Home / அரசியல் / நீட்(NEET) தேர்வு: குரளி வித்தை

நீட்(NEET) தேர்வு: குரளி வித்தை

காங்கிரசு அரசு முன்மொழிந்த நீட் (NEET)  தேர்வை, இப்போதிருக்கும் பா.ஜ.க‌ அரசு நடத்த காட்டும் ஆர்வத்தையும், வேகத்தையும் பார்த்தால், தன் முட்டையை தான் அடைகாக்காமல் காக்கை கூட்டில் கொண்டுவந்து, தனது முட்டையை வைத்து விட்டு சென்றுவிடும் குயிலின் திருட்டுத்தனம் போல இருக்கிறது, தனக்கு செல்வாக்கான வட‌மாநிலங்கள் பயன்பெறுவதற்காக, 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தென்மாநில மக்களின் உழைப்பை சுரண்டுகிறது பா.ஜ.க‌. இதற்காக மத்திய அரசு கைக்கொள்ளும் வழிமுறைகள் மூன்றாம் தரமானதாக உள்ளன.

இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகம் முதல் இடத்திலும்(50), மகாராஷ்டிரா (48) இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு(45) மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதே சமயம் தமிழ்நாட்டையும், பாண்டிச்சேரியையும் கூட்டினால்(45+9) 54 முதல் இடம் வந்துவிடும். மோடி வளர்த்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் குஜராத்தில் 21 மருத்துவகல்லூரிகள் உள்ளன. ஆனால் அதை விட சிறிய மாநிலமான கேரளாவில் 30 மருத்துவக்கல்லூரிகள். ஒருங்கிணைந்த ஆந்திராவில் 47(ஆந்திரா 27, தெலுங்கான 20).

ஆக மருத்துவக் கல்லூரிகள் தென் மாநிலங்களில் அதிகம், இவை அனைத்தும் தென் மாநிலங்கள் கடந்த 50 ஆண்டுகளாக அரசியல் வளர்ச்சியால், போராட்டத்தால் பெற்றவை. பா.ஜ.க-வும் , ஆர்.எஸ்.எஸ்-ம் செல்வாக்கான வட‌மாநிலங்களில் மாட்டை பற்றி யோசித்து கலவரம் செய்துகொண்டிருக்கையில், மனிதர்களை பற்றியும் கல்வியை பற்றியும் தென் மாநிலங்கள் சிந்தித்ததால் விளைந்த கல்வித்துறை மாற்றங்கள்.எனவேதான் பா.ஜ.க-வும் , ஆர்.எஸ்.எஸ்-ம் செல்வாக்கில்லாத மாநிலங்கள் மட்டுமே மருத்துவ கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ளன.

Untitled

தமிழகமும் தென் மாநிலங்களும் மருத்துவ துறையில் முன்னோடியாக உயர் சிகிச்சை தரும் இடங்களாக மாறியுள்ளன, அதனால்தான் வெளி நாட்டிலிருந்து செலவை குறைக்க இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.  மேலும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, கிராமப்புற மாணவர்களுக்கென தனி இட ஒதுக்கீடு என பரவலாக கல்வி சென்று சேர்கிறது. இதில் எந்த திட்டத்தையும் தனது ஆட்சியுள்ள மாநிலங்களில் செயல்படுத்தாமல், கல்வியிலும் மருத்துவத்திலும் முன்னனியில் இருக்கும் மாநிலங்களின் உழைப்பை திருட்டு தனமாக எடுக்கும் வகையிலேயே பா.ஜ.க அரசு நீட்(NEET) தேர்வை பயன்படுத்துகிறது.

நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை என்று  தமிழ்நாடு அரசு சட்ட சபையில் தீர்மானம் இயற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தும், அதுகுறித்த எந்தவிதமான பதிலும் இதுவரை மத்திய அரசிடமிருந்தும், குடியரசு தலைவரிடமிருந்தும் வராத நிலையில், அவசரமாக இந்தியா முழுக்க நீட் (NEET  ) தேர்வுகள் நடத்தபடுகின்றன. அப்படி எனில் மாநில சட்டமன்றத்திற்கு என்ன மரியாதை இருக்கிறது. தங்களின் ஒற்றை இந்தியா முழக்கத்திற்காக மாநில உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறது பா.ஜ.க அரசு.

