்தால், தான் சரணடைவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கும் முன், ராவணின் சகோதரர் உத்தரபிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பீம் படையின் முக்கிய நிர்வாகிகள் சிலரையும் காவல்துறை கைது செய்தது. தல்ஹவுசியில் ஜூன் 9-ம் தேதி ராவண் கைது செய்யப்பபட்டுள்ளார்.

குஜராத் உனா போராட்டத்தில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்த ஜிக்னேஷ் மேவானி போல், பீம் படையை நிறுவி லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை விடிவெள்ளியாக உருவெடுத்த சந்திரசேகர் ஆசாத் ராவணின் கைது பீம் படை கோலோச்சியிருக்கும் வட இந்திய மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலித்துகளுக்காக குரல் கொடுக்கும் இராவணையும், அவரது படையினரைச் சேர்ந்தவர்களையும் கைது செய்து அரசு ஒடுக்குமுறையை ஏவுகின்றது. இதற்கு அனைத்து சனநாயக அமைப்புகளையும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் நடக்க வேண்டும்.

தமிழ் – இளந்தமிழகம் இயக்கம்.

About தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*