Home / கலை / நோன்பு… சிறுகதை

நோன்பு… சிறுகதை

“பர்வீனு…,எலா பர்வீனு… எந்திரிலா…பள்ளியில சஹருக்கு கூப்பிடற சத்தம் காதுல விழலையா? நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற? சஹருக்கு நேரமாச்சி ,எந்திரி லா …”

இளம் மருமகளைக் கரித்துக்கொட்டியபடி ‘பொடக்காலி’யை நோக்கி சென்றுகொண்டிருந்தாள் கைருன்னிசா கிழவி.எழுபதை நோக்கி சென்றுகொண்டிருக்கும் வயது, மூன்று பிள்ளைகளைப் பெற்று ஐந்து வயதுக்குள் இரண்டை காலராவுக்கும், பெயர் தெரியாத ஒரு காய்ச்சலுக்கும் பலிகொடுத்தது போக, கடைசி மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்து , காலா காலத்துல ஒரு அடக்க ஒடுக்கமான பொண்ணா பார்த்து, நிக்காஹ் முடிச்சுவச்சும்…, சின்னஞ்சிறுசுக ரெண்டு வருசங்கூட சந்தோசமா வாழல.

பொறந்துவளந்த பொட்டல்காட்டுல பொழப்புக்கு வழியில்லன்னு குடும்பத்தோட திருப்பூர் வந்து,ஒரு சாயப்பட்டரைக்கு வேலைக்கு சேந்தான். அங்க சாயம்போடுற கண்டகண்ட கெமிக்கல்ல பொலங்கிப் பொலங்கி, என்ன ‘தலீந்தராகி’ வியாதிய சம்பாதிச்சுட்டு வந்தானோ ? லொக்கு லொக்குனு மூணுமாசமா இருமிட்டு இருந்தவன்,பொசுக்குனு ஒரு நாள் விட்டுட்டு போய்ட்டான். மருந்துக்கும் ஆஸ்பத்திரிக்கும் நக நட்டெலாம் வித்தும் பிரயோசனமில்லாம,பர்வீனு புள்ள மூளியா உக்காந்திருக்கு.கொஞ்சநாள் கைருன்னிசா வேஸ்ட்டு குடோனுக்கும்,பர்வீனு பனியன் கம்பெனிக்கும் வேலைக்கு போனதுல ‘தொட்டுக்கோ தொடச்சுக்கோன்னு’  குடும்பம் ஓடிட்டு இருந்துச்சு,

வேஸ்ட்டு குடோன்ல மொத்தமா மூட்டையில கலந்து இருக்கிற துணிய சைஸ் வாரியா, கலர் வாரியா பிரிச்சு தனி தனியா மூட்டைபோட்டு  கட்டனும், அதான் வேலை. ஆனா இந்த துணி பிரிக்கும்போது பறக்குற தூசி தான் பெரிய இம்சை. அன்னிக்கி பிரிச்ச துணிக என்ன கலருன்னு அடுத்த நாள் காலைல வெளிக்கு போற கலர வச்சு சொல்லிரலாம், அவ்வளவு தூசி தெனமும் மூக்குலையும் வாயிலையும்  போகும்.ஆனா என்னிக்கி இந்த எளவெடுத்த ஆஸ்த்துமா வந்துதொலஞ்சுதோ , அன்னில இருந்து அந்த வேலைக்கும் போறதில்ல.

இப்போ வீட்டோட மொடங்கிக் கெடந்து இந்த பர்வீன் புள்ளைய ‘நொய் நொய்’ன்னு ஏதாவது ஒன்னு நொரண்ட பேசி உயிரை வாங்கறத மட்டும் முழுநேர வேலையா செஞ்சுட்டு இருக்கு. ‘எம்புருசனும் கச்சேரிக்கு போறான்’கிற கதையா, தெரு குழந்தைகளுக்கு ஓதிக்கொடுத்து கிடைக்கிற சொச்ச ‘வரும்படி’ல, ஆஸ்துமாக்கு மருந்து வாங்கரக்கே பத்தரதில்ல, இப்போ பர்வீனோட ‘வரும்படி’ மட்டுந்தான் குடும்பத்துக்கு அரைவயித்துக்கஞ்சி ஊத்திட்டிருக்கு.