Neat Exam

வட மாநிலங்களில் நீட் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகியுள்ளன, மறுபுறம் தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் அதிகப்படியான கெடுபிடிகள் “மத்திய பள்ளி கல்வித்துறை”யால்(CBSC ) நடைமுறை படுத்தப்பட்டு மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆடைகளைக் களைதல், கிழித்தல் என சிபிஎஸ்சி நிர்வாகம் அர‌ஜகமாக நடந்து கொண்டுள்ளது. மனித உரிமைகள் ஆனையமும், மாநில முதல்வரும் கன்டனம் தெரிவிக்கும் அளவுக்கு  “மத்திய பள்ளி கல்வித்துறை” (CBSC ) மாணவர்களை தேர்வு என்ற பெயரில் கொடுமைபடுத்தியுள்ளது. இந்தியிலும் குஜராத்திலும் எளிதான வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரி வினாக்கள் கேட்கப்பட வேண்டியதில்லை என  “மத்திய பள்ளி கல்வித்துறை”நிர்வாகம் பதிலளித்துள்ளது. ஒரே மாதிரி கேள்விகள் கேட்கப்பட வேண்டியதில்லை எனில், ஒரே மாதிரி தேர்வுகள் மட்டும் எதற்காக நாடு முழுக்க நடத்தப்படுகின்றன.

மேலும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சில முக்கியமான கேள்விகளை சிபிஎஸ்சியிடமும், மத்திய, மாநில அரசிடமும் எழுப்பி இருந்தது.

1. இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

2. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தாததற்கு காரணம் என்ன?

3. “மத்திய பள்ளி கல்வித்துறை”. பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன?

4. கல்வித்தரம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாட்டுடன் இருக்கும் நிலையில் நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்?

5. கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் இடையில் கல்வித்தரம் வேறுபடும்போது அனைவரும் சி.பி.எஸ்.இ. தேர்வை எப்படி எதிர்க்கொள்ள முடியும்?

6. மாநில மொழிகளில் உள்ள வினாத்தாளுக்கும், இந்தி ஆங்கிலம் மொழியில் உள்ள வினாத்தாளுக்கும் வேறுபாடு எப்படி வந்தது

என நியாயமான சந்தேகங்களை கேட்ட மதுரை உயர் நீதிமன்றம், ஜுன் 8 ஆம் தேதி வெளியிடப்பட இருந்த நீட் தேர்வின் முடிவுகளுக்கு தடை விதித்தது. மதுரை உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து “மத்திய பள்ளி கல்வித்துறை” உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் இடைக்காலத் தடையை ரத்து செய்து விட்டு, நீட் தேர்வு முடிவுகளை  (12.6.2017) வெளியிடலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது. மற்ற உயர் நீதிமன்றங்களும் நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மதுரை உயர்நீதி மன்றத்திற்கு எழுந்த சந்தேகங்களுக்கு பதில் கிடைக்காத பட்சத்தில் , உச்ச நீதிமன்றத்திற்கு ஏன் அதுபோன்ற சந்தேகங்கள் எழவில்லை?

சமூக நீதி அரசியல் நீதி துறையில் செயல்படுத்த படாததையே இதுபோன்ற தீர்ப்புகள் காட்டுகின்றன.

எதற்காக மாநிலத்தின் சட்டமன்றத்தின் தீர்மானத்தை பற்றி திட்டமிட்டு மத்திய அரசு பேச மறுக்கிறது?. குடியரசுத்தலைவரிடம் சென்ற தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கான பதில் என்ன? மதுரை உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு யார் பதில் சொல்லப்போகிறார்கள். சல்லிக்கட்டுக்கான‌ மாநில சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியுமெனில் நீட் தேர்வுக்கு ஏன் விளக்கு அளிக்க முடியாது?. சல்லிக்கட்டுக்காக போராடிய தமிழகம் நீட் தேர்வுக்காக போரடாது என்ற அலட்சியம் காரணமா?

வெ.தனஞ்செயன் – இளந்தமிழகம் இயக்கம்

தரவுகள் :

https://admission.aglasem.com/total-number-medical-seats-india-state-wise/

http://www.newindianexpress.com/states/kerala/2017/may/07/neet-shocker-female-candidate-says-asked-to-remove-innerwear-in-keralas-kannur-1602167.html

About தனஞ்செயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*