Home / கலை / மாப்பிள்ளை – சிறுகதை

மாப்பிள்ளை – சிறுகதை

”ஏய்…. இன்னும் என்னங்கடா பண்ணிட்டிருக்கீங்க, வெரசா வேலைய முடிங்கடா….,”

பட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த வேலையாட்களிடம் அதிகாரத் தோரணையுடன் மிரட்டிக்கொண்டிருந்தார் பழனிச்சாமி. பழனிச்சாமியின் தந்தைவழிச் சொத்தான ஒன்பது ஏக்கர் நிலத்தில், இவருக்கு பாத்தியப்பட்டது மூன்று ஏக்கர். அவரது கஷ்ட்டகாலத்தில் விற்றதுபோக மிச்சமிருக்கிற ஒன்னறை ஏக்கரில் பட்டி அமைத்து ஆடுவளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த ஆடி நோம்பிக்கு புதுசா கல்யாணமாகி போயிருக்கிற மூத்த பொண்ணும் மாப்பிள்ளையும் அன்று வருவதாக இருந்தது. விடிஞ்சும் விடியாம எழுந்து சந்தைக்குபோய் விருந்துக்கு தேவையான  மளிகை சாமான்களை வாங்கிவந்தவர்தான் பரபரப்புடன் கத்திக் கொண்டிருந்தார்.

சந்தைன்னா நீங்க நினைக்கிற மாதிரி பெரிய சந்தையெல்லாம் இல்லை. பல்லடத்திலிருந்து உடுமலைப்பேட்டை போற வழியில சுல்தான் பேட்டை என்கிற ஒரு கிராமம்.அதிலிருந்து மூணு கிலோமீட்டர் உள்ளே ’ஓடக்கல்பாளையம்’ங்கிற ஒரு குக்கிராமம்தான் பழனிச்சாமியின் ஊர். எதாவது பொருள் வாங்கணும்னா சுல்தான் பேட்டை தான் வரணும், அதுதான் அவங்களுக்கு சந்தை, டவுன் எல்லாமே.

“வேல முடுஞ்சுதுங்க நாச்சி… அம்மா காப்பித்தண்ணி கொண்டாறேன்னு போனாங்க அதான் பாத்துட்டு நிக்கோம்”

மேல்சட்டை அணியாமல் இடுப்புக்கு ஒரு துண்டுமட்டும் கட்டியிருந்த செங்கோடன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பழனிச்சாமியின் மனைவி கண்ணம்மாள் ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் ஆவிபறந்துகொண்டிருந்த காப்பியைக் கொண்டுவந்தார். உழைத்த களைப்பில் இருந்தவர்கள் காப்பியைப் பார்த்ததும் பக்கத்திலிருந்த ஓலைக்கொட்டகையில் மூங்கில்களில் கவிழ்த்தபடி சொருகியிருந்த அவர்களுக்கென்றே பிரத்யேகமாக ’ஒதுக்கப்பட்டிருந்த’ டம்ள‌ர்களை எடுத்துக்கொண்டனர். பாத்திரத்தின் சூடு கையைச் சுட்டுவிடாமலிருக்க கண்ணம்மாள் பிடித்திருந்த அடுப்படியின் கரித்துணியை விட டம்ள‌ர்களின் நிறம் கொஞ்சம் வெளுப்பாக இருந்தது.டம்ள‌ர்களில் பட்டுவிடாமல் பாத்திரத்தைத் தூக்கிப்பிடித்தபடி அவர் காப்பித் தண்ணியை ஊற்றியவிதம், சாதித்தூய்மையைக் கடைபிடிக்கும் அவரது பலநாள் அனுபவத்தைக் காட்டியது.

“ஏனுங் நாச்சி…, மாப்ள என்ன பன்றாருங்க…?”

‘ஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்….’ என்று காப்பியை உறிஞ்சியபடி கேட்டார் செங்கோடன்.

“அட மாப்ள திருப்பூர்ல பைக் ஒர்க்சாப் சொந்தமா வச்சிருக்கார்ரா…, நம்மல மாரி காடு தோட்டம் இல்லாட்டியும்,  வீடு வாசல், நெலபொலம்ன்னு எல்லாமே இருக்கு…, பைனான்ஸ் வேற பண்றாரு… என்ன? கொஞ்சம் கோவக்கார்ரா இருப்பாரு போல, எதாச்சும் கொஞ்சம் கொற வச்சுட்டா சுர்ர்ர்ருன்னு மூக்குக்கு மேல கோவம் வந்துருது” பெருமையும் கவலையும் கலந்த ஒரு பாவனை அவர் முகத்தில் தெரிந்தது.