அந்த புள்ளையும் பாவம் வாழவேண்டிய வயசுல புருசன பறிகொடுத்துட்டு பனியன் கம்பெனியில பேக்கிங் வேலைக்கு போகுது, பேக்கிங் வேலை இல்லாதப்போ டைலருக்கு கை மடிச்சு கொடுக்கணும்.வாரம் முழுசும் வேலை இருந்தா ஒம்பது சிப்ட்டு, சிப்டுக்கு தொண்ணூறு ரூவா மேல என்நூத்து பத்து ரூபாய் கெடைக்கும் , அதுல டீ கடை அக்கவுண்டுக்கு நூறுரூபா போக எழுநூற்று பத்து ரூபாய் இருக்கும்,காலைல சாப்பிடாம வர்றதால டீ டைம்ல ஒரு டீயும் ஒரு போண்டாவும் சாப்பிட்டா தான் பொழுதுக்கும் தாக்குபிடிக்க முடியுது. தெனமும் நைட்டு ஒருவேளை தான் சாப்பாடு, சில நாள்ல அதுவும் இருக்காது.அந்த புள்ள இப்படி சகிச்சுக்கிட்டு பசியோடவே வாழ்ந்து பழகிருச்சு.

அப்படி இப்படி மாசத்துக்கு ரெண்டாயிரத்து ஐநூறு ரூவாய்க்கு கொறையாது. வீட்டுவாடக, கரண்டு பில்லு, வார வட்டிக்காரனுக்கு, மாச வட்டிக்காரனுக்கு,அக்கம்பக்கத்துல அவசரத்துக்கு கைமாத்து வாங்கினது எல்லாம் கொடுத்து,புள்ளைக்கு பால் பவுடரு, கெழவிக்கு மருந்து மாத்திர, வாங்குனதுபோக மிச்சம் இருந்தாதான் சாப்பாட்டுக்கு.ஓவர் டைம் வேலைசெஞ்சா எரநூறு முன்னூறு சேத்திக் கிடைக்கும்,ஆனா எவ்வளோ அர்ஜெண்டா இருந்தாலும் நைட்டு வேலை செய்யக்கூடாதுன்னு கெழவி கண்டிசனா சொல்லி இருக்கு, அதோட சொல்பேச்சு கேக்கலன்னா பேசியோ கொன்னுரும், கெழவி வாய்க்குள்ள இருக்கிறதா நாக்குன்னா  நெனச்சுட்டு இருக்கீங்க..?, அது வெஷக் கொடுக்கு. கலிச்சல போனவளே, அந்த மோளே இந்த மோளேன்னு அவளோட ராதி நன்னியில இருந்து உம்மா வரைக்கும் எல்லாரையும் அசிங்கப்படுத்திட்டு  தான் ஓயும். அந்த வசவுக்கு பயந்துட்டே பர்வீன் வாயத் தொறக்கறதில்ல.

கெழவி சொல்லறது கூட ஒருவகையில நல்லது தான், பகல்ல வேலை செய்யும்போதே முன்னபின்ன பொம்பளைங்களயே பாக்காதமாறி இந்த ஆம்பிளைங்க பார்வை ஊசி மாறி குத்துது, எப்படா மாராப்பு வெலகும்னு நாக்க சொட்டிக்கிட்டு எதிரே உக்காந்திருக்குற கான்ட்ராக்ட் காரன், “என்ன பர்வீன் நீ மட்டும் நைட்டு வேலைக்கு வரவே மாட்டிக்கிற? கூட மாட ஒத்தாசையா இருந்தா உனக்கும் செலவுக்கு நாளு காசு கிடைக்கும்ல?” என்று இரட்டை அர்த்தத்தில் சலவாய் ஒழுக்கும் மேனேஜர். அடுக்கிக்கட்டிய பீசுகளை எடுக்கும் சாக்கில் ‘பின்புறம்’ உரசிச்செல்லும் பிசிர்வெட்டும் சிறுவன். வேணுமின்னே கத்திரிய கீழ போட்டுட்டு அவ குனிஞ்சு எடுக்கும்போது ‘உற்று’ பார்க்கிற டைலர். இவங்களையெல்லாம் சமாளிச்சு பகல்ல வேலை செய்யறதே பெரிய போராட்டமா இருக்கு.

காலைல இருந்து நிக்க நேரமில்லாம நாய் மாறி பாடுபட்டுட்டு, வீட்டுக்கு வந்து வீடுவாசல் கூட்டி, சமையல் செஞ்சு , துணிமணி தொவச்சுபோட்டு.புள்ளைய தூங்க வச்சுட்டு படுக்கும்போது மணி பணிரெண்டு ஆயிருது.தூங்கலாமுன்னு நெனச்சு கண்ணா மூடினா, சட்டுன்னு தூக்கமும் வர்ரதில்ல.கடன் தொல்ல, புள்ளையோட எதிர்காலம் இதெல்லாம் நெனெச்சு நெனச்சு கவலைப்பட்டு புரண்டு புரண்டு படுத்து எப்போ தூங்கரான்னே தெரியாம தூங்கிப் போனவளத்தான் கைருன்னிசா கெழவி கரிச்சுக்கொட்டிட்டு இருக்குது.

கெழவியோட சத்தத்தகேட்டு எந்திருச்சு பார்த்தா குழந்த ஒண்ணுக்கடிச்சு சேலையெல்லாம் நனைஞ்சு கெடக்குது,சஹர் நேரம் முடிய இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு. அவசர அவசரமா குளிசுட்டுவந்து,நேத்து மிஞ்சிப்போயி  தண்ணிஊத்திவச்ச சாப்பாட்டுல தயிர ஊத்திக் கரைச்சு கெழவியும், பர்வீனும் ஆளுக்கு ரெண்டு கிளாஸ் குடிச்சு,சஹர் செஞ்சு முடிச்சாங்க. நோன்பு வைக்கும் நிய்யத்த கிழவி சொல்லச்சொல்ல பர்வீனும் கூடவே சொல்லிக்கொண்டிருந்தாள்,

” நவைத்து சவ்மஹதின் அன் அதாயி…..”

” நவைத்து சவ்மஹதின் அன் அதாயி…..”

சஹர் செய்து முடித்து பஜர் தொழுகைக்கான பாங்கு சப்தம் கேட்டதைத் தொடர்ந்து,சுப்ஹூ தொழுகை முடித்துவிட்டு,உறங்கிக்கொண்டிருக்கும் தன் குழந்தையின் தலையை வருடியபடி அருகில் படுத்திருந்தாள்.

index

வீட்டிற்கு வெளியே ஜமாத்தார்கள் யாரிடமோ, மார்க்க அறிவுரைகள் கூறிக்கொண்டிருப்பது தெளிவாக காதில் விழுந்தது.

”மூமின்களே…உங்களின் முன்னோருக்கு விதிக்கப்பட்டது போலவே உங்களுக்கும் (நோன்பு) விதிக்கப்பட்டிருக்கிறது…” என்கிற குர் ஆன் வசனத்தை கூறி நோன்பின் அவசியத்தை கூறிக்கொண்டிருந்தார்.

“நோன்பு என்பது…, ஏழைகளின் பசியை அனைவரும் அறிந்து கொள்வதற்காக இறைவன் செய்திருக்கும் உன்னதமான ஒரு ஏற்பாடு…”

இந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே படுத்திறந்த பர்வீனுக்கு ஒரு கேள்வி எழுந்தது.

” பசியின் கொடுமையை உணர்வதுக்கு தான் நோன்புன்னா , என் மீதும் எதுக்கு நோன்பு கட்டாயமா விதிக்கப்பட்டிருக்கு?”

—சம்சுதின் ஹீரா -“மௌனத்தின் சாட்சியங்கள்” நூலின் ஆசிரியர்

——

குறிப்பு – நோன்பு, விரதம் என்பது எல்லா மதங்களிலும் இருக்கும் நடைமுறை. இந்த சிறுகதை இசுலாமியப் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும் சிறுகதை எழுப்பிம் கேள்வி எல்லா மதத்திற்கும் பொருந்தும் – விசை ஆசிரியர் குழு.

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*