“அதெல்லாம் நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க நாச்சி.., நம்ம அம்முணியோட தங்கமான கொணத்துக்கு அது பாத்து பக்குவமா நடந்துக்கும்.”

உன்மையில் அவர் கோவக்காரர்தான், மாப்பிள்ளையோட சினேகிதனுக பத்து முப்பது பசங்க எப்பவுமே ஒரே செட்டா இருப்பாங்க. அவங்க ஊர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவுல சீட்டு வெளையாடும்போது பிரச்சனை ஆயிடுச்சு, அதுல கோவில் கமிட்டிய சேர்ந்த அந்த ஊர்க்கவுண்டர் ஒருத்தர அடிச்சு மூக்க ஒடச்சுட்டாரு மாப்பிள்ளை, பிரச்சனைய தடுக்கவந்த சக நண்பனை ’சக்கிலித்தா…ழி’ன்னு சாதிப்பேரச் சொல்லி திட்டிட்டாரு. அது பெரிய சாதிப்பிரச்சனையா ஆகப்பாத்துச்சு. ஒரு வண்ணாப்பையன் கவுண்டன அடிச்சுட்டான்னு சொல்லி, ஊர்க்கவுண்டர்கள் ஒன்னுசேர்ந்து அவர அடிக்க வந்துட்டாங்க. சக நண்பனை சாதிப்பேர சொல்லி திட்டியதால மத்த பசங்களும் மாப்பிள்ளைக்கு உதவிக்கு போகல, அவரும் பயந்துகிட்டு மேட்டாங்காட்டுல இருக்கிற அவங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டாரு. அந்த பசங்கள்ல முக்கியமான ஆளுகள்ல ஒருத்தரா இருந்த ஹீரா பாய், திட்டிய பையன்கிட்ட மன்னிப்பு கேட்டாதான் அவருக்கு உதவிசெய்வோம்னு கண்டிப்பா சொல்லிட்டாரு. அப்புறம் ஒருவழியா சாதியச் சொல்லி திட்டிய அந்த நண்பன்கிட்ட மாப்பிள்ள மன்னிப்பு கேட்டதுக்கு அப்புறம் பசங்க தலையிட்டு அந்த பிரச்சனைல மாப்பிள்ளைக்கு உதவிசெஞ்சாங்க, அதெல்லாம் பத்து வருசத்துக்கு முன்ன நடந்த பழைய கதை.

”பெரியப்பா…., மாப்பிள்ளை வந்தாச்சு,” பழனிச்சாமியின் அண்ணன் மகன் குரல்கேட்க, பழனிச்சாமியும், கண்ணம்மாளும் அவசரமாக வீட்டுக்கு திரும்பினர்.வெள்ளை அரைக்கை சட்டை கருப்புநிற பேன்ட் அணிந்திருந்த மாப்பிள்ளை பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார். வாட்டசாட்டமான உருவம், ’டிஸ்கோ’ கட்டிங் வெட்டப்பட்டிருந்த தலைமுடி நேர்த்தியாக வாரப்பட்டிருந்தது. கழுத்தில் கன‌மான தங்கச்சங்கிலி மின்னியது, எப்படியும் மூன்று சவரனுக்கு கொறையாது.அவரது சட்டைப்பாக்கெட்டில் இருந்த ஐநூறுரூபாய் தாள் மங்கலாக தெறிந்தது.அல்லது தெரியும்படி வைத்திருந்தார். சட்டையில் குத்தப்பட்டிருந்த பால் பாயிண்ட் பேனாவில் கைகளைக் கூப்பியபடி விஜயகாந்த் சிரித்துக் கொண்டிருந்தார். (கட்சிக்காரரா இருப்பாரு போல).வாசலில் கருப்புநிற எமஹா 100 பைக் நின்றுகொண்டிருந்தது.

பழனிச்சாமியின் அண்ணன் மகன் மாப்பிள்ளைக்கு பொவண்டோ உடைத்துக் கொடுத்தார். அதை வாங்கிய மாப்பிள்ளையின் வலது கையில் இரண்டு விரல்களில் தங்க மோதிரம் இருந்தது.விருந்து உபசரிப்புகளோடு அன்றைய நாள் கடந்துவிட்டது.

“மாப்ள பக்கத்து தெருவு கவுண்டர்வீட்ல இன்னிக்கி அவங்க பொண்ணு கல்யாணம், உங்களுக்கும் பத்திரிக்கை வச்சிருக்காரு, வாங்க போயிட்டு வரலாம்”

மாமனாரும் மருமகனும் மண்டபத்தை அடையும் நேரம், திருமணம் முடிந்து பந்தி நடந்துகொண்டிருந்தது. மண்டபத்துக்கு வெளியே செங்கோடனும் இன்னும் சிலரும் நின்றுகொண்டிருந்தனர்.அவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. பந்தி முடிந்த கடைசியில் மீதமான சாப்பாடு அவர்களுக்கு கொடுக்கப்படும், அதற்காக அவர்கள் காத்திருந்தனர்.

உள்ளே நுழைந்த பழனிச்சாமியும் மாப்பிள்ளையும் பந்தி நடந்துகொண்டிருந்த இடத்திற்கு சென்றனர். காலியாக இருந்த ஒரு இருக்கையில் மாப்பிள்ளை அமர்ந்ததைக்கண்டு பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் இவர்களுக்கு உள்ளே அனுமதி உண்டு ஆனால் சேரில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை. தரையில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும். இந்த ஊர்க்கட்டுப்பாடுகள்(!?) தெரியாத மாப்பிள்ளை மற்ற கவுண்டர்களுக்கு சமமாக சேரில் அமர்ந்துகொண்டார். யாராவது இதை கவனித்துவிட்டால் பிரச்சனை ஆகிவிடும்.ஆனால் உட்கார்ந்துவிட்டவரை எப்படி எழச்சொல்ல முடியும்? குழப்பத்தோடு இருந்த பழனிச்சாமிக்கு “பரவாயில்ல நீயும் உக்காந்துக்கோ” என்று மணப்பெண்ணின் தந்தைக்கவுண்டர் கூறிய பிறகுதான் உயிரே வந்தது.இது எதுவுமே தெரியாத மாப்பிள்ளை மூக்குபிடிக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

பழனிச்சாமியின் அண்ணன் மகன் இறைச்சிக்காக கன்றுக்குட்டிகளை வியாபாரம் செய்யும் தொழில் செய்பவர்.ஏதாவது வீட்டில் மாடு கன்றை ஈன்றால் அவருக்கு தகவல் சொல்வார்கள் அவர் அங்கு சென்று கன்றை பிடித்துக்கொண்டு வருவார்.அப்படி ஒரு வியாபாரத்திற்காக செல்லும்போது மாப்பிள்ளையும் உடன் சென்றார். மைனர் செயின், வெள்ளைச்சட்டை, இரண்டு கைகளிலும் தங்க மோதிரம், மேல் பாக்கெட்டை துருத்திக்கொண்டு நிற்கும் பணத்தாள்கள், ’கட்சிக்காரன்’ அடையாளமான பேனா போன்ற வழக்கமான மிடுக்கோடு கூலிங்கிளாஸ் கண்ணாடியும் அணிந்திருந்தார்.

”இந்த வீடுதான் நிறுத்துங்க மாப்ள..” என்று மச்சினன் கைகாட்டிய வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினார்.

”ஏங்க…ஏங்க…” என்று மச்சினன் கத்தியும் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் பொறுமையிழந்த மாப்பிள்ளை தனது யமஹா பைக்கின் ஹாரனை அழுத்தினார், அது ‘போம்,போம்…போம்,போம்…’ என்று  ஒரு பேருந்தின் ஹாரனைப்போல பெருஞ்சப்தத்துடன் கத்தியது.இந்த மாதிரி பில்டப் எல்லாம் இருந்தால் தான் அது ஒர்க்ஸாப்காரன் வண்டியாக மதிக்கப்படும்.

வண்டியின் ஹார்ன் சப்தத்தைக்கேட்டு வெளியே வந்தார் ஒரு பெண்மணி

மாப்பிள்ளையின் மிடுக்கான தோற்றத்தை அந்தப் பெண் ஒரு பொருட்டாக மதித்தது போலவே தெரியவில்லை.

“அட!! வண்ணாப்பசங்களா….!?, கவுண்டரு தோட்டத்துல இருப்பாரு போய்ப்பாருங்க….” என்று கூறியவாறே திரும்பிச்சென்றார்.மாப்பிள்ளைக்கு சட்டென எதோ சுட்டதுபோல இருந்தது.தனது அலங்காரத்தை மறுபடியும் பார்த்தார். கண்ணாடி தெரியுது, செயின் தெரியுது, மோதிரம் தெரியுது, பணம் தெரியுது, பைக் தெரியுது இதெல்லாம் எதுவுமே தெரியாம அந்த அம்மாவுக்கு எப்படி சாதிமட்டும் தெரியுது?

– சம்சுதின் ஹீரா –   “மௌனத்தின் சாட்சியங்கள்” நூலின் ஆசிரியர்.

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*